எனக்கு பிடித்த இன்றைய கிறிஸ்துவம்.


வெறும் மூங்கில் படல்களை உருளை வடிவில் சுற்றி மேலே ஒரு பெரிய தட்டை போட்டு மூடி அதை வீடென்று வாழ்பவர்களை கண்டதுண்டா நீங்கள்? அந்த வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அது அதிக பட்சம் என்ன ஆகும், ஏரியா கவுன்சிலர், டாஸ்மார்க் ரெகுலர் கஸ்டமர், அரிதினும் அரிதாக ஒரு அரசுப் பணியாளராகக்கூட ஆகலாம். 


சமீபத்தில் காலமான ஒரு ஆர்ச் பிஷப் குறித்து பேசிக்கொண்டிருக்கையில்  
அந்த ஓலைச் சுருள் வீட்டைக் காட்டி எனது பாதிரியார் நண்பர் ஒருவர் சொன்ன செய்தி வியப்பானது. அந்த  ஓலைச் சுருள் வீட்டில் பிறந்தவர்தான் அந்த காலம்சென்ற ரெவரண்ட் ஆனால் வாட்டிகன் வரை திருப்பணிக்கு சென்று வந்துவிட்டார் என்பதையும் அந்த உரையாடல் மூலம் அறிந்தேன். 

இதை சமூக பொருளாதார பதத்தில் சொல்ல வேண்டுமானால் வெர்டிகள் மொபிலிட்டி. ஒரு பரம ஏழை வெள்ளை அங்கியுடன் கத்தோலிக்க திருச்சசபையின் அதிகார மையம் வரை செல்ல அனுமதித்திருக்கிறது கிறிஸ்துவம். 

பூசை செய்ய மந்திரங்களைப் படித்துவிட்டு கருவறைக்குள் நுழைய பணிவாய்ப்புக்காக தவமிருக்கும், தொடர்ந்து  அவமானப் படுத்தப்படும் எனது சகோதரர்கள் நினைவு வந்தது. 

காலத்தினாலும், சமூகத்தினாலும் வஞ்சிக்கப்பட்ட இந்தியர்கள் பலரை உய்வித்த ஒரு மாபெரும் கருணை அலை கிறிஸ்துவம். 

இந்தியாவை  கிருதத்துவ கல்வி நிலையங்களை நீக்கிவிட்டு நினைத்துப் பார்ப்பதே அச்சமூட்டும் ஒரு பெரும் கொடுங்கனவாக இருக்கிறது. 
லயோலா இல்லாத சென்னை, ஜோசேப், பிஷப் ஹீபர் இல்லாத திருச்சி 
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! என்ன கொடுமை சாமியோவ்.

பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதை வாரி வழங்கிய பெரும் சமூகப் போராளி, சமூகச் சிற்பி கிறிஸ்துவம். 


இந்தியருக்கு செய்த கல்வி, மருத்துவ, சமூக மறுமலர்ச்சி சேவைகளுக்காக எனது இதயம் கனிந்த நன்றி. 

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகலந்த கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். 

அன்பன் 
மது 

சில வேண்டுகோள்கள் 
எதற்காக கிறிஸ்துவத்திற்கு மட்டும் வாழ்த்து என்று வினவிய எனது இல்லாளுக்கும் இதில் பதில் இருக்கிறது என்று நம்புகிறேன். 

ஏங்க அவங்களுக்குள்ள எத்துனை பிரிவு, ப்ராடஸ்டன்ட், லுத்திரன், பென்தொகொஸ்த்துன்னு ஒருத்தனுக்கு ஒருத்தன் முட்டிக்கொண்டு இருக்காங்க தெரியுமா என்றெல்லாம் எனக்கு வியாக்கியானம் செய்ய யாரும் வரவேண்டாம்.  
அதெல்லாம் அப்புறம்.. இப்போ நன்றியும் வாழ்த்தும், 

Comments

 1. சிந்தனைக்குறிய பதிவு தோழரே...
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. சிந்தியுங்கள் தோழர்...
   நன்றி..

   Delete
 2. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தோடு ஒரு பதிவு. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  மேலே தலைப்பில் கிறிஸ்தவம் என்று சொல்லி விட்டு, பதிவினுள் கிருத்துவம் என்றே பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ”கிருத்துவம்” என்ற சொல்லிற்கு அர்த்தமே வேறாகி விடுகிறது. எனவே கிறிஸ்தவம் என்றே மாற்றவும்.

  (முகநூல் இற்றையிலிருந்து வெளி வந்தமைக்கு நன்றி. இப்படியே நீடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்)
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. மாற்றிவிட்டேன்...
   ஒ ... வெளியே வந்துவிட்டேனா ...
   நன்றிகள்

   Delete
 3. வணக்கம்
  அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
  2. நல்ல பதிவு மது! :)

   Delete
 4. கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 5. Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 6. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. Replies
  1. பேராதரவுக்கு நன்றி

   Delete
 9. இந்தியாவில் கிறிஸ்துவர்களின் வரவு பல்வேறு சமூகமாற்றங்களை மட்டுமில்லாமல் இலக்கிய மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது . உலகளவில் தமிழை பரப்பிய கிறித்துவர் ஜீ.யூ.போப் , சதுரகராதி எனும் தமிழின் முதல் டிக்ஸனரி எழுதிய வீரமாமுனிவர் , 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் மகத்தான நூலின் மூலம் தமிழை உலகறியச்செய்த கால்டுவேல் போன்றோர் கிறித்துவர்களே ! அவர்களின் தொண்டுகள் அலப்பரியது என்பதே உண்மை . கிறித்துமஸ் நல்வாழ்த்துகள் .

  (காலத்தினாலும், சமூகத்தினாலும் வஞ்சிக்கப்பட்ட இந்தியர்கள் பலரை உய்வித்த ஒரு மாபெரும் கருணை அலை கிறிஸ்துவம். ) இந்த கருத்தில் எனக்கு பலவித கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன . இருப்பினும் அதைப்பற்றி விவாதிக்க இது தகுந்த நேரமில்லை என்பதால் பிறிதொரு சமயத்தில் விவ்வாதிப்போம் அண்ணா !!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பார்வைக் கோணம் அருமை
   புதுகையில் ஆவூரில் வீரமாமுனிவர் கட்டிய பெரியநாயகி அம்மவின் ஆலயம் இருக்கிறது..
   ஒருமுறை தோழர்.செல்வேந்திரன் அழைத்துச் சென்றதால் பார்த்தேன் ..

   மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன் ...

   Delete
 10. கிறித்துவர்களின் கல்விப் பணியும், மருத்துவ சேவையும் மறுக்க முடியாதது. எங்கள் வேலூர் என்றாலே கிறித்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைதான் (சி.எம்.சி.) ஞாபகத்துக்கு வரும்

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 11. ///எதற்காக கிறிஸ்துவத்திற்கு மட்டும் வாழ்த்து என்று வினவிய எனது இல்லாளுக்கும் இதில் பதில் இருக்கிறது என்று நம்புகிறேன். ஒருத்தனுக்கு ஒருத்தன் முட்டிக்கொண்டு இருக்காங்க தெரியுமா என்றெல்லாம் எனக்கு வியாக்கியானம் செய்ய யாரும் வரவேண்டாம். அதெல்லாம் அப்புறம்.. இப்போ நன்றியும் வாழ்த்தும், ////


  ஒருத்தனுக்கு ஒருத்தன் முட்டிக்கொண்டு இருப்பது போல கணவனும் மனைவியும் பல இயடங்களில் பல நேரங்களில் முட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அப்படி இருந்த போதிலும் பிறந்த நாள் திருமணநாள் அன்று வாழ்த்து சொல்லாமலா இருக்கிறார்கள்


  பாஸ் இல்லாள் உங்களை கேள்வி கேட்க இடம் கொடுத்துவீட்டீர்களா போச்சு பாஸ் போச்சு உங்க சுதந்திரமெல்லாம் போச்சு

  ReplyDelete
  Replies
  1. அலோவ் எங்க வீட்டிலும் பூரிக் கட்டை இருக்கு பாஸ்..
   கொஞ்சம் சூதானமா ஓட்டிக்கிட்டு இருக்கேன்..

   Delete
 12. பாராட்ட மறந்துட்டேன் ...நல்லதொரு பகிர்வு பாராட்டுக்கள் இப்படிதான் பாஸ் எழுதனும் வள வளா கொழ கொழா என்று இல்லாமல் சுருக்கமாக அதே நேரத்தில் தெளிவாக எழுதவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி
   மேக்னேஷ் பின்னூட்டத்தை பார்த்தீரா...
   அவர்கள் நிறைய மொழிக் கொடையையும் செய்திருக்கிறார்கள்..
   அதுகுறித்து ஏற்கனே எழுதிய ஒரு பதிவை தளத்தில் வெளியிட வேண்டும்..

   Delete
 13. அழகான அருமையான பதிவு சகோதரரே!
  பலவிடயங்கள உங்களிடமிருந்து அறிந்துகொள்கின்றேன்!

  சிந்தனைக்கு விருந்தாகக் தருகிறீர்கள்! தொடருங்கள்!..

  இனிய திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...

   Delete
 14. மிகச்சிறப்பான பதிவு! கிறிஸ்தவம் தந்த கல்வி, மருத்துவ சேவைகள் பல குக்கிராமங்களையும் ஏழைகளையும் கரையேற்றியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பண்பு மாண்பு...
   நன்றி தோழர்

   Delete
 15. நல்லதொரு பகிர்வு.
  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. உண்மையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் மது. கல்விப்பணியோடு, சர்ச் மற்றும் பள்ளிகளில் அவர்கள் தந்த -ஏழைகளின் பசிபோக்கும்- கோதுமை மாவுருண்டைகளை நீங்கள் சாப்பிட்டதிலலை போல.. அதோடு நகரங்களில் கிறித்துவர்களின் மருத்துவப் பணியை நல்லா சத்தம்போட்டுப் பாராட்டணும்.. இப்பத்தான் நம்மவாள்லாம் வந்து ரெண்டையும் வியாபாரமாக்கிட்டா.. நல்ல பதிவு மது. நன்றி த.ம.10

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா ..
   உங்கள் பின்னூட்டம் ஒரு நீண்ட பெருமூச்சை வரவழைத்தது...

   Delete
 17. மதத்தைப் பரப்பத்தானே இவ்வளவும் செய்தார்கள் என்றாலும் உங்கள் பார்வை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது !
  த ம 11

  ReplyDelete
  Replies
  1. நாம ஒழுங்கா ஒன்றாக இருந்திருந்தோம் என்றால் அவர்கள் எப்படி பரவ முடியும் ...
   நமக்கு ஒருவர் தலை மீது நிற்பது பெருமை.
   நம்ம தலையில் ஒருவன் இருப்பதை மறக்கிறோம்.
   அவன் தலையில் இன்னொருவன்.
   இப்படி ஒருவரை ஒருவர் மலினப் படுத்துவதில் பரம திருப்தி நமக்கு..
   இன்னொரு மதம் வந்து எல்லோரும் சமம் என்று சொன்னால் காலுக்கடியில் மிதிபடுவார்கள் போகத் தான் செய்வார்கள்..
   அவர்கள் போய்விட்டார்கள் என்று குய்யோ முய்யோ என்று கத்துவது நியாயமா?
   பலர் அவமானத்தாலும், சிலர் மதத்தையும் வழிபாட்டயையும் விரும்பிப் போவதை விமர்சிப்பதோ குறை சொல்வதோ சட்டம் இயற்றுவதோ மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு அழகல்ல ...

   Delete
  2. தோழர்,
   அன்வர் பாலசிங்கம் எழுதிய “கருப்பாயி என்கிற நூர்ஜகான் “ என்னும் புதினத்தை இன்னும் படித்திரா விட்டால் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
   சிறு புத்தகம் தான்.
   //இன்னொரு மதம் வந்து எல்லாரும் சமம் என்று சொன்னது//.
   அது எல்லா மதங்களும் அன்பே கடவுள் என்று போதிப்பதைப் போலத்தான் தோழர்!
   மதத்தையும் வழிபாட்டையும் விரும்பிப் போய் இருக்கிறார்கள் என்றால் எந்தப்பிரச்சனையும் இல்லை.
   ஆனால் சமத்துவத்தையும் சமதர்மத்தையும் அந்த மதங்களில் சேர்ந்தால் பெற்றுவிடலாம் என்று போனவர்களுக்கு, ““ஐயோ கேடு “““
   அன்று சமத்துவம் இருந்ததா என்றால் இல்லை. நீங்கள் சொன்ன வீரமாமுனிவரால் கட்டப்பட்ட கோயில் என் ஊரிலும் இருக்கிறது.
   தலித்துகளுக்கும் ஏனைய பிரிவினருக்கும் இடையே தடுப்புச்சுவர் கட்டப்பட்டுப் பிரிக்கப்பட்ட வரலாறுடையது அந்தக் கோயில். உங்கள் ஊர்க் கோயிலின் வரலாற்றிலும் இந்நிகழ்வு இருந்திருக்கலாம்.
   அது அந்தக் காலம் என்றால், இந்தக்காலத்தில் , கல்லறையிலும் அந்தச் சுவர் இருக்கிறது. இன்றும் தலித்களின் கல்லறை சுவர்கட்டிப் பிரிக்கப்பட்ட நிலையே தொடர்கிறது. பொதுக்கல்லறையில் அவர்களுக்கு இடமில்லை.
   பெரியார் சொன்னதுதான்,
   இங்கொருவன் மதம்மாறாலாம், ஜாதி அவனை விட்டுவிடுவதாய் இல்லை.
   மதம் மாறினால் சமத்துவம் என்று சொல்வதெல்லாம்,
   அந்த தலைக்கணக்கிற்காய் உருப்படிகளை மந்தையோடு சேர்க்கும் வரை மட்டும்தான்!
   பின்பு,
   உங்கள் சமாதானம் உங்களோடு இருக்கட்டும் என்றொரு கைகூப்பல்!
   அணுக்கத் தொண்டனாய் இருப்பதால் சொல்கிறேன் தோழர்,
   மதங்கள் மாயைதான்!
   இது என் கருத்தே!
   வெளியிட வேண்டியதில்லை.
   நன்றி

   Delete
  3. நான்தான் வேண்டினேனே இப்போது வாழ்த்துக்கள் மட்டும்.
   அன்வர் பாலசிங்கம், உப்புமூட்டை காதர் எல்லாம் மறக்கக் கூடிய பெயர்களா என்ன?
   அகோர என்ற படம் பார்த்து அதிர்ந்ததும் அப்படிதான் ...
   ஆயிரம் சொன்னலும் கல்வியைக் கனவில் கூட நினைக்க முடியாத ஒரு தலைமுறை வகுப்பறைக்குள்ளே வந்தது யாரால்?
   ஜாதி பார்க்கும் கிருஸ்தவர்கள் மீண்டும் மீண்டும் சிலுவையில் தொங்கும் தங்கள் இறைத்தூதரின் கைகளில் ஆணிகளை அறைகிறார்கள் என்பதே உண்மை.
   இதையெல்லாம் இங்கே சொல்ல விரும்பவில்லை.
   இருக்கும் எல்லா மதத்திற்கும் கொடூரமான இன்னோர் பக்ககம் இருக்கிறது...
   வீரமாமுனிவர் கட்டிய ஆலயத்தின் இன்னொரு பக்கத்தையும் பகிர்ந்ததற்கு நன்றிகள்

   Delete
 18. “““அந்தக் காலத்தில் எல்லாம் இருந்தது““““
  பதிவு அருமை தோழர்!
  த ம 12

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 19. மனதில் உள்ளதை எழுத்தில் கொண்டு வந்த நல்லதொரு பகிர்வு.
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நண்பரே

  இங்கு நான் கருத்துரை சொன்னால் கிறிஸ்தவன் என்ற போர்வையில் ஒளிந்து பேசுவதாக பலர் எண்ணினாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கிறிஸ்தவம் மதம் பரப்ப வந்தது . உண்மையே! அதை மட்டும் செய்து விட்டு போயிருக்கலாம் . ஏன் கல்வி , மருத்துவம் எல்லாம் மக்களுக்கு கொடுத்தது ? ஏன் சாதிப் பாகுபாட்டை ஒழிக்க முனைந்தது ? ஏன் மூட நம்பிக்கைகளை ஒழிக்க முயற்சித்தது ? அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை ஏன் கொண்டு வந்தது? மெக்காலே உருவாக்கிய கல்வி முறையை ஏன் நாம் இன்றளவும் பின்பற்றுகிறோம்? மேல் வர்க்கத்தினர் மட்டுமே கல்வி பயின்ற பாரபட்சத்தை ஒழித்து, குருகுல கல்வி முறையை மாற்றி எல்லோரும் கல்வி கற்கும் நடைமுறையை ஏன் உருவாக்கியது? பெண் கல்விக்கு ஏன் வழி வகுத்தது ? கல்வி கூடத்திலும் கோவில்களிலும் எல்லோரும் சமம் என்ற சமத்துவத்தை ஏன் வளர்த்தது?

  கேள்வியை மட்டுமே முன் வைக்கிறேன் . ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதிவு இடலாம் . அவ்வளவு செய்திகளை வரலாறு சொல்லும் .

  ReplyDelete
  Replies
  1. வினவிய
   எல்லாக் கேள்விகளுக்கும் ...
   பதிவுகள் வரும்...
   கேட்க விரும்பாத கேள்விகளுக்கும் கூட..
   வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 21. அன்புள்ள நண்பருக்கு, வணக்கம்!
  இந்தியாவை கிருதத்துவ கல்வி நிலையங்களை நீக்கிவிட்டு நினைத்துப் பார்ப்பதே அச்சமூட்டும் ஒரு பெரும் கொடுங்கனவாக இருக்கிறது.

  லயோலா இல்லாத சென்னை, ஜோசேப், பிஷப் ஹீபர் இல்லாத திருச்சி

  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! என்ன கொடுமை சாமியோவ்.

  இது மட்டுமே உண்மை!
  உதாரணம்!
  புதுவையை எடுத்துக் கொள்ளுங்கள்!
  கல்வி நிறுவனம்
  புதுவை பெத்தி செமினார் உயர்நிலைப் பள்ளி
  புதுவை பெட்ரிக் உயர்நிலைப் பள்ளி
  புதுவை அமலோற்பவம் உயர்நிலைப் பள்ளி
  புதுவர் குளுனி உயர் நிலைப் பள்ளி
  இவை யாவும் 100/100 விழுக்காடு விளிம்பில் நிற்கும் கல்வி நிலையங்கள்
  அனனத்தும் கிறித்துவம் சார்ந்த பள்ளிகள்!
  ஆனால் ஆசிரியர்கள் அனைத்து சமூகத்தினரும் உள்ளனர் என்பது நினவில் கொள்ள வேண்டும்.

  இறுதியாக சொல்வது !
  ஜோசப் விஜூ அய்யா கருத்து உண்மைக் கனவாகத்தான் திகழ்கிறது
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்..

   ஊமைக் கனவுகளில் உண்மை இருகிறது என்று தெரிந்ததால்தான் வெளியிட்டேன்

   Delete
  2. தவறாக எண்ணிவிடுவீர்களோ என்று பயந்தேன்.
   நன்றி தோழர்!

   Delete
 22. பதிவு நன்று நல்லவைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா ...

   பள்ளியில் பணியாற்றும் பொழுதே நாக்கு தள்ளிவிடுகிறது

   உங்களால் ஒரு முன்னணிப் பதிவராக தொடர முடிவது பெரிய ஆச்சர்யம்.

   உண்மையிலேயே ஒரு நல்ல இன்ஸ்பிரேஸ்ன் நீங்கள்

   Delete
 23. அன்புள்ள அய்யா,

  ‘எனக்கு பிடித்த இன்றைய கிறிஸ்துவம்’
  இந்தியருக்கு செய்த கல்வி, மருத்துவ, சமூக மறுமலர்ச்சி சேவைகளுக்காக என்று அருமையாக சொல்லியிருந்தது அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் அய்யமில்லை.
  கல்வி பல இடங்களில் கடைச் சரக்காகி விட்டன. கல்வி நிலையங்களே பணம் காய்க்கும் மரங்களாகிவிட்டன. மதம் கூட யானைக்கு பிடிக்கும் மதத்தைப்போல மனிதனுக்கு வெறிபிடிக்கச் செய்வதில் போதகர்களுக்குள் போட்டி. இந்த வலையில் சிக்கிக் கொள்வது பாமர மனிதர்களே!
  -நன்றி.

  ReplyDelete
 24. முதலில் நன்றி....

  காரணம் கிறிஸ்த்துவ கல்வி அமைப்புகளற்ற இந்தியாவின் நிலையை நானும் யோசித்தது உண்டு...

  அடியேனும் கிறிஸ்த்துவ கல்வி மையங்களில் படித்து வளர்ந்தவன் தான் !

  இந்திய மதங்களை பற்றி பேச நிறைய இருக்கிறது.... பேசுவோம்.... ஒன்றாக தொடருவோம் !

  பதிவின் முடிவில் நீங்கள் வைத்திருந்த வேண்டுகோள்கள்.... அருமை !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 25. "விண்ணில் விளைந்த
  விந்தை ஒளியில்
  சிந்தை மகிழ்ந்ததால்
  கண்கள் குளிர
  மன்னர் மூவர்
  மழலை தொழுதனர்
  மின்னும் பொன்னும்
  வெள்ளி பரிசும்
  கேட்க்க வில்லையே!
  உண்மைபொங்கும்
  வெண்மை உள்ளம்
  இன்ப எல்லையே!!"

  பதிவில் நன்றிபெருக்கு பாய்ந்தோடியது.

  வாழ்த்துக்கள்

  கோ

  ReplyDelete
 26. தோழரே! மிகவும் அருமையான பதிவு. எங்களுக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் , விஜு ஆசானின் அதே கருத்துக்கள் இருந்தாலும், நீங்கள் சொல்லி இருப்பது போல் கிறித்தவர்களின் கல்விச் சேவையும், மருத்துவ சேவையும் பாராட்டாமல் இருக்க முடியாதுதான். அதற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.. வாழ்த்துவோம்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்! பிலேட்டட் கிறித்துமஸ் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. தங்களின் முந்தைய பதிவுகளை இனிதான் வாசிக்க வேண்டும். வருகின்றோம்.

  ReplyDelete
 28. நண்பர் மது,

  படித்த உடனேயே பதில் சொல்ல விரும்பினேன். முடியவில்லை.

  நடுநிலையான பதிவு. சில தீவிர மதவாத அமைப்புகள் மெக்காலே கல்வி முறையை கடுமையாக தற்போது விமர்சிக்கத் துவங்கியிருப்பதன் பின்னே இருக்கும் அரசியலையும் எதிர்க்கவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. அதுகுறித்தும் ஒரு பதிவு காத்திருக்கிறது ...
   நிறய படித்துவிட்டு தெளிவுகளைப் பெற்றபின்னர் எழுத வேண்டியே தள்ளிவைத்திருக்கிறேன்
   வருகைக்கு நன்றி

   Delete

Post a Comment

வருக வருக