எனக்குத் தமிழ் வேண்டாம் ....

எனக்குத் தமிழ் வேண்டாம் என்போர் கவனத்திற்கு...

தமிழில் பேசுவது மரியாதைக்குறைவு, அசிங்கம் என்று நினைக்கிற மேதைகளின் கவனத்திற்கு. முகநூலில் புதுகை எம்.ஏ அப்துல்லா பதிந்த ஒரு விசயம்...


 நன்றி https://www.facebook.com/pudugai.abdulla
இந்தப் பதிவினை திரு https://www.facebook.com/spine.brain.surgeon  அவர்களின் பகிர்வு மூலம் அறிந்தேன் இதுவரை நூற்றி இருபத்தி மூன்று முறை பகிரப் பட்டிருக்கிறது. நான் இங்கே பகிர்கிறேன்.

கதை 1 :அமெரிக்க நிலப்பரப்பிற்குச் சென்ற ஆங்கிலேயர்கள் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தினர். துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் தாக்கிய ஆங்கிலேயர்களை எதிர்த்து வெறும் வில் அம்பு, ஈட்டிகள் கொண்டு செவ்விந்தியர்கள் காட்டிய வீரம் ஆங்கிலேயர்களை அதிர வைத்தது! மண்ணையும், கலாச்சாரத்தை இழக்க விரும்பாத எண்ணம்தான் அந்த வீரம். ஆனால் நாளடைவில் ஒவ்வொரு பகுதியாக இழந்து வந்த செவ்விந்தியர்கள் ஒரு கட்டத்தில் முற்றிலும் அனைத்தையும் இழக்கத் துவங்கினர். இருப்பினும் ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் காட்டிய வீரத்தின் மீதான பிரம்மிப்பும், பயமும் போகவில்லை. மீண்டும் அவர்கள் ஒருங்கிணைந்து நம்மை திருப்பி விரட்டிவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

அப்போதுதான் ஆங்கிலேயர்களுக்கு ஒரு அருமையான யோசனை தோன்றியது. செவ்விந்தியர்களின் இளம் வயது பிள்ளைகளை அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து தனி பகுதி ஒன்றை ஏற்படுத்தி அவர்களை அங்கு தங்க வைத்து ஆங்கில மொழியும், ஆங்கிலேயர்கள் உணவு, உடை கலாச்சாரமும் பயிற்றுவித்தனர். இப்படியாக பல ஆண்டுகள் பிரித்து வைக்கப்பட்ட செவ்விந்திய இளம் தலைமுறை தங்கள் தாய்மொழியை முற்றிலும் மறந்து ஆங்கிலம் மட்டும் பேசி ஆங்கில உணவுகளை உண்டு ஆங்கிலேய உடை அணிந்து வாழத் துவங்கிவிட்டது. தங்கள் மொழியை இழந்ததன் மூலம் கலாச்சாரத்தை இழந்தது. வாழ்வியலை இழந்தது. மண்ணை இழந்தது. இதன் காரணமாக வீரத்தை முற்றிலும் இழந்தது. இன்றுவரை ஆங்கிலேயர்கள் அங்கு சவுக்கியமாக எந்த எதிர்ப்பும் இன்றி ஆட்சி புரிகின்றனர்.

கதை 2 :உலகின் பல நாடுகளில் பிரிந்து வாழ்ந்துகொண்டு இருந்த யூத இனம். பல நூற்றாண்டுகளாக அவர்கள் போய்ச் சேர்ந்த அந்தந்த நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் எந்த ஒரு நாடும் அவர்களை தன் மக்களாய் பார்க்கவில்லை. அன்னிய உணர்வுடனேயே இருந்தது. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் தாக்கப்படத் துவங்கினர். இதன் உச்சகட்டமாய் ஹிட்லர் அவர்களைத் தேடித் தேடி கொத்துகொத்தாய் கொலை செய்யத்துவங்கினார். இந்த சந்தர்ப்பத்தில்தான் தங்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்ற சிந்தனை அவர்கள் மனதில் வரத்துவங்கியது.

ஆனால் அது சாதாரண வேலை அல்ல. காரணம் ஒவ்வொரு நாட்டிலும் வசித்து வந்த யூதர்கள் தங்கள் மொழியை அறவே மறந்து அந்தந்த நாட்டு மொழிபேசி அந்தப் பகுதியின் பிரஜையாகவே தங்களை நினைத்து வந்தனர். அந்த சிந்தனையை மாற்றி எங்கிருந்தாலும் தாங்கள் யூதர்கள் என்று நினைப்பை அவர்களுக்கு வர வைக்க வேண்டும் என்றால் வழக்கொழிந்து சில ஆயிரம் பேர் மட்டும் அறிந்ததாக இருக்கும் தங்கள் தாய்மொழியான "ஹீப்ரூ" மொழிக்கு உயிர் குடுத்தால் மட்டுமே அந்த உணர்வை கொண்டு வர முடியும் என்ற உண்மை புரிந்தது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள யூதர்களின் இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலர் அருகில் உள்ள நாடுகளில் இருந்த யூதமொழி தெரிந்த தங்களது மூத்தவர்களிடம் அம்மொழியைக் கற்று தங்கள் பகுதிக்கு வந்து அங்கிருந்த யூதர்களுக்குத் தங்கள் தாய்மொழியைக் கற்பித்தனர். ஓரிரு ஆண்டுகளில் உலகின் அனைத்து யூதர்களும் ஹீப்ரூவை அறிந்ததும் தங்களுக்கான மொழியை மீட்டதுபோல தங்களுக்கான பூமியையும் உருவாக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தை தங்களுக்கென உருவாக்க முடிந்தது!

நீதி : மொழியை, கலாச்சாரத்தைத் தொலைத்த செவ்விந்தியர்கள் மண்ணை இழந்தனர். மொழியை,கலாச்சாரத்தைப் பெற்ற யூதர்தள் மண்ணைப் பெற்றனர்!!

# கதையல்ல..நிஜம்.Comments

 1. இஸ்ரேல் - மொழியை மீட்ட நாடு
  நாமே தமிழை மறந்து, அனைத்தையும் ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருக்கின்றோம்,
  இந்நிலை என்று மாறுமோ

  ReplyDelete
  Replies
  1. தமிழ் ஒரு உணர்வுபூர்வமான உறவாக பயிற்றுவிக்கப் பட வேண்டும்..
   நன்றி சகோ

   Delete
 2. ஒரு மொழியை அழித்தால்
  அவ்வினம் தானே அழியும்
  தம 2

  ReplyDelete
 3. ,அருமையான பதிவு. தமிழ் வேண்டாம் என்று சொல்லும் கூட்டம் தமிழ்நாட்டில் அதுவும் நகரங்களில் அதிகரித்துக்கொண்டு இருப்பது ஒரு மோசமான சூழலுக்கான ஆரம்பகட்ட வரைபடம்.

  செவ்விந்தியர்கள் தன் மண் இழந்தது ஒரு வேதனையான வரலாறு. யூதர்கள் தங்கள் நாட்டை மீட்டது ஒரு நம்பிக்கை தரும் உண்மை. சரியாக சொல்லியிருக்கிறீர்கள் மது. பாராட்டுகள். யூதர்களைப் பற்றிப் பேசினாலே சிலருக்கு எங்கெங்கோ எரியுமே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி காரிகன்
   உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்வு
   நான் அடிக்கடி படிக்கும் மீண்டும் மீண்டும் படிக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அல்லவா...
   வருகைக்கு நன்றி

   Delete
  2. தமிழ் வேண்டாம் என்று எவனும் இது வரை சொன்னதில்லை. இனி சொல்லப் போவதும் இல்லை. அவனால் சொல்லவும் முடியாது. வேசங்கள் என்றும் நிலைக்காது.

   கோபாலன்

   Delete
  3. தங்கள் நம்பிக்கைக்கு நன்றி கோபாலன்..

   Delete
 4. இருவேறு உண்மைகள். எம்.ஏ.அப்துல்லாவின் பதிவை தமிழ் உணர்வோடு பகிர்ந்த உங்களுக்கு நன்றி!
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. வலைபூ தமிழின் இளங்கோவிற்கு வாழ்த்துக்கள்
   நன்றி அய்யா

   Delete
 5. வணக்கம் சகோதரர்!..

  காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவும் பகிர்வும்!

  இது... இதுதான் இங்கே நாடிழந்து தெருத்தெருவாக அகதிகளாக நாடு நாடாகக் திரியும் நம்மவர் நிலையும்...

  போகின்ற நட்டின் மொழியையும் கலாச்சாரத்தையும் பின்பற்றும் நம் பிள்ளைகள் மொழி மறந்து, தாய் மொழி தெரியாத நிலை, சமூகச் சீரழிவுகள் இப்படி நடக்கின்ற அநியாயம் சொல்லி மாளாது!

  இன்றைக்கு 20 வருடத்திற்கு முன்னரே வாழும் நம் நாட்டில் காணும் நம் நாட்டுப் பெற்றோர்களிடம் என் கணவர் என்னையும் இன்னும் சில தொண்டு மனப்பான்மை உள்ள ஆசிரியர்களையும் இணைத்துச் சேவையாக வார இறுதி நாட்களில் தமிழ் கற்பிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.

  வீடு வீடாகச் சென்று நம் நகரத்துப் பெற்றோரிடம் உங்கள் பிள்ளைகளை தமிழ் கற்க அனுப்புங்கள் என்று கேட்டுக் கூட்டிவந்து கற்பித்தோம்.
  இதனை இங்கு கூறுவது பெருமைக்காக அல்ல..
  ஒவ்வொருவருக்கும் இயல்பாக எம் இனம், மொழி, மக்கள் எனும் உணர்வு உளப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே...
  அன்றி அழிந்துபோன செவ்வியந்தியர் நிலைதான் எமக்கும் வரும் என்னும் கசப்பான உண்மை சகோ!

  அருமையான பகிர்வு. மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  சகோ!..
  http://ilayanila16.blogspot.de/2014/06/blog-post_21.html

  உங்கள் வருகையை இன்னும் அங்கு காணவில்லையே... வாருங்கள்!
  மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரி,
   எனது மாணவர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார்.

   அவர் வீட்டுக்கு அருகே நிறுத்தி என்னைக் கேட்டார் நான் இந்த சாலையில் உங்களை மூன்று முறை பார்த்துவிட்டேன்.

   ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமல் கேட்டார்.
   நான் அவனுடைய ஆங்கில ஆசிரியன்..

   நல்ல தமிழ்ப் பற்று ... வருவது அயல்நாட்டில் அவனது திறமையை நிருபித்த பின்னர்தான்

   இது ஒரு உளவியல் பிரச்சனையாக தெரிகிறது தமிழ் என்றால் ஒரு அயல்நாட்டு தமிழனுக்கு இருக்கும் ஆன்ம மலர்தல் இங்கே தாய்நாட்டில் இருப்பவனுக்கு இல்லை...

   எல்லோரையும் ஒரு முறை கப்பல் ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பினால் சரியாகி வருவார்கள் என்று தோன்றுகிறது..

   தங்கள் பணி சிறக்கட்டும் சகோதரி..

   Delete
  2. //எல்லோரையும் ஒரு முறை கப்பல் ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பினால் சரியாகி வருவார்கள் என்று தோன்றுகிறது..// எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது.

   Delete
 6. மிக அருமையான பகிர்வு! நம் மொழியை நாமே மறப்பது தவிர்ப்பது கொடுமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்...

   Delete
 7. இரு வேறு சம்பவங்களை அருமையாக தொகுத்து, இறுதியில் சொல்லபாட்ட நீதி - சூப்பர்.

  ReplyDelete
 8. அன்புள்ள சகோதரருக்கு,நன்றிகளுடன் எழுதும் மடல்.தாங்கள் ஆங்கில ஆசிரியராக இருந்தும்கூட உண்மையைப் பதிவாக எழுதியமைக்காக வாழ்த்துகள்! பிற மொழிகளைத் தாழ்த்திப் பேசுவதோ,வெறுப்பது என்பதோ அநாகரீகமான செயல்.தாய்மொழி உணர்வற்றிருப்பதோ அவமானமான செயல்."தாய்மொழி உணர்வை இழந்தவன் ஆண்மையை இழந்தவன்" என்று சொன்னவர் மகாத்மா. அவரின் கோபம் எவ்வளவு நியாயமானது.மொழியை இழந்தவன் ஆண்மையை மட்டுமல்ல,மண்ணை,கலாச்சாரத்தை,வாழ்வியலை இழப்பான் என்ற கருத்தை ஆழமாகவும்,அழுத்தமாகவும் பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. காந்தியார் மொழி ... அருமை அண்ணா..
   அண்ணா பதிவு ஒரு பகிர்வு
   முகநூலில் எம்.ஏ அப்பதுல்லா என்பவருடையது..
   நன்றி..

