2001 ஒரு விண்வெளிப் பயணம் (2001 A Space Odyssey)


1968இல் வெளிவந்த படம். படத்தை இன்று நீங்கள் பார்த்தாலும் அறுபத்தி எட்டில் வந்த படம் என்பதை நம்ப மாட்டீர்கள். நமது திரை ரசிகர்கள் உயர்ந்த மனிதனையும், எங்க வீட்டுப் பிள்ளையையும் ரசித்துக் கொண்டிருந்த பொழுது ஸ்டான்லி குப்ரிக் இந்தப் படத்தை எடுத்து வெளியிட்டார் என்பது எனக்கு பேராச்சரியம் தருகிறது. 


வெறும் பன்னிரண்டு மில்லியன் செலவில் தயாரிப்பான இப்படம் நூற்றி தொண்ணூறு மில்லியன்களை வசூல் செய்து சாதனை படைத்தது. வசூல் மட்டுமல்ல இன்றளவும் வெளிவந்த படங்களில் ஆகச் சிறந்த ஒன்று என கொண்டாடப்படுகிறது. ஸ்டான்லி குப்ரிக்கின் படைப்புகள் பல ஆஸ்கார்களை வாங்கியிருந்த பொழுதும் அவருக்கென ஒரு ஆஸ்காரை தந்தது இந்தப் படம்தான்! (என்னைப் பொறுத்த வரை உருப்படியாக கொடுக்கப்பட்ட சில ஆஸ்கார்களில் இதுவும் ஒன்று)  

எனக்கென்னவோ ஸ்டான்லி குப்ரிக் அளவிற்கு திரைத் துறையின் நீள அகலங்களை நிரப்பியவர்கள் வெகு குறைவே என்றுபடுகிறது. மனிதர் எடுத்துக்கொண்ட திரைக்கருக்களின் பரப்பு ஒரு வாவ். நுண்கலை பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி அடையக் கூடிய உயரமா இது. மூர்ச்சித்துப் போகிறேன்.

லேய் படத்தைப் பேசினால் படத்தை மட்டுமே பேசு என்று அங்கே யாரோ கூவுவதால் இப்போது படம்.

நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்ட திரைப்படம் முதல் பகுதி டான் ஆப் மேன் மனிதனின் விடியல். இது முதல் பகுதி. 

படம் ஆரம்பிக்கிறது. வெண்திரையைக் கருமை நிரப்புகிறது. அற்புதமான இசை நிறைகிறது. திரை என்னவோ கருமையாகவே இருக்கிறது. இருக்கிறது. இரு..

இசை தொடர்கிறது. 

மெல்ல ஒரு சந்திர கிரகணத்தைக் காட்டுகிறது. அப்படியே கீழே வரும் காமிரா ஒரு குரங்குக் கூட்டத்தை காட்டுகிறது. கத்திக்கொண்டும் விளையாண்டு கொண்டும் இருக்கும் குரங்குக்கூட்டம்... சற்று பொறுங்க குரங்கு கூட்டமில்லை அது ... குரங்கிற்கும் மனிதர்க்கும் இடைப்பட்ட ஒரு ஹூமனாய்டு கூட்டம். ஜாலியாக திரியும் அந்தக் குழுவின் ஒரு ஹூமனாய்டைச் சிறுத்தை ஒன்று வேட்டையாடிக் கொல்கிறது. 

அந்தக் குழுவின் தண்ணீர் குட்டையில் மறுநாள் வேறொரு கூட்டம் தென்படுகிறது. அக்கூட்டம் நமது பழைய கூட்டத்தை விரட்டி தண்ணீரைப் பருகுகிறது. விரட்டப்பட்டக் கூட்டம் ஒரு பாறைப் பிளவில் தனது பொழுதைக் கழிக்கிறது. பொழுது விடிந்ததும் தங்கள் முன்னர் கரும் பொருள் ஒன்றைக் கண்டு திகில் அடைகின்றன. சுமார் பத்தடி உயரத்தில் செவ்வகமாக நெட்டுக் குத்தலாய் நின்று கொண்டிருக்கும் அதைத் தடவி பார்க்கிறான் குழுவின் தலைவன் மூன் வாட்ச்சர். பின்னர் ஒரு எலும்புக் குவியலை பார்த்த படி உட்கார்ந்திருக்கும் மூன் வாட்ச்சர் கனமான எலும்பை எடுத்து அடிக்கச் சுழன்று மேலேபோகிறது ஒரு எலும்பு. இசை நிரப்புகிறது காட்சியை. 

அடுத்த காட்சியில் அதுவரை கூட திரிந்த ஒரு டைபிரை அடித்துக் கொல்கிறான் மூன் வாட்ச்சர்!. அடுத்த காட்சி தண்ணீர்க் குட்டை. போட்டிக் குழுவின் தலைவன் எலும்படிபட்டுச் சாகிறான். இந்தக் காட்சி சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சென்னைக் கல்லூரியில் சக மாணவன் ஒருவனை மாணவர்கள் அடித்ததை நினைவூட்டியது எனக்கு. 

பின்வாங்கும் போட்டிக் குழுவைப் பார்த்து வெற்றி எக்காளமிடும் மூன் வாட்ச்சர் தனது புதிய ஆயுதத்தை மெல்லே மேலே எறிகிறான். அது உயரே உயரே உயரே சென்று சுழன்று கீழே வர ஆரம்பிக்கிறது. 

நான் ஒரு பார்வையாளனாக அது ஒரு ஈட்டியாக மாறி ஒரு குதிரை மீது இருக்கும் மூன் வாட்சரை அடையும் என்று நினைத்தேன்.

அது மேலும் சுழலவே சரி இயந்திரத் துப்பாக்கியாக மாறப் போகிறது என்று நினைத்தேன். 

திரையில் மேலும் சுழன்ற அந்த எலும்புத் துண்டு .....

அப்படியே ஒரு அணுசக்தியில் இயங்கும் விண் கப்பலாக மாறிவிட்டது!

ஒரு ஷாட்டில் நான்கு மில்லியன் வருடங்களை கடந்து நம்மை இழுத்து வந்துவிடுவார் இயக்குனர்! 

 இணை வெட்டு (Match Cut) எனப்படும் இந்த திரை வித்தையை இவ்வளவு சக்தி மிக்கதாய்ப் பயன்படுத்தியதில் முதல்வர் இவரே. மாட்ச் கட் என்றால் என்று வினவும் இந்தத் தலைமுறை புதிய இயக்குனர்களுக்கு  இந்த திரைப்படத்தில் எலும்பு விண்கலமாய் மாறுவதைத்தான் திரைத்துறை இன்றளவும் சொல்லி வருகிறது. 

இந்தக் காட்சியுடன் டான் ஆப் மேன் பகுதியில் நடித்த நடிகர்கள் அனைவரும் விடைபெற அடுத்த நட்சத்திரப் பட்டாளம் வருகிறது! எல்லா நடிகர்களுக்கும் சமவாய்ப்பைத் தரும் என்ஸாம்பிள் காஸ்ட்! 

TMA – 1 
இரண்டாம் பாகம் டி.எம்.ஏ- 1. விண்ணில் சுழலும் ஒரு விண்வெளி ஹோட்டலில் தொடர்கிறது கதை.  டாக்டர் ஹேவுட் பிளாயிட் நிலவில் இருக்கும் ஒரு அமெரிக்கத் துணை நிலையத்தை  அடையும் முன்னர் சுழலும் விண்வெளி ஹோட்டலில் சிறிது ஓய்வெடுக்கிறார். நிலையாக நடக்கும் அவர் பின்னால் ஜன்னலில் சுழல்கிறது பூமி. 68இல் இப்படி நேர்த்தியாக குறையில்லாமல் இன்றும் அசத்தும் ஒரு காட்சியை படமாக்கிய இயக்குனரையும் குழுவினரையும் என்னை மறந்து பாராட்டினேன். மிக ரகசியமான ஒரு கண்டுபிடிப்பை நேரில் பார்க்கத்தான் பிளாயிட் பயணப்படுகிறார். ஹோட்டலில் இருந்து தனது பெண் குழந்தையுடன் வீடியோபோனில் பேசும் அவர் நிலவிற்கு செல்கிறார். (அந்த அழகு குழந்தை விவியன் குப்ரிக், ஸ்டான்லியின் மகள்!).

நிலவில் தைபே கிரேட்டரில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மர்மமான கரும் செவ்வகத்தை பார்க்கிறார். அன்று ஒரு கிரகண தினம். அந்த செவ்வகத்தின் முன்னர் ஒரு குருப்பி எடுக்க குழு விளைகிறது. திடீரென அந்த செவ்வகம் கடும் ஒலியை எழுப்புகிறது. அனைவரும் காதைப்பொத்திக் கொண்டு துடிக்கின்றனர். திரையை நிறைக்கிறது கருமை. 

ஜுபீட்டர் மிஷன்

ஜுபீட்டரை நோக்கி விரைகிறது ஒரு மாபெரும் விண்கலம். முன்னால் ஒரு பெரும் கோளமும் அதில் இணைக்கப் பட்ட ரயில் வண்டிப் பெட்டிகள் போன்ற கலன்கள் தொடர தனது இலக்கை நோக்கி விரைகிறது விண்கலம். இந்த விண்கலம் ஹால் 9000 எனும் ஒரு கணிப்பொறியால் கட்டுப்படுத்தப்படுவது. ஹால் ஒரு செயற்கை அறிவு இயந்திரம். தானே சிந்திக்கும், செயல்படும் திறன் வாய்ந்தது. விண்கலம் புறப்பட்ட தினத்தில் இருந்து மூன்று  வீரர்கள் ஹைபர்னேசன் மோடில் இருக்க இரண்டு வீரர்கள் மட்டும் கலனை செலுத்துகிறார்கள். டாக்டர். டேவிட் போமன் மற்றும் டாக்டர் பிராங் பூலே. இருவரும் ஹாலுடன் பேசிக்கொண்டே கலனை செலுத்துகிறார்கள். கலனிற்குள் ஜாக்கிங்  செய்யும் டேவிட்டை தொடரும் காமிரா ஒரு கட்டத்தில் அவன் முன்னே செல்கிறது! இந்தக் காட்சி இன்றளவும் பாராட்டப்படுகிறது.

உண்மையில் ஒரு பெரும் சுழலும் உருளை ஒன்று செய்யப்பட்டு அதற்குள் அரங்கின் பொருட்கள் எல்லாம் வைக்கப்பட்டன.  காமிரா நிலையாக பொருத்தப் பட்டு சுழலும் உருளையின் உள்ளே ஓடும் டேவிட்டை தொடர்கிறது காமிரா. இதன் செய்நேர்த்திக்காகவே ஒருமுறை படத்தை நாம் பார்க்கலாம். 

திடீரென ஹால் விண்கப்பலில் உள்ள ஆண்டெனா சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்கிறது. டேவிட்டும், பிராங்கும் ஒரு குட்டி விண்கலத்தில் ஏறி ஒரு விண்நடையில் ஆண்டெனாவை அணுகி அதன் பகுதியை பிரித்து எடுத்துக்கொண்டு கலத்துக்குத் திரும்பி சோதிக்கிறார்கள். ஆச்சர்யம் தரும் விதமாக அதில் ஏதும் குறைபாடு இல்லை! ஹாலை கேட்டால் எனக்கும் ஆச்சர்யமாக இருக்கு. நம்ம இப்படியே அந்த ஆண்டெனாவை இயங்க விட்டு அது கோளாறான உடன் கண்டுபிடிப்போம் என்ன குறை எதில் குறை என்று சொல்கிறது ஹால்.

