தர்ப்பணம் இறைவனுக்கும் பிடித்த வழியில்..

ஜாக்கி சேகர் ஒரு முன்னணி வலைப்பதிவர் என்பது தெரிந்த விசயமே.
தனது அன்னைக்கான தர்பணத்தை இவர் எப்படி செய்தார் என்று பகிர்ந்திருக்கிறார். இப்படி செய்வது இறைவனுக்கும் உகந்தது என்று பட்டது எனவே பகிர்கிறேன். அனுமதியளித்த ஜாக்கிக்கு நன்றி..

என் அம்மாவுக்கு ஒரு பழக்கம் எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைத்துதான் அவர்களை அனுப்புவார்கள்.

அந்த புண்ணியமோ என்னவோ… இன்றுவரை வேலைக்கு சாப்பிட ஏதாவது கிடைத்து விடும்.



அம்மாவின் முதல் திதிக்கு அப்பாவின் விருப்பத்திற்காக ஐயர் வைத்து திதி கொடுத்தோம் ...அதன் பின் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. திதிக்கு காலையில் அவத்திகீரை, மற்றும் எள், வெல்லம் பச்சரிசியோடு கலந்து பசு மாட்டுக்கு கொடுத்து விட்டு, அம்மா போட்டோவை வைத்து புடைவை வைத்து படைத்து விட்டு சுற்றம் மற்றும் நண்பர்களை அழைத்து அவர்கள் வயிறார சாப்பிட வைத்து அனுப்புவது எங்கள் வழக்கம்..

ஐயருக்கு கொடுக்கும் காசுக்கு யாராவது வயிறார சாப்பிட்டு போகட்டும் என்பதுதான் அதற்கு காரணம்.

இந்த வருடம் திதிக்கு நான் பெங்களூரில் இருந்த காரணத்தால் நான் ஊருக்கு செல்ல முடியவில்லை…

தங்கைகள் மற்றும் அப்பா மட்டும் திதி கொடுத்தார்கள்... அதனால் இறந்த நினைவு நாளின் போது புடவை வைத்து திதி அன்று செய்வதை ஒரு பிள்ளையாக என் கடமையை இன்று செய்ய முடிவு எடுத்தேன்…
மதியம் என் அம்மா விருப்பட்டது போல.....15 சாப்பாடு பார்சல் ஆந்திரா மேஸ்சில் சொல்லி இருந்தேன்... இரண்டு பேர் வயிறு நிறைய சாப்பிடலாம் அந்த அளவுக்கு சாப்பாடு இருக்கும்....

60 ரூபாய் வீதம் 900 ரூபாய்க்கு சாப்பாட்டை பார்சல் செய்து பெரிய மூட்டையாக கட்டி வண்டியின் டேங்கில் வைத்துக்கொண்டேன்... பள்ளம் மேட்டில் பைக் ஏறி இறங்கும் போது, உள்ளே இருக்கு சம்பார் ,ரசம், மோர் மற்றும் பப்பு வகைகள் உடைத்துக்கொண்டால்... பேன்ட முழுக்க அபிஷேகம் ஆகி விடும் என்ற காரணத்தால் பார்த்து பார்த்து வண்டியை ஓட்டினேன்...

மயிலையின் லஸ் முனையில் வெயிலுக்கு கடை ஓரம் 50 வயது மதிக்கதக்க பெண்மணியும், ஒரு ஆயாவும் உட்கார்ந்து இருந்தார்கள்... அவர்களிடம் சாப்பாடு இருக்கின்றது சாப்பிடுகின்றீர்களா என்றேன்... ம் என்றார்கள்...
இரண்டு பார்சல் கொடுத்து விட்டு மயிலை தெப்பக்குளம் பஸ்ஸ்டான்ட அருகே வந்தால்.... இன்று மகாளி அம்மாவாசை என்பதால் தெப்பக்குளத்தை திறந்து வைத்து இருந்தார்கள்..

உயிரோடு இருப்பவர்கள் முன்னோர்களுக்கு வைத்த பின்டம் மயிலை குளக்கரை படியில் வெயிலில் கேட்பாரற்று காய்ந்து கொண்டு இருந்தது...
உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் பிச்சை எடுத்தபடி இருந்தார்கள்.. ஆனால் எல்லோரிடமும் வசந்தபவன், ஆனந்தபவன், சங்கீதா போன்ற உயர்தர சைவ சாப்பாடு பொட்டலங்கள் வைத்து இருந்தார்கள்..

சரி என்று.. சாய்பாபா கோவில் பக்கம் போனால் திம்சுக்கட்டை போல உட்கார்ந்துக்கொண்டு உடம்பு நன்றாக இருந்தும் பிச்சை எடுப்பதையே தொழிலாக செய்தவர்கள் மட்டுமே உட்கார்ந்து இருந்தார்கள்....

திரும்ப ஆர் கே மட் ரோடு அருகே சென்றேன்.. ஒரு பாட்டி வெயிலில் நடந்து போய்க்கொண்டு இருந்தார்... சாப்பாடு சாப்பிடுகின்றீர்களா என்று கேட்டேன் .....அவர் மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுக்கொண்டார்... இதனை அருகில் இருந்து கவனித்த இருந்த கட்டிட தொழிலாளர்கள் இரண்டு பேர்... என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

கண்களில் பசி... கேட்பதில் தயக்கம்... கேட்டு இல்லை என்று சொல்லி விட்டால்..?? தயங்கி நின்றனர்.. .1994 இல் நான் இப்படி இதே சென்னைனயில் நின்று இருக்கின்றேன்..

பசி என்பது சாதாரண விஷயமா..?? அனுபவித்தவன் நான்...

கண்களில் ஏக்கமும் பசியையும் ஒரு சேர பார்த்தேன்...

அழைத்தேன்... வந்தார்கள் இரண்டு பொட்டலம் கொடுத்தேன்... சார் இன்னும் ரெண்டு பொட்டலம் இருந்தா கொடுங்க சார்...

எங்க பசங்க எதிர்க்க சந்துல ஒன்னுக்கு இருக்க போய் இருக்காங்க என்று கெஞ்சினார்கள்...

கெஞ்சாதீர்கள் பசிக்கு சாப்பிடத்தான் பொட்டலம் என்றேன்...

மேலும் இரண்டு பார்சல் பொட்டலங்கள் கொடுத்துவிட்டு திரும்ப விவேகானந்தா கல்லூரி பக்கம் வந்து ஒரு சோட புட்டி தாத்தாவுக்கும், இரண்டு ஆயா அம்மா... மற்றும் தள்ளுவண்டியில் சென்ற முதியவர் , ஒரு குட்டி பையன் என்று பொட்டலங்களை வழங்கி விட்டு அலுவலகத்துக்கு இரண்டு பொட்டலங்களோடு சென்றேன் ஆறு மணி ஷிப்ட்டுக்கு வந்த நண்பர்கள் நான்கு பேர் சாப்பிட்டார்கள்...

சந்தோஷம்...

இதை தான் என் அம்மாவும் விரும்புவார்கள்... என் குடும்பமும் என்னை சார்ந்து இருப்பவர்களும்.... அப்படியே..
ஜாக்கிசேகர்.
23/09/2014
ஜாக்கி முகநூல் முகவரி https://www.facebook.com/jackie.sekar
ஜாக்கி வலைப்பூ http://www.jackiesekar.com/

--------------------------------
கொஞ்சம் ஆங்கிலம்


Comments

  1. இறந்தவர்கள், தாங்கள் உயிரோடு இருக்கும்போது, என்னென்ன நல்ல காரியங்கள் செய்தார்களோ, அவர்கள் சென்ற பின்பும், அதை விட்டுவிடாமல், செய்வது மிகவும் நல்ல செயலாகும்.

    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உண்மையானவரே..

      Delete
  2. வணக்கம்
    இப்படியான நிகழ்வுகளில் ஐயருக்கு கொடுக்கும் பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பது சிறந்தது... ஜாக்கியின் அம்மாவின் ஆத்மா சாத்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ரூபன்

      Delete
  3. இதுதான் உண்மையான திதி

    ReplyDelete
  4. ஆம் மது நண்பரே! இப்படிச் செய்வது உன்னதமான ஒரு விஷயம்! உணவு அளித்து அதப் பெறும் மக்களின் முகத்தில் செரியும் அந்த மகிழ்வு இருக்கிறதே....ஹப்பாஅ......இந்த அரை வயிற்றுக்குத்தானே நாயா பேயா உலகம் அலையுது.....அந்த அரை வயிறு கூட நிறைய கஷ்டப்படும் உயிர்கள் எத்தனை எத்தனை!