   Delete
 9. அருமையான பதிவு, இரு வரலாற்று உண்மைகளும் தமிழரின் கண்களைத் திறக்கட்டும்..

  என் தமிழ்! என் அடையாளம்!
  http://thaenmaduratamil.blogspot.com/2012/09/thaaimozhi.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி..
   படிதுகொண்டிருக்கிறேன்..

   Delete
 10. மொழியை,கலாச்சாரத்தைப் பெற்ற யூதர்தள் மண்ணைப் பெற்றனர்!!

  தாய் மொழியின் சிறப்பினை தெளிவாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...

   Delete
 11. உண்மை.
  மொழியை விடவும்
  மேலானது
  மொழி உணர்வு

  எனவே
  தமிழை விடவும்
  தலையாயது
  தமிழுணர்வு

  மொழி உணர்வு
  இறந்த தேசத்தில்
  மொழியும் இறந்துபடும்

  ReplyDelete
  Replies
  1. மொழியும் இறந்துபடுதலைத்தான் ஆன்மா இறப்பு என்கிறார் காந்தியார் ...
   மகாசுந்தர் அவர்களின் பின்னூட்டம் பார்க்க ..

   Delete
 12. அற்புதமான உவமைகளுடன்
  மொழிப்பற்றின் அவசியம் குறித்து
  சொல்லிப்போனவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. தோழர்க்கு வணக்கம்!
  மிகமிகத் தாமதமாகத் தான் தங்கள் தளத்திற்கு வந்து கருத்தைப் பதிகிறேன். பத்துக்கேள்விகளுக்கு வந்த பின்னூட்டங்களுக்குப்பின் அந்தப் பதிவை அழித்திட நேர்ந்தது. தங்களின் பின்னூட்டம் உட்படச் சிலரின் பின்னூட்டங்களை அழிக்க நேர்ந்ததுதான் வேதனை.
  மொழியின் வளர்ச்சியும் அழிவும் பெருமளவில் அரசாங்கத்தின் துணையோடுதான் நடைபெறுகிறது என்பது வரலாறு. நம் நாடு போன்ற பன்மொழி பேசும் சூழலில் பொதுமொழி அல்லது அலுவல்மொழி்யைத் தீர்மானிப்பது என்பது வலுத்தோன் வெட்டும் வாய்க்காலாகவே இருக்கிறது. தாய் மொழிப் பற்றுக்கொண்ட காந்தி கூட குஜராத்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க விரும்பியதாகப் படித்திருக்கிறேன்.பல்லவர் காலத்தில் பாலி, சோழர் காலத்தில் சமஸ்கிருதம், நாயக்கர் காலத்தில் தெலுங்கு, ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் என ஆள்வோர் மொழி தமிழின் மீது செலுத்திய ஆதிக்கத்தினை மறுத்திட முடியாது. இதை எல்லாம் வென்றெடுத்துத்தான் தமிழ் வாழ்ந்து வந்திருக்கிறது. அன்றெல்லாம் படித்தவர்கள் எனக்கருதப்பட்டவருள் பெரும்பாலோர், தம் நலனுக்காக வந்தேறி மொழிகளுக்கு வால் பிடித்துத்தான் வந்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பட்டிக்காடுகள், பாமரமக்கள், இழிசனர் எனக்கருதப்பட்ட பெரும்பான்மை படிப்பறிவில்லா மக்களின் நாவிலிருந்துதான் தமிழ் மீண்டெழுந்தது. ஆளும் வர்க்கம் தான் எப்போதும் அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லையே! ஆனால் இன்று கிராமங்களிலும் ஆங்கிலம் புகுந்து விட்டது. பேச்சு வழக்கில் ஆங்கிலக் கலப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு எல்லாரையும் எளிதில் சென்றடையும் ஊடக வளர்ச்சிதான் பெருங்காரணம். நாம் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நம் தாய் மொழியை அழித்தெழுவது எதுவானாலும் அதைச் சகித்திருக்க முடியாது என்ற நிலைப்பாடுடையவர்கள். இது போதாதென்று, மைதிலி ( கண்ணன் வாழ்ந்தமிதிலையில் பேசப்பட்டமொழி) சந்தாலி.
  சிந்தி, போன்ற மொழிகளை விடுதலை பெற்ற குறுகிய காலத்திலேயே நெருக்கி அழித்த இந்தி வேறு ஆள்வோர்களின் ஆசியுடன் எந்நேரமும் வரக் காத்திருக்கிறது ! ( அன்று அதன் ஊடுருவலைத் தீவிரமாக எதிர்த்தவர்கள் மொழிவெறியர் என முத்திரை குத்தப்பட்டனர். )
  இந்நிலையில் தங்களின் இப்பகிர்வினை அவசியமானதாகவும், அவசரமானதாகவும் கருதுகிறேன். நன்றி.


  ReplyDelete
  Replies
  1. வலையுலகில் தாமதம் புரிதலுக்குரியது
   ஏற்றுகொள்ளக்கூடியது...
   எனவே பெரிய வார்த்தைகள் தேவையில்லை..
   இத்துணைத் தகவல்கள் எப்படி
   எத்துனை நாள் வாசிப்பில் சேர்த்தது என்று உணர்கிற போழ்து உங்களின் வாசிப்பின் வீச்சும் வீரியமும் புரிகிறது ...
   வருகைக்கு நன்றி தோழர்..

   Delete
 14. அருமையான பதிவு, மற்ற எந்த மொழியை சார்ந்தவர்களையும்விட தமிழர்களான நம் ஆங்கில மோகம் சற்று அதிகம்தான் !

  சுழற்சி முறை பதிவு ஒன்றில் உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்... என் வலைப்பூ பக்கம் வாருங்களேன்... ! ( ஆனா... இப்பதான் தெரியுது நான் கொஞ்சம் தாமதம்... ஹீ ஹீ ! இருந்தாலும் உங்கள் கருத்தை பதியுங்கள் நன்றி )

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. ஆகா மறுபடியும் முதலில் இருந்தா...
   வருகிறேன் தோழர்..

   Delete
 15. வரலாற்று உண்மைகள்....
  நம் தமிழ் இப்போது செவ்விந்தியர் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.... மீட்கப்பட வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழர்..

   Delete
 16. ரெண்டுநாள் ஊர்சுற்றலுக்குப் பின் தாமத வருகைக்கு மன்னிக்க. இனத்தை அழிக்க, மொழியை அழி என்பது வெறியர் புண்மொழி. இது புரிந்துதான் காந்தியும், திலகரும், தாகூரும் தத்தம் தாய்மொழிப் பற்றோடு எழுதியே புகழ்பெற்றனர் தாய்மொழியி்ன் அருமையை உணர்ந்தவர்தான் உண்மையான சிந்தனைகளை வளர்த்தனர். ஈபுரு மொழியை மீட்ட கதைக்குச் சிலநூற்றாண்டு வீரவரலாறு உண்டு. இன்றும் ஈழத்த்மிழர்தான் உலகெங்கும் தமிழைப் பரப்பி வ ருகின்றனர் - தமிழ்நாட்டில் தமிழ் அழிந்து வருகிறது. வேறு எந்த மொழிக்காரன் வழக்குமன்றமேறி எனக்கு என்மொழி வேண்டாமென்று வாதிடுவான்? 1700களில் இங்கிலாந்து அரசு சட்டமியற்றிய பின்தான் ஆங்கிலமே வளர்ந்தது அதற்கு முன் வரை லத்தின் மொழிதான் மேலாதிக்கம் செலுத்தியது. மிக மிக அருமையான தகவலைத் தந்த நண்பர் அப்துல்லாவுக்கும் அதன் அருமைகண்டு பகிர்ந்த தங்களுக்கும் நன்றி கஸ்தூரி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா...

   Delete
 17. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.....ஆச்சரியமாய் இருக்கிறது....நீங்கள் ஆங்கில ஆசிரியர் என்பது....உங்கள் வலைதளத்தை என் வலைதள பட்டியலில் இணைத்துள்ளேன் பாருங்களேன்.....உங்கள் பாணியில் .....http://swthiumkavithaium.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலம் இரைப்பைக்கு உணவு...
   தாய்மொழி இதயத்துக்கும் ஆன்மாவிற்கும் உயிர் என்பது சகோதரிக்கு தெரியாதா?

   Delete
 18. தாய்மொழியை விட்டுவிட்டு நாம் அந்நியப்படும்போது பலவற்றை இழக்கிறோம். அந்த இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது என்பதை உணர்வதும் இல்லை. உணர்ந்து, பகிர்ந்தமைக்கு நன்றி.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே..
   உங்கள் தள முகவரியை இங்கே பார்த்தது கூடுதல் மகிழ்வு..

   Delete
 19. தாய்மொழியைத் தழைக்கச் செய்வது மனத்தின் வலிமையில் உள்ளது என்பது மிகவும் உண்மை. மனம் தொட்ட பதிவு. பகிர்வுக்கு நன்றி மது.

  ReplyDelete
  Replies
  1. ஆச்யர்மூட்டும் தகவல்களுக்கும்
   அற்புத மொழி நடைக்கும்
   உரிய
   சகோதரி உங்கள் வருகையால் தான்யன் ஆனேன்..

   Delete
 20. தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு மங்கிக்கொண்டே போகிறது என்பதை கண்டால் ரத்தக்கண்ணீர் வடிக்கவேண்டி இருக்கிறது. என்னிடம் உள்ள ஒரே யோசனை - உருப்படியான யோசனை இதுதான்: நம் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் ஆங்கில மீடியம் படிக்கட்டும். பரவாயில்லை. பெற்றோர்கள், உற்றோர்களாகிய நாம், அவர்களுக்கு ஒய்வு நேரத்தில் தமிழைக் கற்றுத் தருவோம். தொல்காப்பியமும் குறுந்தொகையும் வேண்டாம். இன்றைய தமிழ் உரைநடையைச் சொல்லித்தருவோம். கையெழுத்தைப் பழக்குவோம். டிவியில் பார்த்த கதையைத் தன் சொந்த வரிகளில் எழுதிக்காட்டுமாறு கேட்போம். வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் அவர்களுக்குள் போட்டி வைப்போம். பரிசுகள் தருவோம். இப்படி, வீட்டுக்குள்ளேயே நாம் முயன்றால் போதும். பிள்ளைகள் தமிழில் நன்கு முன்னேறிவிடுவார்கள். பள்ளிகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். இது நிச்சயம் ஒவ்வொரு பெற்றோராலும் முடியக்கூடிய விஷயமே.

  ReplyDelete
  Replies
  1. இப்படி செய்வதை கொஞ்சம் யோசித்து அதில் குழந்தைகளுக்கு ஒரு வேடிக்கை இன்ப அனுபவத்தை கலந்து கொடுத்தோம் என்றால் நல்ல திட்டம்...
   நல்ல அறிவுரை நன்றி..

   Delete
 21. மது கை கொடுங்கள் மிகவும் ஒரு நல்ல பகிர்வு!

  தமிழுக்கு அமுதென்று பேர்! என்று கவி பாடப்பட்டத் தமிழ் நாட்டில் அந்த அமுதுக்கு வந்த நிலைமை மிகவும் கொடுமை! அதுவும் நகரங்களில் தமிழ் உபயோகமில்லாத மொழி, தமிழ் கற்று பயனில்லை என்று நினைக்கும் மக்கள் பெருகிவரும் இந்தக் கால கட்டத்தில் இந்தப் பகிர்வு/பதிவு மிகவும் பொருத்தமானதே!

  அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே என்று திரையில் வந்த பாடல் தான் நினைவுக்கு வருகின்றது!.....

  செல்லப்பா சார் சொல்லும் யோசனை மிகவும் நல்ல யோசனையாகத்தான் தெரிகின்றது.....அதற்கு தாங்கள் சொன்ன பின்னூட்டமும் மிகவும் சரியே.....

