கோடை நகர்ந்த கதை கவிதைத் தொகுப்பு கனிமொழி ஜிநான் பெரிதும் மதிக்கும் தோழர் அவர். பத்து எம்.ஏ பட்டங்களை முடித்தவர். இயல்பாகவே வாசிப்பின்  சுவை அறிந்தவர். ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னார் என்னங்க அப்துல் ரஹ்மான் கவிதை எழுதுறார். கவிதைனா புரிய வேண்டாமா என்று கோபப்பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.

நிகழ்ந்து ஒரு தசாப்தம் ஆனா பின்னும் இன்னும் நினைவில் நிற்கும் உரையாடல் அது. பத்து முதுகலைப் பட்டங்களோடு இருக்கும், தீராத வாசிப்புத் தாகத்துடன் இருக்கும் ஒருவர் நான் கொண்டாடும் கவிக்கோவின் கவிதைகள் குறித்து அப்படிச் சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியதே காரணம். 


அப்துல் ரஹ்மானின் கவிதைகளின் வரிகளில் ஒரு சின்ன முடிச்சு இருக்கும். முடிச்சின் சரியான கையிற்றை அவிழ்க்கும் பொழுது ஒளிந்திருக்கும் கவிதையின் பொருள் ஓடிவந்து நம்மைத் தழுவும். 

இப்படித் தனித்ததோர் அனுபவத்தை வழங்குவதாலேயே என் பெருவிருப்பிற்கு உரிய கவிஞராக கவிக்கோ இருக்கிறார்.   

ஆனால் இப்போது இளம்தலைமுறைக் கவிஞர்கள் ஒரு முடிச்சுக்குப் பதில் பல முடிச்சுக்களை வரிகளில் பொதித்து வாசகர்களை அரட்டி வருகிறார்கள்.  உயரப் பறக்கும் கழுகின் காலிடை மீனாக என்னை உணர வைக்கின்றன சில கவிஞர்களின் நவீன முயற்சிகள். 

இந்தச் சூழலில் சகோதரி கவிஞர் கனிமொழி ஜி அவர்களின் கோடை நகர்ந்த கதை தொகுப்பு அதி முக்கியமான ஒன்றாக இருக்கிறது.  எளிய வார்த்தைகளில் விரியும் கவிதைகள் இந்தத் தொகுப்பெங்கும் ஆசிரியரில்லா வகுப்பறையின் மழலைகளின் சிரிப்பாக நிறைந்திருக்கின்றன.

பெண் மனம் புதிரானது, ஆழமிக்கது என்ற போலியான பிம்பத்தை கவிஞரின் அழகிய  கவிதைகள் உடைத்துச் சுக்குநூறாக்குகின்றன.  அவை வாசகனின் இதயத்தை வாஞ்சையுடன் வருடுகின்றன, அவன் தலை கோதும் மென்விரல்களாக இருக்கின்றன.

புரிஞ்சுக்கோ  பார்ப்போம் என்று வாசகனிடம் சவால்விடும் படைப்புச் செருக்கு மிக்க கவிதைகள் சிலவும் நிகழ்கால கவியுலகின் போக்கை தழுவி நிற்பதற்கு சாட்சியாக இந்தத் தொகுப்பில் இருக்கின்றன என்றாலும் அவை விரல் விட்டு எண்ணிவிடும் அளவிலேயே இருக்கின்றன.

சகோதரி நமக்கு டிரன்ட்  முக்கியம் என்று நினைத்து இந்தத் தொகுப்பை செய்திருந்தால் அந்தக் கவிதைகள் வாசகனின் மென்னியை  முறித்திருக்கக்கூடும்! நல்லவேளை கவிஞர் நம்மீது  கருணையோடு இருக்கிறார்.

தொகுப்பில் உணர்வுகள் மரத்துப் போன விளிம்பு நிலை தொழிலாளியைப் பற்றிய ஒரு கவிதை இங்கே, படிக்கும் பொழுது எத்துனை அப்பாவித் கட்சித் தொண்டர்கள் நினைவில் வருகிறார்கள்!

புகார்களற்றவன் 

சிவிகை சுமப்பவனுக்கு 
தன் காய்ப்பேறிய
தோள்களைக் கொத்தும் 
காகம் குறித்து 
புகார்களேதும் இல்லை.

இன்னொரு கவிதையில்

முத்தமிட்டு உலவிய மீன்கள்
உனக்குக்கடல் வரையத்தெரியுமா?
என்று கேட்கின்றன.

எனும் போது சின்ட்ரெல்லாவை அவளது மனம் மயக்கும் மந்திர ஆடையோடு சந்திக்கிற அனுபவம் கிடைக்கிறது.

இன்னொரு கவிதையில்

இது பறவையின் பாதை தொடராதே
என்பின்னால் சுவடுகள்  ஏதுமில்லை 

என்கிற பொழுது அந்தக் கவிதை நமது மனவெளியில் எவ்வளவு அழுத்தமாக தனது காலடிச் சுவடுகளைப்பதிக்கிறது.

வேர்பற்றுகிறேன் எனும் கவிதை பல்லாண்டுகளாக ஆண்களால் உருவாக்கப் பட்ட பெண் மனம் ஒரு புதிர் என்கிற படிமத்தை ஆர்.டி.எக்ஸ்ஆக தகர்க்கிறது.

வருவாய்த் துறையின் உயர் அலுவலர் கவிஞர் என்பது ஆட்டிடையன் அரசாங்கம் என்கிற கவிதையைப் படிக்கிற பொழுது நினைவில் வந்து ஒரு நகைப்பைத் தருகிறது.

மூடிக் கொண்ட விழிகளுக்குப் மழை முகிலின் வண்ணம் என்றோர் கவிதை முடிகிறபொழுது நமது மனவெளிகளில் அவதார புருஷன் ஒருவனின் பின்னணி இசை ஒலிக்கிறது.

கவிதையில் மெல்ல பின்முதுகு பற்றி நெளிந்தேறும் அரவமென ஒரு துரோகம் என்கிற பொழுது நமது வாழ்வின் பக்கங்களில் நுழைந்து, நமது அனுபவங்களை கிளறி மனதை  ஒரு மௌனமான விசும்பலாய் வெடிக்கவைக்கிறது.

கதவுகள் அவசியம் எனச் சொல்லும் கவிதை ஓர் அலாதி அனுபவம். ஒரு இருபதாண்டுகளைப் பின்னோக்கிச் சுழற்றி பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிகப்பை மனதில் ஓடவிட்டது!

இவள் என்று மட்டுமே தலைப்பிட்டிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும் கெட்ட நல்லவள் - ஒருவேளை கவிஞர் தனது கவிதைக் குழந்தைக்கு திருஷ்டிப் பொட்டு ஒன்று வேண்டும் என்பதால் இப்படித் தலைப்பிட்டிருக்கலாம்.

காற்புள்ளியில் முட்களாய் முளைத்திருக்கும் கண்ணீர், சுடலையின் பாடலில் மலரும் நந்தவனம் என வரிசை கட்டும் கவிதைகளைப் படிக்கையில் சிறகுகளும், சிலுவைகளும் நமக்கும் சித்திக்கின்றன.

கவிஞர் இந்தத் தொகுப்பின் மூலம் தனது மொழிச் செழுமையையும், லாவகத்தையும் நிறுவியிருக்கிறார்! கூடவே அடுத்தத் தொகுப்பிற்கான ஆவலையும் ஏற்படுத்துகிறார்.

நூலை நீண்ட பயணத்திற்கு பின்னர் எனக்கு அளித்த கவிஞர் வைகறைக்கு நன்றி.

நூல் விவரம் : கோடை நகர்ந்த கதை (கவிதைத் தொகுப்பு)
கவிஞர்     : கனிமொழி.ஜி (இவர் அவர் அல்ல)
வெளியீடு : உயிர்மைப் பதிப்பகம்
விலை     : 65/- ரூபாய்கள்
ISBN         : 978-93-55014-35-0


நல்லது நண்பர்களே
அடுத்து
யூதாசின் முத்தத்தோடு வருகிறேன்

அன்புடன்
மது 

Comments

 1. நல்ல விமர்சனம்...கவிதையாக சில இடங்களில்”உயரப்பறக்கும் கழுகின் காலிடை மீனாக”சூப்பர்

  ReplyDelete
 2. மதிப்புரையைக் கண்டேன். வாங்கிப்படிக்கும் ஆவல் எழுந்துவிட்டது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே

   Delete
 3. அழகான விமர்சனம்...//இது பறவையின் பாதை தொடராதே
  என்பின்னால் சுவடுகள் ஏதுமில்லை // அட!!! அருமை! அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete

Post a Comment

வருக வருக