விடைபெறுக எங்கள் அறிவரசே



காலை பள்ளிக்கு சென்றவுடன் வந்த முதல் செய்தியே இதுதான்.

சகோதரி தேன்மொழி சார் உங்களுக்கு ரவீந்திரன் சாரைத் தெரியுமா என்றார்.

ஒரு மேல்நிலை தாவரவியல் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு  வாழ்ந்து காண்பித்தவர்.



அதீத பொறுமையுடன் மாணவர்களைக் கையாண்டவர். அத்துணை பொறுமையையும் ஆவியாக்கும் வேலையை செவ்வனே செய்வேன் நான். ஒரு அதட்டல் கிடையாது, கண்டிப்பு கிடையாது.

மச்சுவாடிப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். குடும்பச் சூழலால் பள்ளிக்கு வருவதை தவிர்ப்பார்கள்.

மறுநாள் அவர்களின் வீட்டில் அய்யா இருப்பார். மெல்லப் பேசி பெற்றோருக்கு புரியவைப்பார்.  அந்த மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவார்கள். இப்படி எத்துனையோ ஏழை மாணவர்களுக்கு கல்விச் சிறகை பொருத்தியவர் அய்யா.

ஆசிரியர் பணியை முப்பதாம் தேதிக்கோ முப்பத்தி ஒன்றாம் தேதிக்கோ செய்தவர் இல்லை. ஆத்மார்த்தமாய் செய்தவர் அவர்.

வாழ்நாளில் ஒரு முறையாவது அவர் ஓர் நிமிடத்தில் செய்ததை செய்தால் என் ஆசிரியப் பணி முழுமையாக இருக்கும்.

ரவீந்திரன் என்கிற ஒற்றைப் பெயர் இத்துணை உணர்வலைகளை என்னுள் ஏற்படுத்தியது.

தொடர்ந்து சொன்னார் சகோதரி அவர் இறந்துவிட்டார்.

நீண்ட நாட்களாக கண்களில் வலியோடு இருந்த அவர் கண் மருத்துவம் சரிவராததால் திருச்சியில் ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்.

மூளையில் ஒரு சிறிய கட்டி  இருப்பதை அறிந்த அவர் புதிய பாணி அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற சம்மதித்திருக்கிறார்.

கபாலத்தை திறந்து செய்யாமல் மூக்கில் வழியே நடந்திருக்கிறது அந்த அறுவை. ஏதோ சரியில்லாமல் போகவே தொடர்ந்து இருமுறை மூளைக் காய்ச்சலால் தாக்கப்பட்டிருக்கிறார்.

தளர்வுற்ற நிலையில் நேற்று நிறைவெய்திவிட்டார்.

கட்டியால் இறந்திருந்தால் கூட குறைந்தபட்சம் ஐந்து வருடம் இருந்திருப்பார் என்றே நினைக்கிறன், புதுமுறை சிகிச்சை இவருக்கு சரிவரவில்லை.

மிக நல்ல ஆசிரியர், நான் பெரியவன் என்ற ஈகோவே இல்லாதவர், வெட்டி வாய்ஜாலம் செய்யாதவர், விளம்பரத்திற்கோ படோபத்திற்கோ முன் செல்லாதவர்.

மரணத்திற்கு மட்டும் முந்திக்கொண்டுவிட்டார். அதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

மரணம் உங்கள் உடலை அழித்துவிடலாம், எங்கள் மனங்களில் இருக்கும் உமது பிம்பம், உங்களை நினைத்தவுடன் மனதில் எழும் குதுகலம் கலந்த மரியாதை இவையெல்லாம் உங்களிடம் படித்த மாணவர்களின் மனங்களில் என்றென்றும் இருக்கும்.  நீங்கள் மரணத்தை வென்றவர்.


மரணத்தில் கூட கேள்விகளை புரிதல்கள் தந்தபடியேதான் இருக்கிறீர்கள்.

விடைபெறுக எங்கள் அறிவரசே

பி.கு :
யாரும் ஒரே அடியாக  செத்துப் போவதில்லை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சாகிறார்கள். அடியேன் இன்று கொஞ்சம் இறந்து போனேன்.


Comments

  1. என்ன சொல்வதெனத் தெரியவில்லை!
    விதியின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட ஆசிரியர்!
    மனம் வலிக்கிறது.

    மௌனமாக உங்கள் துயரில்
    நானும் இணைந்து கொள்கிறேன்!...
    அவரின் ஆன்ம சாந்திக்காக என இரங்கல்கள்!..

    ReplyDelete
  2. சார் போலச் சிலர்தான் தாமிருந்த இடத்தை யாரும்
    நிரப்ப முடியாத வெற்றிடமாக
    விட்டுச் செல்கிறார்கள்

    அவரின் ஆன்மாக சாந்தியடைய
    பிராத்திப்போமாக

    ReplyDelete
  3. உங்கள் கூற்றில் சற்றும் மிகையில்லை மது. அவருடன் சுமார் 15ஆண்டுக்கும் மேலாக இணைந்து பணிபுரிந்தவன் நான் என்னும் முறையில் உங்கள் கூற்றின் உண்மைகள் என்னையும் உலுக்குகின்றன. சற்றும் தன்னை முன்னிறுத்தாத ஆசிரியர்களுக்கு முன்னோடியான மாமனிதர் இவர். அனேகமாகப் புதுக்கோட்டையின் இந்தத் தலைமுறை மருத்துவர்கள் 90விழுக்காட்டினர் இவரது மாணவராகவே இருப்பர். (மற்றவர்கள் வெளியூரில் படித்தவராயிருப்பர்) எனக்கு ஓராண்டுக்கு முன்னால் பணிஓய்வு பெற்றவர். அமெரிக்காவில் மென்பொறியாளராக இருக்கும் மகன் வந்துவிட்டான் மருமகள் வருவதற்காகத் தனது இறுதிப் பயணத்தை நாளைவரை ஒத்திப்போட்டிருக்கிறார்..என் குடும்ப நண்பரும் கூட. பள்ளிக்கல்வித்துறை ஒரு மலர் போடுவதற்காக என்னிடம் ஒப்படைத்த போது இவரிடம் அறிவியல் சிறுகதைகள் இரண்டை வாங்கிப் போட்டேன். தொடர்ந்து இதுபோல எளிய நடையில் அறிவியல் கருத்துகளை எழுதக் கேட்டிருந்தேன். எழுதுவதாகச் சொன்னவர்.. இப்போது பாதிக்கதையோடு பயணம் முடித்துவிட்டார் என்றாலும் மறக்கமுடியாத மாமனிதர் என்பதில் ஐயமில்லை. நினைவுகூர்ந்து எழுதிய தங்களுக்கு மிக்க நன்றி மது.

    ReplyDelete
    Replies
    1. வெளியூர் சென்றிருந்த என் துணைவியார் வந்ததும், காலையில் போய் அந்த மாமனிதருக்கு இறுதி மரியாதை செலுத்தினோம். மனம் கனத்துப் போனது மது. என்ன வாழ்க்கை இது! வாழும் இந்த சொற்பக் காலத்தில்தான் எத்தனை ஈகோ..எத்தனை ஆட்டபாட்டம்..! ஒரே நொடியில் பெட்டியில் அடங்கி, “பேரினை நீக்கி, பிணமென்று பேரிட்டு”விடும் இந்த அற்ப உடலோடுதானே நாம்..!?

      Delete
  4. வணக்கம்
    அவரின் ஆத்மா சாந்தியடைய பிரத்திப்போம் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்...

    ReplyDelete
  6. மனசு கஷ்டமாகிவிட்டது....
    ஆசிரியரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்...

    ReplyDelete
  7. நல்ல மனிதநேயமுள்ள மனிதர்...

    ReplyDelete
  8. இலட்சியம் என்பது வேறு. இலக்கு என்பது வேறு.

    இலக்குக்களை எட்டியவர்கள் ஓய்வெடுத்து கொள்வார்கள்..

    ஆனால்
    இலட்சியங்களை அடைந்தவர்கள் ஓய்வெடுக்க மாட்டார்கள்..

    காரணம் இலட்சியபுருஷர்கள் ... தங்கள் இலட்சியத்தை 'வேர்'ஒருவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் செல்வார்கள்... அந்த வேராக நீங்கள் இருக்க கடவது...

    உங்கள் வருத்தத்தில் உடனிருக்க முயலும்...

    ReplyDelete

  9. தெரியாதவர்கள் இறக்கும் போது நமக்கு மனவலிகள் ஏற்படுவதில்லை. ஆனால் உங்கள் எழுத்தின் மூலம் அவரும் எனக்கு தெரிந்தவராகி அவரின் இழப்பு மனவருத்தத்தை தருகிறது.அவரின் ஆன்மாக சாந்தியடைய
    பிராத்திப்போமாக

    ReplyDelete

  10. யாரும் ஒரே அடியாக செத்துப் போவதில்லை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சாகிறார்கள். அடியேன் இன்று கொஞ்சம் இறந்து போனேன்.

    மது

    உண்மை. நெகிழ வைத்த எழுத்து.

    ReplyDelete
  11. சிலரது பிரிவு நம்மை அதிகம் பாதிப்பிக்குள்ளாக்கிவிடும் என்பது உண்மையே. நேரில் பழக்கமில்லாவிட்டாலும் தங்களது மூலமாக அறிந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  12. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  13. என்னால் முன் பின் அறியாத ஒருவர் உங்கள் பதிவு தந்த விளக்கத்தால், உருக்காத்தால் என் உள்ளத்தில் இமயமாய் உ,யர்ந்து விட்டார் அவர் ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன் வருந்தும் உங்களுக்கு என் ஆறுதல்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக