ஜெய் வாழ்வில் மீண்டும் ஒரு வைகறை

வீதிக் கூட்டத்தில் மீண்டும் மலர்ந்த ஜெய்யின் புன்னகை


ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் ஆப் லைப் என்றால் என்ன என்று குழந்தைகளுக்கு விளக்கவேண்டியிருந்தது. விளையாட்டாய் ஒரு மாணவனை அழைத்து அவன் கை ஒன்றைப் பற்றி திருப்பி இது ட்விஸ்ட் இப்போ அவன் திரும்புறானா அதுதான் டர்ன் என்றேன். வகுப்பில் சிரிப்பு.  ஆனால் சிலர் வாழ்வில் மறக்க முடியாதபடி வளைவுகளும் திருப்பங்களும் ஏற்பட்டு விடுவது பார்க்கத் திகைப்பாக இருக்கிறது. 


கவிஞர் வைகறை கலந்துகொண்ட வீதிக் கூட்டங்களில் நான் அடிக்கடி அவரிடம் சொல்வது உங்கள் உயரத்திற்கு ஏற்ற வெளிச்சம் உங்கள் மீது இன்னமும் படவில்லை. ஏதோ சின்ன தப்பு நடக்குது எங்கேன்னு தெரியல என்று கேட்டிருக்கிறேன். 

என்றைக்கு இருந்தாலும் வைகறை தன்னுடைய கவிதைகளின் மூலம் தனது முத்திரையை வெகு அழுத்தமாக பதிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. 

இன்று வைகறையை பதிவுலகதில் சரிபாதிபேர் அறிவார்கள். அதீத வெளிச்சம் கூட அவர்மீது பாய்ச்சப்பட்டுவிட்டது. ஆனால் அதை உணர அவர் உயிருடன் இல்லை என்பதுதான் வருத்தம். 

வைகறை அமைப்பாளராக இருந்த வீதிக்கூடத்தில்  அவரது ஜெய்குட்டியும் கலந்துகொண்டான். அவனது பார்வை இனம்புரியாத சோகம் என்னை இன்னும்  படுத்துகிறது. 


வீதி கூட்டத்தில் ஜெய்க்காக நிதி திரட்டவேண்டும் என்றபொழுது கூசாமல் பதிவுகளில் என்னை வேண்டுகோள் விடுக்கவைத்ததும் ஜெய்யின் அந்தப் பார்வைதான். 

பதிவர் சந்திப்பு நிதி வேண்டுகோள், வெள்ள நிவாரண வேண்டுகோள் என வரிசையாக நிதி வேண்டி பதிவிடும் அவசியம் வந்தது எனக்கு வருத்தமே. தவிர்க்கவே முடியாது ஜெய்க்காகவும் நிதி வேண்டுகோள் பதிவுகளை எழுத நேர்ந்தது. 

மின்வெளி நண்பர்கள் சகித்துக் கொள்வார்களா என்கிற ஒரு கேள்வியும் என்னுள்ளே எழுந்தது. 

ஆனால் கடந்த வீதிக் கூட்டத்தில் கவிஞர் கீதா நிதியாளர்களின் பெயர்ப் பட்டியலை படித்த பின்னர் வெகுவாக நெகிழ்ந்துபோனேன். நிதியின் சிங்கப் பங்கு பதிவர்களுடையது! 

என்னுடைய பயம் கலந்த கேள்வி என்னைப் பரிகசித்தது. 

பதிவர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள். 

முதல் தவணையில் ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது. இரண்டு லட்சம் ரூபாய்கள் ஜெய்யின் பெயரில் ஆயுள் காப்பீட்டுப்  பாலிசியாக வழங்கப்பட்டது. ரூபாய் ஐம்பதாயிரம் நிதியாக வழங்கப்பட்டுவிட்டது.  இதை வழங்குவதற்காக வீதி என்கிற தளத்தை நிர்மாணித்த முனைவர்.அருள் முருகன் அவர்கள் கோவையில் இருந்து வந்திருந்தார்கள். குட்டி ஜெய்யின் கைகளில் வீதியின் ஆற்றல் மையம் அருள் முருகன் அவர்கள்  நண்பர்கள் வழங்கிய நிதியை வழங்கினார். 

தொடர்ந்து சகோதரி ரோஸ்லின் வைகறை குறித்தும் நண்பர்களின் உதவிக்கு நன்றிகளையும் பதிவு செய்தார். எல்லோர் விழிகளிலும் நீர். 

வைகறை எந்த சூழலில் ஆயுள் காப்பீடு வேண்டாம் என்ற முடிவை எடுத்திருப்பார்?

எந்த சூழலில் பூர்வீக சொத்தின் ஒரு பகுதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்திருப்பார்?

சொந்த வாழ்வில் இப்படி சிக்கல்களை வைத்துக் கொண்டு எப்படி அவர் சிறந்த கவிதைகளை எழுதினார் ?

விடையில்லாக் கேள்விகள்தாம் இவை. 

ஆனால் வீதி என்கிற காப்பீடும் மின்வெளியெங்கும் பரவியிருக்கும் உங்கள் அன்பும் மட்டுமே அவர் காப்பீடு என்பது இப்போதைய விடை. 

நன்றிகள் அனைவருக்கும். 

பி.கு. சகோ.ரோஸ்லின் தனது மாதந்திர செலவுகளுக்கே சிரமத்தில் இருப்பதாக தெரிவித்தவுடன் தனது பள்ளியிலேயே அவர்களை ஓர் ஆசிரியையாக சேர்ந்துகொள்ள அனுமதித்த கவிஞர் தங்கம் மூர்த்தியின் செயல் உண்மையில் மனிதம் நிறைந்தது. மாத செலவுகளுக்கு இனி  அவருக்குப்  பிரச்னை இல்லை. அரசு வேலை கிடைக்கும் வரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓர் ஆசிரியையாக தொடர்வார். 

இன்னும் பணிகள் தொடர்கின்றன வீதியின் அமைப்பாளர்களுக்கும்,  கவிஞர் நிலவன் அவர்களுக்கும், கவிஞர் கீதாவுக்கும் உளமார்ந்த பாராட்டுகள். 

முதல் தவணை மட்டுமே முடிந்திருக்கிறது.  வீதிகளத்தில் முதலில் அறிவிக்கப்பட்ட பணத்தில் இது பாதியே! இலக்குகள் பெரிதாக இருக்கும் பொழுது அடைவுகளும் பெரிதாக இருக்கும் என்பதையும் வைகறை காலத்தின் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார். 

அன்பன் 
மது 

Comments

 1. மனம் கலங்குகின்றது பா..அனைவரும் நினைத்தோம் ஒரே மனதாக அதுவே நிகழ்ந்தது...வைகறை நம்முடனே வாழ்கிறார் ஜெய்க்குட்டியாக...

  ReplyDelete
  Replies
  1. எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர் இருக்கிறார்
   தன் உடல் நலத்தைப் பேணுவதில் அவ்வளவு குறிப்பாக இருப்பார்.
   நான் ரொம்பவே அலட்சியம் செய்யும் விசயம் அது.
   ஒருமுறை ஏன் இப்படி அதீதமா கவனம் எடுத்துக்கிறீங்க என்றதற்கு எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க சார். என்னை நல்லா பார்த்துக்கிட்டாத்தானே அவங்கள பார்த்துக்க முடியும் என்றார்.

   ஜெயம்மாவும் இதைத்தான் கேட்டார்கள். மனைவி குழுந்தைகள் பற்றி அக்கறை இருந்தால் வைகறை இப்படி கவனமற்று இருந்திருப்பாரா ... எனக்குக் கோபம்தான் வருகிறது என்றார் அவர்.

   Delete
 2. ஜெய்க்குட்டி மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

  ReplyDelete
 3. தங்கள் பணி தொடர
  எனது வாழ்த்துகள்  குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
  http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

  ReplyDelete
 4. ஜேய் குட்டி மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள். வைகறை அக்கறை இல்லாலாமல் போன்று பலரும் உள்ளனர் தங்கள் உடல் நலனில் அக்ககறை இல்லாது இருக்கிறார்கள்...குடும்பத்தை நினைத்தேனும் உடல் நலம் பேண வேண்டும்

  ReplyDelete
 5. வைகறை மீதான அன்பு, நட்பு. நண்பர்களின் ஈடுபாடு, ஒருங்கிணைப்பு, ஆர்வம் அனைத்தும் ஒரு புதிய ஆரம்பத்தில் கொண்டுவந்துவிட்டுள்ளது.

  ReplyDelete
 6. ஜெய்க்குட்டி மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்.....

  நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக