கல்வித் தேமல்களும் தேம்பல்களும் ...

திரு ஜெயப் பிரபு அவர்களின் முகநூல் பதிவொன்று ...
ஜனவரி பிறந்துவிட்டாலே ஆசிரியர்களுக்கு மனதுக்குள் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை எப்படியெல்லாம் தேர்ச்சி பெற வைக்கலாம் என்றே அவர்களது சிந்தனை இருக்கும்.
*மாணவர்கள் சரி வர பள்ளிக்கு வருவதே இல்லை.
*பெற்றோர் கல்வியறிவு குறைந்தவர்கள்.எனவே அவர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்து அக்கறை கொள்வது இல்லை.
*கட்டாயக் கல்விச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் போன்றவை ஆசிரியர்களின் ஈடுபாட்டை குறைத்துள்ளன.
* நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதிலும், மற்ற புள்ளி விபரம் வழங்குவதிலுமே பாதி வேலை நேரம் பறி போய்விடுகிறது.
- என்றெல்லாம் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் விவாதிக்கப்படுகின்றன.
அதை போல மாணவர்களுக்கும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஒரு முறை ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம் நடந்தது.
அப்போது 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், தேமலுக்கு மருந்து தருமாறு கேட்டனர்.
மருத்துவர் அவர்களை மேல் சட்டையை கழற்றச் சொல்லிப் பார்த்தார்.
அந்த மாணவர்களுக்கு படை போல் முதுகு தோள் பட்டை என பரவியிருந்தது.
10 ஆம் வகுப்பு பயிலும் பிற மாணவர்கள் அனைவரையும் சட்டையை கழற்றச் சொல்லி பார்த்த போது சொல்லிவைத்தார் போல் அத்தனை மாணவர்களுக்கும் அதை போல் பரவியிருந்தது.
"என்னா சார் இது ? 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இப்படி இருக்கிறதே?" - என மருத்துவர் குழப்பத்தோடு கேட்டார்.
"ரொம்ப சிம்பிள்.
அவர்களுக்கு விடுமுறை கிடையாது.சனி,ஞாயிற்றுக் கிழமைகளிலும் பள்ளி உண்டு.
மாலை 6 மணிக்கு மேலும் சிறப்பு வகுப்புகள் தொடரும்.
10 ஆம் வகுப்பு மாணவர்களிடம் ஒரு சீருடையோ அதிகபட்சமாக இரண்டு சீருடைகள் தான் இருக்கும். அதை துவைத்துப் போட்டு நன்றாக தேய்த்துக் குளிக்கக் கூட அவர்களுக்கு நேரமில்லை.
இதுதான் காரணம்"-என்றேன்.
கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் இதே நிலை தான் நிலவுகிறது. காலை 8 மணிக்கெல்லாம் தொடங்கும் சிறப்பு வகுப்பு இரவு 10 மணி வரை கூட சில தனியார் பள்ளிகளில் நீடிக்கிறது.
"அரசு விடுமுறை தினங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமென அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாலும், 
நூறு சதவீத தேர்ச்சி.. தேர்ச்சி என நிர்பந்திப்பதாலும் நாங்கள் இதையெல்லாம் செய்தாக வேண்டியுள்ளது.
எங்களுக்கும் குழந்தைகள் உண்டு.அவர்களும் பள்ளிக்குச் செல்கிறார்கள்.எனவே இவர்களது பிரச்சனைகள் நாங்கள் அறியாததல்ல. எனினும் எங்களுக்கு வேறு வழி இல்லையே " என்கின்றனர் சில ஆசிரியர்கள்.
முன்பொருமுறை பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு பள்ளித் தலைமையாசிரியர், மாணவர்களை நோக்கி,
" நீங்கள்லாம் படிக்க வர்றீங்களே... முடியெல்லாம் வெட்டிகிட்டு, நீட்டா வரணுமுன்ற அறிவில்லையா? 
இப்புடி காடு மாதிரி வளர்ந்து கெடக்கு?"-எனக் கேட்டிருக்கிறார்.
தலைகுனிந்திருந்த மாணவர் கூட்டத்திலிருந்து ஒருவன் குனிந்தவாறே, "என்னைக்கி வெட்டுறதுன்னு நீங்களே சொல்லுங்க.... ஞாயிறும் பள்ளிக்கூடம் வைக்கிறீங்க... ஸ்கூல் முடிஞ்சி போனா கடைய பூட்டிடுறாங்க..." -எனச் சொல்லியிருக்கிறான்.
சவுன்டு விட்ட அந்த மாணவன் யாரென இவர் தீர விசாரித்தும், அது யாரென கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
நான் சொன்னேன்...
"நன்றாக பொறுமையாக யோசித்துப் பாருங்கள்.அவன் கேட்டதில் தவறெதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அவன் பதில் சொன்ன விதம் தவறுதான். மாணவிகள் முன்னிலையில் நீங்கள் இப்படித் திட்டியதும் அவன் கொந்தளித்திருக்கலாம்"- என்றேன்.
"செருப்பால அடிச்சா மாதிரி கேட்டுட்டான் சார்... இனி ஞாயித்துக் கெழம கோச்சிங் வைக்கக் கூடாது" - என்றார் அந்தத் தலைமையாசிரியர்.
-வெறும் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகவே மாணவர்களைப் பார்க்கும் சமுதாயப் போக்கு மாறும் வரை இவர்களுக்குத் தீர்வில்லை.

Comments

 1. மிக உண்மையான ஒன்று! ஆசிரியர்களும் சரி மாணவர்களும் சரி இயந்திரங்கள் அல்ல! ஊட்டிவிட படிப்பு ஒன்றும் சோறும் அல்ல! இதை அதிகாரிகள் புரிந்துகொண்டால் சரி!

  ReplyDelete
  Replies
  1. அதிகாரிகள் அல்ல சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்
   பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும் ...
   நன்றி ஸ்வாமிகள்

   Delete
 2. வெறும் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகவே மாணவர்களைப் பார்க்கும் சமுதாயப் போக்கு மாறும் வரை இவர்களுக்குத் தீர்வில்லை//

  உண்மை! உண்மை! கல்வி என்பதே கற்றல் எதையுமே புரிந்து படித்தால்தான் மதிப்பு! பெற்றோர்களும் இதற்கு காரணம்! தங்கல் குழந்தைகளின் ஆர்வத்தை மனதில் கொள்ளாமல், தாங்கள் நினைத்த பொறியியல், மருத்துவம் இப்படித்தான் படிக்க வேண்டும் என்ற ஒரு மன அழுத்தத்தை விதைத்து விடுகின்றார்கள்! எத்தனைக் குழந்தைகளுக்கு 10 ஆம் வகுப்பு, 11, 12 ஆம் வகுப்புகளில் கவுன்சலிங்க் தேவைப்படுகின்றது தெரியுமா?! எஜுகேஷனல் சைக்காலஜிஸ்ட் களிடம் வரும் மாணவ, மாணவ எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது! அதுவும் தேவை இல்லாமல்! அதன் பிறகு சைக்கியாட்ரிஸ்ட்....இப்படி கனவு கண்டு அந்தந்த வயதுக்குரிய ரசனைகளைக் களைந்து...என்னவோ போங்க எப்ப திருந்துவாங்களோ?!!!

  மிக நல்ல பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா...

   Delete
 3. அச்சச்சோ, உண்மைதானா சார்??? 7 நாளும் பள்ளி வைப்பது மாணவர்களுக்கு ஒரு வெறுப்பை உண்டாக்குமே தவிர படிப்பார்வத்தை ஒரு போதும் உருவாக்காது( அனுபவம் பேசுகிறது) என்பது என் எண்ணம் சார்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ...
   விடுமுறையில் மாணவர்களை பள்ளிக்கு வரசொல்வது தவறு என்பவர்கள் கல்வியாளர்கள்.

   சிறு இடைவேளைகளில் கூட பள்ளியை அவன் காற்றைப் போல் சுற்றி வரவேண்டும் என்று சொல்கிறார்கள்..

   Delete
 4. இபொழுதெல்லாம் கல்வி ஒரு வியாபாரமாக அல்லவா மாறிவிட்டது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, எப்படி எல்லாம் விருமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் வகுப்புகளை நடத்தினால் நூறு சதவீத தேர்ச்சி பெற முடியும் என்று தனியார் பள்ளிகள் அலைகின்றன. இவ்வாறு இருக்கும்போது, இந்த நிலமை எவ்வாறு மாறும்?

  ReplyDelete
  Replies
  1. உணமைதான் ... சொக்கன்...
   மெல்ல மாறும் என்று நம்புகிறேன்

   Delete
 5. இயல்பான நிலையை யதார்த்தமாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே..

   Delete
 6. அவசியமான பதிவு நண்பரே... எனது புதிய பதிவு My India By Devakottaiyan

  ReplyDelete
 7. இன்றைய பள்ளி நிலையை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் நண்பரே
  இதன் பெயர் பள்ளி என்பதை மர்ற்றி, மதிப்பெண் தொழிற்சாலை என்று மாற்றினால் பொருத்தமாகஇருக்கும் என எண்ணுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி

   எல்லாம் மாறிவிடும்
   நம்பிக்கையோடு இருப்போம்.

   Delete
 8. உளவியல் தெரிந்த நமக்கு சில நேரங்களில் அதை பயன்படுத்த தெரிவதில்லை

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்
   பல நேரங்களில் அதுகுறித்து சிந்திப்பதே இல்லை நாம்

   Delete

Post a Comment

வருக வருக