விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 9 அஞ்சாநெஞ்சன் வாஞ்சிநாதன்


எழுதியவர் திரு.ஷாஜகான்

அகிம்சைப் போராட்டத்தின் மூலம் சுதந்திரத்தை அடைவது என்பது காந்தியின் வழி. ஆயுதங்களின் மூலம் சுதந்திரத்தை அடையவேண்டும் என்பது நேதாஜியின் வழி. இந்த இரண்டு வழிகளும் சுதந்திரப் போராட்டத்தில் ஆழமாக வேர்கொள்வதற்கு முன்பே தமிழகத்தில் ஆயுதத்தின் மூலம் வெள்ளையர்களை ஒழிக்கும் இயக்கம் பிறந்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. கைது செய்யப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுதான்.
வ.உ.சி.க்கு நேர்ந்த இன்னல்களை அறிந்த சில இளைஞர்களின் நெஞ்சம் கொதித்தது. அகிம்சைப் போராட்டத்தால் வெள்ளையர்களை விரட்ட முடியாது என்று எண்ணினார்கள் சில இளைஞர்கள். அப்போது புதுச்சேரியில் தங்கி, இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவர் வ.வே.சு. அய்யர். அவரிடம் பயிற்சி பெற்ற இளைஞர்களில் ஒருவர்தான் வாஞ்சிநாதன் (இயற்பெயர் சங்கரநாராயணன்). புதுச்சேரியில் கரடிக்குப்பம் என்ற பகுதியில், சோளக்கொல்லை பொம்மையை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி தரப்பட்டது.
வாஞ்சிநாதன் அந்நாளைய திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் செங்கோட்டையில் வசித்து வந்தவர். திருநெல்வேலி மாவட்டத்தின் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பாரத மாதா சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். பரங்கி ஒழிப்பு அச்சகம் என்ற ரகசிய அச்சகம் ஒன்றும் அமைத்துக்கொண்டு சுற்ற்றிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தில்லிக்கு வந்து முடிசூட்டுவதாக இருந்த நேரம் அது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான இந்தியர்களின் உணர்வை உலகறியச் செய்யவேண்டும் என்று இளைஞர்கள் திட்டமிட்டனர். வாஞ்சிநாதன், அவருடைய உறவினரான சங்கர கிருஷ்ணன், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகிய மூவரும் புதுச்சேரியில் ஒரு தோட்டத்தில் ரகசியமாக சந்தித்து திட்டம் தீட்டினர்.
1911 ஜூன் 17ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் ஆஷ் என்ற ஆங்கிலேயர் மணியாச்சிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவர் இருந்த ரயில் பெட்டியிலேயே வாஞ்சியும் ஏறிக்கொண்டார். ரயில் மணியாச்சி சந்திப்பை நெருங்க இருந்த நேரத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆஷ் துரையை சுட்டுக்கொன்றார். போலீசார் தன்னை விடமாட்டார்கள் என்பதால், கூட்டாளிகளைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்பதற்காக கழிப்பறைக்குள் நுழைந்து, வாயில் துப்பாக்கியை நுழைத்து (முகம் அடையாளம் தெரியாமல் போக வேண்டும் என்பதற்காக) தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர் துறந்தார் வாஞ்சிநாதன். மணியாச்சி சம்பவத்தின்போது வாஞ்சிநாதன் சட்டைப்பையில் இருந்த ஒரு கடிதம் கூறுகிறது –
சுதந்திரத்தை அடைய வெள்ளையனை ஒழிக்க ஒவ்வொரு இந்தியனும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறான். ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்த்தும், அவரைக் கொல்ல 3000 சென்னைவாசிகள் சபதம் செய்து கொண்டுள்ளனர் என்பதை எல்லாருக்கும் தெரிவிக்கவே அவர்களின் கடைசித் தொண்டனாகிய நான் இந்தச் செயலைச் செய்தேன்.
வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்று, தற்கொலையும் செய்துகொண்டபோது அவருக்கு வயது 25. மணமானவர். மனைவி பொன்னம்மாள் நிறைமாத கர்ப்பிணி. வெள்ளையனை ஒழிப்பதே தன் குறிக்கோள் என்று உயிர்துறந்த வாஞ்சிநாதனுக்கு குடும்பத்தைவிட நாடுதான் முக்கியமாக இருந்த்து.
கடைசியாக ஒரு செய்தி - வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக்கொன்றபின் தற்கொலை செய்து கொள்வதற்காக முதலில் ஓடி ஒளிந்த கழிப்பறை பெண்கள் கழிப்பறை. எனவே அந்த இறுதிநேரத்திலும் அங்கிருந்து வெளியேறி ஆண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த பிறகுதான் சுட்டுக்கொண்டார் என்று அண்மையில் குமரி அனந்தன் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயர் வைக்கப் போராடி வெற்றி பெற்றவர் குமரி அனந்தன்.
*
பி.கு. – செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் நினைவு மண்டபம் அமைக்க காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் மறக்கப்பட்டது. கடந்த ஆண்டு அந்த மணிமண்டபம் திறக்கப்பட்டது.

‪#‎விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்‬

எழுதியவர் திரு.ஷாஜகான்

Comments

 1. வணக்கம் சகோதரரே!

  வீரத்தமிழர்கள் தொடர் மிக அருமை!

  புக் மார்க் செய்துள்ளேன். நேரக்குறைபாடால். பின்னர் ஓய்வாக ஆறுதலாக வாசிப்பேன்.

  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  ReplyDelete
 2. படிக்க படிக்க வீரம்...

  ReplyDelete

Post a Comment

வருக வருக