  ஆனால் அதைச் சொல்லித் தர அவரைப் போன்ற தாத்தாக்கள், பாட்டிகள் தேவை! பெற்றோர் செய்வார்களா என்று தெரியவில்லை! ஏனென்றால் அவர்களே அவர்களது குழந்தைகளை, மதிப்பெண் வேண்டும் என்று பள்ளியில் இரண்டாவது மொழியாக, ஹிந்தி, சம்ஸ்கிருதம் (தமிழை விட இவை எல்லாம் எளிதா என்ன? உயிர்மெய் எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் 4 எழுத்துகள் இருக்க...கற்க?) ஃப்ரென்ச், என்று படிக்க அறிவுறுத்தும் போது.....இந்தத் தலைமுறை பெற்றோர்களுக்கே தமிழ் தெரியுமா என்ற ஐயம் உள்ள போது........வீட்டிலும் ஆங்கிலம் பேசும் போது......

  சிறிது நாட்கள் முன்பு நண்பர் வீட்டில், ஆங்கில வழிமுறைப்படி கல்வி கற்கும் அவரது பையனைச் சந்தித்த போது அந்தக் குழந்தை தமிழ் சிறிதளவு பேசினாலும்....நாங்கள் மஞ்சள் நிற வாழைப்பழம் என்று ஏதோ சொல்ல.....அந்தக் குழந்தையோ மஞ்சள் நிறம் என்றால்? வாழைப்பழம் என்றால்? என்று கேட்க.....நிலைமை இப்படி போகின்றது.....இது பெரிய நகரத்தில் அல்ல.....சிறு ஊரில்.....

  தமிழ் நாட்டில்தான் இப்படி.....கேரளாவில் மக்கள் தங்கள் தாய் மொழியை விட்டுக் கொடுப்பது இல்லை.....மற்ற மாநிலங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை.....

  நான்கு மலையாளிகள், கன்னடத்துக்காராகள், தெலுங்குக்காரர்கள், ஹிந்திக்காரர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் தங்கள் தாய் மொழியில் தான் பேசிக் கொள்கின்றனர். அதே சமயம் நான்கு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் அதில் இருவராவது ஆங்கிலத்திலோ, ஆங்கிலம் கலந்தோ பேசாமல் இருப்பதில்லை.....

  //எல்லோரையும் ஒரு முறை கப்பல் ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பினால் சரியாகி வருவார்கள் என்று தோன்றுகிறது..//

  இல்லை நண்பரே!....அங்கு செல்பவர்களில் சென்ற தலை முறையினர் வேண்டுமென்றால் இங்கு வரும் போது தமிழ் பேசுகின்றனர்.....ஆனால் பெரும்பான்மையோர் பேசுவதில்லை...எங்கள் சிற்றறிவுக்கு எட்டியவரை......

  சுஜாதா அவர்கள் ஒரு கட்டுரையில் , நம்மவர்கள் வெளிநாடு சென்றால், ரோட்டில் எச்சில் துப்ப மாட்டார்கள், குப்பை போட மாட்டார்கள்...அபராதம் கட்ட வேண்டுமே.......ஆனால் இங்கு தரை இறங்கி, சோதனைகள் முடிந்து வெளியில் வந்ததும்....அப்படியே தரையில் பேப்பர் குப்பையப் போடுகின்றனர்....எச்சில் துப்புகின்றனர் என்று....அது இதில்தான்.....மொழியில் அல்ல......

  அரசு, கல்வித் திட்டத்தில் கண்டிப்பாக தாய் மொழி - தமிழைக் - கற்றே தீர வேண்டும் என்று கொண்டுவந்தால் நல்லது....அரசு பள்ளியில் மட்டுமல்ல...தனியார் பள்ளிகளிலும்....

  நம்புவோம்....மாற்றம் வரும் என்று....

  பாராட்டுக்கள் இப்படி ஒரு நல்ல பதிவுப் பகிர்வுக்கு!

  ReplyDelete
 22. ரொம்ப வேண்டப்பட்ட பதிவு தோழர்..செவ்விந்தியர்களின் இன,மொழி ஒழிப்பு ஈழத்தமிழர்களின் நிலைமைக்கு ஒப்பானது..

  ReplyDelete

Post a Comment

வருக வருக