இடரில் எழுந்த நம்பிக்கை சுடர்கள் 1

மாமழை நினைவுகள் ...

ஒருபுறம் வெள்ளம்  இரண்டு  தவணைகளில்  சென்னையை பிணக்காடாக  மாற்றிக்கொண்டிருந்த அதே வேளையில் முகநூலில் எழுந்த நம்பிக்கை  ஒளிகள் வெள்ளதைவிட  அதிவேகமாக  செயல்பட்டார்கள்..

உதவவேண்டிய அனைவரும் தற்காலிகமாக  காணமல் போன பொழுது, களம் இறங்கியது  இளம் இதயங்கள் ...

ஒருபுறம் வெள்ளம் சென்னையை தின்று தீர்த்துக் கொண்டிருக்க மறுபுறம் இப்படை களப்பணியை கடும் வெள்ளத்தின் இடையே ஆரம்பிதுவிட்டது...

இடரில் உங்களுடன் இருப்போம் என பேரொளி வெள்ளத்தில் மேடையில் முழங்கிய அனைவரும் வெறும் அம்மாவசை இருளாக மறைந்துபோக...

எழுந்தன  நம்பிக்கை சுடர்கள்... இணயதளத்தில் இருந்தும், கட்செவியில் இருந்தும் முகநூலில்  இருந்தும்

தமிழகம் முன்னெப்போதும் இல்லாத மற்றோர் பேரெழுச்சியை  கண்டது...

மீட்பர்கள்  வந்தார்கள்  சுழல் விளக்குகள் பொருத்தப்பட்ட  கார்களில் அல்ல  நமது எதிர்வீட்டில்  இருந்தும் பக்கத்துவீட்டில்  இருந்தும்..

மீட்பர்கள் வந்தார்கள் இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன சொகுசுக் கார்களில் அல்ல

அண்டை வீடுகளில் அதுவரை முகம் தெரியாது இருந்தவர்கள் ...

அப்படி வந்த  ஒவ்வொருவரையும் நான் பதிவு செய்வது அவசியம் என்று நினைக்கிறன் ...

சக பதிவர்களும் இதை செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம்..

இந்தப்  பதிவில் நண்பர் நந்தனின்  பதிவு  ஒன்று

புழல் அகதிகள் முகாம் நிலை பற்றிப் படித்ததும் பதறிப் போனேன்..
வெள்ள நிவாரணப் பணிகளில் நெருங்கிய நண்பர்களிடம் மட்டும்தான் பண உதவிகள் கேட்டேன்.. பொதுவாக பணத்தை இந்த அக்கவுண்ட்டில் போடுங்கள் என சொல்வதிலேயே சில சிக்கல்கள் உள்ளன.. நம் மீது குற்றம் சுமத்த சில அறிவற்ற அறிவு ஜீவிகள் தயாராக இருப்பதால் எதைச் செய்தாலும் அதை கவனமாகவே செய்ய வேண்டி இருந்தது..

எம்ஜியார் நகர் சூளைப்பள்ளம் மக்களுக்கு உதவ உடனடியாக பணம் கொடுத்தாலும் கொஞ்சம் பாய்களும் போர்வைகளும் சேகரித்துக் கொடுக்க வேண்டியது அவசியம் என்று எனது நண்பர்களுக்கு போன் செய்தேன்..
நண்பர்கள் என்றால் எனது வாழ்வின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள்.. அதில் சில நண்பர்கள் நான் உதவி கேட்டபோது செய்கிறேன் என்றவர்கள் பின்னர் போனை எடுக்கவில்லை..

நண்பனும் மைத்துனனுமான ஹரியை சின்னமனூர்ப் பக்கம் நான் உதவி கேட்டிருந்த நண்பர்களிடம் பணம் வசூல் செய்யச் சொன்னேன்..

அனுமந்தன்பட்டி கிருஷ்ணனும் ஜெகனும் சேர்ந்து ஆயிரம் ரூபாயும், ஹரியின் தரப்பில் இரண்டாயிரமும் நண்பனும் பாளையம் கல்லூரி பேராசிரியனுமான ரமணன் தரப்பில் இருந்து இரண்டாயிரமும்தான் சேர்ந்தது.. தேவைப் பட்டதோ பதினேழாயிரம் ரூபாய்..

தம்பி மதுவிடம் கேட்டேன்.. பாக்கிப் பணம் எவ்வளவோ அத்தனையையும் நான் தந்து விடுகிறேன் என்றான்.. சொன்னபடி கொடுக்கவும் செய்தான்.. ஈரோடு நண்பர் சமர் சென்னிமலையில் இருந்து தரமான போர்வைகளை வாங்கி அனுப்பி இருக்கிறார். இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் அற்புதமான சேவை செய்து வரும் புரஃபஷனல் கூரியர் மூலம் அவை நாளை வந்து சேர்ந்து விடும்.. அவை சூளைப்பள்ளம் மக்களையும் சேர்ந்து விடும்..

தவிர நண்பர் ஒருவர் புழல் அகதிகள் முகாமின் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வருகிறார்கள் என்று பதிவிட்டிருந்தார்.. தவித்துப் போய் அதற்காக நண்பர்களிடம் உதவி கோரத் துவங்கினேன்.. வழக்கம்போல தம்பி மதுதான் பேருதவி செய்தான்.. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தருவதாகச் சொன்னான்.. தோழர் தமிழச்சி தங்கப் பாண்டியனும் தானும் உதவுவதாக சொல்லி இருந்தார்.. என் நண்பரும் திரைக்கதை ஆசிரியருமான அமிர்தராஜ் அவர் வாழ்வின் துயரான சம்பவங்களுக்கிடையும் தான் தருவதாக சொன்ன நூறு கிலோ அரிசியை வாங்கி அனுப்பினார்..


நண்பன் ஹரிதான் புழல் பகுதியில் ஒரு நண்பரை ஒருங்கிணைப்புக்கு அறிமுப் படுத்தி வைத்தான். அந்த சுந்தர மூர்த்தியிடம் பேசியபோது புழல் பகுதி முகாமில் நுற்றுத் தொண்ணூறு ஈழ அகதிகள் இருக்கிறார்கள் என்றார்.. தம்பி மதுவின் அலுவலகத்தில்தான் எல்லா நிவாரணப் பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தோம்.. அங்கே போய் பார்த்து மிச்சம் குடும்பங்களுக்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று கணக்கெடுத்தோம்..


தோம் என்று நான் சொல்வது தம்பி ஜஸ்டினை.. நேர்ப் பழக்கத்தைத் தாண்டி ஒருவனிடம் உதவிக்கு வாடா என்று உரிமையோடு அழைத்தது அவனைத்தான்.. தோழர் ஹேமாவதி ஹேம்ஸ் வட சென்னையில் செய்த நிவாரணங்களுக்கும் கூட அவனும் அவனது நண்பர்ளும்தான் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்திருந்தார்கள்..


கொடுத்தது போதாதென்று நானும் அவனை டார்ச்சர் செய்திருந்தேன்..


மதுவின் உதவி தவிர எவ்வளவு தேவைப்படும் என்று நானும் ஜஸ்டினும் கணக்கிட்டோம்.. வந்திருக்கிற அரிசியை 190 குடும்பங்களுக்கு இரண்டிரண்டு கிலோவாக பகிர்ந்தால் கூட இன்னும் 75 கிலோ அரிசி எக்ஸ்ட்ராவாக தேவைப்பட்டது.. அது தவிர்த்து மொத்த குடும்பங்களுக்கும் தேவையான மளிகைப் பொருட்கள்..


டக்கென்று மளிகைப் பொருட்களுக்கு எவ்வளவு ஆகும் என்று உத்தேசமாக கணக்கிட்டோம்.. கிட்டத்தட்ட அறுபத்தாறாயிரம் தேவைப்படும் என்று கணக்கு செய்தோம்.. ஜஸ்டினின் நண்பர் குழு தந்திருந்த பணம் கொஞ்சம் இருந்தது..(கிட்டத்தட்ட முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல்).. நான் மீனாளின் கார்டில் இருந்த பணத்தை தேய்த்துக கொடுத்தேன்.,


மளிகைககள் வாங்க அதே கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த எம்என்சி என்ற மொத்த விலைக் கடைக்குப் போனோம்.. அவர்கள் வெள்ள நிவாரணம் என்றதும் 190 பாக்கெட்டுகளில் தனித்தனியாக மளிகைப் பொருட்களைப் போட்டுக் கொடுக்கிறோம் என்று தாமாக முன் வந்தார்கள். அது 48600 ரூபாய் ஆனது. அதற்கு மேல் 3030 க்கு எழுபத்தைந்து கிலோ அரிசியும் வாங்கிக் கொண்டு மதுவின் அலுவலகத்துக்கு வந்தோம்.


கோயம்பேட்டில் அது பிசியான அலுவலகம்.. என்ன நடந்தால் எனக்கென்ன என்பது போல நாங்கள் அங்கேயே உட்கார்ந்து அரிசியை மட்டும் இரண்டிரண்டு கிலோவாக பைகளில் பிரித்துப் போட ஆரம்பித்தோம்..

இதற்கிடையில் அமிர்தராஜ் தான் வாங்கிக் கொடுப்பதாக சொன்ன நூறு கிலோ அரிசியையும் அனுப்பி விடுவதாக கால் செய்து சொன்னார். எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு சீன் எழுதித்தரச் சொல்லி அழைப்பு வந்தததால் ஜஸ்டினையும் செந்திலையும் பாக்கெட்டுகள் போடச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டேன்.. வீட்டில் உட்கார்ந்து எழுதி முடிக்கும்போதே மீனாள் ஒரு மாதத்துக்குப் பின் பள்ளிக்குப் போய்விட்டு வீடு திரும்பிவிட்டார்.. சாப்பிட்டுவிட்டுப் போ என்றுஅவர் வற்புறுத்தியதில் கட்டளையை மீற முடியாமல் நான் சாப்பிட்டுவிட்டு மதுவின் அலுவலகத்துக்குப் போனேன்..

ஜஸ்டினும் செந்திலுமாக 190 அரிசிப் பொட்டலங்களை அதற்குள் தயார் செய்திருந்தார்கள். மளிகைக் கடையில் கொஞ்சம் லேட்டானது..

இதற்கிடையில் தோழர் தமிழச்சி தங்கப் பாண்டியன் புழல் முகாமுக்குப் போகும்போது நானும் வருகிறேன் என்று சொல்லி இருந்தார். அவருக்கு போன் செய்ய முயற்சி செய்தால் லைன் கிடைக்கவில்லை.. ஒரு வழியாக லைன் கிடைத்து மூன்று மணிக்கு புழலில் சந்திப்போம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டோம்..

மளிகைக் கடை பொருட்களும் தயாராகி எங்களது பேக்கிங்கும் முடியவே மணி இரண்டே முக்காலாகிவிட்டது. மதுவின் கடையில் இருந்த இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரு குட்டி யானை தயார் செய்யும்படியும் அதற்கு நாங்கள் பணம் கொடுதுது விடுகிறோம் என்றும் சொன்னேன்.. இதுக்கு நீங்க பணம் குடுக்க வேண்டாம் சார்.. நாங்களே ஏற்பாடு செய்து குடுக்குறோம் என்று அவர்கள் சார்பில் புழலுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல குட்டியானை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்..

அனைத்துப் பொருட்களையும் பேக் செய்து முடித்துவிட்டுப் பார்தால் ஜஸ்டினும் செந்திலும் அது வரை சாப்பிடவே இல்லை.. டேய் தம்பிகளா.. சாப்பிட்டுட்டுப் போலம்டா என்று சொன்னால் அட.. அதை அப்புறம் பாத்துக்கலம்ண்ணே என்றான் ஜஸ்டின்.. அவன் பட்டினியில் இன்பம் காண்பவன்,. தம்பி செந்திலின் முகம்தான் குறாவிப் போயிருந்தது..

ஒரு வழியாக அனைத்தையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட மூன்று மணி ஆகிவிட்டது. அதற்குள் தமிழச்சி தங்கப்பாண்டியன் நாங்கள் புழலுக்கு வந்து விட்டோம்.. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று போன் செய்து விட்டார்..
தலைவி.. இப்பதான் கிளம்புறோம். கொஞ்சம் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்..

போகும் வழியிலேயே சுந்தர மூர்த்திக்கு போன் செய்ய, அவர் புழல் அகதிகள் முகாமின் தலைவரான ராஜாவின் எண்ணை அனுப்பி அவருடன் பேசிக் கொள்ளுங்கள் என்று எங்களது வேலையை எளிதாக்கினார்..

மூன்று மணிக்கு புழல் வந்திருந்த தமிழச்சி தோழர் எங்களுக்காக பொறுமையாக நான்கு மணி வரை காத்திருந்தார்.. பெண்களுக்குதான் கண்ணைப் பார்த்து பசியறிய இயலும்.. எனக்கு முன்னாலேயே தமிழச்சியைப் பார்க்க ஜஸ்டினைப் போகச் சொன்னேன்.. அவனது கண்ணைப் பார்த்ததும் பசியைக் கண்டு பிடித்துவிட்டார் தோழர்..

கையோடு கொண்டு வந்திருந்த சுண்டலை உடனடியாக அவன் உண்ணக் கொடுத்தார்.. பல குழப்பங்களுக்குப் பின்னர் நானும் பொருட்களை ஏற்றி வந்த லாரிக்காரரும் அங்கே சென்று சேரும்போது காலையிலிருந்து பட்டினி கிடந்த ஜஸ்டின் சுண்டலைத் தின்று கொண்டிருந்தான்..

என்னை வண்டியில் வைத்து ஓட்டிக் கொண்டு போன செந்திலும் அவன் பங்கைப் பறித்துத் தின்றான்..

அங்கிருந்து அகதிகள் முகாமுக்குப் போனோம்..

துன்பத்தில் உழல்பவனின் சாதியையோ மதத்தையோ அவன் சார்ந்திருக்கும் கருத்தையோ பார்க்கவே கூடாது என்றுதான் மானுடம் நமக்கு கற்பித்திருக்கிறது..

நாங்கள் அங்கு சென்றபோது முகாம் தலைவர் ராஜா காத்திருந்தார்... நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு எனும்போது அங்கே பொருட்களை வாங்க ஒரு முட்டல் மோதல் நடக்கும் என்றே எதிர்பார்த்துப் போனோம்..

அங்கே ஒரு போராட்டமும் இல்லை.. கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பொறுமையாக எங்கள் நிவாரணப் பொருட்களை இறக்கி வைத்தார்கள்..

தனது காரில் தமிழச்சி தோழரும் அளவற்ற நிவாரணப் பொருட்களை கொண்டு வந்திருந்தார் என்பதும் அப்போதுதான் தெரிந்தது..

எங்களது நிவாரணப் பொருட்களையும் தோழரின் நிவாரணப் பொருட்களையும் அந்த தம்பிகள் எந்த பதற்றமும்இல்லாமல் இறக்கி வைத்தார்கள்,. மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 360 என்று ராஜா சொன்னார்.. வெறும் 190 குடும்பங்களுக்கு மட்டும் உதவி கொண்டு சென்ற எங்களது அறியாமையை நினைத்து நான் திகைத்தபோது ராஜா சொன்னார், வச்சிட்டுப் போங்க சார்.. நாங்க பகிர்ந்துக்குவோம்.. என்று..

அவர்களது நடவடிக்கையிலேயே அந்த ஒழுங்கு தெரிந்தது..

எங்களுக்கு பவண்டோ கொடுத்தார்கள். எனக்கு கட்டன்சாயா கொடுத்தார்கள்..
அதைக் குடித்து விட்டு திருப்தியாக வீடு திரும்புகையில் மாலை ஆறரை ஆகிவிட்டிருந்தது..

Comments

 1. உங்களுக்கு இப்படிபட்ட நண்பர்கள் கிடைத்திருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்

  ReplyDelete
 2. தமிழகத்தில் வந்த வெள்ளம் மக்கள் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலரின் மனதுள் ஈரம் இன்னும் இருக்கிறது அதில் நல்ல எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது அது வளர்ந்து நல்ல மாற்றத்தை த்ரும் என நம்புகிறேன்

  ReplyDelete
 3. மக்கள் மனத்துக்குள் உறைந்து கிடந்த மனிதப்பண்புகளை இந்த வெள்ளம் வெளிக்கொணர்ந்திருக்கிறது. சில சாக்கடைகளையும் தெருநீரில் கலந்துவிட்டதும்தான்... நல்ல பதிவு மது, நன்றி.

  ReplyDelete
 4. உதவவேண்டிய அனைவரும் தற்காலிகமாக காணமல் போன பொழுது, // இவங்க என்னைக்குமே நம்ம சினிமால க்ளைமாக்ஸ்ல வர போலீஸ் மாதிரிதானே வருவாங்க. போஸ் கொடுத்துட்டுப் போவாங்க...ஹான் ஒண்ணு மறந்துட்டோம் ஸ்டிக்கட் படத்தோட...

  நம் இதயங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் அற்ற களப்பணி. இராணுவமே வியந்து நின்றது. உலகமே வியந்து நிற்கின்றது தமிழகத்தின் மனிதத்தைப் பார்த்து.

  அருமையான பதிவு தோழரே..அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்.

  ReplyDelete
 5. தங்கள் பணியைப் பாராட்டி வாழ்த்துகிறேன் பங்கள் போன்றவர்களால் மனித நேயம் இன்னும்ங வாழ்கிறது!

  ReplyDelete
 6. வணக்கம்

  இப்படியான காலத்தில் செய்யும் நன்றியை மறக்க முடியாது... பதிவை படித்து மகிழ்ந்தேன் மக்களின் மனோநிலையை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. அன்புள்ள அய்யா,

  தன்னார்வத் தொண்டுள்ளங்கள் நாட்டில் நிரம்ப இருப்பதைக் கண்டு நெஞ்சம் மகிழ்ச்சி கொள்கிறது.
  நம் நாடு முழுக்க பாதித்தவர்களுக்கு உடனே உதவும் உள்ளங்கள் நேசக்கரம் நீட்டியதைக் கண்டு மனிதம் இன்னும் மடியவில்லை என்பது நிருபணமாகி இருக்கிறது.

  வலைத்தளங்களின் அன்பு வளையத்தில் அநேக நன்மைகள் நடந்ததை எண்ணி வியந்து போகிறேன்.

  உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

  த.ம. 5

  ReplyDelete
 8. மானுடம் தழைக்க மகத்தான சேவை செய்தீர்கள் தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
  இறையாசி என்றும் உங்களைச் சேரட்டும் வாழ்க வளமுடன்
  தம +1

  ReplyDelete
 9. நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. ம் அவர்கள் அனுபவம் அருமை ....

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 12. மனம் நெகிழ்கிறது. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 13. தங்கள் பணி பாராட்டுக்குரியது.
  இறைவன் அருளால் தாங்கள் நீடூழி வாழ்வீர்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 14. நெஞ்சை விறைக்கச் செய்யும் விபரங்கள். மனிதம் இன்னும் நடமாடுகிறது என்பது கொஞ்சம் நிம்மதி தருகிறது.
  அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 15. சார்

  எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்ற மழை வெள்ளம் அன்பு , கருணை , தயை , இரக்கம் போன்ற நல்ல பண்புகளை அடித்துக் கொண்டு செல்ல முடியவில்லை . உங்களைப் போன்றாலும் உங்கள் நண்பர்களைப் போன்றோராலும் அவையெல்லாம் விதைக்கப்பட்டன . உங்களுக்கு எனது சல்யூட் !

  ReplyDelete

Post a Comment

வருக வருக