திரு ஷாஜகான் அவர்களின் பதிவுத்தொடர்

கட்டாயம் அறிந்திருக்கவேண்டிய தலைவர்களப் பற்றிய தொடர் ஒன்றை திரு.ஷாஜகான் அவர்கள் எழுதிவருகிறார்கள். அவரது ஒரு கட்டுரைப் பகிர்வு.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 16

ஜே.சி. குமரப்பா

விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழகத் தலைவர்களில் குறி்ப்பிடத் தக்கவர்கள் சத்தியமூர்த்தி, காமராசர், ராஜாஜி. அதிகம் அறியப்படாதவர் ஜே.சி. குமரப்பா. சுதந்திர இந்தியாவில் அமைச்சர் பதவி கிடைத்தபோது அதை ஏற்க மறுத்தவர் குமரப்பா.1892 ஜனவரி 4ஆம் நாள் தஞ்சையின் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர் ஜோசப் குமரப்பா. தந்தை கார்னிலியஸ் பொதுப்பணித் துறையில் பணியாற்றி வந்தார். தாயார் எஸ்தர் இறைபக்தி மிகுந்தவர். தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஜே.சி. குமரப்பாவின் இளம் உள்ளத்தில் நேர்மை, உண்மை, பரிவு ஆகியவற்றை விதைத்த பெருமை அவரது தாயாருக்கே உரியது.

புத்திக்கூர்மை உடைய குமரப்பா பள்ளிக்கல்வியை முடித்த பிறகு லண்டனில் தணிக்கையாளர் கல்வியைப் பெற்றார். 1919ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி, பம்பாயில் ஆங்கிலேய நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் துவங்கினார். 1924இல் சொந்த நிறுவனத்தை நிறுவினார்.

1927இல் சுற்றுலாப் பயணமாக அமெரிக்கா சென்ற அவர், அங்கேயே தங்கி வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். ஒருமுறை, மாதாகோயிலில் இந்தியா ஏன் ஏழை நாடாகவே உள்ளது என்ற பொருளில் உரையாற்றினார். இக்கட்டுரை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. இதைப்படித்த அவரது பேராசிரியர் செலிக்மான், குமரப்பாவின் எம்.ஏ. பட்டத்துக்கான கட்டுரை இந்திய வறுமைக்கான காரணங்கள் என்னும் தலைப்பில் அமையட்டும் என்றார். அதுதான் ஜே.சி. குமரப்பாவை மாற்றிய நிகழ்ச்சி. இந்த வாய்ப்பு அவருக்கு வெள்ளையரின் சுரண்டலை அறியவைத்தது. தேசியவாதியாக மாற்றியது. குடும்பப் பெயரான குமரப்பா என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.

1929இல் இந்தியா திரும்பிய குமரப்பா, தான் எழுதிய இந்தியப் பொதுநிதி என்ற நூலை வெளியிடுவது தொடர்பாக காந்தியடிகளை சந்தித்தார். காந்தி என்னும் ஈர்ப்பு சக்தியிலிருந்து யார்தான் விலக முடிந்தது?! குமரப்பாவும் அவரது தொண்டர் ஆனார். அவருடைய கட்டுரைகள் ‘யங் இந்தியா’ பத்திரிகையில் தொடராக வெளிவந்தன.

தண்டி யாத்திரை மேற்கொள்ளச் சென்ற காந்தியடிகள், யங் இந்தியாவை நடத்துமாறு குமரப்பாவிடம் ஒப்படைத்தார். தன்னால் இயலாது என்று மறுத்தார் குமரப்பா. “உன்னால் முடியுமா என்பதை முடிவு செய்ய வேண்டியவன் நான்தான், நீ அல்ல” என்றார் காந்தி. பத்திரிகையில் எழுதினார் குமரப்பா. பம்பாயில் கணக்குத் தணிக்கையாளராக அவர் பணியாற்றக்கூடாது என்று உத்தரவிட்ட அரசு, அவரைக் கைது செய்தது. மேலை நாகரிகத்தில் வளர்ந்த குமரப்பா, சிறை மீண்டதும் கதர் உடுத்தத் தொடங்கினார்.

