என்ன நடந்தது ஏன் வைகறை இருண்டது..

வைகறை
கடந்த சனிக்கிழமை வீதிக் கூட்ட அழைப்பைத்தர யு.கே. டெக் வந்த பொழுது (படம் ஸ்ரீ)


ஜோசப் பென்சிகர் என்றால்  யாருக்கும்  தெரியாது... அது  அவரது  இயற்பெயர். வைகறை  அவரது  புனைப்பெயர், கைவிஞர் வைகறை  புதுகைக்காரரா?
சொந்த ஊர்  அடைக்கலபுரம்  என்பது எவ்வளவு  உண்மையோ அவ்வளவு உண்மை அவர் புதுகைக்காரர் என்பதும்.



தனது முதல் வருகையிலேயே  அதுவும்  புதுகைக்கு வந்த முதல் வாரமே தமிழகம் முழுதும் இருந்து நாற்பது புதுக்கவிஞர்களை வரவழைத்து புதுகை நகர்மன்றதை கவிமன்றமாக மாற்றியவர்.

அந்த நிகழ்வு எனக்குத் தெரியாது, நான் பள்ளியில் இருந்தேன், தேவதா தமிழ் அழைத்து நந்தன் ஸ்ரீதரன் வந்திருக்கிறார் என்றார். கிட்டத்தட்ட தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட அத்துணைக் கவிஞர்களுமே வந்திருந்தார்கள். நிகழ்வு முடிந்து பழனியப்பா மெஸ்ஸில் அனைவரும் இருந்தபொழுது நந்தனை சந்திக்கும் நிமித்தம் அங்கே சென்றேன்.

அங்கேதான் முதல் முறையாக வைகறையைப் பார்த்தேன். நிலையப்பட்டியில் ஆசிரியராக இருப்பதாகவும் இனி அடிக்கடி இப்படி கவிதைக் கூட்டங்களை நடத்ததிட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார்.

பின்னர் வீதிக்கூட்டத்தின் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறிப்போனார். அவர் குறித்த நினைவுகள் தொண்டைக்குழிக்குள் ஒரு சுழலாக எழுகிறது. மீள முடியாத நினைவுச் சுழல் அது.

மிக மென்மையான புன்னகை. அதிராத பேச்சு, உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஒரு சிரிப்பு, வெகு ஆழமான கவிதை வெளிப் பயணங்கள், சக மனிதர்களை மதித்து அவர்களுக்கு வழிகாட்டி அவர்களையும் படைப்பாளியாக்கும் பண்பு, இப்படி இன்னும் எத்தனையோ நற்பண்புகள் நிறைந்தவர் கவிஞர் வைகறை.

கவிதைக் கூட்டங்களுக்கு எவ்வளவு தூரம் என்றாலும் பயணிக்கும் பண்பு என்னை வியக்கவைத்திருக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் இவரது கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு என்னால் செல்ல முடியவில்லை, போதாத குறைக்கு அறைகள் எல்லாம் புக் செய்தும் விட்டார்.

விழா முடிந்தவுடன் ஒரு மன்னிப்பை கோரிய பொழுது, எனக்காக புதுகையில் இருந்து அவ்வளவு தொலைவு பயணிக்க நீங்கள் தயாராக இல்லை. சுரேஷ் மான்யாதான் வந்தார் என்று சொன்னார்.

இன்றும் அப்படியே, தேர்வுத்தாள் முகாமில் இருந்ததால் இறுதி மரியாதைக்குகூட செல்ல முடியவில்லை. கொடுமை என்னவென்றால், மிகச் சரியாக நான் இருக்கும் முகாமிலிருந்து வெகு அருகேதான் வைகறை உயிர் பிரிந்திருக்கிறது.

புதுகை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கணையத் தொற்று அதிகமாக இருக்கவே மீனாட்சி மிஷன் செல்லலாம் என்று காரில் புறப்பட்டு இருக்கிறார்கள், வழியில் நிலைமை மோசமாகி நினைவிழந்திருக்கிறார். மீண்டும் அதே மருத்துவ மனைக்கு வந்த பொழுது மருத்துவர்கள் கையை விரித்துவிட்டிருக்கிறார்கள்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் ஊருக்கு செல்ல முடிவாகி புறப்பட்டுவிட்டார்கள். வாழ்க்கை எத்துனை அநித்தியமானது என்றார் தோழர் எட்வின்.

