மிருதன் -சக்தி சவுந்தர் ராஜனின் கையொப்பம்


சமீபமாய் படங்களை பார்பதற்கு விடுப்பு விட்டிருக்கிறேன். கணிப்பொறி ததும்பும் அளவிற்கு படங்களும், சென்னையில் கடந்த ஆண்டு ஒருமணி நேரம் அலைந்து திரிந்து வாங்கிய குறுந்தகடுகளும் காத்திருப்பில் இருக்கின்றன.  நூல்களோ தவமிருக்கின்றன. 


தாரை தப்பட்டை படத்தின் இடைவேளையில் திரையில் விழுந்த மிருதன் டீசர் படம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை என்னிடத்தில் ஏற்படுத்தியது. ஆனாலும்   சூழலின் அழுத்தம் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்த கொஞ்சநாள் இதெல்லாம் வேண்டாம் என்ற முடிவுக்கு என்னைத்  தள்ள திரை படங்களை பார்ப்பதற்கு விடுப்பு விட்டிருந்தேன். 


அழுத்தங்களை தகர்க்கும் விசயங்களில் இருந்து வெறுப்புடன் விலகி இருந்தேன். இசை கேட்பதைக் கூட எல்லாமே இசையாக இருக்கட்டும் என்கிற முன்னோடிப் பதிவர் காரிகன் அவர்களின் அறிவுரைக்குப் பின்னரே மீண்டும் துவங்கினேன். 

நேற்று மாலை ஒரு மிகக் கசப்பான விவாதத்திற்கு பிறகு சம்பந்தமே இல்லாமல் யு.கே கார்த்திக் நீங்க இன்னைக்கு வரீங்க டிக்கெட் போட்டாச்சு என்று சொல்லிவிட மேலிட அனுமதிக்கப் பின்னர்  வருகிறேன் என்றேன்.

பத்து மணிக்கு விஜய் தியேட்டரில் நண்பர்கள் காசியின் வரவிற்காக காத்திருந்தனர். காலை படத்தை முதல் காட்சியில் பார்க்க முயன்ற சிவா அவர்களின் வினோத அனுபவம் வேறு நகையூட்டியது.  சரியாக லக்ஸ்மி மேனன் வந்த பொழுது திரை சிகப்பாகி பார்க்கிங் கட்டணம் முதல்கொண்டு திரும்ப வழங்கப் பட்டது என்று சொல்லியிருந்தார் அவர்! 

எனக்குத் தெரிந்து புதுகையில் மிருதனுக்கு கிடைத்திருக்கும் ஓபனிங் ஒரு மாஸ் ஓபனிங்! அரங்கு நிறைந்த காட்சி!

படம் போட்டவுடன் நான் தூங்கப் போறேன் என்றார் பாஸ்கர்.  முதல் பத்து நிமிடங்களே அடிவயிற்றில் திகீர் என ஐஸ் கத்தியை இறக்கியது.

காட்சிகள் நினைவில் கொண்டுவரும் ஆங்கிலப் படங்களை பின்னால் பட்டியலிடுகிறேன். ஆனால் ஒரு ஜோம்பி படம் தமிழகத்தில் வர வேண்டும் என்றால் எப்படி காட்சியமைக்க வேண்டும் என்பதற்கு செமையான முன்மாதிரியாக இந்தப் பகுதி இருக்கிறது.

நமது அன்றாட நிகழ்வுகளுக்கு மிக நெருக்கமாக, கிட்டத்தட்ட நிகழ்வுச் சாத்தியத்திற்கு வாய்ப்புள்ள வகையில் காட்சிகளைப் பின்னியிருக்கிறார் சக்தி சவுந்தர் ராஜன்.


படத்தின் மூலம் தனது முத்திரைகளை மிக அழுத்தமாகப் பதித்திருப்பவர்களில் இசைஅமைப்பாளர் இமான் முக்கியமானவர். அரங்கை தெறிக்க விடுகிறார். இமானின் திரைப் பயணத்தில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்.

இயக்குனர் இசை அமைப்பாளர் போலவே ஜெயம் ரவியின் சாதனையும் முக்கியமானது. இதற்கு முன்னர் கொடுத்த வெற்றிப்பட வரிசையில் இன்னொரு பெருவெற்றிப் படம் மிருதன்.
படத்தில் பல காட்சிகளில் விசில்கள் பறந்தது! திகில் காட்சிகள் தவிர முதல் பாதியில் மந்திரியின் அடியாளுக்கு விழும் குத்தில் தியேட்டர் குலுங்குகிறது. பல விசயங்களை உணரவும் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

ஒளிபதிவு எஸ். வெங்கடேஷ், ஒரு ஷாட் பதம் என்றால், அதிகாலை காலை பால் பாக்கெட் எடுக்கப் போகும் பேபி ஆணி கடத்தப்படும் அந்த ஷாட்டில் மிகத் தெளிவாக நடக்கப் போகும் விபரீதத்தை திகிலோடு உணர முடிகிறது. வாவ் வெங்கடேஷ். செம ஷாட் அது.

என் கணிப்பில் படம் தமிழ் திரையின் புது வீச்சினை அறிமுகம் செய்யும் படம். நாய்கள் ஜாக்கிரதை படத்தை விட டெக்னிகலாக படம் பல படிகள் முன்னேறி இருகிறது.

ஒரு காலத்தில் நாசர் தொட்டு பின்னர் கைவிட்ட பயணம் இது. முகம், அவதாரம், தேவதை என மாறுபட்ட தளத்தில் பயணித்தவர் அவர். அன்று நமது வெகுமக்கள் ரசனை வேறு மாதிரி இருந்தது.

சர்வ தேசத் தொலைக்காட்சிகளின் வரவிற்கு பின்னர் உலக திரைப்படங்களின் உயரமும், ஹாலிவுட் மசாலாவின் சுவையும் மக்களுக்கு புரிபட ஆரம்பித்தது. இது மெல்ல மெல்ல ஊடுருவி அவற்றிற்கான ஒரு ரசிக தளத்தை உருவாக்கிவிட்டது.

உண்மையில் நமது இளம் தலைமுறை டொராண்டுகள் மூலம் உலகின் அதி முக்கியமான திரைப்படங்களை சுவைத்துவிட்டனர். அந்நியத் தொலைக் காட்சிகளில் வரும் தொடர்களை அப்படியே பதிவிறக்கி வார இறுதியில் சோறு தண்ணி இல்லாமல் பார்க்கிற ஒரு பெரும் கூட்டம் ஒன்று இங்கே உருவாகிவிட்டது.

அந்த ரசிகர்களை மட்டுமல்ல சராசரி ரசிகர்களையும் அடையும் வித்தை சக்தி சவுந்தர் ராஜனுக்கு கைவந்துவிட்டது. நாய்கள் ஜாக்கிரதையை விட மிருதன் நூறு மடங்கு தெளிவுடன் இருக்கிறது.

இது சக்தி மிக அழுத்தமாக தனது கையொப்பத்தை இட்டிருக்கும் படம்.

இரண்டாம் பாகம் குறித்து அவர் பேசுகிற விசயத்தை கேட்கிற பொழுது ரொம்பத்தான் தெனாவெட்டு என்கிற ஆச்சர்யம் வந்து உட்கார்கிறது. எப்படி மிருதன் ஒன்று இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட முயற்சியோ அதேபோல் இராண்டாம் பாகமும் முக்கியமான படமாகத்தான் இருக்கும்.

என்சாம்பிள் காஸ்ட் குறித்து பேசுகிறார் அவர். பல நட்சத்திரங்களை அனைவருக்கும் சம பங்கு அழுத்தமான கதா பாத்திரங்களாக ஓரே படத்தில் பயன்படுத்தவது அனேகமாக மிருதன் 2 வாகத்தான் இருக்கும்.

அப்புறம் இன்னொரு விசயம், தூங்கப் போறேன் என்று சொன்ன பாஸ்கர் கடைசி வரை தூங்கவே இல்லை!

ஏன் என்றேன்

சார் பறந்து பறந்து கடிகிறாங்க எப்படி தூங்குவது என்றார்.


இந்தப் படம் எனக்கு நினைவில் கொண்டுவந்த ஆங்கிலத் திரைப்படங்கள். 


ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் தனது தந்தையை பார்க்க விளயாட்டாய் விரையும் ஒரு சிறுவன் அங்கே நடக்கும்  விபத்தில் தெறிக்கும் பயோ ஹசார்ட் அமிலத்தில் அமிழ்ந்து கண்களை இழக்கிறான். ஆனால் அது அவனை ஒரு மனித ரேடாராக மாற்றிவிடுகிறது.  

படத்தின் முதல் காட்சி இதுதான் மூலம் டேர் டெவில் என்றால் அடுத்து தொடரும் பாதி எரிந்த  நாய், ரெசிடென்ட் ஈவில் படத்தில் அறிமுகமானது!. இதுவரை ஐந்து பாகங்களில் வெளியாகி வசூல் சாதனைகளைப் படைத்த படம் ரெசிடென்ட் ஈவில். இது ஒரு கணிப்பொறி விளையாட்டாக இருந்த பொழுதே எனக்கு அறிமுகமானது. 

அடுத்த ஆண்டில் ரெசிடண்ட் ஈவில் ஆறாம் பாகம் வெளியாக இருக்கிறது!  படத்தின் பல காட்சிகள் ரெசிடென்ட் ஈவில்தான். 

இது தவிர படத்தின் மிருதன் படத்தின் கிளைமாக்சில் வரும் ஷாப்பிங் காம்ளெக்ஸ் காட்சிகள் ஜோம்பி லான்ட்டை நினைவில் கொண்டுவருகிறது.  

என்னதான் காப்பி பேஸ்ட் என்றாலும் இது வெறும் பேஸ்ட்  அல்ல பேஸ்ட் ஸ்பெசல்! கதையை எடுத்துக்கொண்டு நமது சூழலில் தரும் வித்தை எல்லோருக்கும் வராது. சக்திக்கு அது இயல்பாக இருக்கிறது. அதே போலவே அவர் போகப் போகும் உயரமும் இன்னும் அதிமாகவே இருக்கும். 

என்னைப் பொறுத்த வரை என் நெடுநாளைய ஆவல்களில் ஒன்றை இந்த வரிசைத் திரைப்படங்கள் நிறைவு செய்யலாம். நாம மட்டும் இங்க்லீஷ் படங்களை இப்படிப் பார்க்கிறோம் அவங்க நம்ம படத்தை எப்போ பார்ப்பாங்க? அப்படி ஒரு இயக்குனர் வருவாரா என்ற கேள்வி எப்போதும் எனக்குள் உண்டு. இனி அவர்கள் சாரி கட்டி வரலாம். எஸ்.எஸ்.ஆர் அவர்களின் வரவிற்கு ஒரு சாலிட் காரண்டி! 

மிருதன் முறையாக ப்ரொமோட் செய்யப்பட்டால் இந்தியாவைக் கடந்த ரசிகர்களை அது நிச்சயம் பெரும். 

அவ்ளோ நல்லருக்கா என்று கேட்க வேண்டாம். அவர்களது களத்தில் நமது விளயாட்டை நிச்சயம் ரசிக்கத்தான் செய்வார்கள். அதற்கு படம் கியாரண்டி! 

வாழ்த்துகள் 
குழுவினர்க்கு.   

Comments

 1. மது,

  மிருதன் படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் கண்டிப்பாக இந்தப் படம் பல அமெரிக்க ஸாம்பி படங்களை நம் நினைவுக்கு கொண்டுவரும் என்பதும் தெரிந்ததே.

  இருந்தும் தமிழில் அல்லது இந்தியாவிலேயே வந்த முதல் முயற்சிக்காக இதை நாம் பாராட்டலாம்.

  உங்களுக்காகவே என் அடுத்த பதிவை (இசையுதிர்காலம்) கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு எல்லாமே இசையாக இருக்கட்டும் என்ற என் ப்ரொபைல் கருத்தை வைத்து ஒரு திடீர் பதிவை எழுதத் தீர்மானித்துள்ளேன்.

  என்னை இப்படியான ஒரு பதிவை எழுதத் தூண்டிய உங்களுக்கு எனது நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆகா, வருகைக்கு நன்றி
   எல்லாமே இசையாக இருக்கட்டும் எனது ஆவலைத் தூண்டுகிறது

   காத்திருக்கிறேன்

   Delete
 2. இந்தப் படத்தை சாதரணமாக நினைத்திருந்தேன். உங்கள் விமர்சனம் பல பரிமாணங்களை ஏற்படுத்தியிருக்கிறது. படம் பார்க்கும் ஆவலை துண்டிவிட்டிருக்கிறது. விமர்சனத்திற்கு நன்றி!
  த ம 2

  ReplyDelete
 3. I also watched sir. I liked it!!!

  ReplyDelete
 4. படம் பார்க்கத் தூண்டும் பதிவு நண்பரே
  நன்றி

  ReplyDelete
 5. பல விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்ததால் கிளம்பிவிட்டு கான்சல் ஆகிவிட்டது, சாரின் பாராட்டுதல்களால் இன்னைக்கே போயிருவோம்...

  ReplyDelete
 6. ம்ம் ஆங்கிலப்படங்களைத் தழுவி எடுக்கின்றார்களே அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். உங்கள் விமர்சனம் பார்க்கலாம் என்று சொல்லுகின்றதே. நாளை பார்த்துவிட வேண்டும்.

  ReplyDelete
 7. ஒரு வழியாக “லீவு” முடிஞ்சிடுச்சு போல..
  அந்த “சார் பறந்து பறந்து கடிகிறாங்க எப்படி தூங்குவது என்றார்“ என்ற வரியில் குபீரென்று சிரித்துவிடடேன். (என்ன என்று வீட்டில் ஓடிவந்துவிட்டார்கள்..இப்படியா -அட்டகாசமா- எழுதுவது மதூ?) அருமை போங்கள் இனித்தான் நான் பார்க்கணும் உங்கள் விமர்சனம் பார்த்துத்தான் இனிமேல் படம் பார்க்கப் போவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

  ReplyDelete
 8. பல எதிர்மறை விமர்சனங்களுக்கிடையில் ஒரு நேர்மறை விமர்சனம்.....

  ReplyDelete

Post a Comment

வருக வருக