காந்தியடிகள் வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றபோது, யங் இந்தியாவின் பொறுப்பு மீண்டும் குமரப்பாவிடம் வந்தது. மீண்டும் ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம். விடுதலையாகி வந்த குமரப்பாவிடம், பீகார் வெள்ள நிவாரணப் பணிகளில் ராஜேந்திர பிரசாதுக்கு ஆலோசகராக இருக்கும் பொறுப்பு தரப்பட்டது. கணக்கு வழக்குகளில் தேர்ந்த குமரப்பா இதையும் சிறப்பாக நிறைவேற்றினார்.

கண்டிப்பும் நேரம் தவறாமையும் அவருடைய கொள்கைகள். ஒருமுறை, பீகாருக்கு வந்த காந்தியடிகளின் காருக்கான பெட்ரோல் செலவை அவரிடமே வாங்கிக் கொள்ளுங்கள், துயர் துடைப்பு நிதியிலிருந்து தர முடியாது என்று அடித்துச் சொல்லிவிட்டவர் குமரப்பா.

அவரை சந்திக்க காந்தியடிகள் பட்னாவிற்கு வருவதாகத் தெரிவித்திருந்தார். வந்து சேர்ந்த காந்தியடிகளிடம் தனக்கு இப்போது நேரம் இல்லை என்று கூறிவிட்டார் குமரப்பா. “உன்னைப் பார்க்கத்தானே வந்தேன். நான் இன்றிரவே வார்தா போக வேண்டுமே” என்றார் காந்தி. “என்னிடம் நீங்கள் முன்னதாகவே நேரம் ஒதுக்கீடு பெறவில்லை. நீங்கள் போகலாம்” என்று கூறிவிட்டார் குமரப்பா.

பொருளாதார நிபுணராக இருந்த குமரப்பா, நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் தீட்டித் தந்தார். கிராம முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை என்று கூறியவர் அவர். விடுதலைக்குப் பிறகு பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்ற அவர், மதுரை காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தங்கினார்.

1960ஆம் ஆண்டு, உடல்நலம் குன்றியிருந்த அவரை சந்திக்கச் சென்றார் ஒரு பெண். உரையாடிவிட்டுத் திரும்பும்போது, “இன்று காந்தியடிகளின் நினைவுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறிச்சென்றார் அந்தப் பெண். “நானும் பங்குபெற வேண்டும்” என்றார் குமரப்பா. உடல்நலமில்லாத குமரப்பா எப்படி வருவார் என்ற குழப்பத்துடன் விடைபெற்றார் அப்பெண்மணி. ஆம், காந்தியடிகள் மறைந்த அதே ஜனவரி 30ஆம் நாள் மாலை காந்தியடிகளின் சீடர் குமரப்பாவும் மறைந்தார்.
*
பி.கு. - குமரப்பா திட்டக்குழுவில் - பிளானிங் கமிஷனில் உறுப்பினராக இருந்தார். ஒருமுறை திட்டக்குழுவின் அலுவலத்துக்கு வாடகைக் குதிரை வண்டியில் வந்தார். யார் என்று தெரியாத காவலர்கள் அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர். பிறகு நேரு வரை விஷயம் போனபிறகு அனுமதிக்கப்பட்டார். இச்செய்தி தமிழ் ஹிண்டு நாளிதழில் திட்டக்கமிஷன் குறித்து பீட்டர் அல்போன்ஸ் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்
https://www.facebook.com/shahjahanr/posts/784784391544336:0

Comments

 1. சிறந்த மனிதர்களால் கிடைத்த சுதந்திரம்....!நல்ல பதிவு...தொடருங்கள் சகோ...

  ReplyDelete
 2. வணக்கம்
  மிக அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள் அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  த.ம 2வது வாக்கு
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

  வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. குமரப்பா பற்றி அறிந்துகொண்டேன்..பகிர்விற்கு நன்றி அண்ணா..

  ReplyDelete
 4. கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய தலைவர். அவரது முக நூலில் தொடர்கின்றோம். பகிர்வுக்கு மிக நன்றி! நண்பரே!

  ReplyDelete

Post a Comment

வருக வருக