கிடாரி - ராஜாசுந்தர்ராஜன் பார்வையில்

கிடாரி- விமர்சனம்  ராஜா சுந்தர்ராஜன் 
______

என்பதில் ஒரு பெயர்க்குழப்பம் இருக்கிறது. சாத்தூர், அதாவது பழைய ராமநாதபுரம் மாவட்டம், என்றால் ‘கிடாரி’ என்பது பெட்டையைக் குறிக்கும். அதுவும் ஈனாத குமரு. இதில், நாயகனுக்கு பெயர் ஏன் ‘கிடாரி’?



‘யாரை நல்லவன் என்று நம்பிக்கொண்டு இருக்கிறாயோ அவனோ நல்லவன் இல்லை.’ இதுதான் கதை. இதை எத்தனை படத்தில்தான் பார்ப்பது?

எங்கள் ஊர்க்காரர், எழுத்தாளர், நடிகர், வேல.ராமமூர்த்திக்காக இப் படத்தைப் பார்த்தே ஆகவேண்டிய தன்னார்வ வாஞ்சை. அதற்குத் தோதாக அவர் ஒரு பெரிய விருந்தே கொடுத்திருக்கிறார். தெருநாடக நடிகர் அவர்; ஆனால் சினிமாவுக்கு என்னமாய் ‘செட்’ ஆகிறார்!

போலவே, மு.ராமசாமி. நாடக நடிகர். சுந்தர ராமசாமி வீட்டின் மொட்டைமாடியில், “காகங்கள்” கூட்டத்தில், நாடகக் கலைஞர் ராமானுஜத்தோடு இவரையும் சந்தித்திருக்கிறேன். அது என் இருபதுகளில். “இல்லை” என்பதை எப்படி அபிநயிக்க வேண்டும் என்று நடித்துக் காட்டினார். முதலில், முகத்துக்கு நேரே கைகளை வைத்து, ‘இல்லை’ என்பதுபோல் அசைத்துக் காட்டினார்; அப்புறம், நெஞ்சுக்கு நேர் கைகளை வைத்து அப்படியே அபிநயித்தார்; கடைசியில் இடுப்புமட்டத்தில் இருதிக்கமும் கையை விரித்தார். அதுவே சரியான அபிநயம் என்று அவர் விளக்காமலே புரிந்துகொண்டோம். (இதில், ஏதாவது பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய உட்பொருள் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.) “ஜோக்கர்”க்கு அடுத்து உடனே இப் படத்தில் அவரைப் பார்த்ததில் பரவசம். தமிழ்சினிமா, சுணங்கினாலும், வேல. ராமமூர்த்தி, மு.ராமசாமி போன்ற பயின்ற நடிகர்களை அடையாளம் கண்டிருக்கிறது. வாழ்த்துகள்!

முதல்நாள், பகல் ஒருமணிக் காட்சிக்கு, “குற்றமே தண்டனை”க்கு நான் சீட்டெடுத்த போது, மூன்றுமணிக் காட்சிக்கு “கிடாரி”க்கு சீட்டெடுத்து ஓர் இளைஞன் இரண்டுமணி நேரம் காத்திருக்க முடிவெடுத்தான்.

“பக்கத்தில், “சேது க்ஷேத்திரம்” என்றொரு கோவில்வளாகம் உள்ளது; அல்லது நீங்கள் கிறிஸ்தவரானால் எம்.ஜி.ஆர். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தேவாலயம் உள்ளது. போய் வாருங்களேன்!” என்று ஆற்றுப்படுத்த நினைத்தேன். உடனே, ‘என்னவகையான மூளைச்சலவை இது?’ என்று என் மனச்சாட்சி வினவ, இளைஞனைச் சலனப் படுத்தாமல், அரங்குக்குள் நுழைந்துவிட்டேன். ஆனால், பத்துப் பதினைந்து பேர்களே, வெள்ளிக்கிழமை, “குற்றமே தண்டனை” காட்சிக்கு வந்திருந்த சென்னைப் போரூர் G.K. தியேட்டரில் “கிடாரி”க்காக ஒரு காட்சி முந்தியே வந்து காத்திருந்த இளைஞன் என்னை துன்புறுத்தினான்தான். வேல. ராமமூர்த்தியை முன்னிருத்தி அது கிளர்ச்சியாகவும் இருந்தது.

