இந்தியா வரங்களும் சாபங்களும்-1


எல்லாச் சொற்களும் சொற்களல்ல. இந்தியா என்பதும் அவற்றில் ஒன்று. எத்துனை உதிரம், எவ்வளவு தியாகம், எத்துனை துரோகம் கடந்து நாம் இங்கே இருக்கிறோம்.  எவ்வளவு பெரிய கொடை இது.
நம் விடுதலைக்கு போரிட்ட முன்னோர்களின் பெயர் தெரியாத நமக்கு வெள்ளித்திரை வேதாளங்கள் தரும் மகிழ்வு மேன்மைக்குரியதா?




நமது வரங்கள் என்றால் இளைஞர்கள் நிரம்பிய சமூகம், கொஞ்சம் ஆர்வம்  இருந்தாலே எட்டிவிடும் உயரத்தில் கல்வி, பன்முகத்தன்மை, பண்டைய தத்துவ மரபு, யோகா இன்னும் நாம் மறந்து போன அத்துணைக் கலைகளுமே நமது வரங்கள்தான்.
சாபங்கள் என்றால் சாதிய அடுக்கு முறை, ஊழல், சுயநலம் என இன்னொரு பெரும்பட்டியல் நம் உள்ளத்தில் விரிகிறது.


ஏன் என்னைப்போன்றோர் மீண்டும் மீண்டும் சாதிய அடுக்குமுறையை எதிர்க்கிறோம்


இந்தியா என்றாவது ஒருநாள் முன்னேறியதாக அறியப்பட்டால் அன்று இந்தசாதிமுறை அழிந்துபோய் இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதே பொருள்.
அந்தநாள் வருமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
எப்படி நமது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தோம் என்றால் சாதி எப்படி இந்தியாவை முன்னேற விடாமல் தடுக்கிறது என்பது புரியும்.
ஒரு கிராமத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டால்கூட ஜாதிய ஆதரவு தேவை. போட்டியிடுபவர் நல்லவரா அவர் வென்றால் கிராமம் முன்னேறுமா என்பதெல்லாம் கேள்வியல்ல அவர் நம் சாதியா  என்பதே முதல்கேள்வி. இப்படி வெற்றிபெறுவோர் தான் உலகத்தின் மாபெரும் ஜனநாயகத்தின்  தூண்கள்.
ஒரு கிராம வார்டு உறுப்பினர் தேர்விலேயே  ஜனநாயகம் இந்தப்பாடுபடும்பொழுது பெரிய அளவு தேர்தல்கள் பதவிகள் குறித்து என்ன நடக்கிறது என்று பார்த்தால் தலை சுற்றும் இளைய தலைமுறைக்கு.


ஆந்திரா சீட் மர்மம்

ஒரு கட்சி தனது டெல்லித் தலைவரை, தலைவிகளை ஆந்திராவிலேயே தொடர்ந்து நிற்க வைத்தது. அவர்களும் சொல்லிவைத்துபோல் வென்றார்கள். அந்தக் கட்சியின் விசுவாசிகள் அங்கே அதிகம்பேர் இருக்கிறார்கள். பாவம் அப்பாவிகள் என்றே நினைத்துவந்தேன்.
பின்னர்தான் தெரிந்தது ஆந்திராவின் சில தொகுதிகளில் யார் அதிகம் சாரயம் கொடுக்கிறார்களோ அவர்கள் மட்டுமே வெல்ல முடியும் என்பது.
நீண்டகாலத்திற்கு நமது தேர்வுகள் இப்படிதான் இருந்தன. ஆம் ஆத்மியும், நித்திஷும் கொஞ்சம் நம்பிக்கை தருகிறார்கள்.
அகிலேஷ் தேர்வு நம்பிக்கைதந்தாலும் செயல்பாடுகள் மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறதை ஊடகங்கள் சொல்லி வருகின்றன.


தலைவர்களை நாம் குற்றம் சொல்ல தகுதியுடைவர்களா?

