கொம்பன் ஜயப் பிரபுவின் விமர்சனம்
"கொம்பன்"

இந்தப் படம் வெளிவருவதே குதிரைக் கொம்பு நிலையாகி,இறுதியில் எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த இயலாமல், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாகவே வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம்.

மாமனார்-மருமகனுக்கிடையே இருக்கும் உறவை இதுவரை தமிழ்ப்படங்கள் இந்த அளவிற்கு செய்திருக்கிறதா எனத் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் மாமனாரே தெய்வமென ஹீரோ மனம் மாறுவதற்கும் கொண்டாடுவதற்கும் இன்னும் வலுவான காட்சி அமைப்புகள் இருந்திருக்கலாம்.

'பருத்தி வீரன்,கிழக்குச் சீமையிலே' - போன்ற படங்களைப் போன்றே முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியை நம்பி எடுக்கப்பட்ட படம்.

கிராமத்தின் வீடுகள், தெருக்கள் அங்கு நிறைந்து கிடக்கும் மாட்டுச் சாணம், சிதறிய வைக்கோல்கள், முள் வேலிகள் எல்லாம் சேர்த்து கிராமத்து வாசனையால் நம் நாசி நனைக்கின்றன.

வேல்ராஜின் கேமரா கோணங்களும், ஒளியும் வியக்க வைக்கிறது.
ஒரு பாடல் காட்சியில் வீட்டிற்குள் கணவனும் மனைவியும் நிற்க, சூரிய ஒளி நேரே அவர்கள் மீது விழ, நம்மைச் சுள்ளென சுடுகிறது.
காதல் காட்சிகளில் மாடுகள் தலையை வெட்கத்தால் ஆட்டுவதும், இரவு நேரம் கருப்பசாமி வேட்டைக்குப் போகும் காட்சிகளும் பிரமாதம்.

ஜிவி ப்ரகாஷ்குமாரின் பின்னணி இசை க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க பதற வைக்கிறது.
படம் பூரா 'ரண்டக்கா...ரண்டக்கா' ஆட்டம் அப்பப்ப...
"கருப்பழகி பாட்டு செம்ம ஹிட்"

குண்டன்-அப்டின்ற மெயின் வில்லனா,
சண்டைப் பயிற்சிக்காரர் சூப்பர் சுப்பராயன்!
வெத்தலைய சுருட்டி வாயில வச்சுகிட்டு,காருல வர்றதும்,வீட்ல உக்காந்து உதார்விடறதுமா ரணகளம் பண்ணிருக்காரு.

யாருங்க வசனம்? நெறய எடங்கள்ல க்ளாப்ஸ் அன்ட் விசில்!

(நினைவில் நின்ற குத்துமதிப்பான வார்த்தைகள்)

#நச்-1
"முத்தையா சாதி,சனம்லாம் கோயிலுக்கு வருதுல்ல.. வர வேண்டிய தானே?"
"சனம் வந்தா பரவால்ல.. சாதியும்ல வருது... வேணாம்யா.. நான் வரல.."

#நச்-2

"என்னம்மா சண்ட போட்டு தொறத்திவிட்ட மாப்ள வந்துருக்காரு.. டம்ளர்ல காபி, நுரை ததும்ப தர்ற போலருக்கு?"

"அப்பா.. அவர் இந்த வீட்டு மாப்ள.. என் புருஷன்... நான் இருக்கேன்னு இங்க என்ன தேடி வந்துருக்கார்... இது என் கடம.. நீங்கதானே இவர எனக்குக் கட்டி வச்கிங்க... சட்டைய புடிச்சு கேளுங்க... உன்ன நல்லவன்னு நம்பித்தானே கட்டி வச்சேன்.. ஏன்யா என் புள்ளைய கை நீட்டி அடிச்சன்னு கேளுங்க... அத விட்டுபுட்டு..."

#நச்-3

"பெத்த பொண்ண கட்டிக் குடுத்த எந்த ஆம்பளயுமே, மருமகனுக்கு அப்பா தான்"

#ஞே-1
மாமனார் மருமகன் வீட்ல ஆயுசுக்கும் இருக்கலாம்மா... ஆனா மருமகன் மாமனார் வீட்ல ஒரு நாளும் தங்கக் கூடாது."

#ஞே-2

"இங்க பாரு... வீட்டு ப்ரச்சனைய வீட்ல பேசு... நான் வெளியில என்ன செஞ்சேன் என்ன ப்ரச்சனைன்னு வெளில நடந்தததெல்லாம், வீட்ல கேக்காத... வெளில என்ன நடந்தா உனக்கென்னா?
அப்டி மீறி கேட்ட, வீட்டுப் ப்ரச்சனையெல்லாம்,வீதிக்கு வந்துடும்.

தம்பி ராமையாவுக்கு இந்த படத்துலையும் கல்யாணம் ஆகாத கேரக்டர். சிறிய சிறிய தனது வசன உச்சரிப்புகளாலும், உடல் நெளிவு சுளிவுகளாலும் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். "brevity is the soul of joke" போல.

கோவை சரளா குசும்பு சரளா. மகனைக் கரித்துக் கொட்டியும்,கலாய்த்தும் பாசம் கூட்டுகிறார்.

கருணாஸ் நினைவிலில்லை..

ராஜ்கிரண் ஒரு கிராமத்தில் மகளைப் பெற்றவர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கும், மகள்,திருமணமான பின்பும் தன் தந்தையை எப்படித் தாங்க வேண்டுமென்பதற்கு லட்சுமி மேனனும் சான்று.

இடப்புறம் கண்ணுக்குக் கீழே லேசான தழும்பு இல்லையென்றால் லட்சுமி மேனனை இந்த அளவு கவனிப்போமா எனத் தெரியவில்லை. குருவாயூரப்பன் அளித்த திருஷ்டிப் பொட்டாய் அது. கிராமத்து கெட்டப்பில் கச்சிதமாய் பொருந்தி, 'பொறாமைப்'பட வைக்கிறார்.

இயக்குனர் முத்தையாவின் முதல்படம் 'குட்டிப்புலி'. அதில் சசிகுமாரும்,லட்சுமி மேனனும், இதில் கார்த்தியும், அதே ல.மே.வும்.
குட்டிப்புலி சாயலிருப்பதாய் சில தகவல்கள்.

"படம் முழுக்க பரபர,விறுவிறு..அருவா,கத்தி,ரத்தம்-கிராமத்து நக்கல் நையாண்டிகள்,பழக்க வழக்கங்கள்."-இதைப் பிடித்தவர்கள் அவசியம் பார்க்கலாம்.

மற்றபடி இப்படத்தை எதிர்த்ததற்கு காரணமென்ன என்பது டாலர் போடாத டோலர் எனக்குத் தெரியவில்லை.(மில்லியன் டாலர் கொஸ்டினாம்)

எது எப்படியோ- கார்த்திக்கு இப்படம் எல்லா வகையிலும் வெற்றி தான்.
இதே போன்ற சாயலில் இதுவே கடைசியாயிருக்க வேண்டுகிறேன்.

"கொம்பன்"-அடக்க நினைத்து, சீவி விடப்பட்ட காளை!

Comments

 1. பகிர்ந்தமைக்கு நன்றி தோழமையே!

  ReplyDelete
 2. வணக்கம்
  தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று படம் பார்த்து விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

Post a Comment

வருக வருக