பட்லர் 2013இயக்குனர் லீ டானியலின் அருமையான திரைமுயற்சி.

பட்லர் ஒரு பிரஞ்சு வார்த்தை.

அரசனின் வைன் கோப்பைகளுக்கு பொறுப்பானவன்  என்கிற அர்த்தத்தில் இருந்து வந்தது.

பொதுவாக பெரும் பணக்காரர்களின் வீடுகளில் இருக்கும் பணியாளர்களை கட்டுபடுத்தும் மேற்பார்வை செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் பட்லர்கள்.


ஒரு வேலைக்காரனின் கதையைச் சொல்லும் படம். அப்படி என்ன சிறப்பு என்று நீங்கள் வியக்க கூடும். அவர் வேலைபார்த்த இடம் வெள்ளை மாளிகை. அதுவும் 34 நீண்ட ஆண்டுகள்!

சிசில் கெய்ன்ஸ் ஒரு பருத்தி பண்ணையில் அடிமையாக வாழ்வை துவக்கிய சிறுவன்.

நூற்றுக் கணக்கான பண்ணை அடிமைகளளின் உழைப்பை வெள்ளைக் கனவான்கள் உறிஞ்சிக் குடிக்கிறார்கள்.

ஒரு நாள் சொங்கி பண்ணையார் ஒரு காலை விந்தி விந்தி நடந்து வந்து தனது அம்மாவை இழுத்துக்கொண்டு ஒரு மரக்குடிலில் ஒதுங்குவதைப் பார்கிறான். தொடர்ந்து குடிலில் இருந்து வரும் அலறல் சிறுவனை வாதிக்கிறது. அப்பா என்னப்பா என்னப்பா என்று அப்பவை பார்த்துத் துடிக்கிறான்.

கருப்பு அடிமைக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் விலங்குகள்தானே.  அப்படிதானே அமெரிக்க சமூகம் கருதியது. கையாலாகாத உணர்வுக் கலவையாக நின்றுகொண்டிருக்கிறான் அப்பன் .

மனைவியின் நிலையை நினைத்து, அதை மகன் வேறு பார்கிறானே என்கிற வேதனை முகத்தில் படர கண்களில் குளம் கட்டி நிற்கிறான்.

குடிலின் உள்ளே நீண்ட அலறல்கள் குறைந்து மௌனம் பரவுகிறது. வெளியே வருகிறான் சொங்கி, நொண்டி பண்ணையார். ஒரு காலை விந்தி விந்தி தன்னைக் கடக்கும் அவனை ஏய் என்று அழைக்கிறான் சிசிலின் அப்பன்.

சொங்கிப்  பண்ணையார்  திரும்பின வாக்கில் துப்பாக்கியால் சுட்டு அப்பனின் கதையை முடிக்கிறான்.

தன் கண் முன்னால் தனது தாய் வன்புணர்வு செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருக்கும் மகனின் கண் முன்னால் அப்பா சுடப்பட்டு விழுகிறான்.

பருத்தி செடிகளுக்கு மத்தியில் நிலை குத்திய விழிகளோடு இருக்கும் அப்பாவின் சடலத்தை பார்த்து கதறி அழும் சிசில் அந்த கிராமத்தை விட்டு ஓடி தலைமறைவு வாழ்கையை வாழ ஆரம்பிக்கிறான்.

இந்தக் காட்சியின் செய்நேர்த்தி அருமை. 

மெல்ல  மேலே எழுந்து விரியும் காட்சி சட்டகத்தில் (frame) வெண்ணிற பருத்தி  பண்ணையின் ஒரு பாதையில் பருத்தி மலர்களுக்கு இடையே வான் நோக்கி நிலைகுத்திய விழிகளோடு கிடக்கும் அப்பனின் அருகே இறங்கும் ஒரு பஞ்சு துகள்  பார்வையாளனின் மனத்திரையில் சில காலத்திற்காவது ஒட்டிக் கொண்டிருக்கும். 

