ஆக்கம் ஷாஜகான் - pudhiavan.blogspot.in
நாட்டுக்கு உழைத்த நாடகக் கலைஞர்கள் - பகுதி 1
விடுதலைப் போராட்ட காலத்தில் கதரின் வெற்றி, தேசியக் கொடி, பதி பக்தி, பாணபுரத்து வீரன், கவியின் கனவு, வள்ளி திருமணம் போன்ற நாடகங்கள் புகழ்பெற்ற நடிகர்களால் பிரபலமான நாடக சபைகளால் நடத்தப்பட்டன. நாடகத்தின் மூலம் தேசபக்தியைப் பரப்பியவர்கள் குறித்து இரண்டு பதிவுகளில் பார்ப்போம்.
கிருஷ்ணசாமிப் பாவலர்
காங்கிரஸ் மகாசபை துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பண்டிட் கோபாலாச்சாரியார் எழுதிய ‘ஆரிய சபா’ என்னும் நாடகம்தான் தேசிய இயக்கத்தின் முதல் நாடகம். ஆயினும் இது காங்கிரஸ் மகாசபை பற்றி அறிமுகம் செய்வதோடு நின்றுகொண்டது.
பால மனோகர சபை என்ற நாடகக் குழுவை நடத்திவந்த சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதிய ‘கதரின் வெற்றி’ குறிப்பிடத்தக்க தேசபக்தி நாடகம். சென்னையில் ராயல் தியேட்டரில் இந்த நாடகம் நடந்து முடிந்ததும் நாடகத்தைப் பார்த்த சிலர் அப்போதே மேடையில் ஏறி, எனக்கும் கதராடை தாருங்கள் என்று முழங்கும் அளவுக்கு உணர்ச்சிவசப்படச் செய்த நாடகம் இது என்கிறார் கா. திரவியம். கிருஷ்ணசாமிப் பாவலரின் நாடகங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். பாவலரைப் பற்றிப் புகழ்ந்து கட்டுரை எழுதியிருக்கிறார் அவர். கதரின் வெற்றி நாடகத்திலும் எம்ஜிஆர் நடித்திருக்கிறார் எனத் தெரிகிறது.
அடுத்து வந்தது வெ. சாமிநாத சர்மாவின் ‘பாணபுரத்து வீரன்’. அரங்கேறுவதற்கு முன்பு நூல்வடிவில் வெளிவந்தது. இந்நூலைத் தடை செய்தது ஆங்கிலேய அரசு. ஆகவே, தலைப்பு மாற்றப்பட்டு ‘தேச பக்தி’ என்ற தலைப்பில் 1931ஆம் ஆண்டு அரங்கேறியது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடைபெறும் போரை சித்திரிக்கும் வகையில் பாணபுரத்துக்கும் ஈசானபுரத்துக்கும் இடையே சண்டை என்று நாடகம் கூறுகிறது.
வீரவாலீசன் என்பவன்மீது ராஜத்துவேஷக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். அவன் கூறும் பதில்கள் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் கருத்துகளை எதிரொலிக்கின்றன. வீரவாலீசன் தூக்கிலிடப்படுகிறான். அவனுக்கு அடுத்து வந்த புரேசன் என்ற வீரன் விடுதலைக்குப் போராடி வெற்றி பெறுகிறான். இந்தியா நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கையை விதைப்பதாக அமைந்தது இந்த நாடகம்.
பாவலரின் தேசியக்கொடி நாடகத்தில் “கொடி பறக்குதடி பாப்பா” என்ற பாடலும், பாஸ்கரதாசின் நாடகங்களில் தேசபக்தி பேசிடாத சென்மம் வீணய்யா, தேசபக்தியே முக்தியாம், தெய்வ சக்தியாம் போன்ற பாடல்களும் மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தின.
மதுரகவி பாஸ்கரதாஸ்
மதுரகவி பாஸ்கரதாஸ், புராண நாடகங்களில்கூட ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை முழங்கச் செய்தவர். இவரது பாடல்களைப் பாடி நடிக-நடிகையர்கள் சிறை சென்றார்கள்.
ஆங்கிலேயர் தேடிவந்த தேசம் - நம்மை
ஆள நேரிட்டவர் பாசம் - இனி
ஏங்கி இருப்பதுவும் மோசம் - இன்னும்
ஏன் வரவில்லை இந்தியர்க்கு ரோஷம்
கற்புடைய மாதர்களின் மேலே - விழக்
கண்டோமே அன்னியநாட்டு சேலை - அவர்
விர்ப்பண் குறையும் அதனாலே - அதை
விளங்கிக் கதர் உடுத்தல் மேலே
என்று நாடகத்தின் மூலம் கதர் பிரச்சாரம் செய்தவர் பாஸ்கரதாஸ்
“ஒருதாய் வயிற்றில் வந்த உத்தம சகோதரனாம் பெருகு மத ஜாதி பேதம் பேசலாகுமோ” என்று மத ஒற்றுமைக்குக் குரல் கொடுத்தவர் பாஸ்கர தாஸ்.
சுதந்திரப் போரை மையமாக வைத்து அரங்கேறிய மற்றொரு நாடகம் ‘கவியின் கனவு’. எஸ்.டி. சுந்தரம் எழுதிய இந்நாடகம் 2000 முறை அரங்கேறியதாகத் தெரிகிறது.
பி.கு. - நாடகங்கள், பாடல்கள், கதைகள் வாயிலாக தேசபக்தியைப் பரப்பியவர்கள், போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் ஏராளம். எஸ்.ஜி. கிட்டப்பா, அவரது மனைவி கே.பி. சுந்தராம்பாள், வை.மு. கோதைநாயகி, எம்.ஆர். கமலவேணி, டி.கே. பட்டம்மாள், தியாகி விஸ்வநாத தாஸ் என பட்டியல் மிகவும் நீளமானது. இங்கே ஒருசோறுபதம் மட்டுமே காட்டப்படுகிறது.
#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்
கொக்குப் பறக்குதடா, வெள்ளைக் கொக்குப் பறக்கதுடா போன்ற பாடல்களும் நாடக கலைஞர் விஸ்வநாத தாஸ் பாடியது தான் என கேள்விப்பட்டு இருக்கிறேன். நல்ல பதிவு மற்றும் பகிர்வு...
ReplyDeleteநல்ல தொரு பதிவுப் பகிர்வு. புதிய தகவல்கள். குறித்தும் வைத்துக் கொண்டோம்.
ReplyDeleteதாமதமான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! மது! தாம்தம் என்று சொல்லுவதை விட....எல்லா தினங்களுமே ஆசிரியர் தினம் தானே!
ReplyDeleteவணக்கம் சகோ.
ReplyDeleteநாட்டு விடுதலைக்கு நாடகக் கலைஞர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. வீர முழக்கத்தை எழுத்தாக தந்த அந்த நல்லவர்களையும்., அதனை நடித்து மக்களிடைய விடுதலை விழிப்புணர்வைத் தந்த கலைஞர்களையும் நினைவு கூர்வோம். பகிர்வுக்கு நன்றிகள் சகோ. தொடர்வோம். சந்திப்போம்...
நாடக கலைஞர் விஸ்வநாத தாஸ் பற்றி அறியாதன அறிந்தேன்
ReplyDeleteநன்றி நண்பரே