சரி என்று சொல்லி விட்டு வெளியேறும் இரண்டு வீரர்களும் ஒரு குட்டி விண்கலத்தில் புகுந்து வெளித் தொடர்புகள் அனைத்தையும் அறுத்துவிட்டு ரகசியமாக பேசுகிறார்கள். லெ நீ என்ன நினைக்கே ஹாலுக்கு பைத்தியம் பிடிச்சிடுத்து போல. நாம ஹாலின் கட்டுபாட்டை அறுத்துவிட்டு மானுவலாக கலத்தை செலுத்துவோம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவதை அவர்களின் உதட்டசைவிலிருந்தே உணர்கிறது ஹால்! 

இடைவேளை.

நான்காம் பாகம் 

ஜுபீடரும் முடிவுறாவெளிக்கு அப்பாலும்

மீண்டும் பேரிசை ஒலிக்கிறது. நீண்ட நேரம் திரையை கருமை நிரப்பி இருக்கிறது. விண்உடையில் பிரான்க் ஒரு குட்டிக் கலத்தில் ஏறி வெளியே சென்று ஆண்டெனாவை சரி செய்ய விழைகிறான். அவனது குட்டி விண்கலம் அவனது ஆக்சிஜன் குழாயை அறுத்து விண்வெளியில் உந்தித் தள்ளிவிட்டு இதன் விளைவாக எழும் எதிர் விசையினால் அதுவும் கண்ணா பின்னா வென்று சுழன்று எதிர்த்திசையில் பயணிக்கிறது. 

அதிர்ந்து போகும் டேவிட் இன்னொரு குட்டிக்கலத்தில் ஏறி பிராங்கை காப்பாற்ற விரைகிறான். ப்ராங்கின் உடலைத்தான் மீட்க முடிகிறது. ஹால் தான் இதைச் செய்தது என்று தெரியாமல் தாய்க்கலத்திற்குத் திரும்புகிறான். இதற்குள் கலத்தில் ஹைபர்நேஷன் மோடில் இருக்கும் மூன்று வீரர்களையும் கொன்றுவிடுகிறது ஹால்!  ஹால் டேவிட்டை உள்ளே விட மறுக்கிறது. அவசரத்தில் ஹெல்மெட் போடாமல் வந்துவிட்ட டேவிட்டை கலத்தின் அவசர வழியில் மானுவலாக உள்ளே நுழைந்தால் வெற்றிடம் உன்னை அழுத்திக் கொன்றுபோடும் என்று மிரட்டுகிறது ஹால். மீறி சாகசமாய் உள்ளே நுழையும் டேவிட் ஹாலை முடமாக்கமுயல்கிறான். ஹால் மிரட்ட ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் பயப்படுகிறது. மன்னிப்பு கேட்கிறது. எதையும் காதில் வாங்காத டேவிட் ஹாலை செயலிழக்க செய்கிறான். கடைசியாக தனக்கு பயிற்றுவிக்கப்பட்ட டெய்சி டெய்சி என்கிற பாடலை பாடிக்காண்பிக்கிறது ஹால். மெல்ல மெல்ல குரல் சிதைந்து ஓய்கிறது. 

ஜுபீட்டரை நெருங்குகிறது கலம். ஒரு சிறிய கலத்தில் ஜுபீட்டரை சுற்றி மிதக்கும் மர்மமான கரும் காந்தப் பொருட்களை நோக்கி செல்கிறான் டேவிட். அந்த பொருளை அடைந்ததுதான் தெரியும் ஒரு பெரும் வெளிக்குள் போகிறான் போகிறான் போய்க்கொண்டே இருக்கிறான். ஸ்டார்கேட் எனப்படும் இந்தக் காட்சி இதன் ஸ்பெசல் எபக்ட்ஸுக்காக இன்றளவும் சிலாகிக்கப்படுகிறது. (இன்றைய இன்டெர்ஸ்டெல்லாரில் கூட இதன் சாயலை உணர முடியும்)

பல்வேறு உலகங்களுக்குள் பயணிக்கும் டேவிட் கடைசியாக பதினாறாம் லூயியின் அரண்மனை மாதிரி ஒரு பிரமாண்ட அரண்மனைக்குள் இருப்பதை உணர்கிறான். குட்டிக் கலத்திற்குள் இருந்து பார்க்கும் அவன் மெல்ல வெளியே வருகிறான். இப்போது அவனது முகத்தில் அத்துணைச் சுருக்கங்கள். மெல்ல அந்த அரண்மனையின் ஒவ்வொரு பகுதியாக நடந்து பார்கிறான். ஒரு இடத்தில் இருந்து சப்தம் வர அந்த இடத்தை பார்க்கிறான். ஒரு டாம்பீகமான மேசையில் கருப்பு உடையில் ஒருவர் உணவு உட்கொண்டு இருக்கிறார். அவர் ஏதோ உணர்வில் திரும்புகிறார். மெல்ல டேவிட்டை நோக்கி நடக்கிறார்.

அட அவரும் டேவிட்.

ரொம்ப வயதான டேவிட். மெல்ல திரும்புகிறார் மீண்டும் உணவு மேசைக்கு. இப்போது விண்வெளி உடையில் நின்றுகொண்டிருந்த டேவிட்டைக் காணோம்! சாப்பிட்டு முடிக்கும் டேவிட் வெற்றுப்படுக்கையைப் பார்க்கிறார்! இப்போது கருப்பு கோட் டேவிட் காணமல் போய் ஒரு வயோதிக டேவிட் படுக்கையில் இருந்து எதையோ நோக்கி தனது கிழட்டு கையை உயர்த்தி விரலை மெது மெதுவாக நீட்டுகிறார். 

எதிரே நிற்கிறது கரும் செவ்வகம். தொட்டவுடன் டேவிட் ஒரு கருவில் மிதக்கும் குழந்தையாக மாறி பூமியைப் பார்த்து விண்வெளியில் மிதக்க ஆரம்பிக்கிறார். அதிரடியான பிரமாண்ட இசை நிறைக்க படம் முடிந்து போகிறது. 

ஆர்தர் சி கிளார்க் எழுதிய சென்டினல் என்கிற சிறுகதைதான் இந்தப் படம். 
ஆர்தர் சி. கிளார்க் தனிமைவிரும்பி மரத்தில் வசிக்கும் நட்கேஸ் என்று நம்பப் பட்டவர். இந்தப் படத்தை உருவாக்க ஸ்டான்லி குப்ரிக்குடன் இணைந்து பணியாற்ற விருப்பமா என்று கேட்டு சிலோனுக்கு தந்தி அனுப்பப்பட அவரோ பிறவி மேதை ஒருவருடன் பணியாற்ற எனக்கு பயம்கலந்த விருப்பமே அது சரி நான் தனிமை விரும்பி என்று யார் சொன்னது என்றும் பதில் தந்தி கொடுத்திருக்கிறார்.

இருவரும் இரண்டு ஆண்டுகளாக கதையை நாவலாக வளர்த்தெடுத்திருக்கிறார்கள். ஸ்டான்லி திரைக்கதையை செய்ய கிளார்க் நாவலை எழுதியிருக்கிறார்! எனவே ஒருவரின் தாக்கம் இன்னொருவரின் படைப்பில் இருப்பது தவிர்க்க முடியாமல் போனது. திரைக்கதை ஸ்டான்லி மற்றும் கிளார்க் என்று படத்தின் டைட்டிலில் வந்தாலும் நாவல் என்னமோ கிளார்க்கின் பெயரில் மட்டுமே வெளியானது. ஆனால் ஸ்டான்லியின் பெயரும் இருப்பதுதான் முறை என்று கண்ணியமாக சொன்னார் கிளார்க்.

கிளார்க் எழுத்தின் மூலம் தொடர்பு கொள்பவர் எனவே ஓவ்வொரு விஷயத்தையும் விளக்கமாக பக்கம் பக்கமாக எழுதினார். ஸ்டான்லி காட்சி ஊடகத்தில் இதைக் கவனமாகத் தவிர்த்தார். படம் முழுமையுமே குட்டி குட்டி வசனங்கள்தான்! திரைமொழியை மிக கச்சிதமாக புரிந்துகொண்டு வெற்றிகரமாக அதைப் பேசியவர் ஸ்டான்லி குப்ரிக். 

படத்தில் வரும் டாப்லட்கள், கணிப்பொறிகள் விண்கல உள்ளமைப்புகள் எல்லாம் ஆச்சர்யம் தருபவை! 

1950ல் பெவேல் குஷாந்தவவ் என்கிற ரஷ்ய இயக்குனரின் ரோட் டு த ஸ்டார்ஸ் என்கிற படத்தில் இருக்கும் காட்சிகளில் சில அப்படியே இந்தப் படத்திலும் இருக்கிறது என்கிற செய்தியையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கென காப்பி டைரக்டர் என்று ஸ்டான்லி குப்ரிக்கை நாம் அவ்வளவு எளிதாக தள்ளிவிடவும் முடியாது! 

1968இல் நமது ரசனை...
ஸ்டான்லியின் திரைத்துறை வெற்றி அவருடைய தனிப்பட்ட வெற்றியாக எனக்குத் தோன்றவில்லை. அவரது சமூகம் அவ்வளவு தூரம் வாசிப்பிலும் அறிவியல் விழிப்புணர்விலும் முன்னே இருந்தது. வாசித்தல் என்றால் பாட புஸ்தகத்தை வாசிப்பது என்று மட்டுமே நம்பும் நமது இன்றய தலைமுறை உணர்ந்துகொள்ளவேண்டிய பாடம் இது.

ஸ்டான்லி குப்ரிக் ஒரு அதி தீவிர வாசகர். இதை நமது நாளய இயக்குனர்களும் உணர்ந்தால் நமக்கும் ஒரு குப்ரிக் கிடைப்பார்.

நண்பர் சந்திர மோகனிடம் இவருடைய பெயரைச் சொன்னபொழுது அவர் எழுப்பிய அய்யோ அவரா என்ற அதிர்வும் ஆச்சர்யமும் நிறைந்த குரலுக்கு இந்தப் பதிவு ஒரு நட்புப் பரிசு.

நம்புவோம்
உருவாக்குவோம்

அன்பன்
மது

பின்குறிப்பு
இது பார்ட் ஒன் மட்டுமே இன்னொரு பதிவும் வரும் ... !

Comments

 1. அன்புள்ள அய்யா,

  1968-இல் வெளிவந்த படம் 2001 A Space Odyssey ஆர்தர் சி கிளார்க் எழுதிய சிறுகதையை ஸ்டான்லி குப்ரிக்டுன் இணைந்து பணியாற்றிப் படம் வெளிவந்ததை அறிந்தேன்.
  நான்கு பாகம் ... தங்களின் திரைப்பட விமர்சனம் அந்தப் படத்தை பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. 68களிலே அசத்தலான படம் எடுத்து ஸ்டான்லி குப்ரிக்கர் ஆஸ்காரைத் தட்டிச் சென்றது அறிந்து வியந்தேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. விரைவான வருகைக்கு நன்றி அய்யனே...

   Delete
 2. படம் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் மேலிடுகிறது தோழரே,,,

  ReplyDelete
 3. 2001 A SPACE ODESSY படத்தைப்பற்றி பேசினால் எக்கச்சக்க விஷயங்கள் பீறிடும் . ARTIFICIAL INTELLIGENCE பற்றி அப்போதைய குப்ரிக்கின் அறிவு மகோன்னதம் . இன்னொரு விஷயம் , நோலன் சகோதரர்களுக்கு இன்டர்ஸ்டெல்லர் படத்தினை உருவாக்க அதிதீவிர காரணமாய் அமைந்ததே இந்த படம் தான் . இப்படத்தினை நோலன் இன்னமும் பார்த்துரசிப்பாராம் . இப்படத்திற்கு நானே ஒரு பதிவு எழுதலாம் என்றிருந்தேன் . குப்ரிக்கின் படங்களை பார்த்து ரசிக்கத்தெரிந்த எனக்கு எழுததெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும் . குப்ரிக்கின் படங்களில் ஒவ்வொரு காட்சியும் பல நாட்கள் ஹோம்வொர்க் செய்யப்பட்டு எடுக்கப்பட்டவை தான் . இந்த படத்தின் விஷூவல் , ஏதோ போனவாரம் வந்த ஹாலிவுட் படம் போல் அவ்வளவு ப்ரஷ்ஷாக இருக்கும் . சிஜியெல்லாம் சான்ஸே இல்லை என்றுதான் சொல்லவேண்டும் . படத்தில் எக்கச்சக்கமான காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டன என்று அக்காலத்தில் புரியாமல் ஏராளமானோர் திரிந்தனராம் . அந்த அளவிற்கு அற்புதமாக குப்ரிக் எடுத்திருப்பார் . ஆர்தர் சி . கிளார்க் பற்றி எனக்கு இப்போதுதான் தெரியும் . தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா !!! எனக்குத்தெரிந்து குப்ரிக்கிற்கு சரியானதொரு அங்கிகாரத்தை ஆஸ்கார் வழங்கவில்லை என்றே தோன்றுகிறது .

  தொடரட்டும் உங்கள் சேவை .

  ReplyDelete
  Replies
  1. இன்னாது உங்களுக்கு எழுதத் தெரியவில்லையா?
   என்னை வைச்சு காமடி கீமடி பண்ணலையே?
   வருகைக்கு நன்றி
   தங்களின் பதிவுகள் அசத்தல்...

   Delete
  2. அண்ணா ! குப்ரிக் படங்கள பத்தி எழுதனும்னா கிட்டத்தட்ட ஒரு படத்துக்கு ஒருவருஷம் ஹோம்வொர்க் பண்ணா மட்டும் தான் முடியும் . ஆனா , உங்க பதிவு அவ்வளவு அழகா எளிமையா விளங்கற மாதிரி இருக்குணா ! தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி அண்ணா !!!

   Delete
 4. வணக்கம் சகோ]
  நேர்த்தையான விமர்சனம் படிப்பவருக்கு படம் பார்த்த உணர்வையே ஏற்படுத்துகிறது. உட்தலைப்பு எல்லாம் போட்டு கலக்கிட்டூங்க. அடைப்பு குறிக்குள் எட்டிப்பார்க்கும் வரிகள் உங்கள் சமூகப்பார்வையைப் பறைசாற்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. படத்தின் கதையைச் சொல்லாமல் விமர்சிப்பதுதான் விமர்சனம்..
   நான் எழுதியிருப்பது ஒரு பார்வையாளனின் அனுபவம் அவ்வளவே ...
   இது ஸ்பாய்லர்

   Delete
 5. படத்தினை பார்க்கத் தூண்டும் பதிவு அருமை நண்பரே
  நன்றி

  ReplyDelete
 6. இண்டெர்ஸ்டெல்லர் படம் இப்போது பலரின் தலையைச் சுற்ற வைத்துள்ளது போல 1968 லியும் சுத்த வைச்சுருக்கும் போல.....அடேங்கப்பா...எப்பேர்பட்ட ஒரு படம்! பார்த்துவிட வேண்டும். உங்கள் விமர்சனமும் பிரமிக்க வைக்கின்றது.

  ReplyDelete
 7. நண்பர் மது,

  இந்தப் படத்தின் பின்னணியில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.

  1.குப்ரிக் இந்தப் படத்தை எடுக்க நாசா உதவியதாகவும், அவர்களின் நிதியுதவி மற்றும் இன்ன பிற உதவிகளாலேயே அவரால் இத்தனை வியப்பான பிரமாண்டமான படம் எடுக்க சாத்தியமானதாகவும் ஒரு தகவல் உண்டு.

  2. நிலவில் அமெரிக்க அரசும் நாசாவும் மனிதனை இறக்கும் சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட படமே இது என்பது அடுத்த தகவல்.

  3.நிலவில் மனிதன் கால் வைக்கவே இல்லை. அந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் நடக்கும் காட்சிகள் எல்லாமே ஸ்டூடியோ செட் அப். அதை அத்தனை தத்ரூபமாக படம் எடுத்தது வேறு யாருமல்ல ஸ்டான்லி குப்ரிக்தான். இது ஒரு அதிரடிக் கருத்து. நான் இதை நம்ப ஆரம்பித்துவிட்டேன்.

  4.குப்ரிக் இந்தப் படத்தை எடுத்ததும் நாசா அவரை தங்களுக்காக ஒரு படம் (Apollo 11 mission -man landing on the moon) எடுக்க வற்புறுத்தியதாகவும் இன்னொரு தகவல். அப்போலோ 11 மிஷனே ஒரு மிகப்பெரிய hoax என்ற திடுக்கிடும் தவகல்.குப்ரிக் இந்த மோசடிக்கு நிரப்பந்தப்படுத்தப் பட்டதாகவும், இதை அவர் 1980 தான் எடுத்த the shinning படத்தில் சில குறியீடுகளாகக் காட்டியிருப்பதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ! இம்புட்டு மேட்டர் இருக்கா ! எனக்கு கசண்டிப்பா தேவைப்படற தகவல்கள் ! நோலன முடிச்சிட்டு அடுத்து குப்ரிக் தான் .

   Delete
  2. ஷைனிங் பார்த்துட்டேன் ஆனால் அதில் இந்த ஈஸ்டர் எக் எங்கே இருக்குன்னு தெரியலை?

   ஸ்டான்லி எடிட் செய்து வேட்டி வீசப்பட்ட தன்னுடைய படச் சுருள்களை வேறு யாரும் பார்த்திரா வண்ணம் பாதுகாத்தார்.
   பின்னர் தனது மேற்பார்வையிலேயே அதனை எரித்தார். கலைஞனின் கவனம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது.... உண்மையாகவும் இருக்கக் கூடும்.

   Delete
  3. இன்னும் நிறைய இருக்கு அதனால்தான் இன்னொரு பதிவாக வரும் என்று சொன்னேன்.

   Delete
  4. ஐ யம் வெயிட்டிங்ணா !!!

   Delete
 8. மது,

  1969இல் நடைபெற்றதாக உலகம் நம்பும் அப்போல்லோ 11 மிஷனே ஒரு பொய். இதற்கு நாசா நாடியது ஸ்டான்லி குப்ரிக் கின் உதவியை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. இன்றைக்கு 28 சதவிகிதம் அமெரிக்கர்களே இதை உண்மை என்று நம்புகிறார்கள். ரஷ்யர்கள் 1972 இலேயே அப்போல்லோ 11 ரை எதிர்த்து குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். 1972இல் அமெரிக்கா இந்த மூன் மிஷனை தேவையில்லாதது என்று நிறுத்தி வைத்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இது ஒரு நீண்ட வாதத்தை துவக்கும் விஷயம். நிறைய அறிந்தபின்னரே நான் இதை அழுத்தமாகக் கூறுகிறேன்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக