பலுசிஸ்தானும் சக்திவேலுத் தேவனும்

ஸ்ரீதர்  சுப்ரமணியன்  வெகு  ஆழமான புரிதலை ஏற்படுத்தும்  பதிவுகளுக்காக  அறியப்பட்டவர். இருபத்தி நான்கு மணிநேரத்தில்  இருபத்தி எட்டுமணி நேர  வேலையைக்  கோரும்  ஐ.டி  துறையில்   இருந்தாலும்  பிசாசு மாறி  படிக்கிறார்.

அவருடைய  நுட்பமான  ஆய்வு கட்டுரை  ஒன்று. ஸ்ரீ  ஒரு முன்னோடிப் பதிவரும் கூட ! தற்போது முகநூலில் !
ஸ்ரீதர் சுப்பரமணியன் பலுசிஸ்தானும் சக்திவேலுத் தேவனும்
========================================
பலுசிஸ்தான் பாகிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் உள்ள மாகாணம். இரு தேசங்களும் சுதந்திரம் அடைந்த போது தங்கள் பகுதிகளில் இருந்த பல்வேறு சிறு குறு சாம்ராஜ்யங்களை வெவ்வேறு வகைகளில் தங்கள் தேசங்களோடு இணைத்துக் கொண்டது நாம் எல்லாரும் அறிந்ததே. அதே மாதிரி பலுசிஸ்தான் அப்போது கலத் என்கிற சாம்ராஜ்யமாக இருந்தது அதன் நவாப்பான யார் கான் பாகிஸ்தானோடு இணைய மறுக்க, வலுக்கட்டாயமாக ராணுவத்தை அனுப்பி கலத் சாம்ராஜ்யத்தை தன்னோடு இணைத்துக் கொண்டது பாகிஸ்தான்.

அப்போதில் இருந்தே பலூச் மக்கள் தங்களை பாகிஸ்தானோடு சேர்த்துப் பார்த்துக் கொண்டதே கிடையாது. தனி பலுசிஸ்தான் கோரிக்கை 1948ல் இருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவரை ஐந்து பெரிய போராட்டங்களை அந்தப் பகுதி சந்தித்து இருக்கிறது. அவை யாவும் ராணுவத்தால் கடுமையாக அடக்கப் பட்டிருக்கின்றன. பாகிஸ்தானிய அரசியல் மூன்று இனங்களால் ஆக்கிரமிக்கப் பட்டு இருக்கிறது. பஞ்சாபிகள் (நவாஸ் ஷெரிஃப் கட்சி), சிந்திகள் (பூட்டோ கட்சி) மற்றும் பதான்கள் (இம்ரான் கான் கட்சி). இந்த கும்பலில் பலூச் மக்களுக்கு பெரிய பிரதிநிதித்துவம் இல்லை. அவர்களும் எதிர்பார்க்கவில்லை. எங்களை விட்டு விடு, நாங்கள் போய் விடுகிறோம் என்றுதான் கேட்கிறார்கள். பாகிஸ்தான் விடுவதாயில்லை. முக்கிய காரணம் பலூச் பகுதி கனிம வளங்கள் நிறைந்தது. இப்போது ஈரானில் இருந்து வரும் வாயுக் குழாய் பலூச் பகுதி வழியாகத்தான் போடப் படப் போகிறது. அது போதாதென்று சீனா குவத்தர் துறைமுகத்தை சிங்கியாங்கோடு இணைக்கும் பொருளாதார வாயில் ஒன்றை 46 பில்லியன் டாலர் மதிப்பில் பலுச்சிஸ்தானில் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
கண்டிப்பாக இதையெல்லாம் பாகிஸ்தான் விட்டுக் கொடுக்கவே போவதில்லை.

ஆனால் பலுச்சிஸ்தானில் கனன்று கொண்டிருக்கும் சுதந்திரப் புகை அணையுமா என்பது சந்தேகம்தான். போதாதென்று இந்தியா வேறு அங்கே பலூச் போராளிகளுக்கு உதவி செய்து குட்டையை குழப்பி வருகிறது என்று பாகிஸ்தான் ரொம்ப நாளாகவே புலம்பிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் குல்பூஷன் ஜாதவ் என்கிற இந்திய ஒற்றனை பலூச் மாகாண எல்லையில் கைது செய்ததை பாகிஸ்தான் முடிந்த வரை விளம்பரப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் பிரதமர் மோடி முதல் முறையாக தன் சுதந்திர உரையில் பலுசிஸ்தான் பிரச்சனையைப் பற்றி பேசி இருக்கிறார். இந்திய அரசு ஒற்றர்கள் மூலம் எவ்வளவு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. அப்படியே செய்திருந்தாலும் அதிகாரபூர்வமாக இதைப் பேசி இருப்பது, அதுவும் பிரதமரே பேசி இருப்பது, அதுவும் அதி முக்கியமாக உலக அளவில் கவனத்தைப் பெறும் சுதந்திர தின உரையில் பேசி இருப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தான் ஐநா சபை அமைப்புகளுக்கு காஷ்மீர் பற்றிய புகார் கடிதங்களை நூற்றுக்கணக்காக அனுப்பி இருக்கிறது. கொலை செய்யப் பட்ட காஷ்மீர் போராளி புர்ஹான் வாணியை ‘தியாகி’ என்று அறிவித்து அவன் இறந்த தினத்தை கருப்பு தினமாக தேசமெங்கும் அனுசரிக்க சுற்றறிக்கைகள் அனுப்பியது. இந்தியாவின் எதிரி ஹஃபிஸ் சயீத் இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியது. இந்த மாதம் சார்க் மாநாட்டுக்கு சென்ற ராஜ்நாத் சிங்குக்கு உரிய மரியாதைகள் வழங்காதது, என்று பாகிஸ்தான் இந்தியாவை பிரச்சினை பண்ணிக் கொண்டே வந்தது.


இதெல்லாமே சேர்ந்து மோடியை அப்படிப் பேச வைத்திருக்கலாம். நீ Kashmir என்கிற கே-வார்த்தையை பயன்படுத்துகிறாயா, நான் Baluch என்கிற பி-வார்த்தையை பயன்படுத்துவேன் என்று செய்திருக்கலாம்.
ஆனால் இதில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. பலுசிஸ்தான் பிரச்னையும் காஷ்மீர் பிரச்னையும் ஒன்றல்ல. வேண்டுமானால் பலூச்சை நம் ஹைதராபாத்துடன் ஒப்பிடலாம். பலூச் போலவே ஹைதராபாதும் ஒரு நவாப் கைவசம் இருந்து அவர் இந்தியாவுடன் சேர மறுக்க படேல் இந்திய ராணுவத்தை அனுப்பி நிஜாமின் ‘ராணுவத்தை ‘ஒடுக்கி’ இந்தியாவோடு சேர்த்தார். அதே மாதிரிதான் கோவாவும் சேர்க்கப் பட்டது. என்ன, கோவாவில் பெரிதாக ரத்தம் சிந்தப்படவில்லை, அவ்வளவுதான்.

ஆனால் காஷ்மீர் ஆரம்பம் முதலே இரண்டு தேசங்களாலும் சொந்தம் கொண்டாடப் பட்டது. இரண்டு தேசங்களும் பாதிப் பாதி பகுதியை ‘பிடித்து’ வைத்திருக்கின்றன. அங்கே மக்கள் கருத்தை அறியும் வாக்கெடுப்பை (plebscite) நடத்துவோம் என்று இந்தியா உறுதி மொழி வேறு கொடுத்து ஒழித்து இன்றளவும் நடத்தாமல் இருக்கிறது. ஊடகங்கள் most militarised civilian zone in the world என்கிற அடைமொழியை கொடுக்கும் அளவுக்கு ராணுவத்தை குவித்து வைத்திருக்கிறோம். இவை எல்லாம் காஷ்மீர் என்பதை தனித்துவமான பிரச்சனையாக ஆக்குகிறது.

