விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 8 வீரமுரசு சுப்பிரமணிய சிவா

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 8

வீரமுரசு சுப்பிரமணிய சிவா

எழுத்து : திரு ஷாஜகான், புதுதில்லி

“கப்பலோட்டிய சிதம்பரனாரைப் புகழ்வோர், அவருக்கு வலக்கரமாக இருந்த சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியாது. சிதம்பரனார் துப்பாக்கி என்றால், அதனுள் தோட்டாவாக இருந்து செயல்பட்டவர் சிவா. அந்தணர் சிவாவும், வேளாளர் வ.உ.சி.யும் இரட்டையராக வாழ்ந்தனர்” என்று எழுதினார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.1884ஆம் ஆண்டு வத்தலக்குண்டு என்னும் ஊரில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், வசித்தது திருவனந்தபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியில்தான். அந்தணர் என்றாலும் சிலம்பு கற்றவர், அரும்பு மீசை வைத்தவர் சிவா. ஆங்கில ஆட்சிக்கு எதிரியாக இருந்ததால், திருவனந்தபுரம் சமஸ்தானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிவா, கோவை, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். சுதேசி இயக்கத்தையும், அந்நியப் பொருள்களை பகிஷ்கரிக்கும் இயக்கத்தையும் பிரச்சாரம் செய்தார்.

1908 பிப்ரவரி 3ஆம் நாள் தூத்துக்குடியை அடைந்தார். சுதேசி கப்பல் கம்பெனியைத் துவக்கிய சிதம்பரனாரின் சீடரானார். தூத்துக்குடியின் வீதிகள்தோறும் பொதுக்கூட்டங்களில் முழங்கினார். பிபின் சந்திரபாலருக்கு வரவேற்பு வழங்கினர் வ.உ.சி.யும் சிவாவும்.

இந்த இரட்டையர் மீதான ராஜத்துரோக வழக்கில், சிவாவுக்கு இடம் அளித்ததற்காகவே வ.உ.சி.க்கு மற்றொரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிவாவுக்கு பத்தாண்டு தண்டனை. அதுவும் அந்தமானில் சிறைவாசம் என்று உத்தரவிட்டார் நீதிபதி பின்ஹே. ‘ஆம், நான் ஏகாதிபத்தியத்தின் எதிரிதான்’ என்று நீதிமன்றத்தில் பிரகடனம் செய்தார் சிவா. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

தீர்ப்பு வந்ததும் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. கடைகள் அடைக்கப்பட்டன. தீர்ப்பைக் கண்டித்து எவர் பேசினாலும் கைது செய்யப்பட்டார்கள். பாளையங்கோட்டையில் அரசு அலுவலகங்கள் நொறுக்கப்பட்டன. நகராட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. கலவரச் செய்திகள் பத்திரிகைகளுக்கு உடனடியாகத் தெரிந்துவிடாமல் இருப்பதற்காக, தந்திகள் தாமதப்படுத்தப்பட்டன. மக்களின் போராட்டத்தை அடக்கி விட்டது வெள்ளையர் ஆட்சி. ஆனாலும் பழிவாங்கும் உணர்ச்சி உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. அதில் விளைந்தவர்தான் வாஞ்சிநாதன்.

இளமையில் சிறைபுகுந்த சுப்பிரமணிய சிவா, சிறையிலிருந்து தொழுநோயோடு வெளியே வந்தார். சிறைக்குள் கம்பளி மயிர்வெட்டும் தொழிலைக் கொடுத்ததுதான் நோய்க்குக் காரணம் என்று கருதப்படுகிறது. தொழுநோயோடு போராடிக்கொண்டே தன் விடுதலைப் போராட்டத்தையும் தொடர்ந்தார் சிவா.

சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், மீண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கினார். மனைவியை தலைமை நிர்வாகியாகக் கொண்டு, ‘ஞான பானு’, ‘பிரபஞ்சமித்திரன்’, ‘இந்திய தேசாந்திரி’ ஆகிய பத்திரிகைகளை நடத்தினார்.

பாரதியாரின் பாடல்களைப் பாடுவதிலும் அவற்றைப் பரப்புவதிலும் அளவற்ற ஆர்வம் கொண்ட சிவாதான், திருவல்லிக்கேணி கடற்கரைக்கு ‘திலகர் கட்டம்’ என்ற பெயர் வைத்தவர். பொதுக்கூட்டங்களில் வெள்ளையரை எதிர்த்துப் பேசியதற்காக மீண்டும் சிறைவாசம். மூன்றுமுறை தண்டனை, பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம்.

தேசபக்தர் சிவாவுக்கு ஒரு கனவு இருந்த்து – பாரத மாதாவுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. வாழ்வின் இறுதிக்காலத்தில், கோயில் எழுப்புவதற்காக நன்கொடை திரட்டி, 1923ஆம் ஆண்டு பாப்பாரப்பட்டியில் நிலம் வாங்கினார். 23-6-1923 அன்று பாரத மாதா கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ். கோயில் கனவுடனேயே 1925 ஜூலை 23ஆம் நாள் உயிர் நீத்தார் சுப்பிரமணிய சிவா.

ஆலயத்தில் பாரத மாதா சிலையை மேற்கு நோக்கி வைக்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீர்ர்களின் சிலைகளை கோயில் முழுவதும் வைக்க வேண்டும் என்று தன் கற்பனைக் கோயிலின் விவரங்களையும் தந்திருக்கிறார் சிவா.

பாப்பாரப்பட்டி, ஒகனேக்கல் என்னும் இடத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. இங்கே பாரதமாதா கோயில் எழுப்ப குமரி அனந்தன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அண்மையில் தமிழக அரசும் இதைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
*
பி.கு. - இக்கட்டுரை எழுதப்பட்டது 2002இல். இப்போதும் குமரி அனந்தன் இதே கோரிக்கையை முன்வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்துகிறார். தர்மபுரி மாவட்டத்தில், பாப்பாரப்பட்டியில் உள்ள 6 ஏக்கர், 21 சென்ட் நிலம் சண்முக முதலியார் என்பவரிடம் வாங்கப்பட்டது. பாரத மாதாவின் சிலை தற்போது தியாகி சின்னமுத்து முதலியார் வாரிசுகளிடம் உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தில் கவனிப்பாரற்றிருக்கும் சுப்பிரமணிய சிவா நினைவுமண்டம் உடுக்கை என்னும் வலைப்பூவில் கிடைத்தது.

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

 1. விடுதலைப் போராட்டத்தில் அதிகம் அறியப் படாதவர் பலர் உள்ளனர். அவர்களைப்பற்றி பாடப் புத்தகங்களில் கூட இடம் பெறுவதில்லை. சுப்ரமணிய சிவாவின் தியாகமும் வீரமும் உறுதியும் என்றென்றும் நினைவு கூறத் தக்கது.
  நாட்டுக்குழைத்த நல்லோரைப் பற்றிய பதிவுகள் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா.
   பதிவுகள் வரும் இருபத்தி ஏழு வரை தொடர்கின்றன ...

   Delete
 2. அறியாத விசயங்களும் கிடைத்தன நன்றி நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. நன்றிகளுக்கு உரியவர் திரு ஷாஜகான்
   வருகைக்கு நன்றி

   Delete
 3. பாரத மாதா கோவில் நல்லது தானா??? அறியாத பல தகவல்கள்.. அப்புறம் நான் முதன் முதலில் மேடையில் பேச்சுப்போட்டியில் பேசியது இவரைப்பற்றித்தான் சார்( 6ஆம் வகுப்பில்)... பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. நல்லது தான்.


   ஆகா மிக முக்கியமான ஒரு வரலாற்று உண்மையை பகிர்ந்ததுக்கு நன்றி ...

   Delete
 4. நல்ல கட்டுரை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. If anyone has got Subramania Siva's books, can you please let me know. Thanks. N.R.Ranganathan. 9380288980

  ReplyDelete

Post a Comment

வருக வருக