கன்னித் தமிழ் இனி கணினியிலும்

கட்டுரைப் போட்டிக்கு எழுதப்பட்ட  கட்டுரை.
வகை-(1)கணினியில் தமிழ்வளர்ச்சி பற்றிய கட்டுரைப்போட்டி 

உலகில் தமது தாய்மொழி குறித்து சரியான கண்ணோட்டமோ பீடோ இல்லாத இனங்களை பட்டியல் இட்டால் அதில் முதல் இடம் நமக்குத்தான். 

இது தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் சாபம்.

பதிவர்கள் என்மீது பாய வேண்டாம். கொஞ்சம் சுற்றிப் பாருங்கள். என் மகள் தமிழில் பேசுவது எனக்கு அவமானமாக இருக்கிறது என்று சொல்லும் மனநலமற்ற தந்தைமார்களை நாம் அதிர்ச்சியோடு நோக்கிய தினங்களை மறந்திருக்கமாட்டோம். 

தமிழ் உணர்வு உயிர்த்திருக்கும் இடம் தற்போதைக்கு வலைப்பூக்கள்தான் என்பது வெள்ளிடைமலை. இது என்போன்றோருக்கு பெரும் நம்பிக்கை தருவதாக மட்டுமல்ல பல கண்திறப்புகளையும் செய்து வருகிறது. 

தினம் தினம் இற்றைகளில் மலரும் கவிதைகள் காலைக் காபியை போன்றே அவசியமாகிவிட்டது எனக்கு. நந்தனின் வார்த்தை பயன்பாடு கண்டு வியக்கும் பொழுதே கரிகாலன் வார்த்தை வெடிகுண்டுகளை வீசி அசத்துகிறார். ழ வரிசைக் கவிஞர்களை எனக்கு அறிமுகம் செய்ததும் வலைதான். மாபெரும் ஆளுமைகளை கூட வெகு எளிதில் அணுகி பேச முடிகிற வாய்ப்பும் வலை தந்ததுதான். 

இப்படி தமிழ் கொண்டாட்டத்துக்கு உரிய பெருமிதத்திற்குறிய அடயாளமாக மாறிவருவதும் அது இயல்பு வாழ்வில் ஊடுருவதும் வெகு ஆரோக்கியமான எதிர்காலத்தை நமக்கு காட்டுகின்றன.

இருப்பினும் அப்படி ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் தமிழ் அறிஞர்கள் குறியாய் இருப்பதும் வேதனைக்குரியது. 

அறிஞர் பெருமக்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பல்வேறு தட்டச்சு எழுத்துரு வடிவங்களை உருவாக்கி புழக்கத்தில் விட்டுள்ளனர். கணினித் தமிழுக்கு விடப்பட்டிருக்கும் மாபெரும் சவால் இது. 

எப்படி என்கிறீர்களா நீங்கள் ஒரு ஆங்கில வாக்கியத்தை உங்களுக்கு பிடித்த எந்த எழுத்துருவிலும் மாற்றலாம். அதன் வடிவம் மெருகேறுமே ஒழிய சிதையாது. ஆனால் தமிழ் எழுதுருக்களுள் அந்த ஒருமை இல்லை நீங்கள் பாமினியில் அடித்தால் செந்தமிழ் சிதைக்கும். செந்தமிழில் அடித்தால் ஸ்ரீலிபி முழிக்கும். தொல்லையே வேண்டாம் என்று யுனிக்கோடில் அடித்தால் எழுத்துரு எளிமையாக இருக்கும். கவர்ச்சிகரமான எழுத்துருக்களை நம்மால் பயன்படுத்த முடியாது. 

என்ன செய்யலாம்?

வளர்ச்சிக்கான முதல் அடி என நான் கருதுவது யுனிக்கோடில் செம்மைபெற்ற கவர்சிகரமான எழுத்துருக்களை உருவாக்குவதே. இதற்கு தடையாக இருக்கும் எவரையும் கண்டுகொள்ளமால் செய்து முடித்தோம் என்றாலே தமிழ் அடுத்த கட்டப் பாய்ச்சலில் இறங்கும். 

வடிவம் மாற்றுக

ஒரு இலக்கிய வடிவம் அச்சுப் புத்தகத்தில் வந்தால்தான் நிறைவு என்கிற பழுப்பேறிப் போன புத்தி நமக்கு இன்னும் இருக்கிறது. ஒரு மடிக்கணியில் ஒரு நூலை முழுதாக எழுதி வடிவமைக்க முடிந்த ஒருவரால் அதை அச்சிட்டு ஒரு விழாவில் வெளியிட முடியுமா என்பது ஒரு கேள்விக்குறி. 

இதைத்தவிர்க்க 

மென்பொருட்களைக் கொண்டு மின்வடிவில் வெளியிட்டு அதை இணையதளங்களில் விற்பனை செய்தாலே போதும். பல முனைகளில் மேம்பட்ட விசயம் இது. குறிப்பாக காகிதம் தேவையில்லை என்பதும் வீர்யம் மிகு எழுத்து என்றால் எழும் வருவாயும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். 

எழுத்து எழுத்தாகவே இருக்கவேண்டிய அவசியம் இல்லை இப்போது. மேலை நாடுகளில் வெகு காலத்திற்கு முன்பே பிரபலமடைந்துவிட்ட ஒலிப்புத்தக வடிவங்களையும் நாம் செய்தே ஆகவேண்டும். 

மேம்பட்ட இலக்கணமென்கருவிகள்

ஏற்கனவே சில கருவிகள் இணையத்தில் இருகின்றன. இருப்பினும் மேலும் மேலும் இலக்கணக் கருவிகளை உருவாக்கி புழக்கத்தில் வைத்திருக்க வேண்டும். எழுத்துப் பிழை, சந்திப் பிழை முதல் வெண்பா சரிபார்ப்பு வரை செய்தோம் என்றால் அது தமிழுக்கு செய்த மாபெரும் சேவையாக இருக்கும். 

விக்கிப்பீடியா பதிவுகள்

கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிபீடியா உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தன்ஆர்வலர்கள் மூலம் சிறந்ததோர் அறிவுக்களஞ்சியமாக திகழ்கிறது. 

ஆனால் தமிழ்பங்களிப்புகள் குறைவாகவே இருக்கிறது. இதுகுறித்த தொடர்ந்த பயிற்சிகளும் தொடர்ந்த வலையேற்றங்களும் அவசியமாகிறது. ஒரு நாள் பயிற்சியைத் தொடர்ந்து பயிற்சி பெற்றோர் இயங்க வேண்டிய சூழலை ஏற்படுத்துவதும் அவசியம். 

தமிழ் வெர்ச்சுவல் அகடமி போன்ற அமைப்புகள் இதற்கென இணையஉலா மையங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கலாம் வாரத்தில் ஒரு நாள் விக்கிக்கு செலவிட்டால் எத்துனை பைட்டுக்களை அவர்கள் பங்கேற்பாளர்களிடம் இருந்து பெறுகிறார்களோ அதனை அளவாகக் கொண்டு அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படலாம். 

இப்படி செய்வதன் மூலம் ஒரே ஆண்டில் நாம் பல  லட்சம் கட்டுரைகளைத் துவக்கி இணைக்க முடியும். 

இதைவிட கல்வியியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் இதை பாடத்திட்டத்தில் சேர்த்தாலே போதும். விக்கி இணைப்பு மாணவர்களுக்கு பல்வேறு தளங்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருப்பதால் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் மிக நல்ல நிலையையும் அடைய வாய்ப்பு இருக்கிறது. 

தொழில் நுட்ப மொழிபெயர்ப்பு 
கணினி தொடர்பான அத்துணைநூற்களும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். எந்த தொழில்நுட்பமும் தாய்மொழியில் அறிமுகமாகிற பொழுதுமட்டுமே சாதனைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அடித்தளமாகிறது. எனவே அரசு இதை முழு அர்பணிப்போடு செய்ய வேண்டும். 

கணிப்பொறி உள்ளே மட்டுமல்ல வெளியேயும் தமிழ்.

தமிழகத்தில் விற்பனையாகும் கணினி தொடர்பான பொருட்களின் லோகோ முதல்கொண்டு தமிழில் இருக்க வேண்டும். விசைப்பலகை தமிழில் இருக்க வேண்டும். இது அடுத்த தலைமுறைக்கு நாம் அழுத்தமாக ஒரு சேதியைச் சொல்ல உதவும். நாங்கள் சுரணையோடு இருந்தோம் நீங்கள் அப்படியே தொடருங்கள் என்பதே அது. 


--
தரப்பட்ட தலைப்பில் என்னால் எழுத முடியுமா என என்னை நானே சோதனை செய்துகொள்ளவே எழுதினேன்.
ஹும் என்னத்த சொல்ல
உறுதிமொழி
இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” வேறு எங்கும் வெளியிடப்படவில்லை   
---

Comments

 1. ஆஹா அருமையான கட்டுரை ஏன் போட்டிக்கு தகுதியிருந்தும் அனுப்பவில்லை சகோ...

  ReplyDelete
 2. ஆகா
  அருமையான கட்டுரை நண்பரே
  எனது கருத்தும் இதுதான்
  தமிழறிஞர்கள் இன்று வரை ஒரு கருத்தில் மட்டும்தான்
  ஒற்றுமையாக இருக்கிறார்கள்
  அது
  மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை என்னும் கருத்துதான்.
  இல்லையென்றால் இந்நேரம் தமிழின் தனித் தமிழ் விசைப் பலகை வந்திருக்கும், தமிழ் எழுத்துரு, அனைவரும் பயன் படுத்தும் வகையில் வந்திருக்கும்
  இன்றைய அலுவலகப் பயன்பாட்டில் கணினி வந்துவிட்டது.
  ஆனாலும் ஒவ்வொரு துறையும் ஒரு எழுத்தினைப் பயன் படுத்துகிறது, படிக்க இயலவில்லை, அச்சிட முடிவதில்லை,
  இந்நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
  வேதனை நண்பரே
  தம +1

  ReplyDelete
 3. அனுப்பியிருக்கலாமே. நல்ல கட்டுரையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அருமையான கட்டுரை மது. போட்டியில் பங்கு பெற வேண்டாம் என்ற உங்கள் முடிவை பாராட்டுகிறேன். அடுத்தவர்கள் வெற்றியில் மகிழ்ச்சி பெறுவது பெரிய விஷயம்......

  ReplyDelete
 5. நன்றாகவே உள்ளது சகோ! ஞாயமனவற்றையே உரைத் துள்ளீர்கள்அனுப்புங்கள் வெற்றி உங்களுக்கே.வெற்றி பெற என் வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete
 6. அருமை! சே! பலே பலே சரியான போட்டி ஒரே வீட்டிற்குள் ....யாருக்குப் பரிசு, இருவருக்குமேயா என்று சுவாரஸ்யத்துடன் நினைத்துக் கொண்டு வாசித்து வந்தால் ....பல்பு! போட்டிக்கு என்று சொல்லிவிட்டு அனுப்பவில்லையா தோழரே! ? அனுப்பலாமே!

  வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. சிறப்பான கட்டுரை!

  ReplyDelete
 8. இலட்சினை, விசைப்பலகை உள்ளிட்ட அனைத்தும் தமிழிலேயே அமைய வேண்டும் என்னும் தமிழ்ச்சுரணையோடான வேட்கை. செயலாக்கத்திற்கு வர வேண்டுமென்பதே அனைவரின் விழைவும். வரும் ....கணினி மென்பொருளாக்கிகள் தமிழுணர்வு மேலிட்டால்

  ReplyDelete
 9. இத்தனை அருமையாய் எழுதிவிட்டு போட்டிக்கு அனுப்பாவிட்டால் எப்படி, மற்ற செயல்முறைகளை முடித்து போட்டிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன் சகா! வெற்றிபெற வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 10. வணக்கம்

  சிறப்பாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. சிறப்பான கட்டுரை சகோதரரே!

  வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. அன்புள்ள அய்யா,

  கட்டுரை நன்று. வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. அருமையான கட்டுரை ஏன் நீங்கள் போட்டிக்கு அனுப்பவில்லை?வாழ்த்துக்கள்--சரஸ்வதிராசேந்திரன்

  ReplyDelete
 14. நல்லதொரு விளக்கம் போட்டியில்வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. அன்றைக்கே படித்துவிட்டேன் அண்ணா
  நச் நச் என்று ஆலோசனைகளை அள்ளிவிட்டிருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் அருமை அண்ணா .. முத்து மாலையை மைதிலிக்குக் கொடுத்துவிட்டதால் உங்களுக்கு மோதிரம் :-)
  போட்டியில் உங்கள் கட்டுரை இணைக்கப்பட்டது மகிழ்ச்சி அண்ணா

  ReplyDelete
 16. தரப்பட்ட தலைப்பில் மிக அருமையாக சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் சொல்லியுள்ள அத்தனையும் நிறைவேற்றப்பட வேண்டும். பாராட்டுக்கள் மைதிலி!

  ReplyDelete
 17. மைதிலி எனத் தவறாக எழுதிவிட்டேன். கஸ்தூரி ரெங்கன் எனத் திருத்தி வாசிக்கவும்.

  ReplyDelete
 18. போட்டிக்கெனதான் எழுத வேண்டிய அவசியமில்லை என்பதை உங்களின் தரமான கட்டுரை எடுத்துரைக்கிறது. //..வளர்ச்சிக்கான முதல் அடி என நான் கருதுவது யுனிக்கோடில் செம்மைபெற்ற கவர்சிகரமான எழுத்துருக்களை உருவாக்குவதே. உண்மை. வலைப்பூவில் இன்று எழுதிக் கொண்டிருப்போரில் பலர் மின்னூலுக்கு மாறுவதற்கு முன் செயபடுத்த வேண்டிய ஒன்று. மின்னூல் படைப்புகள் ஒருங்குறியில் இருக்க வேண்டுமென சொல்லும் http://freetamilebooks.com உங்கள் வழிமொழிதலுக்கு நல்ல எடுத்துக்காட்டு.

  ReplyDelete

Post a Comment

வருக வருக