ஞாயிறு போற்றுதும்

பதிவர் சந்திப்பு-2015 தமிழ் இணைய கல்விக் கழகம் இணைந்து நடத்தும் போட்டிக்கு எழுதப்பட்ட கட்டுரை 
வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள்


ஞாயிறு போற்றுதும் - சூழல் மேம்பாடு

சூழல் சீர்கேடுகளைக் குறித்து ஊடகங்கள் அலறித்தீர்த்துவிட்டன . எங்கோ நிகழும் எல் நினோ எங்கோ எழுந்து அடங்கும் சுனாமி என்று விட்டேத்தியாய் இருந்த நாட்களெல்லாம் முடிந்துபோய் நமது வாழ்நாள் காலத்திலேயே சீர்கேடுகளின் பலன்களை அனுபவித்கத் துவங்கிவிட்டோம்.

கடலை, காற்றை, வளியை, ஒலியை நாம் மாசுபடுத்துவது குறித்து ஏராளமான பேனா மை சிந்தப்பட்டுவிட்டது.

என்ன செய்யலாம் நாம் என சிந்திக்கத் துவங்கினாலே தீர்வுகள் தானே கிடைக்குமே.

மாற்றுவழி மின்னுற்பத்தி

பெருமளவு சூழல் சீர்கேட்டை செய்வது நிலக்கரி எரிப்பு மின் உற்பத்திமுறை.

அப்போ நீர்மின்சாரம் நல்லது என்று நினைத்தால் அதுவும் தவறே. இதை தனது மின் தேவைகளைப் பெருமளவு நீர் மின்சாரத்தின் மூலம் பெரும் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று பார்த்தாலே போதும். பெரும் அணைகளில் தேக்கப்படும் நீர்த்திறல் பல்வேறு மீனினங்களை பூண்டற்று போகச் செய்துவிட்டது.  நேற்று மீன்கள் இன்று நாம்.

சீனாவில் கட்டப்பட்டுள்ள த்ரீ கார்ஜஸ் உலகின் மாபெரும் அணை, இதில் தேக்கப்பட்டுள்ள நீர் தனது அழுத்தத்தால் புவியின் சுழற்சியையே சில மைக்ரோ  வினாடிகள் குறைத்திருகிறது என்பதும் கவனத்தில் இருக்கவேண்டும்.

கடல் மட்டத்திற்கு 173அடி உயரத்தில் 39 டிரில்லியன் கிலோ கிராம் தண்ணீரைச் சேமித்து வைத்திருப்பது புவியின் சுழல் வேகத்தைக் குறைத்து சுமார் 0.06 வினாடிகள் நீண்ட நாளை நமக்குத் தந்திருக்கிறது.

இப்படி நீர்மின்சாரம் கடும் சூழல் பின்விளைவுகளை ஏற்படுத்தும் சமயத்தில் நமக்கு ஆறுதலாக இருப்பது என்ன என்று தீவிரமாக சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

அசுர வேகத்தில் வளரும் நகரிய நாகரீகங்களுக்கு மின்சக்தி எவ்வளவு அவசியம். நிலக்கரியையும் கச்சா எண்னையையும் கிட்டத்தட்ட அழித்துத் தீர்த்துவிட்டோம்.

இவற்றிற்கு ஒரே தீர்வும் நம்பிக்கையும் கதிரோனிடம்தான் இருக்கிறது.

ஆம் நண்பர்களே சூரிய மின்னுற்பத்தி பெரும் சூழல் சீர்கேடுகளை தருவதில்லை. மாறாக சூழலுக்கு உகந்த மின்னுற்பத்தி, நமது புவியைக் காக்க நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையும் இதுதான்.

ஒரு தகட்டில் அடுக்கப்பட்ட ஒளி மின் செல்கள் தன்மீது விழும் சூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றி அதை மின்கலன்களில் தேக்கிவைக்கின்றன. இந்த நேர் மின்சாரம் மாறும் மின்சாரமாக உருமாற்றப்பட்டு  பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இம்முறை தவிர பெரும் பரப்புகளில் நிறுவப்பட்ட குழியாடிகள் சூரிய ஒளியை ஒத்து இயங்கக் கூடிய (ஹீலியோஸ்டாடிக்) கருவிகளில் பொருத்தப்பட்டு சூரிய வெப்பம் பரப்பின் மையத்தில் உள்ள ஒரு பெரும் தூணில் இருக்கும் உப்புக் கலவையின் மீது குவிக்கப்பட்டு அதன் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வழக்கமான ஒளிமின் தகடுகளை விட பன்மடங்கு திறன் வாய்ந்தவை இவை. குறிப்பாக வெப்பம் உப்புக்கலவையில் தேக்கப் படுவதால் சூரியன் மறைந்த பின்னரும் சுமார் ஆறுமணிநேரம் மின்னுற்பத்தியில் இருக்கும் இந்த அமைப்பு!

இப்படி நாள்தோறும் புதுக் கண்டுபிடிப்புகளாலும் மேம்பாடுகளாலும் சூரிய ஒளி மின்னாற்றல் தயாரிப்பு அனைவரும் பயன்படுத்தும் வகையில் விலை குறைந்துகொண்டே வருகிறது, அதே சமயம் உயரும் தொழில் நுட்பத்தால் மின் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால் இந்தியா இந்தப் பாதையில் நடைபோட தயங்கி நிற்கிறது. ஏன் பொருளாதாரம் இல்லையா? விழிப்புணர்வு இல்லையா? அல்லது தொழில் நுட்பம் இங்கே கிடைக்க வில்லையா?

இந்தியவைப் பொறுத்த வரை சூரிய மின்சக்தி உற்பத்தியை அறிமுகப் படுத்த அதன் பயன்பாட்டைப் பன்மடங்கு உயர்த்த ஒரே ஒரு அமைப்பால்தான் முடியும்.

அது இந்திய தேர்தல் ஆணையம்!

சூரிய மின் சக்தி உற்பத்தி குறித்தும் அதை தங்கள் தொகுதிகளில் எப்படி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும் விரிவான அறிக்கைகளை வேட்பாளர்கள் தந்தால்தான் தேர்தலில் நிற்கலாம் என்று சொல்லட்டும் அல்லது சொல்லப் போவதாக அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்கள் எப்படி தீயா வேலை செய்கிறார்கள் என்று. பள்ளிப் பிள்ளைகளுக்கோ, கல்லூரி மாணவர்களுக்கோ விழிப்புணர்வு தருவதைவிட நமது அரசியல் தலைமைகளுக்கு தருவதே அவசியம். இது வேறு எந்த முறையையும்விட அதீத பலன்களைத் தரவல்லது.

செய்யுமா தேர்தல் ஆணையம்!

உசாத்துணைகள் சில
1. http://fwee.org/environment/how-a-hydroelectric-project-can-affect-a-river/
2.http://www.businessinsider.com/chinas-three-gorges-dam-really-will-slow-the-earths-rotation-2010-6?IR=T

--------------

(1) படைப்பு எனது  சொந்தப் படைப்பே என உறுதிமொழி தருகிறேன்.

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது”

(3)“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ 

Comments

  1. ///நமது அரசியல் தலைமைகளுக்கு தருவதே அவசியம். /// மிக சரி... ஆனால் இந்த திட்டம் மூலம் அவர்கள் நிறைய கொள்ளை அடிக்கலாம் என்று ஊடகங்கள் எழுதினாலே போதும் அதன் பின் இந்த அரசியல் தலைமைகள் தேர்தல் ஆணையம் சொல்லாமலே தீயா வேலை செய்யும்.


    நானும் பல தடவைகள் யோச்சித்தது உண்டு இந்தியா ஏன் இந்த சூரிய ஒளி மின்சார திட்டத்தை பயன்படுத்தாமல் இருக்கிறது அந்த திட்டத்தை கொண்டுவர எது தடையாக இருக்கிறது என்று அதற்கு இன்னும் எனக்கு விடை கிடைக்கவில்லை....

    ReplyDelete
  2. நல்லதொரு சிந்தனை..
    செயலாக்கம் பெறவேண்டும்..

    வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  3. எளிமையான ஆயினும் சுற்றுச் சூழல்
    பாதுகாப்பிற்கு அருமையான யோசனையை
    கட்டுரையாகத் தந்தவிதம் மிக மிக அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை நண்பரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    ‘ஞாயிறு போற்றுதும்’ சூரிய மின்சக்தி சூழல் மேம்பாடு பற்றியும் நிலக்கரி எரிப்பு மின் உற்பத்திமுறை பாதிப்பு பற்றிவிரிவாக கட்டுரையில் விளக்கி இருக்கிறீர்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    த.ம. 3.

    ReplyDelete
  6. அகண்ட பார்வையில் ஆழ்ந்த சிந்திப்பில் உருவாகியுள்ள ஆக்கப் பூர்வமான கட்டுரை.
    கடைசியா அரசியல் வாதிகளுக்கு வச்சீங்களே ஒரு ஆப்பு. அவுங்க என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறாங்க? சரியான போட்டிக்கான கட்டுரை. வென்றிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பலன்களைத் தருமா?
    அருமையான பகிர்வு,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  9. நிறைய தரவுகளைத் தாங்கிய கட்டுரை. உழைப்பிற்கு பாராட்டுகள் சகோ. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அருமையான கட்டுரை மது. இந்தியாவின் பல மாநிலங்களில் நான் பயணித்திருக்கிறேன். அப்படி பார்த்த இடங்களில் குஜராத்தில் மட்டும் தான் அதிக அளவு மின்சார உற்பத்திக்கு கதிரோனின் கதிர்களை பயன்படுத்துவதை பார்த்தேன். நம் நாடு முழுவதும் இப்படி மின்சார உற்பத்தி செய்தால் நல்லதொரு மாற்றாக இருக்கும்.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. சும்மா ..பத்தி எரியுதே..!
    கடைசியில் ஒரு தீர்வு சொளியிருப்பது அருமை..!

    ReplyDelete
  12. அருமையான. பகிர்வு அருமையான தீர்வு!

    ReplyDelete

Post a Comment

வருக வருக