அது ஒரு புறம் இருக்க, மோடி செய்ததை Copycat Trap என்று அரசியல் விமர்சகர் சுஹாசினி ஹைதர் அழைக்கிறார். அதாவது செஸ் விளையாடும் போது எதிராளி எப்படி காய்களை நகர்த்துகிறானோ அதே காய்களை அதே மாதிரி நாமும் நகர்த்துவது. இதன் மூலம் எதிராளியை நிலைகுலைய செய்வது. நீ காஷ்மீரில் போராளிகளுக்கு உதவி செய்வாயா? நான் பலுசிஸ்தானில் செய்வேன். நீ சுதந்திர உரையில் ‘கே’ பற்றி பேசுவாயா? நான் என் சுதந்திர உரையில் ‘பி’ பற்றி பேசுவேன், நீ காஷ்மீர் போராளியை தியாகி என்பாயா, நான் பலூச் போராளிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்பேன், இத்யாதி.
மோடியின் உரைக்குப் பின் பாஜக அபிமானிகள் சிலிர்த்துப் போய் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு மோடி நல்ல பாடம் கற்பித்து விட்டார் என்று குதூகலிக்கிறார்கள்.


ஆனால் இதில் பிரச்னை என்னவென்றால் Copycat Trapல் உங்கள் எதிராளி நீங்கள் அவனை காபி செய்யப் போகிறீர்கள் என்று எதிர்பாராத வேளையில்தான் அவன் நிலைகுலைந்து போகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கே பாகிஸ்தான் நாம் அவர்கள் மாதிரியே நடந்து கொள்ளவேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. எனவே மோடி உரை அவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். (அதுவுமின்றி செஸ் விளையாட்டில் அந்த அணுகுமுறை மோசமானதாக கருதப் படுகிறது. ஓரிரு முறை நீங்கள் ஜெயிக்கலாம், நீண்ட கால அணுகுமுறைக்கு, செஸ்ஸை ஒழுங்காகப் புரிந்து கொள்ள அந்த அணுகுமுறை உதவாது. கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமானதும் கூட.)


உலக அளவில் இந்தியா ரொம்ப காலம் வரை Indo-Pak என்றுதான் அணுகப் பட்டது. மேற்கு தேசத்துத் தலைவர்கள் இந்தியா வந்தால் பாகிஸ்தான் போவார்கள். இந்தியாவுக்கு ஒரு உதவி செய்தால் பாகிஸ்தானுக்கு செய்வார்கள். அப்படியே இருக்க வேண்டும் என்றுதான் பாகிஸ்தான் விரும்பி வந்திருக்கிறது.

தொண்ணூறுகளில் அது மாறியது. நம் பொருளாதார முன்னேற்றம் அதற்கு உதவியது. முக்கியமாக நம் ஜனநாயகம் தழைத்தது, நம் குடிமை சமூகம் (Civil Society) நிறைய சுதந்திரங்களோடு, மனித உரிமைகளோடு வளர்ந்தது எல்லாம் முன்னேறிய சமூகங்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அதே சமயம் பாகிஸ்தான் மாறி மாறி ராணுவ ஆட்சிக்கு உட்பட்டு, உள்நாட்டுப் பொருளாதாரம் குலைந்து, தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டு வழி தவறிப் போனது. ஆயினும் இந்தோ-பாக் என்று கோடு போட்டுத்தான் இரு நாடுகளும் அணுகப் பட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து வந்தது. (சர்வதேச அரசியலில் இதை Hyphenated Treatment என்று குறிப்பிடுகிறார்கள்.)

அதுவுமின்றி இதுவரை இந்தியா அந்நிய தேசங்களின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்துக் கொண்டு இருந்தது. ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டது, சிரியாவில் ஐநா தலையீட்டை எல்லாம் எதிர்த்தது இந்தியாவுக்கு ஒரு சர்வதேச அளவிலான அந்தஸ்தை, ஒரு தார்மீக வலிமையை (moral standing) அளித்திருந்தது.
இப்போது இந்த வலிமை குலைந்து இருக்கிறது. ‘பார்த்தாயா? இந்தியா எங்கள் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடுகிறது? அவ்வளவு ஒன்றும் பெரிய ஒழுங்கு இல்லை அவர்கள்?’ என்று பாகிஸ்தான் சர்வதேச அரங்குகளில் புலம்புவதற்கு நாம் வழி வகுத்து விட்டோம். அவன் காஷ்மீரில் விளையாடுகிறான் என்றால் நீதான் பலுச்சிஸ்தானில் விளையாடுகிறாயே என்று சர்வதேச அமைப்புகள் நாளை சொன்னால் நமக்கு பதில் சொல்ல ஒன்றுமிருக்காது. பாகிஸ்தானை விட பல வகைகளில் உயர்ந்த தேசம் என்கிற தகுதியை நாமே கொஞ்சம் குறைத்துக் கொண்டு விட்டோம். மேற்கு நாடுகள் கொஞ்ச நாளாக போடாமல் இருந்த hyphenஐ, அந்தக் கோட்டை, நாமே போட்டுக் கொண்டு விட்டோம்.


தேவர் மகன் படத்தில் மாயத்தேவன் படிக்காத, வன்முறையை விரும்பும் ஆளாக இருப்பான், சக்திவேலுத் தேவன் படித்து, முன்னேறி தன் சமூகத்தை வன்முறைப் பாதையில் இருந்து வெளிக் கொணர்ந்து முன்னேற்ற விரும்பும் ஆளாக இருப்பான். மாயத்தேவன் செய்த ஒரு படுகொலைக்கு அவனை போலீசில் பிடித்துக் கொடுக்க சக்திவேல் முயல்வான். அதில் நடக்கும் கைகலப்பில் கடைசியில் பொறுமை இழந்து தானும் அரிவாளைத் தூக்குவான். அப்போது மாயத்தேவன் முகத்தில் ஒரு குரூரமான பெருமித சிரிப்பு தோன்றும். ‘அப்படி வாடா என் தேவன் மவனே!’ என்று கொக்கரிப்பான். அந்த ஒரு நொடியில் சக்திவேலுக்கும் மாயனுக்கும் இருந்த வித்தியாசம் மறைந்து போகும்.

அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இந்தியா அரிவாளைத் தூக்கி விட்டது. அதற்குக் காரணம் பாகிஸ்தான்தான் என்று சொன்னாலும் இப்போது இருவரும் சமம் என்றாகி விட்டது. சக்திவேல் அரிவாளைத் தூக்கி விட்டால் மாயத் தேவன் தலை உருள்வது நிச்சயம். ஆனால் அது சக்திவேல் எதிர்பார்த்த முடிவல்ல. கடைசியில், ‘என்னையும் கொலைகாரனாக்கிட்டியேடா படுபாவி!’ என்று அழத்தான் முடிந்தது அவனால். அவன் சொந்த கிராமத்துக்கு கொண்டு வர முயன்ற அமைதி மற்றும் முன்னேற்றம் பறி போனதுதான் மிச்சம். செத்தாலும் கடைசியில் வெற்றி மாயத்தேவனுக்குத்தான் கிடைத்தது.

இங்கே மோடி அரிவாளைத் தூக்கி விட்டார். ஹபீஸ் சயீத் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் குரூரப் புன்னகையோடு ‘வாடா என் தேவன் மவனே!’ என்று கொக்கரித்து விட்டார்கள்.

தேவர் மகன் கதை முடிந்து விட்டது. இந்திய மகன் கதை எப்படிப் போகிறது என்பது இன்னமும் தெரியவில்லை.
.
.
.
(பதிவைப் படித்துப் பார்த்து வழக்கம் போல அருமையான திருத்தங்களை வழங்கி உதவிய Shahjahan சாருக்கு நன்றிகள் பல.)

Comments

 1. அருமையான கட்டுரையினைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 2. நல்லதொரு கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 3. சிறப்பான கட்டுரை! பகிர்வுக்கு நன்றி! மோடி அவசரப்பட்டுவிட்டதாகவே எனக்கும் தோன்றுகிறது!

  ReplyDelete
 4. ஹ்ம்ம்..

  இன்னொரு அனாலஜி..

  ட்ரம்ப் என்னும் பில்லிய்னர்..நினைத்ததை எல்லாம் வடிகட்டாமல் வாய் வழியே வெளியே விடுகிறான். அவனை எதிர்த்து நின்ற டெட் க்ரூஸ், மற்றும் மார்க்கோ ரூபியோவும் என்கிற தரமான அரசியல்வாதிகளும் தரமிழக்க வேண்டிய சூழல் ஆனது நிதர்சனம்.

  நாளைக்கு ஜெனெரல் எலெக்‌ஷன் டிபேட்டின் போது ஹில்லரியும் அதுபோல் அநாகரிகமாக ஆக வேண்டிய சூழல் உருவாகும். பன்றியை ஆளவிடக்குடாதுனு பன்றியோடு சேற்ரில் சண்டை போட்டுத்தான் அதை அடக்கணும் என்கிற போது நம் மேல் சேறு படுவதை தவிர்க்க முடியாது.

  நம் மேல் சேறு பட்டுவிட்டதால் பன்றி "சாதித்து" விட்டதா? என்பது விவாதத்துக்குரியது.

  மது, வருண் எல்லாம் இன்றைய மதுவாகவும், வருணாகவும் இருக்கக் காரணம் அவர்கள் சுற்ற சூழல்தான். இவர்களே நாளைக்கு உள்ளே தள்ளப்பட்டு சிறைச்சாலையில் கிரிமினல்களுடன் இருந்தால் சர்வைவலுக்காக இவர்களும் மிருகம் ஆகலாம், எல்லாத்தையும் உதிர்த்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதை இதுபோல் சூழல்களுடன் ஒப்பிட்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

  Budda would have been a normal person -despite the fact that he realized what life is all about -if he had lived with ugly human beings. Because ran far away and he sat under "bodhi tree" and detached himself from ugly human beings, he could succeed and emerge as Budhdha. He could not have been Budhdhaa otherwise. He would have lived as Sidhartha all his life. It is the environment which controls mostly who you become and what you become and certainly you dont have 100% control no matter who you are!

  ReplyDelete
  Replies
  1. தலைவா குழப்பி விட்டுடேங்களே

   Delete
  2. நாம் என்ன மாதிரி ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரிதான் முடிவு செய்கிறான் ..
   இல்லையா..

   விதிகளும் உண்டு விதிவிலக்குகளும் உண்டு !

   Delete
 5. நல்லதொரு ஒப்பீடு ,இதனால் எத்தனை தலைகள் உருளப் போகிறதோ என்று பயமாய் இருக்கிறது :)

  ReplyDelete
 6. வார்த்தைகளும் சவால்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கட்டுரையாசிரியர் அழகாக உணர்த்தியிருக்கிறார். ஆனால் இந்தியாவை சீண்டிக் கொண்டேயிருந்தால் எவ்வளவுதான் பொறுத்துப் போவது?

  ReplyDelete
 7. வாவ்!! மிக மிக அருமையான ஒரு கட்டுரை! ஒப்பீடும் யோசிக்கப்படாத ஒரு கோணம். வெகு சிறப்பு...பகிர்விற்கு மிக்க நன்றி

  ReplyDelete

Post a Comment

வருக வருக