அசத்தும் அரசுப் பள்ளி, அசத்தல் ஆங்கில ஆசிரியர்

பொதுஅறிவுப்  புதையல் நூல்  வெளியீடு (நடுவில் லைட் புளு கட்டம் போட்ட  சட்டையில் உள்ளவர் பிளஸ் டு மாணவர் அல்ல, சார் ஆட்சியர் அம்ரீத் இ.ஆ.பா!)


அரிமளம் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆங்கில இலக்கிய மன்றத்தின் ஆண்டுவிழாவிற்கு சென்றுவந்தேன்.அரிமளம் பள்ளியில் ஆண்டுதோறும் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடந்தாலும் இதுவே நான் பங்கு பெரும் முதல் நிகழ்வு.

பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர் திரு Antony Pudugai (முக நூல் இணைப்பு) அவர்கள் மாநிலத்தின் ஆகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் என்பது மாவட்டம் அறிந்த விசயம்.


இவர் இருக்கும் இடத்தில் நம்ம படம் ஓடாது என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே கடந்தமுறை அழைத்த போது நான் போகவில்லை. இதன் விளைவை ஒருமுறை நினைத்துக்கொண்டேன். இந்த முறையும் மறுத்தால் மனிதர் என்ன செய்வார் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

ஊமைக்குத்து என்பார்களே அதுதான். அதேதான்!

ஏற்கனவே ஒருமுறை இந்தப்பள்ளி மாணவர்கள் வெகு இயல்பாக ஆங்கில தினசரி வாசிப்பதை பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்திருந்தேன்.

ஆங்கிலம் சொல்லித்தர ஆங்கிலப் பள்ளிகள் இருக்கும் பொழுது அரசுப் பள்ளியில் எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் என நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்றே நினைக்கிறன்.

பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் பேசி அசத்தினார்கள். சிறப்பு விருந்தினராக மாவட்டத்தின் சார் ஆட்சியர் திரு. அம்ரீத் இ.ஆ.ப., அவர்கள் வந்திருந்தார்கள்.
திருச்சியிலிருந்து ஆங்கிலப்பேராசிரியை திருமிகு. இருதய புஷ்பம் அவர்களும் வந்திருந்தார்கள்.

நிகழ்வின் முன்னிலையாக முன்னோடி ஆசிரியரும் அறந்தைக்கல்வி மாவட்ட அதிகாரியுமான அய்யா. சண்முகம் அவர்கள் செயல்பட்டு நிகழ்வை செம்மையாக எடுத்துச் சென்றார்கள். அரிமளம் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவர்தான் என்பதால் நிகழ்வை அவப்போது வழிநடத்தவும் செய்தார்.


மாணவர்கள் உரைகள் அசத்தின. உச்சரிப்பும் செழுமையும் தன்னபிக்கையோடு அவர்கள் ஆங்கிலம் பேசியதும் நடப்பது உண்மையில் நிஜமா என்கிற சந்தேகத்தை தந்தது.


மாணவர்களின் அசத்தலான உரைக்குப் பின்னே பேச எழுந்த சார் ஆட்சியர் அம்ரீத் நான் தமிழில் பேசுகிறேன் என்றபோது எழுந்த கைதட்டல் பேரொலி அடங்க நீண்ட நேரம் ஆனது.

பேசுவதற்கு முன்பே கைதட்டல் பெற்றுவிட்ட சார் ஆட்சியர் பல்வேறு தகவல்களை மாணவர் முன்னேற்றத்திற்கு சொல்லி விடைபெற்றார். இருபத்தி எட்டு வயதில் பல்வேறு ஆட்சிப்பணிக்குப் பின்னர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சியுற்றவர் இவர் என்று பின்னர் மாவட்டக் கல்வி அலுவலர் பேசியபொழுது எங்களுக்கு வியப்பு.


பின்னர் பேசிய பேராசிரியை அவர்கள் ஆங்கிலம் எப்படி உலகின் பயணக்கப்பலாக இருக்கிறது என அற்புதமாக விளக்கினார்.

அடுத்தது அடியேன். சில வார்த்தைகள் மட்டுமே என்றார் நெறியாள்கை செய்த மாணவி. நன்றி சொல்லி பேசி அமர்ந்தேன்.

மாணவர்கள் ஆங்கிலக் கலைநிகழ்வுகள் தொடர்ந்தன. பேசிய  அத்துணை மாணவர்களின் உச்சரிப்பிலும்  என்னால் திரு.ஆண்டனி அவர்களைக் காண முடிந்தது. இதைவிட ஹைலைட் ஆங்கில நாடங்களில் சில பாத்திரங்களில் உடல் மொழி கூட ஆண்டனி அவர்களுடைய உடல் மொழி!

ஆண்டனியின் உழைப்பின் பக்கத்தில் கூட போக முடியாதுப்பா என்று தோன்றியது.

இன்னும் சில நல்ல விசயங்கள்.

நல்ல விசயம் ஒன்று.


இந்த நிகழ்விற்காக ஆண்டுதோறும் ரூபாய் ஐம்பதாயிரம் செலவாகிறது. அவ்வளவும் திரு ஆண்டனி அவர்களின் சொந்தப் பணம்தான்.
நிகழ்வில் மாணவர்களுக்கு பொது அறிவுப்புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. பள்ளியின் அத்துணை முதுகலை ஆசிரியர்களும் தங்கள் பாடத்தில் இருந்து பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இதன்   செலவும் திரு.ஆண்டனி  அவர்களுடையதே!


சார் ஆட்சியர் திரு அம்ரீத் அவர்கள் இந்த நூலை வெளியிட்டு மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும் என்று சொன்னது கூடுதல் மகிழ்வு.


நல்ல விசயம் இரண்டு.


மதிப்பிற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகம் அவர்கள்  பேசிய பொழுது, தான்  ஐ.ஏ.எஸ். தேர்வின் முதன்நிலைத் தேர்வில் தேர்ச்சியுற்றவர் என்பதைத் தெரிவித்தார். குடும்ப சூழல் காரணமாக ஆசிரியப் பணியை விரும்பித் தேர்ந்தெடுத்து பணியாற்றுவதாகச் சொன்னபோது கரவொலி.


அவரின் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டது. இன்னும் சில நாட்களில் அறந்தை சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜநாயகம், அறந்தையில் அம்மா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை அவரது சொந்த நிதியில் இருந்து துவக்க இருக்கிறார். அறந்தை பகுதியில் இனி கூடுதலாக ஐ.ஏ.எஸ்கள் வருவார்கள் என நம்புவோம்.

எனக்கும்  ஒரு மகிழ்வு :


நீண்ட நாட்கள் கழித்து திரு.சக்திவேல் அவர்களை எதிர்பாராவிதமாக இங்கே சந்திக்க முடிந்தது. மகிழ்வான சந்திப்பு. சக்தியுடன் மாவட்ட  ஆசிரியப்  பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய நாட்கள்  நினைவில் வந்தது. பேசிக்கொண்டே இருந்தோம். எங்கே போச்சு  உன் கலர், எப்படி இவ்வளவு  ஒல்லியா  இருக்கே என்று  காலாய்த்தார்! இன்றைய தினத்தின் கூடுதல் பரிசு இது.


ஏற்கனவே செய்தித் தாள்களில் பள்ளி  குறித்து வெளிவந்துள்ள செய்திகள்


இப்படி  தனது  கைப் பணத்தை செலவிடும் திரு  ஆண்டனி பின்பற்றத் தக்க ஒரு நல்லாசிரியர்தானே?

உண்மையில் ஓர்  ஆசிரியர் தேசத்தின் மீது செய்யும் முதலீடு அல்லவா இது.

வழக்கம் போல் அசத்தல்தான் ஆண்டனி ஜி.   

Comments

 1. நல்லதோர் ஆசிரியர். அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  ReplyDelete
 2. ஆண்டனி அவர்களுக்கு பாராட்டுக்கள். அரசு தமிழ் பள்ளிகளில் ஆங்கிலம் பேசும் பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். அது மிக சாவாலானதும் கூட. வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டி சிறந்த முன்னுதாரணமாக திகழும் ஆண்டனி அவர்களைப் போல இன்னும் பல ஆசிரியர்கள் உருவாக வேண்டும்.

  ReplyDelete
 3. அரிமளம் பள்ளி மாணவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். பின்னே? திரு ஆண்டனி - மாபெரும் நல்ல ஆசிரியரை அவர்கள் பெற்றிருக்கும் போது!!! ஆண்டனி சாருக்கு எங்கள் பணிவான சிரம்தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!!

  இப்படி ஆசிரியர்கள் அமைந்துவிட்டால் அரசுப் பள்ளிகளை அடித்துக் கொள்ள முடியாது இதை இதைத்தானே விரும்புகின்றோம்.
  //ஆங்கிலம் சொல்லித்தர ஆங்கிலப் பள்ளிகள் இருக்கும் பொழுது அரசுப் பள்ளியில் எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் என நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்றே நினைக்கிறன்.// எப்படிக் கேட்போம் கஸ்தூரி? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என்பது போல் நம் விருப்பமும் இதுதானே! அப்படியிருக்க...இது முன்னுதாரணம் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் அந்த இறுதி வரியையே வழிமொழிகின்றோம்.

  அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! இது போன்று நல்ல கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைச் சொல்வதைத் தொடருங்கள் கஸ்தூரி மகிழ்வாக இருக்கும்...

  ReplyDelete

Post a Comment

வருக வருக