இரண்டாவது நாளான இன்று அரங்கு பாதியே நிரம்பி இருந்து.

{இதே அரங்கில், ‘கபாலி”க்கு, மூன்றாம் நாளில் (ஞாயிற்றுக் கிழமை) என்னை முன்வரிசையில் தள்ளிவிட, நான் அரங்கின் நடுவில் நடைபாதையில் (aisle) உட்கார்ந்து அந்தப் படத்தைப் பார்த்தேன்.

நாளை (ஞாயிற்றுக்கிழமையாவது) அரங்கு நிரம்புமா தெரியவில்லை.

வேல ராமமூர்த்தி தூள்கிளப்புகிறார். அந்த ‘லங்கோடு’ தவிர வேறு உடையல்லாத எண்ணெய் புரட்டிய உடம்பில் வேல்கம்போடு அவர் பாய்ந்து வருகிற அந்தக் காட்சி, so effective!

தயாரிப்பாளர்தான் நாயகன். என்றாலும் அவர் வேல. ராமமூர்த்தியின் திறமையை இவ்வளவுக்கு மேலேடுத்ததை, திறமைக்கு மரியாதை என்கிற வகையில், பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

கதையில் ஜாதி அடையாளங்களும் உண்டு. ‘பாண்டியன்’ என விளிக்கப் படுகிறவர்கள்; மும்பையில் கடை வைத்திருப்பவர்கள்; விதவையானால் வெள்ளைச்சேலை கட்டுகிறவர்கள் (நாயகனின் பாட்டி) இப்படி....

நாயகர்/ தயாரிப்பாளர் இப் படத்தின் மூலம் புதிதாக ஒன்றும் நிரூபிக்கவில்லை. வேல.ராமமூர்த்திக்குதான் சிறந்த கேரக்டர்: அவரது நடிப்பும் அதற்கேற்ப அருமை. ஆனால் இப்படியாப்பட்ட கேரக்டர்களாகவே தந்து அவரை நீர்த்துப்போகச் செய்துவிடுவார்களோ என்றும் அஞ்சவேண்டி இருக்கிறது.

பத்துப் பைசா நாணயம் வழக்கிலிருந்த காலத்துக் கதை. கார், பைக் பதிவெண்கள்கூட அந்தக் காலத்தவை. ஊரும் காடும்கூட அந்தக் காலத்து ராமநாதபுரத்து மாவட்டத்து அச்சு அசல். ஆனால் அந்தக் காலத்தில் குமருகள் சுடிதார் அணிகிற வழக்கம் இருந்ததா என்று வியந்தவாறே படம்பார்த்துக்கொண்டு இருந்தேன். நல்லவேளை, “வண்டியிலே நெல்லு வரும்” பாடற்காட்சியில் நாயகியை சிற்றாடையில் (பாவாடை தாவணியில்) காட்டிவிட்டார்கள்.

இந்தப் படமும், அந்த சிற்றாடை கண்ட அளவிற்கே எனக்கு என் மண்ணோடு ஒட்டிய ஞாபகத்தின் உவப்பாக இருந்தது. அவ்வளவுதான்

Comments

  1. படம் பார்த்துவிட்டேன். விமர்சனத்தில் உள்ளது போலவே தான் எனது கருத்தும் இருந்தது.

    என் கணிப்பில் வேல ராமமூர்த்தி அவர்களின் நடிப்பைத் தவிர வேறு ஒன்றும் பிரமாகதாம இருப்பதாகத் தெரியவில்லை. குற்றமே தண்டனை பார்க்க வேண்டும் படம் த்ரில்லர் என்று சொல்லுகிறார்கள். பாலக்காட்டில் வந்து விட்டதா என்று தெரியவில்லை.புது முகங்கள் என்றால் இங்கெல்லாம் தமிழ் படங்கள் வருவதில்லை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக