வள ஆசிரியர்கள் புதுகையின் கல்வி முகங்கள்

8/9/2015 அன்று அதிகாலை எழுந்து இளைஞர்களுடன் கரம்கோர்த்த தலைமை ஆசிரியர் 

அது என்ன வள ஆசிரியர்கள் என்றுதானே கேட்கிறீர்கள். பள்ளிக் கல்வித்துறை அவப்போது ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை நடத்தும்.  அந்த பயிற்சிகளில் சக ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், கற்பித்தல் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மாவட்ட அளவில் சில ஆசிரியர்கள் தேவை.


பல நுட்பங்களை வகுப்பறையில் பயன்படுத்தும் ஆசிரியர்கள் இந்த  பயிற்சிக் கூட்டங்களில் நிகழ்வை எடுத்துச் செல்ல சக ஆசிரியர்களுடன் உரையாட தேர்ந்த்தெடுக்கப்படுகிறார்கள். 

தமிழ் ஆசிரியர்கள் பிரிவில் பல ஆசிரியர்கள் ஆர்வமுடன் இப்பணிக்கு வந்தாலும் ஏனைய பாட ஆசிரியர்கள் பொதுவாக விரும்பி வருவதில்லை. அது போன்ற சந்தர்ப்பங்களில் சிலர் காலத்தின் கட்டாயமாக செயல்படுகிறார்கள். ஆனால் விரும்பி வருபவர்கள் வகுப்பை கையாளும் விதமே அலாதியாக இருக்கும். 

அவர்களில் இருவரை என்னால் மறக்கவே முடியாது. என்றும் முதல்வர் திரு. சோம சுந்தரம், அறிவியல் ஆசிரியர். மிக நீண்டகாலம் புதுகை தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர். ஓல்ட் ஸ்கூல் ஆசிரியர். (ஆசிரியர் எப்படி இருக்க  வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறதோ அதைவிட ஒரு படி அதிகமாகவே இருப்பவர்) மாதம் தோறும் முதல் செலவாக புத்தகங்கள் வாங்குவார். அவற்றை அடுக்கி வைத்துவிடாமல் வாசிப்பார். 

இவர் ஓர் அறிவியல் ஆசிரியராக இருந்தாலும் பலமுறை இவரை ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சியில் வள ஆசிரியராக பார்த்திருக்கிறேன். ஏ.எல்.எம் அறிமுகமான புதிதில் பல பயிற்சிகளில் திரு.சோமு அவர்களுடன் நானும் ஒரு வள ஆசிரியராக கலந்துகொண்டது நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. 

நான் இவரைப் போலச்செய்ய (copy) விரும்பி இன்றுவரை தோற்றுக்கொண்டே இருக்கிறேன்!

வெகு எளிதாக அடைந்துவிடுகிற உயரம் அல்ல இவருடையது என்பது ஒரு நீண்ட பெருமூச்சாக வெளிவருகிறது. 

ஒரு முறை கீழ ராஜ வீதியில் இவரது முன்னாள் மாணவர் ஒருவர் வணக்கம் தெரிவித்திருக்கிறார். நல்லா இருக்கியாப்பா என்றதற்கு ரொம்ப நல்லா இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இருப்பதாக சொன்ன அவன் தயங்கி தயங்கி ஒரு விசயத்தை கேட்டிருக்கிறான். 

அய்யா நீங்க கவிதையெல்லாம் வகுப்பிலே எழுதிப் போடுவீர்களே இப்போது செய்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறா(ன்)ர்? 

இல்லையேப்பா ஏன் அதைக்கேட்கிறே ?

இல்ல சார் ஒரு நாள் நீங்க எழுதிப் போட்ட கவிதை ஒன்றுதான் என்னை இங்கே கொண்டுவந்தது. 

புல்கட்டு வண்டியை 
இழுத்தது மாடு 
ஒட்டிய வயிறுடன் 

நீங்க எங்கேயோ படித்த கவிதையை எழுதிப் போட்டீங்க அது இன்னைக்கு என்னை இங்கே கொண்டு வந்து விட்டுருக்கு சார். எங்க அம்மா பாத்திரம் விளக்கி என்னைப் படிக்க வைச்சாங்க அந்த மாடும் எங்க அம்மாவும் ஒண்ணுன்னு தோணுச்சுசார் படிக்க ஆரம்பிச்சேன் இன்னைக்கு நான் நல்லாருக்கேன். 

அறிவியல் ஆசிரியருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்கிற விடம்தோய்ந்த கேள்விகளால் அந்தப் பழக்கத்தை நிறுத்தியிருந்த சோமு அண்ணா நிறுத்தியதற்காக ரொம்பவே வருந்தினார். 

ஒரு மாணவன் தன்னை உணர்ந்துகொள்ளவும் தன்னைத் தானே ஊக்குவித்துக் கொள்ளவும் உள்ள அத்துணை வழிமுறைகளையும் அடைத்துவிட்டு படிடா படிடா என்று சொல்கிற என்போன்ற (அன்று) புதிய ஆசிரியர்களுக்கு இந்த சம்பவம் எவ்வளவு பெரிய கண்திறப்பு. 

வகுப்பின் நடுவே அண்ணா அவர்பாட்டுக்கு எதையாவது ஒன்றைக் கேட்டுவிட்டு தொடர்வார். விடுமுறை வீணாகும் என்று விடுப்பு எடுக்கலாமா?
என்றோ அவர் கேட்ட கேள்வி ஒவ்வொருமுறை விடுப்பு விண்ணப்பத்தை தொடுகின்ற பொழுதும் நினைவில் ஒலிக்கிறது! 

இன்னொரு தகவலாக சொல்வார். நாள் முழுதும் வெயிலில் நின்று சாந்து சட்டி தூக்குற சித்தாளுக்கு நூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம். எனக்கு எண்ணூறு நிழலில் இருக்கும் நான் சொல்கிறேன் வேலை கஷ்டமா இருக்குன்னு. 
மாணவர்களுக்கு சொல்லுங்க என்று ஜே.ஆர்.சி வகுப்புகளில் பல்விளக்குவதில் துவங்கி கழிவறையில் தண்ணீர் ஊற்றுவது வரை சொன்ன தகவல்கள்தான் இன்று நலக்கல்வி! 

காலாண்டில் அறிவியலில் நூறு மதிப்பெண் பெறும் அத்துணை மாணவர்களுக்கும் நாகூர் ரூமி எழுதிய அடுத்த வினாடி என்கிற நூறு ரூபாய்ப் புத்தகம் பரிசு, வார இறுதிகளில் சிறப்பு வகுப்பு என்றால் சுடச் சுட வடை என சொந்த செலவில் அசத்தியவர்.  

ஒருமுறை நான் மகராஜா ரஸ்க்குடன் இதைப் போலச் செய்த பொழுது “சார் ரொம்ப நன்றி சார்” என்று மாணவர் ஒருவர் சொன்னது இன்றும் எனது இதயத்தின் தசைகளை அசைக்கிறது. நான் செலவிட்ட கூடுதல் நேரதிற்கோ, எனது உழைபிற்கோ அன்றுவரை நன்றி என்று சொல்லாத அவன் மகராஜா ரஸ்க்கிற்கு சொன்ன நன்றி எனக்குச் சில புரிதல்களை ஏற்படுத்தியது. 

இப்படி படீர் என வெடிக்கும் தகவலை தொடர்ந்து பாடத்திற்குள் போய்விடுவார். இவர் பள்ளியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் கொண்டாடிய ஆசிரியர். 

நண்பர் திரு.ஜோதிவேலுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த பொழுது எங்க ஆசிரியர்  சோமையா நல்லாருக்கார என்றார். நல்லா இருக்கார் ஜோதி பேசுங்க என்று செல்லை எடுத்த பொழுது ஐயோ வேண்டாம் என்றார். 
அது பயமல்ல  ....
பக்தி.

அன்புடன்
மது

அடுத்த ஆசிரியர் அன்பின் சுகு ... 
தொடர்வோம் 

சோமு சார் குறித்து ஒரு தகவல். 
வெகு எளிய ஆரம்பங்களில் இருந்து கிளம்பிய திரு.சோமு இன்று பல ஆசிரியர்களின் ஆதர்சம். தற்போது பள்ளன்கோவில் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் இவர் உணவுத்திருவிழா, நான்கண்ட நல்லவர், இலக்கியமன்ற செயல்பாடு மற்றும் வாசிப்புத் திருவிழா என அசத்தும் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறார். 

எதற்கோ அழைக்கிறார் என்றுதான் வீட்டிற்கு போனேன். ஆசிரியம் குறித்து பேசவே அழைத்தேன் என்று எனது தற்போதைய குழப்பங்களுக்கு விடைதந்தார். 

Comments

 1. பகிர்விற்கு நன்றி அண்ணா. திரு.சோமசுந்தரம் அவர்களுக்கு வணக்கங்கள்.

  ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைவிட அவர்கள் சொல்லித்தரும் சில விசயங்கள் பசுமரத்தாணியாய்ப் பதிந்து விடும். என்னுடைய விலங்கியல் ஆசிரியர், வண்டிகளின் அடையாள எண்களை மனதில் கூட்டி ஒரு இலக்கமாகக் கொண்டுவரக் சொன்னார். இன்றும் அப்பழக்கம் என்னை விட்டுப் போகவில்லை :)
  ரஸ்க் விசயம் - ஒருவருக்கு உண்ண ஏதேனும் கொடுக்கிறோமென்றால் அது நம் அக்கறையைக் காட்டுவதால் மனதைத் தொட்டுவிடும். விடிய விடிய வேலைப் பார்த்த நாட்களில் இரவில் "Guys, have some biscuits/pizza/bread" என்று வந்த மேனேஜரை என்றும் மறக்க மாட்டோம். வேலையை முடியுங்கள் என்று அவர் வீட்டிற்குச் சென்றிருக்கலாம், ஆனால் அவர் அப்படிச் செய்ததே இல்லை. நம்முள் ஒருவராக இறங்கி வேலை செய்யும் ஆளுமைகள் என்றுமே மனதில் இருப்பார்கள் .
  உங்கள் பதிவைப் படித்தவுடன் இவர்கள் நினைவில் வந்ததால் பகிர்ந்தேன் :)
  த.ம.1

  ReplyDelete
 2. போற்றுதலுக்கு உரிய ஆசிரியர்கள்
  தம +1

  ReplyDelete
 3. வள ஆசிரியர்கள் என்ற சொல்லிற்கான பொருளை இப்போதுதான் அறிந்தேன். சற்றொப்ப இவ்வாறான பல வள ஆசிரியர்களை என் கல்லூரி நாட்களில் (1975-79) கண்டுள்ளேன். அவர்களில் ஒருவர் இந்தியப்பொருளாதார வளர்ச்சி (Indian Economic Development, IED) வகுப்பாசிரியர். பாடங்களை தினமும் எடுத்துமுடித்தபின் 10 நிமிடங்கள் பொது அறிவிற்காக ஒதுக்கிவிட்டு, எங்களிடம் நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அவ்வாறு நாங்கள் பல முறை கேட்டு எங்களை தெளிவாக்கிக் கொண்டுள்ளேன். ஒரு நண்பர் குறும்புக்காக அப்போது வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படத்தில் வரும் அழுத்துச் சொல்லப்படுகின்ற "யா" என்பதற்கு அர்த்தம் என்றார். அவர் கேட்டதோ திசை திருப்ப. ஆனால் ஆசிரியரோ மிகவும் நிதானமாக அது 'Yeah' என்பதாகும். 'Yea' என்று கூடச் சொல்வர். ஆமாம் என்பது அதற்கான பொருள் என்றார். கேட்ட மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். எங்களுக்கு ஒரு புதிய சொல்லுக்கான பொருள் கிடைத்த மன நிறைவு.

  ReplyDelete
  Replies
  1. பொறுமை மட்டும் இல்லை என்றால் வள ஆசிரியராக பணியாற்ற முடியாது

   Delete
 4. அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. பள்ளிக் கல்வித்துறை அவப்போது ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை நடத்தும். அந்த பயிற்சிகளில் சக ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், கற்பித்தல் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மாவட்ட அளவில் சில ஆசிரியர்கள் தேவை.//

  இது போன்ற ஆசிரியப் பயிற்சிகள் புதுக்கோட்டைக் கல்வித் துறை மட்டும் தானா இல்லை எல்லா மாவட்டங்களிலும் கல்வித்துறை இது போந்று அளிக்கத்தானே செய்யும்? அதைப் பார்க்கும் போது கல்வித் துறை சரியாகத்தான் இயங்குவது போலவும், ஆசிரியர்கள் தான் இன்னும் முனைய வேண்டும் போல் தான் தோன்றுகின்றது...இப்படி எல்லா ஆசிரியர்களும் முனைந்து விட்டால் நமது கல்வி மேம்பட்டு எல்லா அரசுப் பள்ளிகளும் மிளிர்ந்தால், தனியார் பள்ளிகள், பணம் பிடுங்குதல் என்று எல்லாம் ஒழிந்து, சமச்சீர் வந்துவிடும் அல்லவா...ம்ம் அந்த நாளும் வந்திடாதோ...

  ஊக்குவிப்பது என்பது வாழ்க்கையில் நமக்குமே தேவைப்படுகின்றதே....பிள்ளைகள்? ரொமபவே!!

  அருமையான பதிவு. அடுத்த ஆசிரியரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்,
   உணமைதான்

   Delete
 6. ஒவ்வொருக்கும் ஆசிரியர் அமைவது ஒவ்வொரு விதம் போல....

  ReplyDelete
  Replies
  1. ஆம்
   வருகைக்கு நன்றி

   Delete
 7. மிக நீண்டகாலம் புதுகை தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர்.///

  thaniyar paliyilum ippadiyaanathoru aasiriyaraa.
  ivarukku munpu arasu sampalam vangi velai seyyum asiriyarkal onnume kidaiyathu.

  manathai nekizavaitha pathivu.
  soma suntharam aasiriyarai arimuka paduthimaikku nandrikal sir.

  ReplyDelete

Post a Comment

வருக வருக