படிப்பது பத்தாம் வகுப்பு கடன் ஐம்பதாயிரம்

செவன்த் சென்ஸ் பயிற்சிகள் 
சனிக்கிழமைகளில் பள்ளி மாணவர்களைச் சந்தித்து வாழ்வியல் திறன் பயிற்சிகளைத் தரும் செவன்த் சென்ஸ் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை கடந்த பதிவில் குறிப்பிடிருந்தேன். 

பலதரப்பட்ட மாணவர்களைச் சந்திக்கிற, ஒரு கூடுதல் புரிதலை தரும் நிகழ்வு இது. 


இன்று ஒரு அரசுப் பள்ளியில் பயிற்சி நிறைவடைந்த பின்னர் ஒரு குழு மாணவர்கள் என்னை சூழ்ந்துகொண்டு வெகு சரளமாக பேசினர். அவர்களில் உயரமாகவும் பருமனாகவும் காப்டன் விஜயகாந்த் பாணியில் தலைக்கேசத்தை அமைத்திருந்த மாணவன் ஒருவன் வெகு இயல்பாக பேசினான். 

எனக்கு ஒரு சின்ன திடுக்கிடல் கூட இருந்தது. அவன் உடலமைப்புக்கு சம்மந்தமே இல்லாமல் அவன் வெகு இயல்பாக அவன் கேட்ட கேள்விதான் காரணம். 

சார் சாக்லேட்டெல்லாம் முடிஞ்சிருச்சா ?

எவ்வித தயக்கமோ கூச்சமோ இல்லாத அவன் உயரத்திற்கு சம்மதமே இல்லாத அந்தக் கேள்வி என் கவனம் ஈர்த்தது. 

நீ பார்ட்டைமா ஏதும் வேலை பாக்கிறியா என்றேன். 

சார் இவன் பஸ்டாண்ட்ல கடலை விப்பான் சார் என்று சக மாணவர்கள் சொல்ல கொஞ்சம் வெட்கத்துடன் நெளிந்தான் அவன். 

உண்மையாடா என்றேன் நான்.

சார் கேலி பண்ணுவானுக அப்புறம் பேசலாம் என்று அவன் சொல்லவே தம்பிகளா நீங்க கெளம்புங்க என்று சொல்லிவிட்டு அவனை தனியே கடத்தினேன். 

என்னடா செய்ற. யார்கிட்ட கடலை வாங்கற எப்படி விக்கிற ?

சார் மொத்தக் கடையில வாங்கி பஸ்டாண்ட்ல விப்பேன்சார்.

எவ்வளவு கிடைக்கும். 

நூறு ரூபாய் முதல் நானுறு ரூபாய் வரை கிடைக்கும் சார். 

சரி என்ன செய்வ அந்தப் பணத்தை. 

வட்டி கட்டுவேன் சார். 

என்னடா சொல்ற என்பதற்கும் ஆசிரியர் திரு.ராஜேஷ் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. 

இவனுக்கு நிறைய கடன் இருக்கு என அவர் சொல்லவும் குழம்பிப்  போய் அவனைப் பார்த்தேன். 

சார் நான் நாலாவது படிக்கும் பொழுது அப்பா போய் சேர்ந்துவிட்டார். தங்கச்சிக்கு ரொம்ப முடியல வைத்தியத்திற்கு வாங்கியப் பணத்தை நான் தானே அடைக்கவேண்டும் என்று ரொம்ப பெரிய மனிதன்போல சொன்னான். 

அரண்டு போய் விட்டேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஐந்து ரூபாய் காயினையே உலக அதிசயம் போல பார்த்த நாட்கள் நினைவில் வர 

சரி பணத்தை என்ன செய்கிறாய்

ஒரு நாளைக்கு நூறுரூபாய் கட்டனும் சார் மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் தனியா கட்டுறேன். 

அதிர்ச்சியில் எனக்கு வார்த்தைகள் வராமல் சரி இன்னும் மூன்று மாதம் மட்டுமே பள்ளிக்கு வந்தால் பத்தாம் வகுப்பை பாஸ் பண்ணிடலாம். கொஞ்சம் பள்ளிக்கு ஒழுங்கா வா என்று சொல்லி விடைகொடுத்தேன். 

ஆசிரியர் ராஜேஷ் சொன்ன இன்னொரு விசயமும் ஹைலைட்தான். 

நம்ம கேப்டன் பள்ளிக்கு வராமலே இருந்திருக்கிறான். புதுகை பேருந்து நிலையத்தில் நிலக்கடலை விற்பதே இவர் பணி. குடும்ப சூழல் இப்படி இருந்தால் சின்னப் பையன் என்ன செய்வான். 

அப்படி ஒரு பேருந்தில் ஒவ்வொரு இருக்கையாக கடலையை விற்றுக் கொண்டு வந்தவனை பிடித்திருக்கிறார் இந்தப் பள்ளியின் ஆசிரியை திருமதி. கஸ்தூரி. 

அந்த ஆசிரியை எடுத்த முயற்சியால் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து ஒழுங்காக பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறான் கேப்டன். 

இந்த  ஒரு செயலுக்காவே அந்த ஆசிரியையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

எனது பிரார்த்தனைகளும் அவனுக்கு உண்டு. 

கல்வி மீட்கட்டும் ஒரு ஏழைச் சிறுவனை.

சந்திப்பையும் ஒரு வித்யாசமான அனுபவத்தையும் கொடுத்த செவன்த் சென்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பிரத்தியோக நன்றி. 

Comments

 1. என் பிரார்த்தனைகளும் உண்டு. நல்ல படியாக வரட்டும்.

  ReplyDelete
 2. வாழ்வியல் நிலை வருத்தத்தின் எல்லையை தொட்டு விட்டது!
  அரசு கல்வி உதவிகள் என்னாயிற்று?
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 3. இவ்வாறான ஒரு நல்ல பகிர்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பாராட்டப்படவேண்டிய மாணவர், ஆசிரியர், நிறுவனம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் முனைவரே

   Delete
 4. அன்புள்ள அய்யா,

  கப்பலைக் காப்பாற்றிய கேப்டனைப் போல அந்தச் சிறுவனைக் காப்பாற்றிய கலங்கரை விளக்கான திருமதி கஸ்தூரிக்கு ஒரு சல்யூட்.
  ஓர் ஏழை மாணவனின் வாழ்க்கை இருண்டுவிடாமல் ஒளி வீசட்டும்!

  நன்றி.
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 5. வாழ்கையை அனுமானித்தல் கலை... அதை அனுமானித்து உணர்தல் பெரும் கலை... அவன் நிச்சயம் வெற்றிபெறுவான்... ஆசிரியைக்கும் இதை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள் அய்யா...

  ReplyDelete
 6. குடும்ப கஷ்டத்தை சுமக்கும் சிறுவன்! பாராட்டப்படவேண்டியவன்! கல்வி அவனை கரை சேர்க்கட்டும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 7. புல்லரித்துவிட்டது கஸ்தூரி! அந்தப் பையனை நினைத்து. இந்தப் பையன் ஒரு உதாரணம்தான். இவனைப் போன்று பல குழந்தைகள் இருக்கின்றனர் நம் தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் அதுவும் வடக்கு மாநிலங்களில் இன்னும் அதிகம்....அந்தச் சிறுவனுக்குப் பாராட்டுகள். ஆசிரியை கஸ்தூரி அவர்களுக்கும் எங்கள் பாராட்டுகள். அந்தச் சிறுவன் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றிபெறுவான். இவனது வரிசையில் வந்தவர்கள் தானே பல அறிஞர்கள்..எங்கள் பிரார்த்தனைகளும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 8. சார்

  உங்களுக்கு ஏற்படும் அனுபவம் வியப்புக்குரியதாகவும் வித்தியாசமானதாகவும் இருப்பது கண்டு வியக்கிறேன். மனிதர்களில் சில மாணிக்கங்களை நீங்கள் சந்தித்து உரையாடுவது நெகிழ்ச்சிக்குரியது. பொறுப்புள்ள மாணவர் ஆசிரியர் இருவருக்கும் எனது பாராட்டுகள். பலவித நிகழ்வுகளை எடுத்துக் கொடுத்து வாசிக்கும் எங்களுக்கும் சில நேரம் பாடம் நடத்தி விடுகிறீர்கள் . உங்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. அந்த மாணவனது பொறுப்புணர்ச்சி வியப்படைய வைக்கிறது. நல்ல கல்வி கிடைத்து விட்டால் நிச்சயமாக நல்ல நிலைக்கு வருவான். உங்களைப் போன்ற் நல்ல ஆசிரியர்கள் கிடைத்தது அவனது அதிர்ஷ்டம் வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

வருக வருக