சத்தியமாக இல்லை என்பதே எனது பதில்.
அது விடுதலைப்போராட்டக் காலம். அவர் ஒரு விடுதலை வீரர். காந்திய வழியில் போராடினாலும் காவல்துறையின் தேடுதலில் முதல் இடத்தில் இருந்தார்.
அவர் இரவு நேரங்களில் ஒரு பள்ளியின் மொட்டை மாடியில் தூங்குவதை கண்டுபிடித்த காவல்துறை அவரைக்  கைது செய்தது.
ஒரு பெரிய சாரட் வண்டியின் படியில் கடுமையாகத் தாக்கப்பட்ட அவரைக் கிடத்தியது.  கைகளும் கால்களும் சாலையில் இழுபட வண்டியை மேலூர் தெருக்களில் ஒட்டியது.
பின்னர் விடுதலைபெற்ற இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண அமைச்சரானார் அவர்.
வைகைஅணையை கட்டும் பொறுப்பில் இருந்த அவர் அணையைக் ஆறுமாதம் முன்னேரே கட்டி முடித்துவிட்டு நேருவைப் பார்வையிட அழைத்தார்.
ஆறுமாதம் முன்னே வேலை முடிந்துவிட்டதே கூடுதலாக எவ்வளவு செலவானது என்று நேரு கேட்க மீதம் ஐம்பது லெட்சம் இருக்கு(தொகை மாறுபடலாம்) என்று நேருவிடம் ஒப்படைத்தவர்.
ஒரு வாய்ஜால வித்தையில் நாம் அவரை இழந்தோம்.
நம்மவர்கள் சுதந்திரத்தை அனுபவித்த ஜோரில் மேடையில் முழங்கிய வெற்றுக் கூச்சல்களின் பின்னே போக தேர்தலில் தோற்று விட்டார் அவர். மதுரைக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் தேர்தல் தோல்வி அவருக்குச் சொல்லப்பட ஓட்டுனரை வண்டியை நிறுத்தச் சொல்கிறார் அவர்.
பைலட் விளக்கு பொருத்தப்பட்ட அந்தக் காரில் இருந்து இறங்கி ஒரு அரசுப்பேருந்தில் பயணத்தை தொடர்கிறார்.
இப்படி ஒரு முன்மாதிரியாக வாழ்ந்த மனிதர் நமது நாட்டில் இருந்தார் என்று என்றாவது நமது குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறோமா?
கக்கன் என்கிற மனிதரின் ஜாதி நம்மை அவ்வாறு செய்ய விடவில்லை என்பதே வெட்கம்தரும் வேதனைதரும் உண்மை.
இப்படி முன்மாதிரிகளைக் கைவிட்டு “ஒரு மாதிரிகளின்" பின்னே சென்றதன் விளைவுதான் இன்றைய இந்தியா.
விடுதலைக்கு போரிட பக்கத்துவீட்டில் இருந்து ஆள் போகட்டும், நாம் கொடியேற்றும் போது மிட்டாய் வாங்கப்போவோம் என்றால் அது முறையா?
சாபங்கள் வரங்களாகும்வரை தொடரவே ஆசை
தொடர்வோம்

Comments

  1. இந்தியா வரங்களும் சாபங்களும்- ஆரம்பமே நன்றாக இருக்கிறது.அருமையான பல கேள்விகளை கேட்டு சிந்திக்க வைக்கின்றீர்....பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. இந்தியாவின் மிகப் பெரிய சாபம் சாதிதான் நண்பரே
    சாதி இரண்டொழிய வேறில்லை
    எனப் பாடும் காலம் என்று வருமோ
    இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே
    தம 1

    ReplyDelete
  3. நல்ல ஒரு தலைப்பில் விவாதம். அருமை.
    மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அருமை! கக்கன் என்ற அருமையான தலைவரைப் பற்றி இத்தனை வயதில் சில தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்! நீங்கள் சொன்ன இரண்டாவது தகவல் புதிது! இது மாதிரியான தலைவர்கள் இன்றைய இளைஞர்களிடம் பிறக்க வேண்டும். கட்டுரைத் தொடர் சிறப்பு! தொடர்கிறேன்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சமத்துவம் அமரத்துவம் அடையாது இருக்க தேவை!
    இதுபோன்ற பதிவுகள்.
    நன்றி தோழரே!
    இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. அருமையான பதிவு தோழரே! நிறைய சிந்திக்க வைக்கும் கேள்விகள்! கக்கன் அருமையான த்லைவர். அவரைப் பற்றியும் அறியப்படுத்த வேண்டும். தொடர் சிற்ப்பாக ஆரம்பித்துள்ளது. தொடர்கின்றோம்..

    ReplyDelete
  7. அருமையான பதிவு. அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. அன்புள்ள அய்யா,

    மரியாதைக்குரிய மாண்புமிகு. கக்கன் வாழ்க்கை வரலாறு மற்றும் மந்திரியாக இருந்ததை நமது நாட்டில் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியது அவசியம்.

    ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கக்கன் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். சுற்றுப்பயண நாள்களைக் கணக்கிட்டு உடைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.
    குளியலறைக்குள் சென்ற அமைச்சர் என்ன ஆனார்?
    ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அன்று உடுத்த வேண்டிய வேட்டியை எடுதது உடுத்திக்கொள்ள முற்பட்டார். கட்டிக் கொள்ள முடியாத அளவுக்குக் கிழிந்திருந்ததைக் கண்டு மனம் சலனம் அடையவில்லை. உடனே அழுக்காயிருந்த ஒரு வேட்டியை எடுத்துச் சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார்.

    குளியலறைக்குள் சென்ற அமைச்சரை வெளியில் நீண்ட நேரமாகக் காணோமே என்று காவலர்கள் கதவைத் தட்டினர். அமைச்சர் துணி துவைப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். அமைச்சரின் இந்த நிலை தெரிந்திருந்தால் பணியாளரே துவைத்துக் கொடுத்திருப்பார்.

    அல்லது அதிகாரிகளே ஒரு புதுவேட்டியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் தாமே துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டு நின்ற அமைச்சரைப்பார்த்த அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் புன்னகைத்தனர். கக்கனோ அமைச்சராக இல்லாமல் கக்கன் என்ற தனிமனிதனாக நின்று புன்னகைத்தார்.
    அந்த வேட்டி உலர்ந்த பின் உடுத்திக்கொண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார்.

    அதிசய மனிதர்.

    த.ம.6

    ReplyDelete
  9. கக்கனைப்பற்றி சொன்னமைக்காக வாழ்த்துக்கள்...நன்றி

    ReplyDelete
  10. அருமையான பதிவு! சவுக்கடி வரிகள்! தொடர் தொடரட்டும்! தொடர்வேன்.

    ReplyDelete
  11. தொடர்பதிவில் தொடர அழைக்கிறேன் http://makizhnirai.blogspot.com/2015/11/my-wish-list.html

    ReplyDelete
  12. மது சார்

    காமராஜர் , கக்கன் போன்ற பெருமைமிகு தலைவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே தொலைத்துவிட்டு சில மானமில்லா 'மாண்புமிகு ' களை தலைவர்களாக்கிக் கொண்டிருக்கிறோம் . அடிப்படை உரிமைகளைக் கூட இழந்து கொண்டிருக்கிறோம். எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லையெனினும் மீண்டும் மீண்டும் அவர்களைத்தான் தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறோம். சாதியும் மதமும் இதில் சதுரங்கம் ஆடுவது முற்றிலும் உண்மையே! சதி செய்தாவது சாதி ஒழிக்கணும் ; மனிதம் கொண்டு மதம் ஒழிக்கணும் . எப்போது...என்று...எங்கு...யாரால்?

    ReplyDelete
  13. காமராஜர், கக்கன் போன்ற சுயநலமற்ற, மனிதநேயமிக்க தலைவர்களை உருவாக்க நாம் உறுதி ஏற்போம்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக