கபாலி - பிரைன் ஸ்பைன் சர்ஜன் ரிபோர்ட்

தோழர் மரு.மரியானோ அண்டோ ப்ருனோ மூளை நரம்பியல் நிபுணர், வெகு ஆழமான எழுத்துக்கு சொந்தக்காரர், விக்கிபீடியர், முகநூல் நட்சத்திரம் அவரது  பார்வையில் கபாலி

கபாலி : ரஞ்சித் அவர்களுக்கு ஒரு ரஜினி ரசிகனின் கடிதம்
*****************************************************************
முதல் நாள் படம் பார்த்த பலருக்கும்,
இன்று படம் பார்க்கும் எனக்கும் உள்ள வித்தியாசங்கள் சில
1. நான் அட்டக்கத்தி, மெட்ராஸ் இரு படங்களையும் பார்க்கவில்லை
2. மலேசிய தமிழகர்களின் வரலாறு குறித்த பல இடுகைகளை (மறுமொழிகளில் உள்ளன) படித்து விட்டு படம் பார்க்க சென்றேன்
எனவே1. எனக்கு ரஞ்சித் மேல் பெரிய எதிர்பார்ப்பு இல்லை
2. என்னால் பல காட்சிகளை / வசங்களை எளிதாக விளங்கி கொள்ள முடிந்தது
-oOo-
திரைக்கதை இழுவை என்று பலர் சொல்லக்காரணங்கள் இரண்டு
1. அந்த திரைக்கதையின் ஊடே மற்றொரு கதை - மலேசிய தமிழர்களின் வரலாறு - பயணிக்கிறது. அந்த மற்றொரு கதையையும் புரிந்து கொள்ள தேவைப்படும் கூடுதல் காட்சிகள் / வசனங்களை புரிந்து கொள்ள இயலாதவர்கள் கதையை இழுவை என்று கருதலாம் .
2. கீழே உள்ளது
-oOo-
பலரும் சொல்வது போல் இது அவசர கதியில் செய்யப்பட்ட கதை அல்ல
ஒவ்வொரு பிரேமும், வசனத்தில் ஒவ்வொரு வார்த்தையும் இழைத்து இழைத்து செய்யப்பட்டிருக்கின்றன
-oOo-
1980களுக்கு பிறகு தமிழில் புதிதாக வந்த இயக்குனர்கள் அனைவருக்கும் ரஜினியை வைத்து படம் பண்ணுவது என்பது கட்டாயம் ஒரு கனவாக இருக்க வேண்டும். என்னத்தான் பின்நவீனத்துவம், மாற்று சினிமா என்று ஜல்லியடித்தாலும், ஒரு இயக்குனர் நம்பர் ஒன் என்று என்று கருதப்படவேண்டும் என்றால் அவர் ரஜினியை வைத்து ஒரு படம் செய்யவேண்டும் என்பது எழுதப்படாத விதி
அனைத்து இயக்குனர்களும் "என்றோ ஒரு நாள் நமக்கு ரஜினியை இயக்க வாய்ப்பு வரும், அன்று அவருக்கு இந்த கதையை பயன்படுத்த வேண்டும், இந்த காட்சிகளை வைக்க வேண்டும்" என்று தங்களின் மனதில் ஒரு கதையை, திரைக்கதையை, காட்சிகளை, வசனங்களை சேகரித்து கொண்டே இருப்பார்கள்
பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. சிலருக்கு அந்த வாய்ப்பு தாமதமாகும் போது, அவர்கள் வேறு நடிகர்களுக்கு அந்த கதையை பயன்படுத்திவிடுகிறார்கள்
சிகப்பு ரோஜாக்களும், முதல்வனும் , சாமியும், ஏன் ஜிகர்தண்டாவும் கூட ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதைகள் என்பது எனது திடமான நம்பிக்கை.
ரஞ்சித்தும், அப்படி ஒரு கதையை செதுக்கியுள்ளார். அவரது நல்ல நேரம், அவருக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைத்து விட்டது. ஒரு கல்ட் கிளாசிகை (Cult Classic) அவரால் வழங்க முடிந்திருக்கிறது . . . . ஆனால் இந்த படம் ரஜினி ரசிகர்களை முழுவதும் திருப்தி படுத்தியுள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்
-oOo-
ரஞ்சித் பேசும் அரசியலை பிடிக்காதவரகள்
ரஞ்சித்தை பிடிக்காதவர்கள்
ரஜினியை பிடிக்காதவர்கள்
தானுவை பிடிக்காதவர்கள்
சினிமாவை பிடிக்காதவர்கள்
இவர்களில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள்
என்று ஏகப்பட்ட பிரிவினர் படத்தை பார்க்கமலேயே படம் மோசம் என்று பரப்புவார்கள்
அவர்களை விட்டு விடலாம்
இந்த நிலையில்
ரஜினி ரசிகர்கள் மற்றும் சராசரி ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து கூட "படம் சூப்பர் ஹிட்" என்ற உற்சாக குரல் வராமல், "எனக்கு பிடித்திருக்கிறது", "நல்லாத்தான் இருக்கு" என்ற குரல்களே வரக்காரணம் என்ன ?
-oOo-
ரஞ்சித்தின் தவறுகள் மூன்று
1. இறுதிகாட்சி (Climax)
2. மலேசிய தமிழர்களின் வரலாற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்காதது
3. பாடல்கள்
-oOo-
படத்தின் மிகப்பெரிய சொதப்பல், அந்த முடிவில்லாத அல்லது ரசிகனிடம் முடிவை விடும் இறுதி காட்சி (Open Climax) . . . . ரஜினி டைகரை சுடுவது போல் முடித்திருந்தால், ரஜினி ரசிகர்கள் ”மகிழ்ச்சி”யுடன் படத்தை விட்டு வெளிவந்திருப்பார்கள்
தமிழ் படங்கள் மூன்றாம் நபர் கதை கூறும் முறையில் (third-person narrative modeல்) எடுக்கப்பட்டாலும், சராசரி தமிழக ரசிகன், தன்னைத்தானே கதாநாயகனாக உருவகித்து கொண்டு தான் அந்த படங்களை பார்க்கிறான். தானே கதாநாயகியுடன் டூயட் பாடுகிறான். தானே வில்லனை அடிக்கிறான்.
படத்தை விட்டு வெளியில் வரும் போது ரசிகனுக்கு ஒரு உற்சாக மனநிலை (Feel Goodness) தேவை . . . அப்பொழுது தான் அடுத்த நாள் அவன் அதே படத்தை பார்ப்பான் . . . முதல்வனிலும், சாமியிலும், படையப்பாவிலும், தசாவதாரத்திலும், அவ்வை சண்முகியிலும், மங்காத்தாவிலும், ஜிகர்தண்டாவிலும் ஹிட் ஆன அனைத்து படங்களிலும் திரையரங்கை விட்டு வெளியேறும் போது இந்த நேர்மறை எண்ணம், உவகை எல்லாம் கட்டாயம் இருக்கும்.
எந்திரன் படத்தின் இறுதி காட்சியில் சிட்டி ரோபோ உயிருடன் இருப்பது போல் காட்டியது அந்த படத்தில் வசூலுக்கு ஒரு காரணம். இந்தியன் படத்தில் சந்துரு இறந்த பிறகு, சேனாதிபதி தப்பிப்பது போல் காட்டியதால் தான் படம் வெற்றி பெற்றது. இல்லை என்றால் அது குருதிப்புனல் தான்.
ஐ படத்தில் கதாநாயகன் மெதுவாக மீண்டும் தனது உருவத்தை பெறுவதை காட்டினார்கள், ஆனால் தாமதமாக. இறுதியில் பெயர் போடுவது (end credits) வரை இருந்தவர்கள் மட்டுமே அந்த படத்தின் இறுதியில் நேர்மறை எண்னத்துடன் வெளிவந்து, அந்த படத்தை மீண்டும் பார்த்திருப்பார்கள்.. . . சற்றே சிறிது முன்னர் திரையரங்கை விட்டு காலி செய்வதவர்கள் கட்டாயம் அந்த படத்தை மறுமுறை பார்த்திருக்கமாட்டார்கள். அது தான் அந்த படத்தின் வணீக ரீதியான தோல்விக்கு காரணம்
வெண்ணிலா கபடி குழு, உத்தமவில்லன், சிறைச்சாலை போன்ற படங்கள் தோல்வி அடைந்ததற்கு கதாநாயகன் மரணமடைவதாக காட்சியமைப்பு இருந்ததே காரணம் என்பது என் கருத்து . . . "நாயகன்" போன்ற வெகு சில விதிவிலக்குகளே உள்ளன
ராகவேந்திரர் படத்தில் ஜீவசமாதி அடைவதையே ஏற்றுக்கொள்ளாத ரஜினி ரசிகனிடம் இறுதி காட்சியில் தலைவர் சுட்டாரா, அல்லது தலைவரை சுட்டார்களா என்ற குழப்பதை ரசிகர்களுக்கு கொடுப்பதன் மூலம் திரும்ப திரும்ப படம் பார்க்கும் ஒரு பெருங்கூட்டத்தை (Repeat Audience) இழந்து விட்டார் ரஞ்சித் . . . . இதனால் தான் ரஜினி ரசிகர்களால் இந்த படத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . . .. . அருணாச்சலம், பாண்டியன் போன்ற படங்களை விட்டு வெளியில் வரும் போது கூட ரசிகர்கள் களிப்புடன் தான் வந்தார்கள்
