அலையும் குரல்கள் கவிதைத் தொகுப்பு ஒரு அறிமுகம்



தமிழ்க் கவிதைகள் காதல், நிலா, காமம், நட்பு, புறக்காட்சிப் படிமம் என்கிற தளங்களைவிட்டு வெகு அரிதாகவே வெளியில் வருகிறது. 

அகரம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் கவிஞர் நீலாவின் அலையும் குரல்கள் தொகுப்பின் கவிதைகள் தமிழகம் குடியில் தள்ளடுவதை சமரசமின்றி பேசுகின்றன.  குடிநோயின் சமூகத் தாக்கத்தை பெரும் விம்மலாக வெடித்திருக்கின்றன. 


சமூகப் பொறுப்புடன் கவிதைகளைப் பிணைக்க முடியும் என்பதை கவிஞர் நீலா வெகு அழுத்தமாக நிறுவியிருக்கிறார். 

உண்மையில் படிமங்களிலும், காதலிலும், காமத்திலும் சிக்கி  புளித்த ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் கவிதை உலகிற்கு ஆக்சிஜன் செலுத்தியிருக்கின்றன இந்தக் கவிதைகள். தமிழ்க் கவிஞர்கள் கோடம்பாக்கத்துக்கார்கள் போலவே ஒரு சில ஏரியாக்களை விட்டு வருவதே இல்லை. எனவே கவிஞர் நீலாவின் இந்தத் தொகுப்பு நதிப்படுகை கூழாம்கற்களிடையே மின்னிச் சுடர்விடும் வைரமாகத் தெரிகின்றது.

கவிஞர் நீண்டகாலப் பெண்ணியச் செயல்பாட்டாளராகவும், களப்போராளியாகவும்  இருப்பதால் அவரின் அனுபவங்கள் படைப்புக்குச் செழுமையூட்டுகின்றன. இவரது கசப்பான களப்பணியனுபவங்கள் தொகுப்பின் பக்கங்களெங்கும் எளிய கவிதை வரிகளாக மிளிர்கின்றன. 

பெண்கள் பொது வெளியில் சமூகக் கட்டமைப்பு பணிகளிலும் நேரடியாக ஈடுபடும் பொழுது அவர்களின் படைப்புலகம் எவ்வளவு செழுமைபெறுகிறது! 

மனக்கொதிப்பை பக்கங்கள் தோறும் அறச்சீற்றத்துடன் பட்டியலிடுகிறார் கவிஞர். 

அவன் 
அதை விட்டுவிட்டான் 
அதுதான் 
அவனை விடவில்லை 

எனத் தொடங்கும் தொகுப்பின் முதல் கவிதை நம்மை விடுவேனா என்கிறது. 

இன்னொரு கவிதையை 

ஆஃபிற்கும் சூப்பிற்கும் நடுவில் 
ஆப்படித்துக் கிடக்கிறது 
எங்களூரு குடித்தனங்கள் 

என்று முடிக்கும் பொழுது எழுகிறது ஒரு கையாலாகத பெருமூச்சு. 

நடன சிங்காரன் என்கிற கவிதையும் அதன் தலைப்பும் இனி எங்கும் எப்போதும் உங்கள் நினைவுக்கு வரும். 

நடன சிங்காரன் 

நெற்றிப்பரப்பில்
பெருக்கெடுக்கும் வியர்வையில் 
ஒரு கணம் மூழ்கி 
மறுகணம் மேலெழுந்து, 

வாயோர உமிழ்நீரின் 
வாடைக்கு நெருங்கிவரும் 
கொசுவிரட்ட திராணியற்று,

முன்னேறும் இடதுகாலை 
வலதுகால் பின்னிழுக்க 
சூழ்ந்துவரும் முகமெல்லாம் 
புள்ளிகளாய் மிதந்துவர, 

யாரோ ஏதோ கேட்க 
ஆமென்று அசைகிறது தலை 
இல்லையென மறுக்கிறது கை 

வலியேற்படுத்தும் ஒரு காட்சியை எப்படி கவிதையில் வடிக்க முடிந்தது கவிஞரால்? தலைப்பு சும்மா அள்ளுதே. தமிழகம் இன்று நடன சிங்காரன்களால் நிரம்பிருக்க ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இந்தக்  கவிதை  நினைவில் வரும். 

வாசகனின் மனதை இந்தக் கவிதையும் அறுக்கும்  

வியூகம் 


குழந்தைகளைத் 
தூங்கவைத்து 
அறையைப்பூட்டி,

அரிவாள் மனை
மண் வெட்டிகளை
மறைவில் வைத்து, 

வெண்கலப் பாத்திரங்களை 
பார்க்கவியலா இடத்தில் 
பத்திரப்படுத்தி,

கூர்மழுங்கிய பாத்திரங்களில் 
உணவெடுத்து வைத்து 
தொலைக்காட்சிப் பெட்டியை 
உரக்க அலறவிட்டு 

சில பல பொய்களை 
மனதிற்குள் வடிவமைத்து 

பாருக்கு போன 
கணவனுக்காக 
காத்திருக்கிறாள் 
ஒரு பத்தினித்தங்கம் 

இந்தக் கவிதை எழுதும் வேதனையான சித்திரம் வெகுநாட்களுக்கு வாசகனின் நினைவில் இருக்கும். 

பெண்களின் மனஉணர்வை மது எவ்வாறு வன்புணர்வு செய்கிறது எனபதை தாம்பத்யம், விரிகோணம், பேசாப்பொருள் என்கிற கவிதைகளில் செவிட்டில் அடித்தது போல சொல்லியிருக்கிறார். 

பந்தம் எனும் கவிதையின் கடைசி வரிகளை கொஞ்சம் பாருங்கள்

தாயின் கடைசி முகம் 
பாராமலே 
தாய்ப்பந்தம் அறுக்கிறான் 
போதை தெளியாத மகன்..


தந்தையர் நாடு என்கிற கவிதை குடிப்பழக்கமுள்ள    தனது விடலை மகனை நினைத்துப் பதறும் ஒரு தந்தையின் மனப்பதற்றத்தை அப்படியே அச்சில் கொண்டுவந்திருக்கிறது. 

மொத்தத்தில் கவிதைதொகுப்பை படித்து முடிக்கும் வாசகன் விடும் உஷ்ணப் பெருமூச்சில் குடிநோய் ஒரு அங்குலமாவது குறையும். இது நிச்சயம். 

சமூக அக்கறையோடு வந்திருப்பதால் கூடுதல் மரியாதையை இந்தத் தொகுப்பு எளிதாவே பெறுகிறது. இப்படியும் கவிதைகள் வரலாம்  கவிதை என சிறு நம்பிக்கை அகல்விளக்கை இந்தத் தொகுப்பு ஏற்படுத்தியிருகிறது. 

வாழ்த்துகள் 

சகோதரி கவிஞர் நீலாவிற்கு 

நூல் விவரம் 

தலைப்பு : அலையும் குரல்கள் 
வெளியீடு : அகரம் 
விலை : அறுபது ரூபாய்கள்

இன்னும் இரண்டு தொகுப்புகள் இருக்கின்றன. அவற்றுடன் வருகிறேன். 

அதுவரை  

காத்திருங்கள் 

அன்பன் 
மது 

Comments

  1. //தாயின் கடைசி முகம்
    பாராமலே
    தாய்ப்பந்தம் அறுக்கிறான்
    போதை தெளியாத மகன்//

    மனதை உலுக்கிய வரிகள் தோழரே கவிஞர் திருமதி. நீலா அவர்களுக்கு வாழ்த்துகள் அடுத்த இரண்டு தொகுப்புகளையும் விரைவில் தாருங்கள்
    த.ம.+ 1

    ReplyDelete
  2. கவிஞர் பாராட்டிற்கு உரியவர்
    பாராட்டுவோம்
    தங்களின் விமர்சனம் நூலினைப் படிக்கத் தூண்டுகிறது நண்பரே
    நன்றி

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம் சுடச்சுட....

    ReplyDelete
  4. ஆஹா....உங்கள் கரங்களுக்கு வந்தனங்கள்...அழகான...விமர்சனம்..கூரிய பார்வை...

    ReplyDelete
  5. செம கஸ்தூரி. ஐயோ அந்த நடனசிங்காரனும், பத்தினித்தெய்வமும் கண் முன்னே விரிகின்றார்கள்...தினமும் பார்வையிலும் படுகின்றார்களே...உங்கள் விமர்சனமும் அருமை...பொக்கே ஒன்று பரிசு...

    கவிஞர் நீலாவைக் குறித்து முத்துநிலவன் அண்ணாவின் தளத்திலும் மற்றும் போட்டிக்கு வந்திருந்த அவர் கவிதையை வைத்தும் அறிந்து கொண்டோம். பெண்ணதிகாரம் என்ற தலைப்பில் எழுதியிருந்தார். தலைப்பே கவர்ச்சி இல்லையா!!!! பெண்ணீய செயல்பாட்டாளர் என்பதும் கவிதையே சொல்லியது.

    அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. நீலா அக்கா மிக முக்கியமான நபர்..
    பல சாதனைகளை செய்தவர்
    அவரது அனுபவங்களை அவர் பகிர்கிற பொழுது சில சமயம் கேவி அழவேண்டும் போல இருக்கும்
    நூலாக எழுத சொல்லியி வேண்டிக்கொண்டே இருக்கிறேன்
    எழுதுவேனா என்கிறார்கள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக