ஒரு விடைபெறல்

நந்தன் ஸ்ரீதரன் அவர்களின் முகநூல் பகிர்வு 
சமீபத்தில் சில இளைஞர்களின் திரைப்படம் தயாரித்தது எப்படி என்பதைப் பற்றி கேள்விப்பட்டேன். என்னை விட மிக மிக இளைஞர்கள். அனைவருமே ஏதேனுமொரு திரைப்படத்தில் வேலையில் இருப்பவர்கள். கேமராத் துறை, இயக்கம், எடிட்டிங், ஆர்ட் டைரக்‌ஷன் என்று பல்வேறு துறைகளில் பணி புரிந்தாலும் எப்போதும் ஒன்றாக சுற்றும் குழாம். மத்திய நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் மேலான குடும்பம் என்பதால் பணம் பற்றிய பிரச்சினைகள் இல்லை. ஆனாலும் சினிமா என்பது எப்போதும் துயரைத் தந்து, துயரை உறிஞ்சி சிந்நேரம் புன்னகையைக் கொடுக்கும் விநோதபிராணி அல்லவா.. முகவரி பெறும்வரையான பதற்றமும் துயரும் அவர்களுக்கும் உண்டு. அவர்களில் ஒரு நண்பன் ஒரு 5D கேமராவை சொந்தமாக வாங்கினான். நண்பர்களுக்குள் ஒரு ஐடியா. கைவசம் கேமரா இருக்கிறது. டெக்னிஷியன்களும் இருக்கிறோம். இவை தாண்டி சிறுசிறு செலவுகள்தானே. ஒரு கதை தயார் செய்து நாமே இயக்கிவிட்டால் என்ன..


நண்பர்கள் விவாதித்து செலவு பிடிக்காத ஒரு கதையை தயார் செய்தார்கள். பெரிய காவியம் எல்லாம்இல்லை. அதேநேரம் சொள்ளையும் இல்லை.. பரபரப்பான ஒரு கதை. வேலை முடிந்து நண்பர்கள் ஒன்று கூடும்போது விவாதித்து விவாதித்து கதையை நிறைவு செய்தார்கள். நண்பர்கள் அனைவரிடமும் எப்போது பணமும் நேரமும் இருக்கிறதோ அதை வைத்து திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள். நடிக்க வந்த பெண்கள் தவிர எல்லாரும் நண்பர்கள்தான். கொஞ்சம்கொஞ்சமாக ஷூட் செய்து படப்பிடிப்பை முடித்தார்கள். எடிட்செய்பவனும் அந்த நண்பர் குழாமில் ஒருவன்தான். அவனது லெஷர் டைமில் எடிட் செய்தான். திடுமெனப் பார்த்தால் படம் முடிந்து விட்டது.


ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஒரு படத்துக்கும் அந்தக் குழுவில் இருந்த எடிட்டர்தான் எடிட்டர். அந்த படத்தின் தயாரிப்பாளர் ரஷ் பார்க்க வந்தபோது விளையாட்டுத்தனமாக இவர்கள் ஷூட் செய்த சிலகாட்சிகளை போட்டுக் காட்டியிருக்கிறான். தயாரிப்பாளர் அசந்து போய்விட்டார். இதை தயாரிக்க எவ்வளவு செலவானது என்று கேட்கவும் நண்பர்கள் கூடி கணக்குப் பார்த்திருக்கிறார்கள். கைப்பணமாக செலவழித்தது வெறும் ஐந்து லட்சம். அதை எப்படி அந்த தயாரிப்பாளரிடம்சொல்வது? தொண்ணூறு லட்சம் செலவு சார் என்று சொல்லியிருக்கிறாரகள். தயாரிப்பாளர் இது ஒண்ணரை கோடி ஒர்த்துப்பா. ஃபைன் கட் பண்ணி ஆர் ஆர் முடித்து சொல்லுங்கள். நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பசங்க ஆச்சரியத்திலிருந்து மீளாமல் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமா இப்படியும் இருக்க வேண்டும். சினிமா இப்படியும் வளர வேண்டும். சினிமா எளிமையாக வேண்டும். சினிமா பரவலாக வேண்டும். சமீப காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இவை எல்லாம் நிகழ்கின்றன என உறுதிப்படுத்தியபடியே உள்ளன..