ஓடிப்போன சிசில் பசித்தால் எங்கேனும் திருடி உண்பது என அவனது வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான்.  ஒரு முறை ஒரு வீட்டில் ரொட்டித் துண்டைத் திருடுகையில் அந்த வீட்டில் இருந்த ஒரு கறுப்பின பெரியவர், மேனார்ட் இவனுக்கு புத்தி சொல்லி அவனை ஒரு பட்லர் ஆக்குகிறார். பிறகு வாஷிங்டன் டி.சி உணவகத்தில் அவனுக்கு பணியை வாங்கித் தருகிறார். இங்கு சிசிலின் பணிநேர்த்தி அவனை வெள்ளை மாளிகையில் பணியமர்த்துகிறது!
பாரஸ்ட் விட்டேகர், பட்லராக
இந்நிலையில் சிசிலின் மூத்த மகன் லூயிஸ், பிஸ்க் பல்கலைக் கழகத்தில் இணைகிறான். அங்கே அவன் கற்பதோடு தனது இன விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் பாடுபட ஆரம்பிக்கிறான். கறுப்பின மக்கள் எப்படி வெறுக்கப் பட்டார்கள். எப்படி அவர்கள் தாக்கப் பட்டார்கள் என்பதை நெகிழ்த்தும் உலுக்கும் காட்சிகளில் விவரிதிருகிறார் லீ டானியல்!

சமூக சமத்துவத்தை விரும்புவோர் தவறவிடக் கூடாத  காட்சிகள் அவை.

லூயிஸ்,கரும் சிறுத்தைகள் அமைப்பில் தனது இனமானதிற்காக போரிட்டு அமைப்பு வன்முறையில் இறங்கியவுடன் அதைவிட்டு விலகி முதுகலைப் பட்டம் (அரசியல் அறிவியலில்!) பெறுகிறான். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து செயல்படுகிறான். அதன் செனட்டர் பதவிக்கு கூட போட்டியிடுகிறான்.

இளையவன் சார்லியோ வியட்நாம் போரில் பங்கெடுத்து, வெள்ளையருக்காக போரிட்டு மாய்கிறான். இளையவன் தனது அறிவுரையை மீறி  போரில் பங்கெடுத்தற்காக அவனது இறுதி சடங்கில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறான் அண்ணன். இது மூத்தவன் லூயிசையும், பட்லர் தந்தை சிசிலையும் பிரிக்கிறது.

வெள்ளை மாளிகையில் தனது பணியின்பொழுது சந்தித்த அனுபவங்களை சிசில் நினைவில் இருந்து திரையில் விவரிதிருக்கிறார் லீ டானியல்.

கென்னடி மரணமும் அவரது மனைவி ஜாக்குலின் கதறி அழுவதும் படதின் முத்திரைக் காட்சிகள். லிங்கனின் மரணத்திற்கு நூறாண்டுகளுக்கு பின்னர் கென்னடி கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இருந்ததால் சுடப்பட்டார் என்பது நீங்கள் அறிந்ததுதானே.

வெள்ளை மாளிகையில் கறுப்பின பணியாளர்களுக்கு  குறைந்த ஊதியமே வழங்கப் படுகிறது. இதனை எதிர்த்து வாதிடுகிறான் சிசில். இப்படி நாட்டமும் காட்டமுமாக தொடர்கிறது அவனது பணி. தனது சுயமரியதிக்காக அவர்  போரிட்டது அவர் இன பணியாளார்களிடையே அவருக்கு ஒரு நாயகன் நிலையைத் தருகிறது. ஒருமுறை சிசில் அவரது மனைவியோடு வெள்ளை மாளிகை விருந்திற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கபடுகிறார்!

பின்னர் ரீகன் தென்னாப்பிரிக்காவிற்கு  பொருளாதார உதவிகளை செய்ய மறுத்ததை பார்க்கும் சிசில் தனது பணியை துறக்கிறார்.

தனது ஆரம்ப கால பருத்திப் பண்ணைக்கு திரும்பி பேச்சை இழந்த தனது அன்னையை பார்கிறார். தனது மகனின் போராட்டம் நியாயம் என்று உணர்கிறார். தானும் போராடுகிறார்.

மகனும் தந்தையும் ஒன்றாய் சிறையில்!

மெல்ல சுழலும் காலம் மாறுகிறது. வெள்ளை மாளிகை அதிபராக ஒரு கறுப்பின அமெரிக்கரே வருகிறார்!

அவரை சந்திக்க தயாராகிறார் சிசில்.

படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் செய் நேர்த்தி கடைசியில் ஒப்ரா வின்ப்ரேயின் (சிசிலின் மனைவி) நோயாளி அலங்காரத்தில் கலைந்து போய்விடுகிறது. படக்குழு சறுக்கிய இடம் அது.

நம்ம இந்தியன் படத்தில் சுகன்யாவிற்கு முகத்திற்கு மட்டும் பாட்டி மேக்கப் போட்டுவிட்டு கைகளை கோட்டைவிட்ட மாதிரி. ரொம்பவே சறுக்கிய இடம் அது.

மற்றபடி சமூக ஆர்வலர்கள் தவிர்க்க கூடாத படம் இது!

இன்னொரு கொசுறு தகவல் வெறும் முப்பது மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் நூற்று எழுபத்தி ஆறு மில்லியன்களை அள்ளியது!
அதிரடி வெற்றிதானே
உண்மையான பட்லர், யூஜின் ஆலன் இவரது கதை தான் திரையில் வந்தது.

அழகு குட்டி செல்லம் .... 
கலக்குதே ...


Comments

 1. திரைப்பட விமர்சனம் போன்று இல்லாமல் ஒரு பெரிய நாவலின் கதைச் சுருக்கம் போன்று சிறப்பாக அமைந்துள்ளது உங்கள் பதிவு. பதிவினைப் படிக்கும் போதே UNCLE TOM’S CABIN - கதை நினைவுக்கு வந்தது. இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு கதைகள் .

  // குடிலின் உள்ளே நீண்ட அலறல்கள் குறைந்து மௌனம் பரவுகிறது. வெளியே வருகிறான் சொங்கி, நொண்டி பண்ணையார். ஒரு காலை விந்தி விந்தி தன்னைக் கடக்கும் அவனை ஏய் என்று அழைக்கிறான்.

  சொங்கி திரும்பின வாக்கில் துப்பாகியால் சுட்டு அப்பனின் கதையை முடிக்கிறான் //

  மேலே சொன்ன வரிகளில் நீங்கள் கொஞ்சம் குழப்புவது போல் தெரிகிறது.

  பகிர்வுக்கு நன்றி!
  த.ம.1

  ReplyDelete
 2. நல்ல படம் என்று சொல்லிவிட்டீர்கள், பார்த்தால் போச்சு, பகிவுக்கு நன்றி, சுட்டி வீடியோ சூப்பர் சார்...

  ReplyDelete
 3. பட விமர்சனம் சூப்பர் ஆனால் கதை மனதை உல்லுக்கி விடுவது போல உள்ளதே! ஆனால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.- இருவரும்

  ஹேய் யாரப்பா இது வொண்டர் கிட்?!!!!!!!!! பேகடா, சுத்த சாவேரி, தோடி, சாருகேசி, சக்கரவாகம், பெகுதாரி போன்ற ராகங்களைக் கூட மிக எளிதாகக் கண்டுபிடிக்கும் திறமை கொண்ட, மழலை கூட மாறாத இந்தக் குட்டி கண்டிப்பாக இசை மேதையாக வர வாய்ப்பு உள்ளது! நல்ல பயிற்சி அளிக்கப்பட்டால்!!!! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! - கீதா

  ReplyDelete
 4. விமர்சனம் படம் பார்க்கச் சொல்கிறது....

  ReplyDelete
 5. இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில்...

  மிக அருமையான, நேர்மையான விமர்சனம் !

  படத்தை பார்த்த போதும் சரி, இப்போது உங்களின் விமர்சனத்தை படிக்கும்போதும் சரி, எனக்கு ஞாபகம் வருவது இளம் வயதில் படித்த Tintin படக்கதைகளில் வரும் பட்லர் நெஸ்டர் !!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete

Post a Comment

வருக வருக