# செத்துப் போவேனோ என்று அஞ்சினேன் - ஓபி ஜெய்ஷா #

# செத்துப் போவேனோ என்று அஞ்சினேன் - ஓபி ஜெய்ஷா #

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய பெண் இந்திய சாதனையாளர் ஓபி ஜெய்ஷா. அவர் 42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள். எப்படி இவ்வளவு மோசமான ஓட்டத்தை ஓடினார் என்ற கேள்வி எழுகிறதல்லவா?


எந்த ஒரு மாரத்தான் ஓட்டமும் மிகுந்த திட்டமிடலுடன் ஓட வேண்டிய ஒன்று.. ஏனென்றால் தொடர்ந்த இயக்கத்தால் உடல் நீர் சத்தை இழந்து விடும். தாதுக்களை இழந்து விடும். இவற்றைத் தொடர்ந்து வழங்கா விட்டால் கிராம்ப் என்ற தசைப்பிடிப்பும் அதீத நீரிழப்பால் மரணமும் கூட நடக்கும். அதுவும் பிரேசில் போன்ற நீர் சூழ்ந்த வெப்பமான இடங்களில் இது விரைவாக நடக்கும். இதைத் தவிர்க்க வழி நெடுக நீர் வழங்க வசதிகள் இருக்கும்.

ஒலிம்பிக் மாரத்தானில் இந்த நீரையும் இதர சத்துப் பொருட்களையும் வழங்கும் நிலையங்கள் 2.5 கிலோமீட்டருக்கு ஒன்று என்று வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்கே அந்தந்த நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் அணியைச் சேர்ந்தவர்கள் நீரையும் சக்தி அளிக்கும் பிற உணவுகளையும் வைத்து நிற்பார்கள். தலையைத் துடைத்துக் கொள்ள ஐஸில் நனைக்கப்பட்ட ஸ்பாஞ்ச் போன்றவற்றை நீட்டுவார்கள். ஊக்கப்படுத்துவார்கள். உள்ளூர் மாரத்தான்களில் கூட ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டருக்கும் நீர், எலுமிச்சை, உப்பு, ஆரஞ்சு, வாழைப்பழம், கடலைமிட்டாய் என்று வைத்திருப்பார்கள். இது அடிப்படை.

ஆனால் இந்தியாவின் சார்பில் போட்டி நெடுக எந்த நிலையத்திலும் யாருமே நிற்கவில்லை என்கிறார் ஜெய்ஷா. இந்திய நிலையங்களில் வெறும் கொடி மட்டும் நட்டு வைத்து இருந்தார்களாம்.வேறு அணியினர் தரும் எதையும் வாங்கவோ அருந்தவோ கூடாது. அது விதிமீறல். 8 கிலோ மீட்டருக்கு ஒன்று என்று ரியோ ஒலிம்பிக் அணியினர் வைத்திருக்கும் நிலையங்களில் வேண்டுமானால் நீர் அருந்தலாம். இதனால் ஒவ்வொரு எட்டு கிலோமீட்டருக்கு ஒரு முறை மட்டுமே நீர் அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஜெய்ஷாவும் அவருடன் ஓடிய கவிதாவும். அதுவும் அந்த வேகத்தில் ஓடும்போது இது தற்கொலைக்கு சமம்.

இறந்து விடுவோம் என்ற அச்சத்துடன்தான் ஓடி இருக்கிறார் ஜெய்ஷா. முடிவுக் கோட்டில் மயங்கி விழுந்தவர் மூன்று மணி நேரம் கழித்து ஏழு பாட்டில்கள் குளுகோஸ் இறக்கிய பிறகு எழுந்திருக்கிறார். அப்போதும் இந்திய மருத்துவக் குழு அருகில் இல்லை. நல்லவேளையாக இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். ரியோ மருத்துவக் குழுவினர்தான் அவரைக் கவனித்திருக்கிறார்கள்.

இதுதான் இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பினர் ஒலிம்பிக் வீரர்களை கவனித்துக் கொள்ளும் லட்சணம். இந்த சூழலில் விளையாடி மெடல்கள் வேறு வாங்கி வரும் சிந்து, சாக்ஷி போன்றவர்களுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் தகும்.

- ஷான்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் என்டிடிவி

நண்பர்  ஷான்  கருப்புசாமியின்  பதிவு... ஒரு  பகிர்வு 

Comments

 1. வேதனையும் அவமானமும் அண்ணா.
  இதில் மீமீ வேறு போட்டு எரிச்சல் கிளப்பினார்கள் மக்கள்... இந்தச் சூழ்நிலையில் பங்கேற்ற அனைத்து இந்திய வீரர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 2. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க இந்தியாவில் இருந்து சென்றவர்கள் ,டிஸ்னிலேண்ட் போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு ஜாலியாக சென்று விட்டார்களாம் .உயிரைக் கொடுத்து ஓடும் வீரர்களை .இந்திய ஒலிம்பிக் குழு இப்படித்தான் நடத்துவதா ?
  இப்படி சீர்கேடுகள் இருந்தால் தங்க விருது எப்படி கிடைக்கும் ?

  ReplyDelete
 3. அவலம்......

  விளையாட்டிலும் அரசியல் - ஒலிம்பிக் குழுவில் இருப்பவர்கள் [விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள்] பெரும்பாலும் ஏதோ ஒரு அரசியல் வியாதியின் சொந்தக்கரார்கள். இவர்களை என்ன செய்தாலும் தகும்.

  ReplyDelete
 4. அவலம்...வேதனை...அவமானம்....இன்னும் என்னென்ன வார்த்தைகள் அகராதியில் உண்டோ அத்தனையும் போட்டுக் கொள்ளலாம். இதில் எல்லோரும் தங்கம் வாங்கிவரவில்லை, வெள்ளியாவது வாங்கி வரக்கூடாதா என்று விமர்சனங்கள். வெட்கம். அத்தனையிலும் அரசியல்...இந்த அவலமான கேடுகெட்டச்சூழலிலும் பங்கு கொண்ட அத்தனை வீரர்க்ளுக்கும் நமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம்...

  ReplyDelete

Post a Comment

வருக வருக