பாய்ன்ட் பிரேக் 2015

சில ஆங்கிலத் திரைப்படங்கள் வழக்கமான மசாலாவை கொஞ்சம்

வித்தியாசமாக கொடுத்து பாக்ஸ் ஆபிசை பிரிக்கும். அந்த வரிசையில் தற்போதைய ஆக்சன் திரில்லர் பாய்ன்ட் பிரேக். 

எரிக்சன் கோர் இயக்கத்தில் வந்திருக்கும் படம் நம்மை வாழவைக்கும் புவிக்  கிரகத்தை கொண்டாடுங்கள் என்று சொல்லும் ஒன்லைனை  வைத்துக்கொண்டு ஆக்சன் அதிரடி சரவெடியை வெடித்திருக்கிறது. 


படத்தின் முக்கியமான காட்சி ஒன்று மும்பையில் படமாக்கப்பட்டதாக சொல்வது  இந்திய பார்வையாளர்களை ஈர்க்க கதை இலாக்காவின் இன்னொரு யுக்தி. தற்போது வெளிவரும் பெரும் படங்களில் பல மும்பையை அல்லது டெல்லியை படத்தில் சில காட்சிகளிலாவது கொண்டுவருவதும் இதற்காகத்தானே. 

எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் வீரன் யூடா தனது சாகசம் ஒன்றில் தனது நண்பன் ஜெஃப் இறந்துபோக எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸுக்கு குட்பை சொல்லி பாதியில் விட்ட படிப்பைத் தொடர்ந்து எப்.பி.ஐயில் இணைகிறான். 

இவன் சேர்ந்த நேரம் வித்யாசமான குற்றங்கள் பூமியின் பல்வேறு பாகங்களில் நடக்க ஆரம்பிக்கிறது. மும்பை கட்டிடம் ஒன்றின் நூறாவது மாடியில் இருந்து ஒரு சுரங்கத்தின் மொத்த வைரத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து பைக்கில் குதித்து பாரசூட்டில் பறந்து கொள்ளையடித்த வைரத்தை மும்பை சேரிப்பகுதியில் வீசிவிட்டு மறைகிறது ஒரு குழு. 

இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று மண்டையப் பிய்த்துக் கொள்கிறது எப்.பி.ஐ. 

யூடா ஒசாகி எய்ட் குறித்து விளக்குகிறான். 

ஒசாகி (கற்பனைதான்) என்னும் பாலி அத்லீட் இயற்கையை கொண்டாட வேண்டும் என்று சொல்லும் ஒரு பசுமைப் போராளி. மலையேற்றம், சறுக்குதல், அலைச்சறுக்கு என பல்வேறு சவால்களை பட்டியலிட்டு அதில் எட்டு சாதனைகளைச் செய்யும் ஒருவன் பேரமைதியை அடைவான் என்று சொல்கிறார். 

இதைதான் இந்தக் குழு செய்வதாக சொல்கிறான் யூடா. ஆனால் எப்.பி.ஐ இவனை நம்ப மறுக்கிறது. ஆனால் இவனது மேலதிகாரி இவனை பிரான்ஸுக்கு அனுப்ப சம்மதிக்கிறார். 

இயற்கையின்  நிகழ்தகவில் எழும் பெரும் அலை ஒன்றினில் சருக்குவதே நான்காம் நிலை. மிகச் சரியாக யூடாவும் அந்த பேரலையில் சறுக்க ஆரம்பிக்கிறான் யூடா. ஆனால் மயங்கி சரிகிறான், இவனை மீட்கிறான் சக சறுக்கல் வீரன். 

கண்விழிக்கும் யூடா ஒரு சொகுசு கப்பலில் இருக்கிறான். கப்பல் நிறைய சாகச வீரர்கள். யூடா சம்சாரா என்கிற பெண்ணை சந்திக்கிறான். 

இப்படியே தொடரும் பயணத்தில் யூடா அந்தக் குழுவின் பல்வேறு சாகசங்களில் தானும் ஒருவனாக பங்கேற்கிறான். ஒசாகி எய்டில் நான்கை முடித்த குழுவில் சிலர் அந்த முயற்சியில் இறக்கிறார்கள். இதை குறித்த எவ்வித உறுத்தலும் இல்லாமல் போடி சாகசங்களை தொடர்கிறான். 

ஒவ்வொரு சாதனைக்கும் ஒரு விசயத்தை புவிக்குத் திருப்பித் தருகிறது குழு. அப்படி பெரும் மலை ஒன்றை தகர்த்து சில ட்ரக்குகளில் இருந்த தங்கத்தை மீண்டும் சுரங்கதிற்கே அனுப்பி வைக்கிறது குழு. 

இம்முயற்சியின் பொழுது தன்னை ஒரு எப்.பி.ஐ ஏஜன்ட் என்று வெளிப்படுத்திக் கொள்கிறான் யூடா. 

பல்வேறு தடைகளைத் தாண்டி தான் அடைய விரும்பிய அனுபவிக்க விரும்பிய பேருண்மையை நோக்கி உறுதியாக முன்னேறுகிறான் போடி. அவனைக் கைது செய்ய விழைகிறான் யூடா. கண்ணாமூச்சி தொடர்கிறது. 

படம் ஏன் பார்க்க வேண்டிய படம் ?

படம் தொழில்நுட்ப ரீதியில் சில சிகரங்களை தொட்டிருப்பதால் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக மாறியிருக்கிறது. 

திரி டியில் வந்திருப்பதால் பல காட்சிகள் செமையான அனுபவத்தை தருகின்றன. 

திரையில் தெறிக்கும் நீர்த்திவலைகள் சமயத்தில் நம்மைத் திடுக்கிடச் செய்கின்றன. 

அதேபோல் பிரேமுக்கு வெளியில் இருந்து உள்ளே நீந்தும் மீன் ஒன்று அற்புதமான காட்சி அனுபவத்தை தருகிறது. முப்பரிமானத்தில் எப்போவும் திரையில் மையத்தில் இருந்து மூக்கிற்கு நேராக நீளும் குத்தீட்டிகள், வாள்கள் போன்றவற்றில் இருந்து வேறுபட்டு முற்றாக ஒரு தலைகீழ் அனுபவத்தை தருகிறது. (நீந்தும் மீன்குஞ்சு நேராக காதலர்களுக்கு நடுவே போவதைப் பார்த்துவிட்டு மாப்பு உனக்கு ஏன் இந்தக் காட்சி பிடித்திருகிறது என்று மதுரைத் தமிழன் சொல்லாதவரை அடியேன் சேப்தான்)

முப்பரிமாணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு நமது ஒளி ஓவியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. சாகசக் காட்சிகளில் சில நம்ப முடியாத காமிக்ஸ் காட்சிகளைப் போல இருந்தாலும் கைத்தட்டல் அள்ளுகின்றன. அப்படியே தட்டாத சிலரும் ஏஞ்சல் பால்சில் இருந்து பொடியுடன் யூட்டா  குதிக்கும் அந்தக் காட்சிக்கு தன்னை மறந்து கைதட்டுவதைப் பார்த்தேன். 

பார்க்க விரும்புவோர் கட்டாயம் 3டி யில் பாருங்கள்.
சில முத்தக்காட்சிகள் இல்லை எனில் குடும்பத்தோடு பார்க்கலாம். 

பறக்கும் பணத்தாள்கள் இடையே நீங்களும் குதிப்பீர்கள், ஆல்ப்ஸ் மலையில் இருந்து விங்க்சூட்டில் பறப்பீர்கள். உங்களின் வேகம் கீழே புல்லில் பதியும். நல்லதோர் சர்ரியல் அனுபவம். 

ஏற்கனவே எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஐ மையமாக வைத்து ட்ரிப்பில் எக்ஸ் சீரிஸ் வந்திருந்தாலும் இது இன்னொரு ஜானர். கட்டாயம் பார்க்கலாம். 

ஜங்கி எக்ஸ்.எல் இசை உங்கள் காதுகளில் வெகு நேரம் ஒலிக்கும். 

அன்பன் 
மது 

Comments

 1. விரிவான விமர்சனம் தோழரே... எனது பதிவைக்குறித்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 2. அருமையான விமர்சனம்
  அவசியம் பார்க்கிறேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 3. ரசித்து பார்த்திருக்கிறீர்கள்.சிறப்பான விமர்சனம்

  ReplyDelete
 4. உங்கள் ரசிப்பு அழகாகத் தெரிகிறது விமர்சனத்தில்!

  ReplyDelete
 5. நிச்சயமாகப் பார்க்கணும். நல்ல ரசனையான விமர்சனம் தோழரே! நன்றி. ஏற்கனவே லிஸ்டில் இருக்கிறது..உங்கள் விமர்சனம் அதற்கு வலு சேர்த்துவிட்டது..

  கீதா: நான் இங்கு சென்னையில் சர்வதேச திரைப்படவிழாவில் அருமையான படங்கள் பார்த்தேன். வித்தியாசமான கதைகள், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள், சிறு ப்ளாட் கூட அருமையான திரைப்படமாக விரிய முடியும் மட்டுமின்றி நம்மையும் கட்டிப் போடும் என்று வியக்கவைத்த படங்கள் இப்படி...இந்தப் படமும் பார்க்க வேண்டும்....விரைவில்...விமர்சனம் அருமை..

  ReplyDelete
 6. பார்க்க வேண்டும்

  ReplyDelete
 7. பொங்கல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. உங்கள் விமர்சனம் வாசித்த பிறகு படம் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டு சில படங்கள் பார்த்திருக்கிறேன். இதையும் பார்ப்பேன்.

  ReplyDelete
 10. விமர்சனம் நன்று.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக