இன்னுமொரு சிறுகதை. புன்னகை


நல்லூர். அப்படி ஒன்றும் பெரிய நாடல்ல, ஆனால் வணிகமுக்கியத்துவம் கொண்ட ராஜபாட்டையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்தததால் அனைவரும் அறிந்த சிற்றரசு.

நல்லூர் அன்று திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. வரவேற்பு வளைவுகள், அலங்காரத்தோரணங்கள் தலைநகர் செந்திரையை அலங்கரித்தன.
உலகின்பேராசான் புத்தன் வருகிறான், அரசரின் அரண்மனைக்கு!



பிச்சை எடுத்துப் புசிக்கும் ஒரு ஞானி எப்படி அரண்மனைக்கு வருவார்?

அவர் வருவாரா? வந்தாலும் அரண்மனையில் எவ்வளவு நேரம் இருப்பார்?

விவாதங்கள் றெக்கை கட்டிப்பறந்தன.

திடுமென ராஜ பேரிகைகள் முழங்க,
புத்தம் சரணம் கச்சாமி,
தர்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி
ஞானியர் சூழ நடுவே ஒளிவீசும் முகத்துடன் மகான் புத்தர்!

செந்திரையின் தெருக்களில் கூடியிருந்தோர் பாதி புரிந்தும் புரியாமலும் கச்சாமி எனக் கூவ ஞானியர் குழு அரண்மனை வாயிலை அடைய நல்லூரின் அரசன் வெள்ளையப்பன் நெடுஞ்சான் கிடையாக புத்தரின் கால்களில் விழுந்து அவரை அரண்மனைக்கு அழைத்தான்.

அரசவை அறிமுகங்கள் முடிந்து பேராசான் கொஞ்சம் ஓய்வெடுக்க தலைமைச் சமையல்காரர் அழகனை அழைத்தான் மன்னன்.

ஓடி வந்த அழகனிடம் சொன்னான் தாங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது இன்று மகான் உணவருந்தும் பொழுது அவர் முகத்தில் ஒரு புன்னகை அரும்ப வேண்டும்.

சரி மகராசா, செய்யறேன்.

சிறிதுநேர ஓய்விற்கு பிறகு புத்தர் உணவுக்கு அழைக்கப்பட தேர்ந்தெடுத்த பணியாளர்களை மட்டுமே உணவரங்கில் அனுமதிதான் அழகன்.

தவிப்பும் எதிர்பார்ப்புமாய் புத்தரின் முகக்குறிப்புகளை பார்த்தவாறே புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான் அரசன் வெள்ளையப்பன்.

சில கவளங்களுக்கு பின்னர் புத்தரின் முகம் மலர்ந்து ஒரு புன்னகையில் விரிய மகிழ்வு பணிக்கும் கண்களுடன் அழகன் அரசனை நோக்கினான்.

அரசன் பார்வையாலே ஒரு நன்றியை அழகனுக்கு வழங்கியவன் உணவருந்தி முடித்த மகானுக்கு தண்ணீர் குவளையை பணிவாக நீட்டினான்.

நல்லா இருந்தது, என்றவாறே புத்தர் கைகளை கழுவிக்கொண்டு பேரமைதி கொண்ட முகத்துடன் இருக்கைக்கு வந்தார்.

அவர் ஆசீர்வதித்ததோ, விடைபெற்றதோ எதுவுமே மனதில் படியவில்லை அரசனுக்கு.

உரிய மரியாதைகளுடன் பேராசனை வழியனுப்பிய அரசன் மீண்டும் அழகனை அழைத்தான்.

ஒரு பொற்கிழியை தட்டில் வைத்து வழங்கிவிட்டு, அவரை ஆரத்தழுவினான்.
மெல்லக் கேட்டான் எப்படி உங்களால் முடிந்தது.

முற்றும் துறந்த ஞானியை புன்னகைக்கவைத்தது எப்படி? உணவு குறித்த எந்த உணர்வும் இல்லாத அவர் எப்படி வாய் திறந்து நல்லா இருக்குன்னு சொன்னார்? சொல்லுங்க அழகப்பன் என்றார் மன்னர்.

அரசே விருந்தினர் வருமுன்னே அவர்கள் விரும்பும் சுவையை நான் கேட்டறிவேன்!

சாமான்யர்களுக்கு அது சரி. முற்றும் துறந்த மகா ஞானிக்கு எப்படி இது பொருந்தும் அழகப்பன்?

அரசே அவர் அம்மாவின் கைப்பக்குவத்தை கடந்த மாதமே விசாரித்து அறிந்துவிட்டேன்.முற்றும்துறந்த ஞானியாக இருந்தாலும் அம்மாவின் கைப்பக்குவம் அவர்களின் இதயத்தை அசைக்கும். அப்படிதான் நிகழ்ந்தது இது.

பலே அழகன்! பலே என்றவாறே அவரை மீண்டும் அணைத்துக்கொண்டான் மன்னன்.


பின்குறிப்பு
எஸ்ராவின் ஒரு கட்டுரையின் தழுவல், இதுபோன்ற கதைகளை எழுதுவதும் பரப்புவதும் அவசியம் என்று நம்புகிறேன். எனவேதான் எழுதினேன்.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

Comments

 1. அட! ..அந்தக் கட்டுரையை வாசித்திருக்கின்றேன். கட்டுரையின் தழுவல் என்றாலும், கஸ்தூரி அருமையான ஒரு பீரியட் கதையைப், அம்புலிமாமா கதை போல படைத்திருக்கிறீர்களே. ஆம் உண்மைதான் இது போன்றவை பரவ வேண்டும்.

  முற்றும் துறந்த ஞானி கூட அம்மா எனும் போது ஒரு சிறிய அசைவு ஏற்படுகிறது என்றால் தாய்மையின் சக்தி மகத்தானதுதான் இல்லையா...அருமை தொடருங்கள்..

  வாழ்த்துகள்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 2. அம்மாவின் கைப்பக்குவம் அனைவருக்குமே பிடிக்கும் தான்! அருமை! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தளிர் ஜி
   ஹைக்கூ சுவாமிகளின் வருகைக்கு நன்றி

   Delete
 3. முற்றும் துறந்த முனிவனானாலும் அம்மாவின் நினைவலைகளிலிருந்து மீள முடியாது என்ற செய்தி கதையின் அடிநாதமாக இருந்து அழகு செய்கிறது!..வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அண்ணா வருகை மகிழ்வு
   தொடர்ந்து செயல்படுங்கள்
   உங்கள் விருப்பம் போல ப்ரேக் எடுத்துக்கொள்ளலாம் அது ப்ளாகிங் வரம், என்போன்ற ஆட்களுக்கு வேறுமாதிரி

   எப்படியோ வருகைக்கு நன்றி

   Delete
 4. உங்க பாணியிலே சொன்னா /// செமை

  ReplyDelete
 5. முற்றும் துறந்த முனிவனும் ஒரு தாயிடமிருந்துதானே வந்திருக்க முடியும் . அவன் தாயை துறந்தாலும் தாயின் நினைவுகளையோ பிறப்பையோ துறக்க முடியாது. நெகிழ்வான கதை .

  ReplyDelete
 6. எஸ்.ராவின் கட்டுரையை அடியேன் படிக்கவில்லையெனினும் தங்களின் கைவண்ணத்தைக் கண்டு பேருவகை அடைந்தேன். புனைவுக்கதைகள் எழுதுவது கொஞ்சம் கடினமான விசயம். அதிலும் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்களை வைத்து புனைவுக்கதைகள் எழுதுவதென்பது மில்லிமீட்டர் அளவுள்ள கூரிய கம்பியின்மீது நடப்பதற்கு சமம். கொஞ்சம் எசகுபிசகானாலும் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். ஆனால் தங்களின் இந்த சிறுகதை எவ்விதத்திலும் நேருக்கு நேராய் நின்று ஒரு உன்னதக்கருத்தை எளிய வார்த்தைகளில் அடக்கி இருக்கிறது. அண்ணே தவறாய் நினைக்கவில்லை எனில் இதுபோன்ற சிறுகதைகள் எழுதி சிறுவர் இலக்கியமாக நீங்கள் வெளியிடவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

  பின்குறிப்பு - சிறுவர் இலக்கியம் குழந்தைகளுக்குமானது என்றென்னுபவன் நான் கிடையாது. இன்றளவும் நான் வாசிக்கும் புத்தகங்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர் இலக்கியம். அந்த எண்ணத்தில்தான் இந்த வேண்டுகோளை வெளியிட்டேன். தவறிருப்பின் மன்னிக்கவும்.

  பின்குறிப்புடன் மற்றொரு பின்குறிப்பு -
  என்னைப்பொறுத்தவரை தாங்கள் சிறுகதைத்துறையில் எப்போதோ உள்நுழைந்திருக்கவேண்டியவர். ஆனால் ஏன் இந்த தாமதம் என்று புரியவில்லை. எப்படியாயினும் தங்களின் இந்த சிறுகதை உலகத்தினூடான என்ட்ரி அருமையாகத் துவங்கியுள்ளது. வாழ்த்துகள் அண்ணே!!!

  ReplyDelete

Post a Comment

வருக வருக