இந்த தவறை செய்யாமல் விட்டிருந்தால், முதல் நாள் வந்த எதிர்மறை விமர்சணங்களில் (Negative Reviews) பெரும்பாலானவற்றை தவிர்த்திருக்கலாம்
படத்தை விட்டு வெளியில் வரும் போது கும்மாளம் இல்லை. ஏதோ நிறைவு இல்லை, ஆனால் என்ன என்று தெரியவில்லை அதை எப்படி சொல்வது என்று தெரியாயமல் நம் ஆட்கள் கூறுவது தான் "திரைக்கதை இழுவை", "முதல் பாதி சூப்பர், அடுத்த பாதி போர்" போன்ற சால்ஜாப்புகள் . . . .
மாயநதி பாடலுடன் படம் முடிந்திருந்தால், இன்னேறம் அனைத்து ரஜினி ரசிகர்களும் மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க வேண்டும் என்று திரையரங்கே கதி என்றூ இருந்திருப்பார்கள் . . . குறைந்தபட்சம், கபாலி லீயை சுடுவதுடன் முடித்திருக்க வேண்டும்
-oOo-
இந்த படத்தின் அடுத்த பிரச்சனை, சற்றே தீவிரமான (இலக்கியவாதிகளின் மொழியில் காத்திரமான) கதைக்களம் . . .
எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், ராம.நாராயணன் போன்ற இயக்குனர்கள் ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். அது என்னவென்றால், ரசிகனுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களும் படத்திலேயே தரப்படும். அவனுக்கு புரியாத விஷயங்கள் படத்திலேயே விளக்கப்படும்
உதாரணமாக
மிஸ்டர் பாரத் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி அலுவலகத்திற்கு சென்று டெண்டர் என்றால் என்ன என்று கேட்பார். அதை ஒருவர் விளக்கி கூறுவார். டெண்டர் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர் கூட அந்த படத்தை முழுவதும் ரசிக்க முடியும்
தமிழக திரை வரலாற்றில் பல நல்ல படங்கள் இந்த “பார்வையாளர்கள் புத்திசாலி” என்ற அனுகுமுறையால் வெளிவந்த சமயம் ரசிகர்களை ஈர்க்கவில்லை
உதாரணமாக,
ஹே ராம் : 1940-50 இந்திய வரலாறு தெரிந்திருந்தால் மட்டுமே அந்த படம் புரியும். எனக்கு புரிந்தது. ஆனால் பலருக்கு புரியவில்லை.
ஆளவந்தான் : ஒரு நோய்க்கு காரணம் Agent, Host, Environment என்ற மூன்று காரணிகள். ஒரே மரபணு உள்ள இரட்டை குழந்தைகள் கூட வெவ்வேறு சூழலில் வளர்ந்தால் அவர்களுக்கு வெவ்வேறு நோய்கள் வரும் என்ற Epidemiology படத்தின் அடிநாதம்
லேசா லேசா : விக்டோரிய கால ஆங்கில நாவல்களை படித்திருந்தவர்களுக்கு, அந்த சூழலை பிரியதர்ஷன் கொண்டுவந்துள்ளார் என்று புரியும். நான் ரசித்து ரசித்து பார்த்தேன். 2003 மே மாதம் பல முறை பார்த்தேன். ஆனால் பலரும் ஒரு முறை பார்த்தே நொந்திருப்பார்கள்
முண்டாசுபட்டி : காமிக்ஸ் ரசிகர்களால் மட்டுமே அந்த காட்சியமைப்புகளை புரிந்து கொண்டு ரசிக்க முடிந்தது. நான் பார்த்து விட்டு, திரைக்கதை மோசம் என்றே நினைத்தேன். பிறகு ஒரு காமிக்ஸ் ரசிகர் அதை சிலாகித்த போது தான் குறை என்னிடம் என்று புரிந்தது
கபாலி படத்தின் கதையை, திரைக்கதையை, வசனங்களை,
காட்சியமைபை புரிந்து கொள்ள பிண்ணனி மலேசிய தமிழர்களின் வரலாறு குறித்த அறிவு அவசியம் என்ற அளவு இங்கு சம்பவங்கள் கோர்க்கப்பட்டுள்ளன. . . .
ஆனால் அவை திரைக்கதையில் விளக்கப்படவில்லை.
குறைந்த பட்சம், கட்டை என்றால் துப்பாக்கி என்பதை கூட கஷ்டப்பட்டு தான் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது
விமானத்தில் படம் வரைவது, 4 பேர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் விடுமுறை விட்டது போன்ற யுக்திகளை (Gimmicks) செய்தது போல், இந்த படம் வருவதற்கு 6 வாரங்களுக்கு முன்னர், ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ மலேசிய தமிழர்களின் வாழ்க்கை குறித்த ஒரு சிறு வரலாற்று தொடரை கொண்டு வந்திருக்கவேண்டும் . . . .அல்லது திரைக்கதையில் தெளிவாக விளக்க வேண்டும்
இது போன்ற வரலாற்று பிண்ணனி கொண்ட படங்களை எடுப்பதற்கு முன்னர், அந்த வரலாற்றை ஊடகங்கள் மூலமாகவோ, சமூக ஊடகங்கள் மூலமாகவோ சொல்லுங்கள் . . . . எந்த ஊரில் படப்பிடிப்பு, கதாநாயகி எத்தனை உடை அணிந்தார், ரஜினி தட்டில் சாப்பிட்டார் போன்ற செய்திகளை மட்டும் வைத்து எதிர்பார்ப்பை (Hype) ஏற்றுவதற்கு பதில், அல்லது ஏற்றுவததோடு அந்த வரலாற்றையும் தெரியப்படுத்துங்கள்
-oOo-
பாடல்கள்
நான் ஏற்கனவே கூறியது போல், ரஜினிக்கான கதையை செதுக்கும் போது ரஞ்சித் தனது மனதில் சில விஷயங்களை தீர்மாணித்திருக்கவேண்டும் . . (1) அந்த இறுதி காட்சி, (2) டூயட் இல்லாத ரஜினி படம் . . .
உண்மைதான் . . . சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா என்றோ, மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே என்றோ தலைவர் நடனமாட வேண்டாம் . . .
ஆனால் ரஞ்சித் சார்,
ரஜினி பாடல் என்றால் அது நடனம் மட்டும் தான் என்று உங்களுக்கு யார் சொன்னது
காதலின் தீபம் ஒன்று என்று ஒரு பாடல் உள்ளது. யூடுப்பில் அதை பாருங்கள் https://www.youtube.com/watch?v=Liiv2N36Z6Q
அல்லது
ராஜாதி ராஜா படத்தின் முதல் பாடலை பாருங்கள் https://www.youtube.com/watch?v=qgpiW2eL17M
இது போன்ற பாடல்களை என்னைப்போன்ற சராசரி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் . . .
படம் முழுவதும் ரஜினியை வைத்து அரசியல் பேசினாலும், ரஜினி மட்டுமே திரையில், வேறுயாரும் இல்லாமல் சில நேரம் வரவேண்டும் என்பதே ரஜினி ரசிகனின் ஆவல் . . .
இது போன்ற பாடல்கள் வரும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் ரசிகன் தலைவருடன் ஐக்கியமாகும் நேரம் . . . .தலைவரின் உற்சாகம் ரசிகனிடம் தொற்றிக்கொள்ளும் நேரம் . .
அந்த நேரத்தை நீங்கள் வழங்காததும் உங்கள் தோல்வியே ரஞ்சித்
ஒருவன் ஒருவன் முதலாளி https://www.youtube.com/watch?v=NXiD9eGaEEI என்று மலேசியாவில் குதிரை வண்டி ஓட்ட முடியாது . .. குறைந்தபட்சம் ஆடி, பெண்ஸ் என்று நான்கு சீருந்துகளையாவது காட்டியிருக்கலாம் அல்லவா . . . .அல்லது விமானம், ஹெலிக்காப்டர் !!
-oOo-
இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்த படத்தை தாங்கி பிடிப்பது பத்து காரணங்கள்
1. ரஜினி
2. ரஜினி
3. ரஜினி
4. ரஜினி
5. ரஜினி
6. ரஜினி
7. ரஜினி
8. ரஜினி
9. ரஜினி
10. ரஜினி
-oOo-
நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல்
ரஜினி படவெளியீடு என்பது திருவிழா, பண்டிகை, கொண்டாட்டம் . . . . .
அந்த திருவிழாவில், பண்டிகையில், கொண்டாட்டத்தில் கும்மாளம், உற்சாகம், ஆனந்தம், சந்தோஷம் எல்லாம் அவசியம்
இந்திய திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு மைக்கல்
இது மிக மிக சிறந்த படம்
இது ரஞ்சித்தின் வெற்றி
ஆனால் கபாலியில்
மகிழ்ச்சி என்பது தலைவரில் உதட்டில் மட்டுமே உள்ளது
அதை
ரசிகனின் மனதுக்கு கொண்டு வர தவறியது
ரஞ்சித்தின் தோல்வி

Comments

 1. அட! கரெக்ட்டுதான்! இதேதான் எங்கள் தள விமர்சனத்தின் இறுதி வரி....

  மகிழ்ச்சி!!! (பகிர்விற்கு)

  ReplyDelete
 2. நல்லதோர் விமர்சனம். நன்றி மது!

  ReplyDelete
 3. ஒரு பின்னூட்டமும் இன்னும் வரவில்லை!!! நாந்தான் முதலும் கடைசியுமா?? :)

  டாக்டர் ப்ரூனோ ஒரு ஆக்டிவ் ப்ளாகராக இருந்தவர். இப்போ எல்லாம் பதிவெழுதுவதோ பின்னூட்டமிடுவதோ இல்லை. வாழ்க்கையில் மேடு பள்ளங்களை கடக்கும்போது ஒரு சில நேரம் பாதை மாறுகிறது. ஒரு சில பள்ளங்களை கடந்த பிறகும் பாதாளத்தில் இருப்பதாகவே உணருவோம்.

  ----------
  இந்தப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதென்னவோ பலருக்கும் சரியாக வரவில்லை. க்ரிட்டிக்ஸும் சரி, வலைதளங்களில் எழுதுபவர்களும் சரி..மிகவும் சிரமப்பட்டு வெற்றியடைய முடியவில்லை..

  ப்ரூனோ மற்ரவர்களைப்போல் முயன்றுள்ளார்..வெற்றியடைந்தாரா இல்லை தோல்வியா என்னனு தெரியவில்லை..

  Glad to get to know that Dr. Bruno is doing well, Madhu. Thanks.

  ReplyDelete
 4. மது சார்

  கபாலி ரஜினி படமாகவும் இல்லை; ரஞ்சித் படமாகவும் இல்லை. தலித் அரசியலை பேசுவதற்கு இந்தப் படத்தை தேர்ந்தெடுக்காமல் விட்டிருக்கலாம். முள்ளும் மலரும் , ஆறிலிருந்து அறுபதுக்கு வரை ரஜினியை ஒருவேளை ரஞ்சித் கொண்டு வருவார் என எதிர்பார்த்தேன். சாதாரண காங்ஸ்டர் படம். அசத்தவில்லை. துப்பாக்கி எடுத்து இரு தரப்பும் சுட்டுக் கொண்டேயிருப்பதுதான் படமா!?

  மலேசிய தமிழர்களுக்கு என்னதான் நேர்ந்தது என்று இதுவரை புரியவில்லை. ரஜினியை உயர்த்திப் பிடிக்கும் சாக்கில் கதையில் கோட்டை விட்டிருக்கிறார்கள். போரடித்ததுதான் உண்மை.


  ReplyDelete

Post a Comment

வருக வருக