கிராவிட்டேசனல் வேவ்ஸ் ஆக்கம் ராஜ் சிவா


ராஜ் சிவா (முகநூல் இணைப்பு)

பலர் கேட்டுக்கொண்டதன்படி, 'ஈர்ப்பலைகள்' என்று சொல்லப்படும் 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' பற்றிய கட்டுரையை உங்களுக்குத் தருகிறேன். கட்டுரை விளக்கமாக இருக்க வேண்டுமென்பதற்காக, சற்றே நீளமாகிவிட்டது. மன்னிக்க.
-ராஜ்சிவா-ஐன்ஸ்டைன் என்னும் ஆச்சரிய மனிதன்

உங்கள் வீட்டில் பலூன் இருக்கிறதா? அப்படியென்றால் அதைக் கையிலெடுங்கள். அந்த பலூனின் இரப்பரை சதுர வடிவத்தில் வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சதுரம் இரண்டங்குல நீளம் X, இரண்டங்குல அகலம் Y இருந்தால் போதுமானது. இப்போது, அந்தச் சதுர இரப்பர் துண்டின் எதிரெதிர் பக்கங்களையும் உங்கள் வலது கையினாலும், இடது கையினாலும் பிடித்து இயன்ற மட்டும் இழுங்கள். அதாவது X அகலப் பக்கத்தை பெரிதாகும்படி முடிந்தவரை இழுங்கள். இப்போது நீங்கள் அவதானிப்பது என்ன? நீங்கள், X அகலப் பக்கத்தை இழுத்துப் பெரிதாக்கும்போது, Y பக்கத்தின் நீளம் தானாகவே சுருங்கிக் குறையும்.

“அதுசரி, இப்பொழுது எதற்கு இந்த பலூன் விளையாட்டு?”
சொல்கிறேன். அதற்கு முன்னர், நூறு வருடங்களுக்கு முன், அதாவது 1915ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டு வருவோம், வாருங்கள்.
கணித, இயற்பியல் மாமேதையான 'அல்பேர்ட் ஐன்ஸ்டைன்' (Albert Einstein) , ‘பொதுச் சார்புக் கோட்பாடு’ (General theory of Relativity) என்ற புரட்சிகரமான கோட்பாட்டை, 1915ம் ஆண்டு உலகிற்கு அறியப்படுத்தினார். அதுவரை, ‘ஈர்ப்புவிசை’ (Gravity) என்றால், ‘ஒரு பொருள் தன்னை நோக்கி மற்றப் பொருளை இழுக்கும் விசை’ என்றுதான் அறிவியல் நம்பி வந்தது. ஐசாக் நியூட்டன் தலையில் அப்பிள் பழம் விழுந்ததை வைத்து (உண்மையில் அவர் தலையில் அப்பிள் பழம் விழவில்லை), ஈர்ப்புவிசைக்கு இப்படியானதொரு அர்த்தம் கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, ‘பூமியானது தனது மையத்தில் காந்தம் போன்ற ஒன்றைக் கொண்டிருப்பதாகவும், அந்தக் காந்தம் பூமியை நோக்கிய திசையில் அனைத்துப் பொருட்களையும் இழுத்துக் கொள்கிறது’ என்றும் ஈர்ப்புவிசை புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புவிசைக்கான விளக்கம், யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டைன் கொடுத்த விளக்கத்தின்படி, பேரண்டத்தின் அமைப்புப் பற்றிய பார்வையும் மாறிப் போனது.

முன்பின், வலதுஇடது, மேலேகீழே என்று முப்பரிமாண வடிவத்தில் நம் கண்களுக்குக் காட்சியளிக்கும் பேரண்டமானது, உண்மையில் முப்பரிமாணம் கொண்டதல்ல. அது கிடையாக விரிக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான, இரப்பரினால் (Rubber) செய்யப்பட்ட பாய்போலக் காணப்படுகிறது. என்ன…, இந்த இரப்பர் பாய் 92 பில்லியன் ஒளிவருடங்கள் அளவு பரப்பளவையுடையது. கற்பனையே பண்ணமுடியாத பிரமாண்டம் அது. இந்தப் பிரமாண்டமான இரப்பர் பாயின் மேலேயே நட்சத்திரங்களும், கோள்களும், காலக்ஸிகளும், கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும் அமர்ந்திருக்கின்றன.
இப்போது நான் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். பத்து அடி விட்டமுள்ள வளையத்தின் விளிம்பில், அதே அளவுள்ள ஒரு மெல்லிய இரப்பர் விரிப்பை, நன்றாக இழுத்துக் கட்டி வையுங்கள். இப்போது அந்த இரப்பர் விரிப்பின் மேல் பாரமுள்ள இரும்புக் கோளம் ஒன்றைப் போடுங்கள். அந்தக் கோளம் வைக்கப்பட்ட இடத்தில் இரப்பர், கீழ் நோக்கி வட்டவடிவத்தில் குழிவாக அமிழ்ந்து போயிருக்கும். அந்தக் குழிவான இரப்பர் மேற்பரப்பில் ஒரு சிறிய கோலிக் குண்டைப் போட்டால், அது அந்தப் பெரிய இரும்புக் கோளம் ஏற்படுத்தியிருக்கும் குழியை நோக்கி கீழே இழுக்கப்படும். இது உங்களுக்குப் புரிகிறதா? அப்படியென்றால், இதுபோலத்தான், பாய்போல விரிந்திருக்கும் அண்டவெளியில், நட்சத்திரங்களும், கோள்களும் அதனதன் திணிவின் அளவுக்கேற்ப, அண்டவெளியைக் கீழ்நோக்கி வளைத்தபடி காணப்படுகின்றன. பூமியும் அப்படியே!


பூமியால் ஏற்படுத்தப்பட்ட அதன் குழியை நோக்கி அனைத்துப் பொருட்களும் இழுக்கப்படுவதையே ‘புவி ஈர்ப்புவிசை’ என்று ஐன்ஸ்டைன் வரையறுத்தார். அத்துடன் ஐன்ஸ்டைன் இன்னுமொரு கருத்தையும் சொன்னார். அண்டவெளியில் காணப்படும் நட்சத்திரங்களின் அதிகளவான திணிவினால் ஏற்படும் குழியின் வளைவில் ஒளிகூட வளைந்தபடியே வருகின்றது என்றார். ஆரம்பத்தில் ஐன்ஸ்டைனின் இந்த முடிவுகளை அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பின்னர் செய்யப்பட்ட பல பரிசோதனைகள், ஐன்ஸ்டைன் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நிரூபித்தது.


சூரியனுக்குப் பின்னால் மறைந்தபடி, வெகு தொலைவில் இருக்கும் சில நட்சத்திரங்கள், சூரிய கிரகணம் ஏற்படும் நாட்களில் நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. அதற்குக் காரணம் சூரியனால் ஏற்பட்ட வெளியின் வளைவில், அந்த நட்சத்திரங்களின் ஒளியும் வளைந்தபடி நம் கண்களை நோக்கி வந்ததால், நாம் அவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. இதுவே விண்வெளி வளைகிறது என்பதற்குப் போதிய சான்றாக அமைந்தது. ‘எதையும் தன் சொந்தக் கண்களால் பார்க்காமல், வெறும் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக் கணித்து, இந்த மனிதன் எப்படி இது போன்ற கோட்பாடுகளைச் சொல்கிறார்?’ என்று உலகமே வியந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதிசய மனிதராகவே ஐன்ஸ்டைன் கொண்டாடப்பட்டார். ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்னும் நம்பிக்கை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஏற்படலாயிற்று. அத்துடன், ஐன்ஸ்டைன் கூறிய இன்னுமொரு கோட்பாட்டை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதனை நிரூபிக்க முடியவில்லை. ஐன்ஸ்டைன் கூறினால் அதில் தவறே இருக்காது, என்ற நம்பிக்கையில் அதற்கான ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிள் ஈடுபடத் தொடங்கினார்கள். அதற்குப் பலன் நூறு வருடங்களின் பின்னர்தான் கிடைத்தது. கடந்த மாதம் அந்தக் கோட்பாட்டிற்கான சான்று கதவைத் தட்டியது.


அண்டவெளியானது நீளம், அகலம் கொண்ட இரண்டு பரிமாணத்தில் பாய்போன்று விரிந்திருக்கிறது. அதன் மேல் நட்சத்திரங்களும், கோள்களும், கருந்துளைகளும் காணப்படுகின்றன. இவையெல்லாம் நிலையாக அண்டவெளியில் நிற்கவில்லை. எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்றையொன்று சுற்றிக் கொண்டுமிருக்கின்றன. இவற்றின் உயரமும், அவற்றின் திணிவினால் ஏற்படும் அண்டவெளியின் குழிவும், உயரம் என்னும் மூன்றாவது பரிமாணத்தைக் கொடுக்கிறது. இந்த அண்டவெளி (Space), நேரத்துடன் (Time) இணைந்தே காணப்படும் என்று இயற்பியலாளர்கள் கருதுகிறார்கள். அதிக திணிவுள்ள கருந்துளைகள், அண்டவெளியை மிக ஆழமாக வளைத்திருப்பவை. வளைந்த இடத்தில், நேரம் மெதுவாகி, சமயத்தில் நின்றே விடுகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அண்டவெளியும், நேரமும் இணைந்து, ‘அண்டவெளி நேரம்’ (Spacetime) என்னும் கூட்டு நிலையில் காணப்படுகிறது என்கிறார்கள். மேற்படி சொன்ன மூன்று பரிமாணங்களுடன், நேரமானது நான்காவது பரிமாணமாக இங்கே இணைந்து கொள்கிறது. பரிமாணங்கள் எப்போதும் ஒன்றுக்கொன்று மிகவும் அருகிலேயே காணப்படுகின்றன.அண்டவெளியில் அநேகமான நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்களாக ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. நம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் 'அல்ஃபா செண்டாரி' (Alpha Centauri) நட்சத்திரங்களும், இரட்டை நட்சத்திரங்களே! நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சமயத்தில் மாபெரும் திணிவையும், ஈர்ப்புவிசையையும் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்களும் (Neutron Stars), கருந்துளைகளும் (Blackholes) கூட, இரட்டைப் பிள்ளைகள் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கையில், அவற்றின் ஈர்ப்புவிசையின் காரணமாக தம்மைக் கவர்ந்துகொண்டே சுற்றுகின்றன. இந்தக் கவர்ச்சி அதிகரிப்பினால், அவை ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில், தமக்கிடையேயான தூரத்தைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. எதோவொரு கட்டத்தில், இரண்டு கருந்துளைகளும் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களும் மிக அண்மையில் நெருங்கி வந்ததும் சடாரென ஒன்று சேர்ந்து, ஒரு கருந்துளையாகவோ, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாகவோ மாறிவிடுகின்றன. இரண்டும் ஒன்று சேர்வதற்கு சற்று முன்னரான நிலையில், அவை சுற்றும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும். ஒளியின் வேகத்தின் அரை மடங்குக்கு அதிகமான வேகமாகக்கூட அது இருக்கும். அந்த அதிவேகத்தினால், அண்டவெளியின் மேற்பரப்பில் அலைகள் போன்ற அதிர்வுகள் ஏற்படும். அதன்பின் இரண்டு கருந்துளைகளும் ஒன்றாகச் சேரும் கணத்தில் அதிர்வலைகள் மிக அதிகமாக வெளிப்படும். இந்த அலைகளை, 'ஈர்ப்பு அலைகள்' (Gravitational Waves) என்று ஐன்ஸ்டைன் குறிப்பிட்டார். மேற்படி, இரண்டு கருந்துளைகள் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்று சேரும்போது உருவாகும் மிகப்பெரிய ஈர்ப்பலையானது படிப்படியாக, அண்டவெளியினூடாகக் கடத்தப்பட்டு பூமிவரை வந்தடையும். தாய்லாந்தின் கடலுக்குக் கீழே பூமிப்பாறைகளின் உராய்வால் ஏற்பட்ட அதிர்வால் உருவான பேரலைகள், படிப்படியாகக் கடல்வழி நகர்ந்து, எங்கேயோ இருக்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் சுனாமியாக உருவெடுத்து அழித்து ஓய்ந்ததல்லவா. அதுபோல, அண்டவெளியில் ஏற்படும் பிரளயங்களும் ஈர்ப்பலை அதிர்வுகளாக அண்டமெங்கும் கடத்தப்படும்.


அண்டவெளியில் ஈர்ப்பலையை ஏற்படுத்த, கருந்துளைகளோ, நியூட்ரான் நட்சத்திரங்களோ மட்டும்தான் தேவையென்றில்லை. நீங்களும், நானும் எம்பிக் குதித்தாலும், அண்டவெளியின் பரப்பில் அதிர்வுண்டாகும். அந்த அதிர்வு ஈர்ப்பலைகளை உருவாக்கும். ஆனால், அவையெல்லாம் அளக்கவே முடியாத மிகமிகச் சிறிய ஈர்ப்பலைகள். இந்த ஈர்ப்பலைகளை அளக்க வேண்டுமென்றால், கருந்துளைகள் போன்ற பெரிய கடோத்கஜன்கள்தான் மோதிக்கொள்ள வேண்டும். 'ஈர்ப்பலைகள்' பற்றி ஐன்ஸ்டைன் குறிப்பிட்ட கணத்திலிருந்து, அப்படியொன்று இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது அறிவியல் உலகம். போகும் போக்கில் கோட்பாடுகளை ஒரு தீர்க்கதரிசி போலச் சொல்லிவிட்டு மறைந்து போனார் ஐன்ஸ்டைன். ஆனால அவரின் கோட்பாடுகளை நிருபித்துக் காட்டுவோமென்று பலர் களத்தில் இறங்கினர். அந்த நிலையில்தான் ரஷ்யாவைச் சேர்ந்த 'மிகைல் கேர்சென்ஸ்டைன்' (Mikhail Gertsenshtein) மற்றும் 'விளாடிஸ்லாவ் புஸ்டோவொய்ட்' (Vladislav Pustovoit) ஆகிய இருவரும் 1962ம் ஆண்டு, இந்த ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்கும் விதத்தைக் கோட்பாடாக வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு, லேசர்க் கதிர்களின் உதவியுடன் 'இண்டெர்ஃபெரோமீட்டர்' மூலமாக ஈர்ப்பலைகளை அவதானிக்கும் பரிசோதனைச் சாலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அது 'லைகோ' (LIGO - Laser Interferometer Gravitational wave Observatory) என்றழைக்கப்படுகிறது.
2002ம் ஆண்டு 'லூசியானா' மாநிலத்தில் இருக்கும் 'லிவிங்ஸ்டன்' (Livington Louisiana) நகரில், உலகிலுள்ள பல நாடுகளின் கூட்டு முயற்சியாலும், ஆயிரத்துக்கு அதிகமான ஆராய்ச்சியாளர்களுடனும், பலநூறு மில்லியன் டாலர்கள் செலவில், 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையம் 2010ம் ஆண்டுவரை எந்தவிதமான ஈர்ப்பலைகளையும் கண்டுபிடிக்கவில்லை. அதன்பின்னர் 2015ம் ஆண்டு, மிகவும் நவீனமான முறையில் புதிய ஆராய்ச்சி நிலையங்களாக 'லைகோ' மாற்றியமைக்கப்பட்டது. இம்முறை வாஷிங்டனில் உள்ள ஹான்ஃபோர்ட் ( Hanford, Washington) நகரிலும் இரண்டாவது 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு ஆராய்ச்சி நிலையங்களின் இடைவிடாத அவதானிப்புகளால், ஈர்ப்பலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.


