ஒரு கவிஞனின் மரணம்

கவிஞர்   வைகறை நான்  சந்தித்த  மனிதர்களில் மிக மென்மையானவர். உதட்டின் வெளிவிளிம்பில்  இருந்து  சிரிக்கும் உலகில் மனசின் ஆழத்தில் இருந்து சிரிக்கத்தெரிந்தவர்.



கவிதைகள் குறித்தும் அதன்  நிகழ்காலப் போக்கு குறித்தும் மிக அற்புதமாகப் பேசக் கூடியவர்.

வைகறை கவிதை குறித்துப் பேசுவதை முழுமையாக கேட்க வேண்டும், நண்பர் எங்கே போகப் போகிறார் மீண்டும் பேசுவார் கேட்போம் என்றே இருந்தேன்.

இப்படி திடுமென  முடிந்து போவார் என்று தெரியவில்லை.

பலமுறை வீதிக் கலை இலக்கிய களத்தின் கூட்டங்களில்  குறிபிட்டிருக்கிறேன், வைகறையின்  கவிதை உயரம் இன்னும் உலகிற்கு தெரியவில்லை.

நீங்கள் இன்னும் உயரே இருக்க வேண்டியவர் வைகறை. விரைவில் உங்கள் கவிதைகள் தமிழின் அடையாளமாகும் என்றும் சொல்லிவந்திருக்கிறேன்..

ஆனால் வாழ்வு புதிர்களும் எதிர்ப்பாரத் திருப்பங்களும் நிறைந்தது என்பது மீண்டும் ஒரு முறை வேதனையும் வலியுமாக நிருபணமாகிவிட்டது.

நான்கு வயதிற்குள் இலக்கிய கூட்டத்திற்கு வந்து, அரங்கின் உள்ளும் புறமும் விளையாண்டுகொண்டிருந்த ஜெய்குட்டி, தனது அப்பா  கவிதை வாசிக்கும் பொழுது களைத்து தூங்கிய ஜெய் குட்டி இன்னும் நினைவில்  வலிக்கிறான்.

சகோதரி ஜோஸ்பின் எப்படி மீளப் போகிறார்...

ஈவிரக்கம் இல்லாதது வாழ்வு ...

மாலை ஸ்ரீ அழைத்துப் பேசிய பொழுது சில நிமிடங்களுக்கு நெஞ்சை அழுத்திக் கொண்டேதான் பேச வேண்டியிருந்தது..

உறுதியாக இருக்காது

தகவல் பொய்யாக இருக்கவேண்டும் என்ற பிரார்த்தனைகள் எல்லாமே பொய்த்துப் போய் உண்மை என்று தெரிந்தவுடன் அவர் எப்போதும் பெரும் வாஞ்சையோடு அழைக்கும் கவிஞர் யாழியை அழைத்துக் கேட்டால் அவருக்கும் விசயம் தெரியாது..

மீண்டும் அழைத்த யாழி சக்தி நகரில் இருக்கிறார் போய்ப் பாருங்கள் என்றார். மாலை ஆறுமணிக்கே அடைக்கலபுரம் கிளம்பிவிட்டார் கவிஞர்.

எங்கிருந்து வந்தார் என்று தெரியாமலே வந்து மிக அழுத்தமாக தனது முத்திரையை புதுகை மண்ணில் பதித்துவிட்டு இப்படி திடுமென விடைபெற்றது ... ஏன்?

புதுகை இலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் வைகறை.. உங்கள் பெயர்..

வழியும் வேதனையுடன்

மது

இன்னுமே நம்ப முடியவில்லை ..
வைகறைக்கா நிகழ்ந்தது இது..

Comments

  1. இது எப்பொழுது நிகழ்ந்தது ? எப்படி நிகழ்தது ?
    நான் புதுக்கோட்டை வந்திருந்த பொழுது சந்தித்து இருந்தேன் சிறிது நேரமே பேசியிருந்தாலும் மென்மையானவர் என்பதை அறிந்தேன் மிகவும் வேதனையாக இருக்கின்றது
    சகோதரி ஜோஸ்பிஃன் அவர்களுக்கு ஆறுதல்கள் சொன்னாலும் தீர்ந்திடுமா.... எப்படி இந்த இளம் வயதில் அதன் விபரம் எழுதுங்கள் தோழரே....

    ReplyDelete
  2. ஓ மை காட்! நம்பவே முடியவில்லை கஸ்தூரி! உண்மையாகவா...என்ன ஆச்சுப்பா அவருக்கு? எப்படி மறைந்தார்?

    புதுகை பதிவர் விழாவில் அவர் புத்தக விற்பனையில் இருந்த போது விசுவின் புத்தகங்கள் விற்காமல் இருப்பவற்றை ஒன்றிரண்டு மைதிலியிடம் கொத்துவிட்டு மீதியை நாங்கள் (கீதா) சென்னைக்கு எடுத்துச் செல்வதற்காக நாங்கள் எடுக்கையில் வைகறை ஒரு புத்தகத்தை எடுத்து எங்கள் இருவரின் கையேழுத்தையும் போட்டுத் தரச் சொல்லி ஒரு புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். நாங்கள் அவரிடம் அவரது கவிதை பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். போட்டியில் வென்ற அவரது கவிதை பற்றியும் அளவளாவிக்கொண்டிருந்தோம்...

    நெஞ்சம் அந்த இனிய நினைவுகளை அசை போடுகிறது. சத்தியமாக இதை ஏற்க மறுக்கிறது. எங்களுக்கே இப்படி என்றால் புதுகையில் இருக்கும் உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்...

    மிகவும் வேதனையுடன் கண்ணீருடன் எங்கள் அஞ்சலிகள்...

    ReplyDelete
  3. மனம் நம்ப மறுக்கிறது நண்பரே
    ஏன் இப்படி ஓர் பிரிவு

    ReplyDelete
  4. நம்பமுடியாத பேரிழப்பு அண்ணா. நேரில் பார்த்துப் பழகியிராத எனக்கே இவ்வளவு அதிர்ச்சியும் வலியும் என்றால்...

    ReplyDelete
  5. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கவிஞர் வைகறையின் ஆன்மா அமைதி பெறட்டும்.அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. வருத்தமாக இருக்கு .சிறு வயது என்று நினைக்கிறேன் ...ஆன்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் ..அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு இறைவன் இந்த கடினமான வேளையில் துணையிருப்பாராக

    ReplyDelete
  7. அனுதாபங்கள் !இளம் வயதிலேயே ஏன் இந்த சோகம் ?

    ReplyDelete
  8. அதிர்ச்சியில் செயலிழந்து நிற்கிறேன் மது.
    என்ன ஒரு மென்மையான மனிதர் - அவரது கவிதை போலவே?
    பதிவர் விழாவில் அவரது வியர்வையின் அளவு சொல்லி மாளாது. அவ்வளவு வேலையும் பார்த்துவிட்டு, “நந்தலாலா” இணைய இதழை மீண்டும் கொண்டுவர விழாவில் நேரமிருக்குமா அய்யா என்று அழைப்பிதழ் அடிக்கும்போது கேட்டார்... என்ன இப்படிக் கேட்கிறீர்கள் அதற்கு 5நிமிடம் ஒதுக்க முடியாமலா போய்விடும்? என்றதும் மகிழ்ந்துபோய் நன்றி சொன்னார். பின்னர் சிறிது நேரம் கழித்து, தயங்கித் தயங்கி, “அய்யா.. தப்பா நினைச்சிக்கிடாதிங்க.. விழாவில் புத்தக வெளியீட்டுக்கே மூ.5000 வாங்குறோம். நம்ம நந்தலாலா வெளியிடப் பணம் இல்லிங்களே அய்யா..” என, நம் ஸ்ரீயுடன் இணைந்து கையேட்டு வேலைகளை இரவுபகல் பாராமல் பார்த்துக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்து “என்ன வைகறை இப்படிக் கேட்கிறீங்க.. உங்களுக்கு விழாக் குழுவே நன்றி சொல்லணும். பணத்தைப் பத்திக் கவலைப்படாம நந்தலாலா வெளியிடுவதற்கான வேலைகளைப் பாருங்கள்“ என்றவுடன் நெகிழ்ந்து போனார்.. வெளியிட்டோம். அவரும் அவர் துணைவியாரும் விழாவுக்கு வந்திருந்தோரை உபசரித்ததை நம் விழாக்குழுவே அறியும்.. விழா முடிந்து எலலாரும் போய்விட இரவு 11மணிக்குமேல் ஜெய்குட்டியை ஏந்திக்கொண்டு துணைவியாருடன் கிளம்பிய வைகறை தொடர்ந்து வீதியில் சுற்றிச் சுழன்று நடத்திய கடைசி வீதியில் நான் கலந்து கொள்ள முடியாத கொடுமை... அந்த மெல்லிய மனசுக்குள் இப்படி ஒரு கல்மனசா... எப்படி மறப்போம் மது? என்ன ஒரு இழப்பு.. வார்த்தையில் அடங்காத துயரம்.. மருத்துவமனையில் இருந்த போதே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் மாற்று மருத்துவ ஏற்பாடுகளைச் செய்திருக்கலாமே எனும் ஆற்றாமை எழுகிறது..

    ReplyDelete
  9. மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் சாதனைகள் பல நிகழ்த்தியிருப்பார். மரணம் கொடியது.

    குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  10. செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தோம். பழக இனியவர், பண்பாளர், சிந்தனையாளர், அனைத்திற்கும் மேலாக சமூகப் பிரக்ஞையுள்ள நண்பர். இழந்துவிட்டோம். ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    கவிஞர் வைகறையின் மரணச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  12. பாவலர் (கவிஞர்) எவரும்
    சாவடைந்ததாய் வரலாறில்லை
    வைகறை - நீ என்றும்
    வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!

    ஓ! பாவலனே (கவிஞனே)!
    வைகறை என்னும் பெயரில்
    பாக்களால் அறிவை ஊட்டினாய்
    படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!
    கிட்ட நெருங்காமல் எட்டப் போய்
    எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்
    வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
    துயர் பகிருகின்றோம்!

    ReplyDelete
  13. ஆழ்ந்த இரங்கல்...........

    ReplyDelete
  14. கவிஞர் வைகறையின் மறைவு பேரதிர்ச்சியாக இருக்கின்றது.

    அவரது மரண செய்தியின் மூலம்தான நான் அவரை குறித்து அறிந்துகொள்ள வேண்டி இருகின்றதே என என்னும்போது மனம் இன்னும் கனக்கின்றது.

    அவரது ஆன்ம இளைப்பாறுதலுக்காக இறைவனை பிரார்த்திகொண்டு அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.


    கோ

    ReplyDelete
  15. புதுகை பதிவர் விழாவில் சிரித்த முகத்துடன், ஓடியாடி வேலை செய்த கவிஞர் வைகறையின் முகம் கண்ணிலேயே நிற்கிறது. சாகிற வயதா இது? அதிர்ச்சியும் வேதனையும் தரும் துயரச் செய்தியிது.அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக