கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க (எப்படிக் கேட்க வேண்டும் ஆங்கிலத்தை)ஆங்கிலம் இங்கே மட்டுமல்ல அகிலம் எங்குமே பரவி நிற்கும் மொழி.வேர்கள் பிராட்டோ இந்தியன் மொழிகளில் துவங்கி நார்த் ஜெர்மானிக் மொழிகள் வழி இன்று உலக மொழியாக வளர்ந்து நிற்கும் ஆங்கிலம் தமிழர்களை மட்டுமல்ல கொரியர்களையும் மயக்குகிறது.


கொரியர்கள் ஆங்கிலத்தை தெளிவாக பேச தங்கள் நாக்குகளில் ஒரு அறுவைச் சிகிச்சையை செய்துகொள்வதை கலாச்சாரமாக  வைத்திருகிறார்கள். மொழியியல் வல்லுனர்கள் அய்யா சாமிகளா அப்படிலாம் ஒண்ணுமில்லை காசையும் நாக்கையும் பாத்துகங்க பத்திரமா என்று கூவிக் கூவி கத்தினாலும் கொரியர்கள் கேட்பதாக இல்லை. ஒன்னரை லெட்சம் ரூபாய்களை இந்த அறுவைச் சிகிச்சைக்காக செலவிடுகின்றனர்.

எந்த மொழியும் முதலில் கேட்பதில் இருந்துதான் துவங்குகிறது. நமது மாணவர்கள் பத்தும் இரண்டுமாக பனிரண்டு ஆண்டுகள் பயின்றாலும் ஆங்கிலத்தைப் பேச ஏன்  தயங்குகிறார்கள் என்பதற்கான உண்மையான பதில் இங்கேதான் இருக்கிறது.

ஆங்கிலப் பாடத்தை தமிழில் படிக்கிறார்கள்,  எளிய ஆங்கில உரையாடளுக்கோ, சுலபமாக கைவரும் மொழிச் செயல்களுக்கோ நமது முறை முக்கியத்துவம் தருவதே இல்லை. பெரிய மனசுடன் பனிரெண்டாம் வகுப்பில் இருபது மதிப்பெண்கள் வாய்மொழித் தேர்வுக்கு இருக்கிறது. ஆனால் பத்தாம் வகுப்பில் அப்படியேதும் விபத்துக்கள் நடந்துவிடக் கூடாது என அமைப்பும் ஏன் சங்கங்களுமே உறுதியாக இருக்கின்றன.

சரி நாம் பதிவின் தலைப்புக்கு வருவோம்

ஆங்கிலத்தை கேட்பது எப்படி? ரொம்ப நாள் எனக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த விசயம் இது. இளங்கலை ஆங்கிலத்துக்கு பிறகு கல்வியியல் கல்லூரியில் பேரா.ஜம்புனாதனை சந்திக்கிறவரை என்னால் தெளிவாக ஆங்கிலத்தை கேட்க முடியாத கையறு நிலையிலேயேதான் இருந்தேன்.

பேரா.ஜம்புநாதன் ஒரு நான்கு வார பயிற்சியை முன்மொழிந்தார். 

நாற்பத்தி நான்கு ஒலிகளை வெறும் இருபத்தி ஆறு எழுத்துக்களை கொண்டு உருவாக்குவதாலேயே ஆங்கிலம் மண்டை காயவைக்கும் ஸ்பெல்லிங் கொண்ட வார்த்தைகளோடு  இருக்கிறது.  இந்த நாற்பத்தி நான்கு சத்தங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்வது அதைமட்டுமே கேட்பது என்பதுதான் பயிற்சியின் துவக்கம். 

உதாரணத்திற்கு  ப்லோசிவ் சத்தம் எதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஆறு ப்லோசிவ் சத்தங்கள் இருக்கின்றன. /p/,/b/,/t/,/d/,/k/,/g/ என்பவைதான் அவை. 


அதென்ன ப்லோசிவ் என்பவர்களுக்கு  இந்தவகை ஒலிகள் உருவாகும் பொழுது வாயினுள் காற்று அழுத்தப் பட்டு திடுமென வெளியாகும். ஒரு வெடிப்பு மாதிரி. எனவேதான் இவை வெடியொலிகள்! ப்லோசிவ் என்றால் எக்ஸ்ப்ளோசிவ்தான்! 

சந்தேகம் இருந்தால் ப்பா /p/ என்று சொல்லும் பொழுது உங்கள் உள்ளம் கைகளை வாயிற்கு நேரே வைத்துப்பாருங்கள். ஒரு அழுத்தமான வேகக் காற்று உங்கள் உள்ளங்கையை மோதும். 

ப்பா போதுமப்பா என்று சொல்கிறீர்களா, சரி இனி செயல் திட்டத்திற்கு வருவோம். 

முதல் வாரம்

பி.பி.சி வானொலியையோ, அல்லது ஏதாவது ஒரு போட்காஸ்ட் சானலையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். நினைவிருக்கட்டும் நீங்கள் கேட்கப் போவது வார்த்தைகளை அல்ல வாக்கியங்களையும் அல்ல ஒரே ஒரு சத்தத்தை மட்டுமே! 

ஆறு சத்தங்களில் ஒரு சத்தத்தை தேர்ந்தெடுத்து கேட்கவும். இப்படிக் கேட்கும் பொழுது உங்கள் கவனம் குவிகிற அற்புதத்தை நீங்கள் உணர்வீர்கள். முதல் முதல் நீங்கள் தேர்ந்தெடுத்த ஒலியைக் நீங்கள் கண்டறிகிற அந்தத் தருணம் உங்கள் வாழ்நாள் முழுதும் நினைவில் இருக்கும். இப்படித் தொடரட்டும் ஒரு வாரம். வேண்டுமானால் இரண்டாம் நாள் இன்னொரு சப்தத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த ஒருவாரப் பயிற்சியிலேயே உங்களுக்கு பல ஆச்சர்யங்கள் கிடைக்கும். 

இரண்டாம் வாரம்

நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ இரண்டாம் வாரம் உங்கள் காதில் வார்த்தைகள் விழும். இது வார்த்தைகளின் வாரம் தொடருங்கள். 

மூன்றாம் வாரம் 

அப்புறம் என்ன மூன்றாவது வாரப் பயிற்சியில் வார்த்தைகள் வாக்கியங்களாக நீண்டிருக்கும். தொடரட்டும் பயிற்சி. என்ன சவால் என்றால் நமது மூளை வாக்கியங்களை புரிந்துகொள்ள பயிற்சி தரும் வாரம் இது. 

நான்காம் வாரம்   

இறுதி வாரம். பயிற்சியில் இருப்பவர்களின் மூளைக்கு சிறகுகள் முளைக்க வேண்டும்.  அதாவது மூளை ஒரு வாக்கியம் காதில் விழுந்தவுடனே அதன் அர்த்தத்தை கிரகிக்கும். இந்தத் திறன் கிளைமாக்ஸ் என்பதால் இடைவிடாத பயிற்சி அவசியம். 

இது எனக்கு வொர்க் அவுட் ஆன பயிற்சி என்பதால் உங்களுக்கும் நம்பிக்கையோடு பரிந்துரைக்கிறேன். 

மொழித்திறனின் முதல் படியை வெற்றிகரமாக கடக்க வாழ்த்துக்கள். 

அன்பன் 

மது 

இதத்தாங்க இங்கே எழுதினேன் அழுத்துங்க சும்மா 

Comments

 1. பாடப் பாட ராகம் என்பதைப் போல கேட்கக் கேட்கத்தான் மொழியும் புரியும் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள். ஆனால் பள்ளிக்கூடம் படித்த காலத்தில் ஆங்கில ஆசிரியர்கள் அதை எளிமையாக்கிக் கொடுக்கவில்லை. பயமுறுத்தியே வைத்தார்கள் . ஆங்கிலம் சரியாக தெரியாத ஆங்கில ஆசிரியர்கள்தான் அதிகளவில் இருக்கிறார்கள் என்றொரு ஆய்வு உண்டு.

  ReplyDelete
  Replies
  1. இன்னுமே எளிதாக வேண்டும் பயிற்று முறைகள் ...
   ஜாலி போனிக்ஸ் இதற்கான நல்லதோர் தீர்வு

   Delete
 2. கேட்கும் நிலை பற்றிய உத்தி நன்றாக உள்ளது. புகுமுக வகுப்பு வரை தமிழ்வழி படித்த எனக்கு ஆங்கிலம் என்பது சற்று சிரமமாக ஆரம்பத்தில் இருந்தது. சுருக்கெழுத்துப் பயிற்சிக்காக தி இந்து ஆங்கில நாளிதழ்களிலிருந்து கட்டுரைகளை எழுத ஆரம்பித்து, பின்னர் (1975 தொடங்கி) அவ்விதழின் வாசகனாகி இன்றுவரை படித்துவருகிறேன். பின்னர் ஆங்கிலம் மீதான பயம் குறைந்து நெருக்கம் அதிகமானது.தற்போது என்னுடைய பல நண்பர்கள் நான் ஆங்கில இலக்கியம் படித்தவன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் முனைவரே
   உண்மைதான் நீண்ட நாள் வாசிப்பு உண்மையில் புதிதாக ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களைவிட செழுமையான வாசித்தல் அனுபவத்தை தரும்

   Delete
 3. வித்தியாசமான கற்பித்தல்.. இப்படியெல்லாம் எளிய முறையில் கற்பித்தால் எந்த மொழியும் வசமாகுமே.. ஆண்டுகள் பல ஆனபின்னும்கூட எனக்கு ஆஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பைப் புரிந்துகொள்வதில் சிக்கலுண்டு.. இந்த முறையில் பயிற்சி செய்துபார்க்கிறேன். மிக்க நன்றி மது.

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் பேசும் ஒற்றை ஒலியின் பாணி ஒன்றை மனதில் வாங்கி தொடர்ந்து பயிற்சி செய்தால் போதும் சகோதரி
   வாழ்த்துகள்

   Delete
 4. நல்லதொரு பதிவு....

  ReplyDelete
  Replies
  1. வாங்க மைத்துனரே

   இந்த பக்க காணவே முடியல
   அடி பலமோ ..
   இங்கேயும் அதே கதைதான்

   Delete
 5. வெல்டன் கஸ்தூரி! அருமையான பதிவு! //ஆங்கிலப் பாடத்தை தமிழில் படிக்கிறார்கள், எளிய ஆங்கில உரையாடளுக்கோ, சுலபமாக கைவரும் மொழிச் செயல்களுக்கோ நமது முறை முக்கியத்துவம் தருவதே இல்லை.// உண்மை இதுதான் அதனால்தான் நம் இந்தியாவிற்குள்ளேயே ஒவ்வொரு மாநிலத்தின் ஆங்கில உச்சரிப்பும் மிக மிக வித்தியாசமாக இருக்கும். கேரள ஆங்கிலம் எல்லோரும் அறிந்ததே. அது போல ஆந்திரக்காரர்கள். வட இந்தியர்கள். இப்படி ஒருவரது ஆங்கில உச்சரிப்பை வைத்து அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆம் கேட்க கேட்கத்தான் மொழித்திறன் வளரும். கற்றலில் கேட்டல் நன்றே! வள்ளுவன் சும்மாவா சொன்னார் இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்...

  மிகவும் பிடித்த ஒரு சப்ஜெக்ட் ஃபோனிட்டிக்ஸ் கற்றல்/உச்சரிப்பு. உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இது உதவியது. எல்லோருக்கும் உதவும். ஐயமில்லை.இதற்குப் பிறகு சிலபிள் பிரித்து உச்சரிப்பு எங்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எங்கு சாஃப்டாக...எங்கு மறைமுகமாக என்று...இப்போதும் கேட்டுக் கற்றுக் கொண்டிருக்கின்றேன்...

  மாணவர்களுக்கு மிகவும் உதவும்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எங்கள் பேராசான் ஜம்புனாநாதன் பேசும் ஆங்கிலம் தேர்ந்த இசை போலவே இருக்கும்

   காரணத்தை அவரே சொல்வார்
   பேசவும் பயிற்சி எடுக்க வேண்டும்.

   ஆங்கிலம் ஒரு அழுத்தம் சார் மொழி ..
   விரைவில் அதுகுறித்தும் எழுவேன்.

   ஒரு விசயம் உறுதி இசைப் பயிற்சியினைப் போலவே ஆங்கிலத்தையும் உரிய அழுத்தங்களுடன் பயிற்சி செய்யவேண்டிய மொழி ...

   தொடர்வோம் சகோதரி

   Delete
 6. ஆங்கிலம் கற்க எளிய பயனுள்ள உத்தியை பரிதுரைத்திருக்கிறீர்கள் .கேட்டல் கவனித்தல் மூலமாக நல்ல பயன் விளையும். தொடரட்டும் ஆலோசனைகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete

Post a Comment

வருக வருக