நிலவன் எப்படி மீளப் போகிறார் என்றும் தெரியவில்லை. திருப்பதி அவர்களின் வயதின் காரணமாக அவரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றால் அவருக்கும் விசயம் போய்விட்டது.

எப்படி வந்தது கணையத் தொற்று..

தேவதா தமிழ் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட தகவலின்படி முன்னர் மஞ்சள் காமாலை நோயினால் தாக்குண்டு இருக்கிறார். அதன் உண்மையான பாதிப்பு கணையத்தில் இருக்க, அதன் பக்க விளைவாக வயிறு வலி இருந்திருக்கிறது. ஆனால் கடைசி நொடி வரை இவர் அல்சர் என்று மட்டுமே மருத்துவம் பார்த்திருக்கிறார்.

அல்சர் என்று வைகறை எடுத்துக் கொண்டது கணையத்தின் செயலிழப்பு என்பது தெரியவில்லை. கடந்த வாரம் வளரி இதழின் மீரா விருது பெற்றதற்காக கவிஞர் கீதா (தேவதா தமிழ்) அவர்களுக்கு ஒரு விருந்து தந்திருக்கிறார். அப்போது சகோ கீதா உடலை கவனித்துக்கொள்ள சொல்லி முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

வழக்கம் போலவே ஒரு புன்னகையுடன் இசைந்திருக்கிறார். ஆனால் அன்று அந்தச் சோதனை நிகழ்ந்திருந்தால்கூட இன்று இந்த பதிவு தேவையில்லாமல் போயிருக்கும்.

ஏன் புதுகைக்கு வந்தார் இவர் என்று பலமுறை குழம்பியிருக்கிறேன். அவரது கவிதை திறம் உணர்ந்தவன் என்கிற முறையில் நீங்கள் இன்னும் உரிய கவனிப்பை பெறவில்லை. ஏதோ எங்கோ ஒரு சிறு தடங்கல் இருக்கிறது என்று சொல்லிவந்திருக்கிறேன்.

தோழர் எட்வின் அவர்களுடன் பேசிய பொழுது வைகறை குறித்த, அவர் தேடல் குறித்த விசயங்களையும் உணர முடிந்தது.

ஏன் வந்தார் புதுகைக்கு என்றே வியந்திருந்த வேளையில் தனது கவியாழத்தால் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர்.

ஒரு நாள் நிச்சயம் வரும் அன்று இதே வைகறையுடன் சரிக்கு சமமாய் அமர்ந்திருந்த நாட்கள் நினைவில் இருக்கும். அவர் அத்தனை உயரத்தில் இருப்பார் என்பது எனது நம்பிக்கை.

கடந்த வீதிக் கூட்டத்தில் ப்ரீசர் பாக்ஸ் என்கிற தலைப்பில் பத்து கவிதைகளை சொன்னார்.

அதில் நினைவில் இருக்கும் ஒன்று
பிறந்த சிசு பயணிக்கும்
ஆட்டோவிற்கும்
ப்ரீசர் பாக்ஸ் கொண்டு செல்லும்
டாட்டா ஏசுக்கும்
நடுவே
சென்று கொண்டிருக்கிறது
எனது வாகனம் ...

கவிதை எனது நினைவில் இருந்து வந்தது, எனவே சில மாற்றங்கள் இருக்கும்.

இது இயல்பான கவிதையா, அல்லது முன்னறிவித்தலா ?

கூட்டத்தில் ஓடியாடி விளையாண்டு களைத்துத் தூங்கிய ஜெய் குட்டி (வைகறையின் மகன்) அவனது பார்வை இன்னும் என் நினைவில்.

முப்பத்தி ஐந்து வயதில் இப்படி இரண்டு ஜீவன்களை விட்டுவிட்டு செல்ல அவசியம் என்ன?

இல்லாத இறைவனிடம் எப்படிக் கேட்பது?

புதுகைக்கு இழப்பல்ல இது தமிழுக்கு இழப்பு.

மீள வழியில்லா வலி.

வைகறை குறித்த பதிவுகள் இனி எழுத எனக்குத் திராணி இல்லை. ஆனால் ஏதாவது செய்தாக வேண்டும்.

முதுகண்களுடன் பேசிவிட்டு சொல்கிறேன்.

அன்பன்
மது


Comments

  1. ஈடுசெய்ய இயலா இழப்பு
    மனம் இன்னும் நம்ப மறுக்கிறது

    ReplyDelete
  2. நகர் மன்றத்தில் அவரைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே தனது கனிவான பேச்சாலும் புன்சிரிப்பாலும், எளிய அனுகுமுறையாலும் என் மனதிற்குள் ஆழமாய்ப் புகுந்தவர். அடுத்தடுத்து நடந்த அத்தனை நிகழ்வுகளிலும் கவுரவம் பாராமல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர். கடந்த வீதிக் கூட்டத்தில்தான் நான் அவரைச் சந்திக்கவில்லை (எனது நலக்குறைவால்) நெடிய காலம் பழகிய உறவுகளோ நட்புகளோ புக முடியா ஆழ்மனத்தில் குறுகிய காலமே பழகிய அவர். மறப்பது அத்தனை எளிதாகப்படவில்லை எனக்கு.

    ReplyDelete
  3. வேதனையாக இருக்கின்றது தோழரே இதனைக் குறித்து கேட்பதற்காக நேற்று தங்களுக்கு பலமுறை போண் செய்தேன் தாங்கள் எடுக்கவில்லை அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. என்ன சொல்ல...ஒரு சகோதரனை ,ஒரு மகனை நான் இழந்து விட்டேன் என்றா?

    ReplyDelete
  5. பாவலர் (கவிஞர்) எவரும்
    சாவடைந்ததாய் வரலாறில்லை
    வைகறை - நீ என்றும்
    வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!

    ஓ! பாவலனே (கவிஞனே)!
    வைகறை என்னும் பெயரில்
    பாக்களால் அறிவை ஊட்டினாய்
    படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!
    கிட்ட நெருங்காமல் எட்டப் போய்
    எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்
    வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
    துயர் பகிருகின்றோம்!

    ReplyDelete
  6. ’வீதி’க்கு வந்த தமிழ் உணர்வாளர். அவரது ஆன்மா உறங்கட்டும்.

    ReplyDelete
  7. முகநூலில் தங்கள் மூலமாகத்தான் செய்தியை அறிந்தேன். பிறகு நண்பர்கள் அவரைப் பற்றிப் பகிர்வதைப் படிக்கும்போது வேதனை மேலிடுகிறது. நட்பு நிலையில் குறுகிய காலத்தில் பழகிய நிலையிலும் எங்கள் மனதில் அதிக தாக்கத்தை உண்டாக்கிவிட்டார். மனதை அதிகம் துயரப்படுத்திவிட்ட நிகழ்வு.

    ReplyDelete
  8. ஜீரணிக்க முடியாத இழப்பு....
    அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  9. மனம் இன்னும் ஆறவில்லை கஸ்தூரி. அவரது அந்த வெள்ளந்தியான சிரிப்புதான் மனதில் நிற்கிறது...ஈடு செய்ய முடியாத இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, வலைப்பதிவர் குடும்பத்திற்கும், நீங்கள் சொல்லியிருப்பது போல் தமிழுக்கும், கவிதை உலகிற்கும்...

    பாருங்கள் அவரது வலைப்பதிவில் ஆன சமீபத்திய கவிதைகளை...ஏதோ ஏற்கனவே திட்டம் இட்டது போல் சாவு பற்றிய வரிகள்...

    மனம் ஆறவில்லை...ஏன் ஏன் என்ற கேள்விகள். தன் உடல் நிலையை இப்படிக் கவனிக்காமல் விட்டுவிட்டாரே என்ற ஆதங்கமும்....

    நம்பமுடியவில்லை எங்களேக்கே என்றால் புதுகைவாசிகள், நண்பர்கள் உங்கள் எல்லோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எப்படி இருக்கும்....திரும்பப் பெற முடியாத வாழ்க்கையின் உண்மையான பக்கம்...வேதனை..

    ReplyDelete
  10. ஆறுதல் அடையுங்கள். மருத்துவ நுட்பம் முன்னேறிய இன்றைய காலக் கட்டத்திலும் அகாலமரணங்கள் தவிர்க்க முடியவில்லை என்பது வேதனை.அதுவும் சிறந்த பண்பாளர் கவிஞரை இழந்தது பேரிழப்புதான்

    ReplyDelete
  11. such happenings are not in our circle of influence.We can only worry about it but this man lived his life that is why his absence is felt by people beyond his family. Let his soul rest in peace.

    ReplyDelete
    Replies
    1. This is the result of wrong diagnostic...

      I could not digest the way he moved around people, paid regular visits to Veethi Members and encouraged them to write on... this sort of nice persons die soon ...

      I don't understand..

      you will be surprised to know that he is a teetotaler

      nice man, hygienic habits, wonderful social skills...
      a father who had sung his experience with his son as an anthology ...

      and all of a sudden he is gone.

      for the past there days I have been asking myself ..

      Is he dead?
      Is this for real?

      and I could understand the pain you might have encountered when Nihkil was gone ..

      painful similarities ..

      thanks pa for caring words

      Delete
  12. பழகியதில்லை என்றபோதும் நேற்று இரவில் முகநூல் பார்த்து செய்தி அறிந்தபோது பதைபதைத்தது மனது. இளவயதில் இறப்பு என்பது மீள முடியாத சோகம்.அவரின் கனவுகள் நினைவாகட்டும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஏதாவது செய்கையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இயன்றதை செய்கிறேன். நன்றி!

    ReplyDelete
  13. அன்புமிகு நண்பர்களுக்கு

    தங்கள் உணர்வுகளை பதிவு செய்திருகிறீர்கள் ...

    ஒரு கடும் மனஅதிர்வில் இருக்கிற பொழுது நாமேல்லாமே அப்படிதான் அதிர்ந்து போயிருக்கிறோம் என்கிற ஒருமை உணர்வைத் தந்தது உங்கள் கருத்துக்கள்.


    முப்பத்தி ஐந்து வயதில் ஒருவர் கணையம் செயலிழந்து மரிக்கிறார் என்றால் எழும் வழக்கமான கேள்விகள் என் மனதில் ஒருமுறை கூட எழவில்லை.

    அச்சச்சோ என்று சொல்லி ஒரு ஐந்து நிமிடங்கள் விசாரித்துவிட்டு தணிந்த குரலில் "குடிப்பாரோ?" என்கிற கேள்விகள் ஒரு வேதனைச் சிரிப்பை மட்டுமே வரவழக்கின்றன..

    டாஸ்மாக் தமிழகம் அல்லவா இப்படிக் கேள்விகள் எழத்தான் செய்யும்.

    வைகறையை நன்கு அறிந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் இன்னும் தமிழகத்தில் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.

    வைகறை ஒவ்வொரு பைசாவையும் மிகுந்த கவனத்தோடு செலவிடுவார். வயதிற்கே உரிய தில் மனப்பான்மை காரணமாக மருத்துவத்தை தள்ளிப் போட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

    தமிழ் சாதிகளில் அவர் எதைச் சேர்ந்தவர் என்று தெரியாது, அற்புதமான மனிதர்கள் அத்தகு சிறுமைகளை கடந்தவர்கள். வைகறையும் ஒரு அற்புதர்தான்.

    தன் கவிதைகள் உரிய அங்கீகாரத்தை பெறவில்லை என்பது அவரது ஆழ்மன வடுவாக இருந்திருப்பது கண்டு நான் திடுக்கிடுகிறேன்.

    கவிஞர்கள் அங்கீகாரம், குழுசேர்த்தல் போன்றவற்றில் இருந்து வெகுதூரம் விலகியிருக்க வேண்டும் என்பதே வைகறையின் வடு நமக்குச் சொல்வது.

    விருதுகளுக்கு, ஏற்புகளுக்கு எங்கும் மென்மையான மனம் கொண்டோர் எழுத்துலகிற்குள் மிக கவனமாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டும் என்பதையும் கூடவே உணர்ந்தேன்.

    விரிவாக பேச விருப்பமே இல்லை என்றாலும் இதைப் படிக்கும் கவிஞர் பெருமக்கள் இனியாவது யாரையும் விலக்காமல் அவர் மனம் நோக செயல்படாமல் இருப்பது அவர்களின் மன நலத்திற்கு மட்டுமல்ல தமிழ் கவிதை உலகத்திற்கும் நல்லது.

    இனி எப்படி விலக்கி வைப்பார்கள் வைகறையை?

    அவன் உசரம் என்ன என்பதை இறைவன் அறிவிக்கத்தான் இவ்வளவு துரிதமாய் அவனை உயர்த்திவிட்டான்.

    தாரா பாரதியின் வரிகள் இன்னும் என் கண்முன் நிற்கின்றன
    "விரல்கள் பத்தும் மூலதனம்"

    இப்படி காலத்தை வெல்லும் கவிதை வரிகள்தான் உண்மையான விருது, ஏற்பு மற்றும் அங்கிகாரம்

    அதை விடுத்து நம்மை இந்தக் குழு ஏற்கவில்லையே அந்தக் குழு பேசவில்லையே என்று வருந்தினால்.

    நீங்கள் உங்களுக்கு துரோகம் இழைக்கிறீர்கள்..

    என்னிடம் நீங்கள் ஏன் என் தளம் வரவில்லை என்று நட்போடு கோபித்துக் கொள்ளும் நண்பர்களுக்கும் இதுவே பதில்..

    யாருக்காவும் எழுத வேண்டாம் ...

    உமக்காக உமது இதயங்களின் ஆழத்தில் இருந்து ஆத்மார்த்தமாய் எழுதுங்கள் ...

    எழுத்தை ரசியுங்கள் நீங்களே ரசிகிரமாதிரி இருந்தால் ஒரு தேநீரை ஆனந்தமாய் ரசித்துக் குடித்தவிட்டு ... அந்த உணர்வில் இருந்து வெளியில் வந்து மீண்டும் அடுத்த படைப்பை எழுதத் துவங்குங்கள்..

    நீங்கள் அமரத்துவம் பெறுவீர்கள்

    வைகறையின் எழுத்தினைப் போலவே...

    டாட்

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்துரை மேலும் கண்ணீரூடன்...

      Delete
  14. இரங்கல் பதிவு தொடங்கி பின்னூட்டம்வரை படித்துவிட்டேன்...

    கனத்த மெளனம் மட்டுமே மிஞ்சுகிறது... ஒரு இயலாமை பெருமூச்சுடன் !

    - சாமானியன்

    ReplyDelete
  15. அவரின் கருத்துகளையும் அவரின் பணிகளையும் முன்னெடுத்துச் செல்வதே அவருக்கு செய்யும் நன்றி

    ReplyDelete
  16. அவரது பிரிவைக் காட்டும் உங்கள் மன வேதனையை கவிதை போல வெளியிட்டிருக்கிறீர்கள். அதுவே அவருக்கு அஞ்சலி ஆகட்டும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  17. இந்தத் தொடுப்பில் போயி வாசிச்சுப் பார்த்தேன்..

    http://www.medicalnewstoday.com/articles/160459.php?page=3

    இந்த பிரச்சினை உள்ளவங்கள 70% அல்கஹால் பிரச்சினை உள்ளவங்கனு சொல்றாங்க.. யாரையும் நாம் தூரத்தில் இருந்து ஜட்ஜ் பண்ணுவது தவறு. இவர் அந்த 30% இல் இருந்து இருப்பார் போல இருக்கு.

    அறிகுறிகளை வாசிச்சுப் பார்த்தால் வயிற்று வலி, டிப்ரெஷன் இருக்கும் என்று சொல்றாங்க. அப்புறம் ப்ளட் க்ளுக்கோஸ் அதிகமாகும்னு சொல்றாங்க, இந்த நோய் உள்ளவங்களுக்கு டைப் 1 டயபெட்டிஸ் வர வாய்ப்பிருக்கு என்கிறார்கள். இவருக்கு டயபெட்டிஸ் இருந்ததா?? என்னனு தெரியவில்லை..

    What can we learn from his demise? Let us take care of ourselves when we have symptoms like this..That costs money! Can we afford ? Do we have money for this kind of medical expenses? That's another big question!

    மஞ்சள் காமாலை வந்தால் கவனமாக இருக்கணும். கவனமா இருக்கிறதென்றால் என்ன? டயட்.. நோ அல்கஹால்..பணம் செலவழிச்சு என்னனு பார்க்கணும்..என்னனு பார்த்த பிறகு மருத்துவம் செய்ய பணம் வேணும்..ஆக பணம் வேணும்..பணம் வேணும்..இவருக்கு எந்தளவுக்கு வசதி இருந்ததுனு தெரியலை..

    My condolences to his family :(

    ReplyDelete

Post a Comment

வருக வருக