ஒன்றுக்கொன்று 90 பாகைக் கோணத்தில் அமைந்த மிக நீண்ட இரண்டு குழாய்கள் லைகோவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை இரண்டும் சந்திக்குமிடத்தில் லேசர் கதிர்கள் செலுத்தும் கருவியும், அந்த லேசர் கருவிகள் குழாய்கள் வழியே சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் தெறிப்படைந்து மீண்டும் திரும்பி வரும்போது, அதைக் கிரகித்துக் கொள்ளும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் இரண்டும் நான்கு கிலோமீட்டர்கள் நீளத்துடன், நேர்கோட்டில் அமைந்தவை. குழாயின் வழியாகச் செலுத்தப்படும் லேசர் கதிர்கள், அந்தக் குழாய்கள் வழியாகச் சென்று, அவற்றின் முடிவில் அமைந்திருக்கும் கண்ணாடிகளில் பட்டுத் தெறித்து, அதே பாதையில் மீண்டும் திரும்பிவரும். இப்படி இரண்டு குழாய்களிலிருந்து வரும் கதிர்கள், சென்று திரும்ப எடுக்கும் நேரம் துல்லியமாகக் கணிக்கப்படும். இரண்டு குழாய்களும் ஒரே நீளமுள்ளவையாக இருப்பதால், இரண்டினூடாகவும் லேசர் கதிர்கள் சென்றுவர ஒரேயளவு நேரமே எடுக்கும். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் தேதி 9:51 மணியளவில், உலகமே அதிசயிக்கும் அந்த அறிவியல் ஆச்சரியம் நடந்தது. வாஷிங்டன் மற்றும் லூசியானா இரண்டு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்களின் கணணித் திரைகளும் ஒரே நேரத்தில் அதிர்வுகளால் துடித்தன.


லைகோவிலுள்ள லேசர் அவதானிப்புக் கணணிகளில் முதல் முறையாகச் சலனங்கள் தோன்றின. லேசர் கதிர்களின் நேர அளவுகள் இரண்டு குழாய்களிலும் சமமாக இருக்குமென்று சொன்னேனலவா? அந்த அளவுகளில் வித்தியாசம் காணப்பட்டது. ஈர்ப்பலையதிர்வுகள் அந்த இடங்களைக் கடந்து சென்றதாகக் கருவிகள் காட்டின. ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் துள்ளிக் குதித்தனர். 'நூறு வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடு உண்மையே!' என்று நிரூபனம் கிடைத்தது. ஆனால் உடனடியாக அவர்கள் அதை வெளியிடவில்லை. காரணம், அந்த அதிர்வுகள் உண்மையாகவே விண்வெளியிலிருந்துதான் வந்தனவா? அவை நிஜமான அண்டவெளி ஈர்ப்பலைகள்தானா? அவை எவ்வளவு தூரங்களிலிருந்து வந்தன? எதனால் அந்த அலைகள் ஏற்பட்டன? என்பது போன்ற ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன. கிடைத்த தகவல்களோ ஆச்சரியமானவை. சாதாரண மக்களால் நம்பவே முடியாதவை. அந்தக் காரணங்களை ஆராய்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கடந்த வாரம், "ஈர்ப்பலைகளைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்று உலகிற்குச் சத்தமாகச் சொன்னார்கள்.


1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கருந்துளையாக மாறியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளையே நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த இரண்டு கருந்துளைகளும், கிட்டத்தட்ட 30 சூரியனின் அளவையுடயனவாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிலோமீட்டர்கள் குறுக்களவுள்ளவையாக இருந்திருகின்றன. அதாவது, சென்னையை விடப் பெரிதானவையாக இருந்திருக்கின்றன. மோதும் கணத்தில் அவை ஒளியின் அரை மடங்கு வேகத்தில் சுற்றியிருக்கின்றன. அவ்வளவு வேகத்தில் சுற்றிய இந்தக் கருந்துளைகள் இரண்டும் மோதியதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகள், 1.3 பில்லியன் வருடங்களாகச் சுனாமி அலைகள் போலப் படிப்படியாக அண்டவெளியெங்கும் நகர்ந்து, நம் பூமியைத் தாண்டிச் சென்றிருக்கிறது. நீங்கள் குளத்தில் கல்லெறியும் போது, அது ஏற்படுத்தும் வட்டமான அலைகள் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கும் இலைச் சருகை, அசைத்துவிட்டுச் செல்லுமே அதுபோல, கருந்துளைகளால் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பலைகளும் பூமியைத் தாண்டும்போது, பூமியை சற்றே அசைத்துவிட்டுப் போயிருக்கிறது. அசைவு மிகச் சிறியதுதான். ஒரு புரோட்டான் அணுவின் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அந்த அசைவு. அதுவே நமக்குப் போதுமானது. அந்த அசைவை 'லைகோ' குழாய்கள் உடனே கண்டுபிடித்துவிட்டன. 'அதுசரி, எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'


இப்போது, நாம் ஆரம்பத்தில் கூறிய பலூன் துண்டை இழுத்துப்பிடித்த சம்பவத்துக்கு வரலாம்.


பலூனில் சதுரமாக வெட்டிய சிறிய இரப்பர் துண்டை, இருபக்கமும் பிடித்து இழுத்தோமல்லவா? அப்படி இழுக்கும்போது, அதற்குச் 90 பாகையில் அமைந்த மற்ற இரண்டு பக்கங்களும் சிறியதாக மாறின அல்லவா? இதுபோலத்தான், அண்டவெளியும் ஒருபுறம் அழுத்தப்பட்டால் மறுபுறம் விரிவடையும். லைகோவில் 90 பாகையில் அமைக்கப்பட்ட இரண்டு குழாய்களைத் தாண்டிச் செல்லும் ஈர்ப்பலைகள் அங்கேயிருக்கும் அண்டவெளியைச் சற்றே இழுக்கும். அதே சமயத்தில் அண்டவெளியின் மறுபக்கம் சிறியதாகும். எல்லாமே மிகமிகச் சிறிய அளவுகளில்தான் நடைபெறும். இதனால், ஒரு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே கூட, மறு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே குறையும். இந்த லேசர் கதிர்களின் அளவு வித்த்தியாசத்தைக் கணணிகள் உடனடியாகக் கணித்துக் கொள்கின்றன.

முடிவில் மாபெரும் புரட்சியாக 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' என்று சொல்லப்படும் ஈர்ப்பலைகளை நாம் கண்டுபிடித்துவிட்டோம். அறிவியலுலகை மாற்றியமைக்கப் போகும் கண்டுபிடிப்பு இது. இதன்மூலம் ஈர்ப்புவிசை பற்றிய முழுமையான தெளிவும், ' இணையண்டம்' (Parallel Universe), 'பல்பரிமாணங்கள்' (Dimesions), 'பல அண்டங்கள்' (Multiverse) போன்ற கோட்பாடுகளுக்கான விடைகளையும் காணக்கூடிய வழி கிடைத்திருக்கிறது. இவற்றை ஆராய்வதற்கு மேலும் ஆறு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்கள் உலகெங்கும் அமைக்கப்படவிருகின்றன. விண்வெளியின்கூட ஒன்று அமைக்கப்படலாம். இதில் முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். 14.09.2015 அன்று மனித வரலாறின் மிகமுக்கிய சம்பவமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்குக் காரணமாக இருந்த, 1.3 பில்லியன் வருடப் பழைய ஈர்ப்பலைகள் என்னையும், உங்களையும் தொட்டுவிட்டே தாண்டிச் சென்றிருக்கின்றன. அந்தக் கருந்துளைகள் மோதியபோது ஏற்பட்ட அதிர்வுகளின் ஒலி, மனிதக் காதுகளால் கேட்கும் அதிர்வுகளையே கொண்டிருந்தன. அந்த ஒலியும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதன்முதலாகப் பேரண்டத்தின் பேச்சு ஒலியை மனிதன் தன் காதால் இந்தச் சம்பவத்தின் மூலமாகக் கேட்டிருக்கின்றான்.


இறுதியாக ஒன்று:

'லைகோ' ஆராய்ச்சி நிலையமொன்றை இந்தியாவிலும் அமைப்பதற்குக்
கோரிக்கைகள் விடப்பட்டிருக்கிறது. இந்திய அணு ஆராய்சிக் கழகத்தினால் இன்னும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. யார் கண்டது அது தமிழ்நாட்டில் கூட அமைக்கப்படலாம்.
-ராஜ்சிவா-

பகிர்வு அனுமதிக்கு  நன்றிகளுடன்
மது 

Comments

 1. அருமை. பகிர்ந்ததற்கு நன்றி.

  As it is said "Can Einstein be wrong?"

  ReplyDelete
 2. அருமையான அறிவியல் கட்டுரை.புரிந்து கொள்வதற்கு கடினமான ஐன்ஸ்டீனின் அறிவியல் கருத்துக்களை எளிய தமிழில் தந்த ராஜ் சிவா அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி
  ஸ்டீபன் ஹாக்கின்சின் A brief history of Time இன் தமிழாக்கத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். அதை பற்றி எழுதவும் எண்ணம் உண்டு

  ReplyDelete
 3. உல‌கிலேயே 3 இட‌ங்க‌ளில் செய‌ல்ப‌ட்டுக் கொண்டும் 2 இர‌ண்டு இட‌ங்க‌ளில் க‌ட்டுமான‌ப் ப‌ணியும் ந‌டைபெற்றுக் கொண்டிருக்கிற‌து LIGO விற்கு. இவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ LIGO இந்தியாவை தேர்ந்தெடுத்திருப்ப‌தில் ந‌ம் நாட்டின் ம‌திப்பு அட‌ங்கியுள்ள‌து. பிர‌த‌ம‌ர் இத‌ற்கு அனும‌தி வ‌ழ‌ங்கியிருப்ப‌தும் ம‌கிழ்ச்சிய‌ளிக்கிறது. ஐன்ஷ்டைனின் ஆவி இன்னும் இவ்வுல‌கில் அறிவிய‌ல் புத்த‌க‌ங்க‌ளிலும் ஆய்வ‌க‌ங்க‌ளிலும் சுற்றிக்கொண்டிருக்கும்,அவ‌ர‌து க‌ண்டுபிடிப்புக‌ள் நிரூப‌ண‌ம் செய்ய‌ப்ப‌டும் வ‌ரை. Salute for Advancetein.

  ReplyDelete
 4. செம அறிவியல் கட்டுரை. எளிதாக்கியமைக்கு ராஜ் சிவா அவர்களுக்கு மிக்க நன்றி. பகிர்ந்த தங்களுக்கும் நன்றி கஸ்தூரி

  கீதா: தமிழாக்கம் கொஞ்சம் தடுமாறுவதால் பல நல்ல கட்டுரைகளை மொழிபெயர்ப்புச் செய்து எழுத இயலவில்லை. மிக்க நன்றி பகிர்விற்கு. நல்ல கட்டுரை.

  ReplyDelete

Post a Comment

வருக வருக