    ஜக்கிக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! நாங்களும் இதே வழிதான்.......

    மிக்க ந்னறி தாங்கள் இங்கு பகிர்ந்ததற்கு!

    ReplyDelete
  5. வழக்கம் போல் யதார்த்தமான பதிவு.உண்மையில் நிறைவான செயல்.
    கொஞ்சம் ஆங்கிலம் அருமை . propositions ஐ விளக்க இதை விட சிறப்பாக ஆசிரியால் கற்பிக்க இயலாது. படத்தை காப்பி செய்து கொண்டேன் . நன்றி

    ReplyDelete
  6. பித்ருக்கள் தினத்தன்று
    யார் வந்து கண் முன் நிற்பினும்
    அவர்களுக்கு
    உணவு கொடுத்து உபசரிப்பது
    மன நிறைவைத் தருகிறது

    என் அம்மாவும் அப்பாவும் கண் முன்னே வந்து
    காட்சி அளிப்பது போல தோன்றுகிறது.

    உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே.

    நமக்கு உயிர் கொடுத்தவரை நினைப்பதற்கு
    அண்டி வந்தவருக்கு உண்டி கொடுப்பதைப்போல்
    இன்னொரு தருமம் இல்லை.

    நல்ல பதிவு.
    நல்ல திசை காட்டல்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா...

      Delete
  7. நீங்கள் பகிரும் செய்திகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்...

      Delete
  8. உளந் தொட்ட பதிவு சகோதரரே!
    100 வீதமும் என் கருத்தும் இதே!

    தானமுந் தருமமும் தேவைப்படுமிடத்தில்
    தேவையானவர்களுக்கு அளிப்பதே சிறப்பு!
    வீட்டில் செய்கிறோமென எமது வீராப்பிற்காகச் செய்வதும்
    வந்தோரில் எத்தனைபேர் உளமார ஏற்கொள்கிறார்களெனத்
    தெரியாமற் செய்வதும் தேவையற்றதென்பேன்!

    உங்கள் நண்பருக்கும் என் வாழ்த்துக்கள்!

    சகோ!.. கொஞ்சம் ஆங்கிலம் சிறப்பு!
    தாருங்கள் இன்னும் நானும் கற்க வேண்டும்! எனக்குப் பிடித்திருக்கு!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோ!

    ReplyDelete
  9. ஜாக்கி அண்ணாவின் கட்டுரையை அவரது வலைப்பூவில் படித்தேன்... இங்கு மீண்டும் படித்தேன்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அன்றே அனுமதி பெற்றுவிட்டேன்...
      இருப்பினும் இன்றுதான் வெளியிட்டேன்..

      Delete
  10. இறைவனுக்கு என்ன பிடிக்கும்னு சத்தியமாக எனக்குத் தெரியலை, மது. ஆனால், பசிக்காத இறைவனுக்கு படைப்பதைவிட பசியுடன் இருப்பவர்களை புசிக்கவைத்து சந்தோஷப்படுத்துவது பரவாயில்லை. பொட்டலம் வாங்கிப்போட காசில்லைனா, தகுதிக்கேற்றார்போல வேறு உணவுகள் வாங்கி மீன்களுக்கோ, இல்லை பறவைகளுக்கோ, படைத்துக்கூட திருப்தி அடைந்து கொள்ளலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு அடி இல்லை இல்லை இரு அடி முன்னே இருக்கிறீர் நீர்...

      Delete
    2. மதம் சொல்லும் வழிகளையும் நம்மால் முடிந்த வழிகளையும் போட்டுக்குழப்பிக்கக்கூடாது. மதம் இறந்த முன்னோருக்குச் செய்ய வேண்டிய திதிக்கடன்களை எப்படிச்செய்ய வேண்டுமென சொல்கிறது. அவற்றிற்கு சரியான விளக்கஙகள் இருக்கின்றன‌. அவற்றைத் தெரிந்து நம்பித்தான் செய்யப்பட வேண்டும். எல்லாரும் செய்கிறார்கள் எனவே நானும் செய்கிறேன் என்பதில் மனமொட்டாது. வெறுப்புத்தான் தோன்றும். அப்படி தெரிதல் எல்லாருக்கும் இயலாது. குறிப்பாக ஜாக்கி சேகர் போன்றோருக்கு ஒத்துவராது. எனவே அவர், மதம் சொல்லும் வழியை ஏற்காதது மட்டுமன்று; அது என்னவே பெரிய மனிதாபிமானமில்லாத செயல் என்று பூச்சாண்டி காட்டுகிறார்.

      உன் வழி உன் வழி! என் வழி என் வழி. அவரவர் வழி அவரவருக்கு என்பதே இசுலாம். இல்லையா? அதன்படி. ஐயரை வரவழைத்துச்செய்வோர் செய்யட்டும். அவ்வழியிலும் ஏழைபாழைகளுக்கும் ஈதல் உண்டு. இல்லாது போன்ற பிரமையை உருவாக்க வேண்டாம். இந்துவான ஒருவன் தன்மதம் சொன்ன வழியை அனுசரித்தே ஆக வேண்டும். அவ்வழி இறுதியில் அன்னதானத்தில்தான் முடியும்.

      பிறருக்கு செய்யும் தானம் விளம்பரப்படுத்தக்கூடாது. ஜாக்கி சேகர் அதையும் செய்கிறார். அப்படி விளம்பரப்படுத்தும் போது, அவற்றின் சாரம் - அதாவது தன் தாயின் ஆன்மா சாந்தி அடையும் ! - என்பது நீர்த்துப்போய்விடும். எனவேதான் சொன்னார்கள்; உன் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியக்கூடாது.

      Delete
    3. வருக தோழர்.மலரன்பன்,
      உங்கள் கருத்துக்களுக்கு தீவிரமான எதிர் திசையில் இருக்கிறேன் நான்.

      ஜாக்கி பகிர்வதால் அந்த தர்ம பலன் நீர்த்து போகாது ...
      இன்னும் நிறைய பேர் பின்பற்றுவார்கள். எனவே பெருகும்.

      மதநம்பிக்கைகளில் ஊறிப்போனவர்கள் அதிர்வது இயல்பே..

      மனுவின் விளக்கத்தின்படி யார் இந்து?

      இந்து என்று தம்மை அழைத்துக்கொள்ளும் எல்லாருமா? அப்படி சாதிச் சான்றிதழ் வைத்திருக்கும் எல்லோருமா?

      மனுவின் குரூரப் புன்னகையை இன்னும் நீங்கள் உணரவில்லையா?

      ஒரு யாகம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது தேவையான பொருட்கள் இல்லை எனில், அருகே இருக்கும் மாற்று சாதி குடில்களில் இருந்து அபகரித்துக் கொள்வது நியாயம் என்கிறது வேதம்...

      இந்த போங்கு ஆட்டத்தில் இருந்து விடுபடும் திசையை காட்டியிருக்கிறது
      பதிவு எனவே பதிந்தேன்.பகிர்ந்தேன்.

      நன்றி தோழர்.

      நான் இறை நம்பிக்கைக்கு எதிராவன் அல்ல ஆனால் அதைக் கொண்டு சொர்கத்திற்கு பாஸ்போர்ட் வாங்கித் தருகிறேன் என்பவர்களை வெறுப்பவன். அவர்கள் எம்மதத்தில் இருந்தாலும்.

      எனது நட்பு வட்டத்தின் அன்பிற்கு கட்டுப்பட்டு மதம் மனிதத்தை (எல்லா மதங்களும்தான்) சுரண்டுவதைக் குறித்த கட்டுரைகளை எழுதாமல் இருக்கிறேன்.

      வருகைக்கு நன்றி தோழர்.

      Delete
  11. இப்படி தர்ப்பணம் செய்வது இறைவனுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ நமக்கு மகிழ்ச்சியை தரும் !
    கொஞ்சம் ஆங்கிலம் என்றாலும் நெஞ்சைக் கொள்ளைக் கொண்டது !
    த.ம 3

    ReplyDelete

Post a Comment

வருக வருக