அன்னவாசல் கே. ரெங்கசாமி தியாக வரலாறு நூல் அறிமுகம்

தனிநபர் சரிதங்கள் வருவது இந்தக் காலங்களில் அரிது. அதுவும் பொதுவுடைமை இயக்கங்களில் பணியாற்றியோர் குறித்து நூல்கள் வருவது குதிரைக் கொம்பு. 

இந்தச் சூழலில் அன்னவாசல் கே.ரெங்கசாமி குறித்த வாழ்க்கை வரலாறு வெளியாகியிருப்பது இரண்டு விசயங்களை நமக்குச் சொல்கிறது. ஒன்று அன்னாரின் தியாகம் இன்றும் தோழர்களால் நினைவுகூரப்படுகிறது. இன்னொன்று அவரது சாதுர்யமான செயல்பாடுகள் சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல்  இன்றய தோழர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. 


தோழர் பூ.மணிமொழி எழுதி பொதுமை நூலகம் வெளியிட்டிருக்கும் இந்நூல் வெறுமே ஒரு பொதுவுடமைத் தோழரின் வாழ்க்கை பதிவாக இல்லாது கால யந்திரத்தை மெல்ல சுழற்றி அந்தக்கால புதுகையை கண்முன் நிறுத்துகிறது. இது ஒரு அலாதி அனுபவமாக இருக்கிறது. 

1917இல் அன்னவாசலில் பிறந்த ஒரு மிகச் சாதாரண மனிதரின் அரசியல் பயணங்களும் அவரின் அற்புதமான தலைமைப் பண்பும், தெளிந்த அரசியல் பார்வையையும் நூல் வழியாக அறிகிற பொழுது எழுகின்றன இரண்டு பெருமூச்சுகள். ஒன்று எத்தகு ஆளுமைகளை பொதுவுடமைத் தத்துவம் உருவாக்கியிருக்கிறது என்பதும், இன்னும் எத்துனை ஆளுமைகளை  இந்த இயக்கங்கள் உதாசீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதுமாக.  

உண்மையில் பொதுமக்களுக்கான இலக்கிய இயக்கங்களை பொதுவுடைமை இயக்கங்கள்தான் நடத்துகின்றன. த.மு.எ.க.ச மற்றும் கலை இயக்கப் பெருமன்றம் நடத்தும் கலை இரவுகள் இன்றும் பெரும்திரல் பொதுமக்களை ஈர்த்த வண்ணமே இருக்கின்றன. உண்மையில் நாம் நிதியளித்து ஆதரிக்க வேண்டிய இலக்கிய இயக்கங்கள் இவைதான். ஒருபோதும் அரசு நிதி கிடைக்கப் போவதில்லை என்கிற நிலையில் பொதுமக்கள்தான் இத்தகு இயக்கங்களை ஆதரிக்க வேண்டும். 

இப்போது நூலுக்கு வருவோம், தோழர் ரெங்கசாமி புதுகையில் கொடிக்கால் வெற்றிலை விவசாயிகள் சங்கத்தை ஆரம்பித்தவர், பெரும் போராட்டங்களை முன்னெடுத்து உழுவோர்க்கே  நிலம் என்று ஆர்பரித்தவர். இவரது போராட்டங்களின் விளைவாக நியாய வாரச் சட்டம் வந்தது , புதுகை மாவட்ட செசன்ஸ் கோர்ட்வந்தது , புதுகை தனிமாவட்டமாக உதித்தது! 

விடுதலைப் போராட்டத்தின் பொழுது காங்கிரசில் இருந்தவர் விடுதலைக்கு பின்னர் பொதுவுடைமை இயக்கங்களுக்கு வந்தார்!   வாழ்வு முழுதும் உழைக்கும் மக்களுக்காக போரிட்ட ஒரு தோழரின் பயணங்கள் முழுதும் சந்தித்த பெரும் போரட்டங்கள் இந்த நூலின் பக்கக்களில் பதியப்பட்டுள்ளது.

குறிப்பாக புதுகையை நேசிக்கும் இதயங்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. 

நூல் விவரம் 

தலைப்பு : அன்னவாசல் கே.ரெங்கசாமி தியாக வரலாறு 
ஆசிரியர் : பூ.மணிமொழி 
வெளியீடு : பொதுமை நூலகம் 
                         21, மாதா கோவில் தெரு  
                         அன்னவாசல் - 622001 
                         புதுக்கோட்டை மாவட்டம் 
                        அலைபேசி : 9965239275
            விலை : 70/-

மீண்டும் சந்திப்போம் 

அன்பன் 
மது 

Comments

 1. சமூகத்திற்காக பாடுபட்ட பல தனி மனிதர்கள் அறியப்படாமல் போவது வேதனைதான்.இவர்களைப் பற்றி பதிவு செய்யப் படவேண்டியது அவசியம்தான்.

  ReplyDelete
 2. ஆச்சர்யம்..உங்கள் பதிவை மணிமொழியுடன் பேச வேண்டும்....நூலை அவர் சிரமப்பட்டு எழுதிய வலி முற்றும் குறையும் வாய்ப்பு....

  நன்றி அய்யா..
  சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி. வாங்கி படிக்கிறேன்.

  ReplyDelete
 4. புதிய விடயம் அறிந்தேன் தோழர் நன்றி
  தமிழ் மணம் 4

  ReplyDelete
 5. அருமையான நூல் குறித்து,நல்ல செய்திகள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா
   வருகைக்கு நன்றி

   Delete
 6. அறியாத தகவல் அறிய முடிந்தது. இது போலத்தான் பலர் சமூகத்திற்காகப் பாடுபட்டது வெளியில் அறியப்படாமல் போவது. இவர்களைப் பற்றி எல்லாம் பதிய வேண்டும். பாருங்கள் இணையம் எவ்வளவு உதவுகிறது. எதிர்காலச் சந்ததியினர் யாரேனும் ஒருவர் இவரது பெயரை தேடு பொறியில் (அப்போது என்ன தேடு பொறி இருக்குமோ ??!!) தேடினால் தங்களது இந்தப்பக்கம் வந்து விழாதோ!!! இதனை நூல் பிடித்தால் அறிந்து கொள்ள முடியுமே. அதற்காகவே உங்களுக்கு ராயல் சல்யூட் கஸ்தூரி!! பகிர்வுக்கு மிக்க நன்றி..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் உங்கள் இந்த பின்னூட்டம் இவர் வாழ்வின் பல விஷயங்களை பகிர தூண்டுகிறது நூல் கையில்தான் இருக்கு எனவே பகிர்வேன்

   Delete

Post a Comment

வருக வருக