விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 10 வீரவிளக்கு வ.வே.சு. அய்யர்

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 10

வீரவிளக்கு வ.வே.சு. அய்யர்

காந்தியடிகளின் தலைமையில் சுதந்திரப் போராட்டம் வீறுகொள்வதற்கு முன்பும்கூட விடுதலை வேள்வியில் தமிழகம் பின்தங்கியிருக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு வ.வே.சு. அய்யர்.



திருச்சி அருகே வரகநேரியில் 1881ஆம் ஆண்டு பிறந்தவர் வேங்கட சுப்பிரமணியன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்ற பின், இங்கிலாந்துக்கு சட்டம் பயிலச் சென்ற அய்யர் சிறப்பாகத் தேறினார். ஆனால், இங்கிலாந்து மன்னருக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுத்தால்தான் வழக்குரைஞர் தொழிலை நடத்தலாம் என்பதால், வழக்குரைஞர் மன்றத்தில் சேர மறுத்து விட்டார். இந்தியாவில் ஒத்துழையாமையை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் வ.வே.சு. அய்யர்.

இங்கிலாந்தில் இருக்கும்போதுதான் வீர சாவர்க்கர், மேடம் காமா அம்மையார் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. ஆயுதத்தின் மூலம்தான் ஆங்கிலேயரை விரட்ட முடியும் என்ற கருத்து பிறந்தது. ஆங்கிலேய போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சீக்கியராகவும் முஸ்லீமாகவும் வேடம் பூண்டு பல முறை அவர் தப்பிய சம்பவங்கள் சாகசக் கதைகளில் வருவன போன்ற கதைகள். அன்றே பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுதி வந்தார்.

இந்தியா திரும்பிய அய்யர் புதுவையை அடைந்தார். தன் கொரில்லாப் போர்த் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினார். பால கங்காதர திலகர் என்ற தலைவரே வ.வே.சு.வின் போர்த்திட்டத்தை அறிய ஆவல் கொண்டு தன் உறவினரை அனுப்பி வைத்தார் என்று தெரிகிறது. புதுவையில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்த வ.வே.சு., புரட்சிக்காரர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிப் பயிற்சி அளித்தவரும் இவர்தான். இதை நீலகண்ட சாஸ்திரி அளித்த வாக்குமூலத்திலிருந்து அறிய முடிகிறது.

அன்று புதுச்சேரி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஆங்கிலேயர்கள் தொட முடியாது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பல புரட்சிக் காரர்களும் இந்திய விடுதலைப் போராளிகளும் அவ்வப்போது புதுவையில் தஞ்சம் புகுந்தது உண்டு. பாரதியும் இதற்கு உதாரணம். புதுவையில் புரட்சிக் காரர்களுக்கு ஆயுதங்கள் தருவது, அவற்றைக் கடத்திக் கொண்டுவருவது எல்லாம் வ.வே.சு.வின் பணிகள்.

வ.வே.சு. அய்யரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று துடித்த ஆங்கிலேய அரசு கடைசியில் ஒரு திட்டம் வகுத்தது. ஜெர்மனியின் துணையுடன் எம்டன் கப்பலில் வந்து குண்டு வீசிய செண்பகராமனுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது. அப்போது ஜெர்மனிக்கு எதிரான அணியில் இங்கிலாந்தும் பிரான்சும் இருந்ததால் வ.வே.சு. அய்யரை ஆப்பிரிக்காவில் இருந்த அல்ஜியர்சுக்கு நாடு கடத்தியது.

பின்னர் வ.வே.சு. அய்யர் புரட்சிப் பாதையை விட்டு, காந்தியின் இயக்கத்துடன் இணைந்து கொண்டார். 1919இல் சென்னை வந்த அவர், திரு.வி.க.வுக்குப் பிறகு தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். தேசபக்தனில் எழுதப்பட்ட தலையங்கத்துக்காக ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார்.

வ.வே.சு. அய்யர் சிறந்த இலக்கியவாதியாகப் பரிணமித்தார். புதுவையில் இருந்த காலத்தில் எமர்சனின் நூல்களை மொழிபெயர்த்தார். அவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் இன்றும் பேசப்படுகிற சிறுகதையாகும். கம்ப நிலையம் என்ற பதிப்பகம் நிறுவி புத்தகங்களை வெளியிடத் தொடங்கினார். சிறையில் கம்பனைப் பற்றிய ஆய்வு என்ற ஆங்கில நூலை எழுத்த் தொடங்கினார். சிறையிலிருந்து வெளிவந்தபிறகு பாரதியுடன் சேர்ந்து பால பாரதி என்ற மாத இதழை நடத்தினார். ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன் மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி உடையவராக இருந்தார்.

கற்றறிந்தவர், ஏராளமான வருவாய் தரக்கூடிய வழக்குரைஞர் தொழிலை நாட்டுக்காகத் துறந்தவர், துணிந்து ஆபத்துகளை எதிர்கொண்டவர், ஆங்கிலேயர்களின் தந்திரங்களை சாமர்த்தியமாக முறியடித்த வ.வே.சு. அய்யர், 1925 ஜூன் 3ஆம் நாள், 44 வயதில், ஒரு விபத்தில் (பாபநாசம் அருவியில், மூழ்கும் மகளைக் காப்பாற்றும் முயற்சியில்) உயிரிழந்தார்.
*
பி.கு. – வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன் அய்யர் ஆகியோரின் செயல்கள் சாதியக்கண்ணோடத்தில் அமைந்தவை என்று குற்றம் சாட்டப்படுவதுண்டு. சாதிய அமைப்பு வலுவாக இருந்த காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக மதத்தின் மீதான தாக்குதல் குறித்து அவர்கள் பேசியதில் வியப்பு ஏதுமில்லை. 1857 சிப்பாய்ப் புரட்சிக்கு காரணமே கொழுப்பு தடவிய ரவைகள்தான். பன்றிக் கொழுப்பு என்று முஸ்லிம்களும், மாட்டின் கொழுப்பு என்று இந்துக்களும் அதை எதிர்த்தனர். அவரவர் அவரவர் சமூகம் சார்ந்த பார்வையில் பார்ப்பதைக் கொண்டு சாதிய வெறியர்களாக இருந்தார்கள் என்று கூறுவதை ஏற்பதற்கில்லை.
குறிப்பாக, வாஞ்சிநாதன் பற்றிய நேற்றைய பதிவிலும் இதுபோன்ற கருத்துகள் வந்தன. ஆஷ் துரையின் மனைவி நோய்ப்பட்ட தலித் பெண் ஒருவரை வண்டியில் ஏற்றிச் சென்றதாகவும், அதனால் ஆத்திரமடைந்த பிராமணர்களின் செயல் இது என்றும் சில தகவல்கள் அண்மையில் இணையத்தில் சுற்றிக்கொண்டுள்ளன. தகவல்களுக்கு ஆதாரம் இருந்தால் கருத்துகளை மறுபரிசீலனை செய்யலாம். ஆனால் இதுவரை இதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை.
வ.வே.சு. அய்யர் நடத்திய பள்ளியில் சாதிய முறையில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட சர்ச்சை, அதைக் கண்டித்து காந்தி எழுதிய கடிதம் குறித்தும் நான் அறிவேன். இவையெல்லாம் அவர்களுடைய விடுதலை தியாகத்தை குறைத்து விடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆக்கம் திரு.ஷாஜகான், புதுதில்லி, ஆசிரியர் புதியவன் வலைப்பூ
#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

  1. அந்த கடித்தத்தின் நகல் எங்கேயோ முகப்புத்தகத்தில் படித்த நியாபகம் சார், தேடிப்பார்க்கிறேன், நானும் அது போலத் தான் கேள்விப்பட்டேன்... நல்ல பகிர்வு...

    ReplyDelete

Post a Comment

வருக வருக