இன்றைய நிலைமையில் எவ்வளவுதான் மிச்சம் பிடித்தாலும், வேலை பார்க்கிறவர்களுக்கான சம்பளத்தைக் கழித்து படத்தின் பட்ஜெட்டைப் பார்த்தாலும் அந்த நண்பர்களின் படம் போல குறைந்தது ஐந்து லட்சம் படத்தின் படப்பிடிப்பை முடிக்க மட்டுமாவது செலவழிக்க வேண்டியிருக்கிறது.


இதே படங்கள் பிலிமில்தான் படம்பிடிக்கப்பட வேண்டும் என்றிருந்த நிலைமையின்போது எப்படியான சூழல் இருந்தது எனப் பார்த்தால் இன்றைய மதிப்புக்கு ஒன்றரை கோடியாவது இருந்தால்தான் பிலிமில் ஒரு படத்தை எடுத்து முடிக்க முடியும். நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் அது ஐந்து லட்சமாக இருக்கலாம். அந்த ஐந்து லட்சத்தின் மதிப்பு இன்று நிச்சயம் ஒன்றரை கோடி..


நான் சொன்ன நண்பர்கள் மாதிரியே ஒரு குழு சுமார் நாற்பத்தைந்து வருடத்துக்கு முன் படம் எடுக்கிறேன் என்று புறப்பட்டது. என் நண்பர்களைப் போல ஸ்லாப்ஸ்டிக் காமெடியை எடுத்துக கொள்ளாமல் சீரியசான ஒரு சப்ஜெக்டை கையில் எடுத்துக் ◌கொண்டார்கள் அவர்கள். சரியான புரொடியூசர் இல்லை. பணம் தேறும்போது படப்பிடிப்பு நடத்துவார்கள். இந்த மாதம் இரண்டு நாள் என்றால் அடுத்த மாதம் பத்து நாள் நடக்கும். நான்கு மாதம் கழித்து ஐந்து நாள்..இப்படியாக அந்த படப்பிடிப்பு நடந்தது. அவர்களது அதிர்ஷ்டம் தமிழின் முன்னணி கதானாகனிடம் அவர்களால் அந்த கதையை சொல்ல முடிந்தது. அந்த கதையில் இம்ப்ரெஸ் ஆன அந்த கதானாயகன், கதாநாயகியிடம் ரெக்கமண்ட்செய்ய, அவரும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்..


சாதாரணமாக இல்லாமல் படப்பிடிப்பு நினைத்த நேரத்தில் (அதாவது அவர்களுக்கு பணம் இருந்த நேரத்தில் நடக்கும்) அதிலும் நடிகர்கள் மற்ற படங்களில் நடிக்காத நேரத்தில் நடக்கும். நடிக்கும் நடிகர்கள் எல்லோருக்கும் பார்சல் செய்யப்பட்ட பட்டை சோறுதான். அதையும் உண்டு அந்த நாயகனும் நாயகியும் நடித்துக் கொடுத்தார்கள். அந்தா இந்தா என்று படத்தை எடுத்து முடித்து விட்டார்கள். கடனை சொல்லி உடனை சொல்லி போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையையும் முடித்து ரிலீஸ் செய்தார்கள். படம் பார்க்க வந்த ரசிகர்கள் பொறுமை இழந்து தியேட்டரின் சீட்டுகளை பிளேடு கொண்டு கிழித்துவிட்டு வெளியேறினார்கள். படம் படு தோல்வி.


புரொடியூசர் உட்பட யாரும் நாட் ஹேப்பி அண்ணாச்சிதான்..


அந்த தருணத்தில்தான் வடக்கில் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர், அவர் தேசிய அளவிலும் புகழ் பெற்றவர் (ரித்விக் கட்டக் என நினைக்கிறேன்). சென்னையில் அவரது படத்தின் ஃபைனல் எடிட்டிங்குக்காக வந்திருக்கிறார். காலையில் அவரது வேலை முடிந்தது. மாலைவரை நேரம் மிச்சமிருந்திருக்கிறது. எதாவது படத்துககுப் போகலாம் என்று சொன்னபோது யாரோ ஒரு புண்ணியவான் இந்த நண்பர்களின் தோல்விப் படத்துககு அழைத்துச் சென்றிருக்கிறார். படத்தைப் பார்த்து இறுதியில் கண்ணீர் மல்கி அந்த தேசிய இயக்குநர் வெளியே வந்திருக்கிறார். மேனேஜரிடம் சொல்லி தமிழ்ப் பத்திரிகைகளின் சந்திப்பு ஒன்றுக்கு உடனடியாக ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறார். மேனேஜரும் பதறி பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்..


தேசிய இயக்குநர், இப்படி ஒரு படத்தை நிராகரித்த உங்கள் சமூகம் உருப்பவே உருபபடாது என்பது மாதிரி ஒரு பேட்டியைத் தட்டிவிட்டார். பேட்டி வெளி வந்த மறுநாள் கூட்டம் பிக்கப் ஆகியிருக்கிறது. படத்தைத் தூக்கிய தியேட்டர்களில் எல்லாம் மறுபடி திரையிட்டிருக்கிறார்கள். படம் மாபெரும்வெற்றி பெற்றது என்பது வரலாறு..


அந்தப் படம்தான் "அவள் அப்படித்தான்ஞ


நான் முன்னம் சொன்ன நண்பர்களுக்கு இருக்கிற வசதிகள் கூட இல்லாத காலம் அது. வித்தியாசமான நாவல் எழுதுவதாக இருந்தால் நாவல் எழுத தேவையான பேப்பருமபேனாவும் இருந்தால் போதும். எழுதி அதை நண்பர்களிடம் படிக்கக் கொடுத்து விடலாம். அவர்கள்நம் நாவலை முன்னெடுத்துச செல்வார்கள். ஆனால் திரைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. நண்பர்களிடம் காண்பிக்க வேண்டும் என்றாலும் ஒன்றரைக் கோடி செலவழித்தாக வேண்டும்..


இப்படியான நெருக்கடிகளைத் தாண்டி உருவாகி ஒரு வழியாக வெற்றி பெற்ற படம்தான் அவள் அப்படிததான்.. இன்றைக்கு வெல்லும் நண்பர்கள் எல்லோரும் அவர்களது கஷ்டங்களை விலாவாரியாக சொன்னாலும் அவள் அப்படித்தானின் வெற்றிக்கு பக்கத்தில் கூட அவர்களால் வர முடியாது..


ஒரு வகையில் அந்தப் படத்தின் இயக்குநர் வழி காட்டிவிட்டுப் போயிருக்கிறார். இன்றைக்கு நாங்கள் முள்ளில்லாத பாதையில் நடக்கிறோம் என்றால் எங்கள் முன்னோடிகள் அனைத்து முட்களையும் தங்கள் காலில் வாங்கி எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்பதே உண்மை...


முன்னோடிகளில் முக்கியமானவர் படாத பாடு பட்டு அற்புதமான ஒரு படத்தை எடுத்துககொடுத்த அவள் அப்படித்தானின் இயக்குநர் ருத்ரையா..


தலைகீழாக நின்று யோசித்தாலும் அவரதுசாதனையின் எல்லைக்கருகில் போகவாவது எங்களால் முடியுமா என்றால்நிச்சயமாக இல்லை..


இன்றைக்க்கு சற்று முன்புதான் ருத்ரையா இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது..


என்ன செய்ய? இன்னும் சில படங்கள் எடுத்து எங்களுக்கு அவர் கற்றுக் கொடுத்திருக்கலாம். அல்லது நான் ஒரே ஒரு முறையாவது அவரை நேரில்சந்தித்திருக்கலாம்..


எதுவும் நடக்கவில்லை. பாடப்புத்தகத்தில் பார்த்த கோட்டோவியம் போல சந்திக்கும் முன் விடைபெற்றுவிட்டார். போகட்டுமே. என்னைப் போல சில பைத்தியக்காரர்களின் நினைவில் அவர் வாழ்ந்து கொண்டுதானே இருப்பார்...


தொலைவிலிருந்து கேட்கும் குரலென்றில் உறவுகள் தொடர்கதை என்றா படல் ஒலிக்கிறது.. அந்த கதையின் காத்திரத்தை உணர்ந்து நடிக்க சம்மதித்தது மட்டுமன்றி கதானாயகி ஶ்ரீப்ரியாவையும் நடிக்க சம்மதிக்க வைத்த கமலின் குரல் காதில் ஒலித்தபடிஇருக்கிறது..


நான் மெல்ல முள்ளில்லாத பாதையில்நடக்கத் துவங்குகிறேன்..


நன்றி ருத்ரையா அப்பா..

நந்தன் ஸ்ரீதரன்.

Comments

  1. ஸ்ரீதர்,கே பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்ற அதிகம் புகழ்பெற்ற தமிழ் இயக்குனர்களைவிட ருத்ரையா சாதித்தது அதிகம் என்பது என் எண்ணம். ஒரே படம் ஆனால் அதுவே போதும். அதுவே அவரது சாதனை. தமிழ் சினிமாவில் அவள் அப்படித்தான் ஒரு தவிர்க்க முடியாத திரைப் படம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக