ஹுமன் ஜெராக்ஸ் -சிறுகதை - கார்த்திக் கார்த்திக்

எல்லா  நண்பர்களிடமும்  பிடித்த  விசயமும்  இருக்கும் பிடிக்காத  விசயங்களும்  இருக்கும். எனது முகநூல் நண்பர் கார்த்தியின் சிறுகதை இது. 
கார்த்தியிடம்  எனக்குப் பிடித்த விசயங்களில் ஒன்று இது. 
இதோ  கதை 

"இதுதான் ஹியூமன் ஜெராக்ஸ் மிஷின்.!"விஞ்ஞானி ஆத்மா கொஞ்சம் படபடப்புடன் இருந்தார்.அரசின் முக்கிய அதிகாரிகள் சுற்றிலும் உட்கார்ந்திருந்தது அவருக்கு மிரட்சியை தந்திருந்தது.


"கூல் புரபசர்.!தண்ணீரை குடித்துவிட்டு பேசுங்கள்."யாரோ ஒருவரின் வேண்டுகோள் கோட்டின்மீது நீர் சிதற குடிக்க வைத்தது.

"இது ஜெராக்ஸ் மற்றும் பேக்ஸ் இணைந்த தொழில்நுட்பம்.இதில் பேப்பர்களுக்கு பதில் மனிதர்களை நியூட்ரான்,எலக்ட்ரான்,புரோட்டான் என்று மூன்றுஅணுத்துகள்களாகப் பிரித்து வேறோரு இடத்தில் மறுகட்டுமானம் செய்து உயிர்பிக்க போகிறோம்.பழைய விக்ரமாதித்தனின் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைப்போல.!இங்கிருந்து மிஸின் மூலமாகவே மனிதனை அமெரிக்காவுக்கும் உலகின் எந்த மூலைக்கும் அனுப்பலாம்.அங்கும் இன்னொரு மிஷின் இருந்தால்
பயணநேரம்,செலவுகள் மிச்சம்.ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எண்ணை எஸ்.டி.டி.போல் கொடுத்தால் போதும்."
"புரபசர் வேறு கிரகத்துக்கு மனிதனை இதே முறையில் அனுப்ப முடியுமா.?"
"நிச்சயமாக.!"
"புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட கேத்தம் கிரகத்துக்கு மனிதர்களை செலவில்லாமல் அனுப்ப முடியுமா.?"
"முடியும்."சிறிது நேர சலசலப்பை தாங்க முடியாமல் ஆத்மா வெளியேறி இளைப்பாறினார்.அவர் மறுபடியும் உள்ளே நுழைந்த போது
ஆத்மாவின் கண்டுபிடிப்புக்கான நிதி ஆதாரத்தை அனுமதித்துவிட்டு கூட்டம் முடிந்திருந்தது.

அதற்கடுத்த நாள் ஆராய்சிக்கூடத்திற்கு பலத்த காவலுடன் கொண்டு வரப்பட்டான் சீரியல் கில்லரான மதி.சற்றே மனநிலை பாதித்த கொலை செய்யும் இயல்பு கொண்ட அவனிடம் பேச புரபஸருக்கு எதுவும் இருக்கவில்லை!

ஆனால் அவனை எதற்கு அனுப்பினார்கள் என்ற சந்தேகத்தை தலமை செயலரிடம் கேட்டார்.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கேத்தம் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற முயற்சி செய்வதாகவும் வசதி நிறைந்த பூமியை விட்டு அங்கு செல்ல யாரும் விரும்பாததால் ,கொடும் குற்றவாளிகளை அங்கு குடியமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் பதில் வந்தது.இருபதாம் நூற்றாண்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்கா கண்டத்தில் குடியேற இங்கிலாந்தின் கொடும் குற்றவாளிகள் கப்பலில் அனுப்பப்பட்டது அவருக்கு நினைவு வந்தது.அது கண்டம்.!இது கிரகம்.வரலாறு திரும்புகிறது.!மதி இருபது கொலைகளைச் செய்த கொலைகாரன்.சுத்தியால் அடித்து மண்டையை உடைப்பது.அவனது ஸ்டைல்.

முதல் மிஷினில் அவனை அடைத்து சுவிட்சை ஆன் செய்தவர் இரண்டாவது மிஷினில் அவனை தேடி ஏமாந்தார்.டெக்னிக்கல் பிராபளத்தால் மூன்று அணுவாகப்பிரிந்து முதல் மிஷினிலேயே தேங்கி விட்டான் மதி.என்னென்னவோ முயற்சி செய்து தவறை கண்டு பிடித்து சரி செய்தார் ஆத்மா.ஆனாலும் மதி வெளி வரவேயில்லை.!சாக வேண்டியவன் ஆய்வுக்கு பலியானதில்அரசுக்கு மகிழ்ச்சி.

அடுத்த முறை அரசால் அனுப்பப்பட்டவன் அருள்.சுய சிந்தனையற்ற, சகோதரியால் பராமரிக்கப்பட்ட மங்கோலாயிடு ஜீவன்.சகோதரியின் மரணத்திற்கு பின் அவனை பராமரிக்க இஸ்டப்படாத அரசு செலவை கட்டுப்படுத்த ஆய்வுக்கு அனுப்பி விட்டது.தன் பெயரை திக்கி,திக்கி அவன் சொல்லி முடிப்பதற்குள் புரபஸர் ஒரு பிறந்த நாளை கொண்டாடி முடித்திருப்பார்.இந்த முறை வெகு கவனமாக மிஷினை பரிசோதித்து விட்டு அவனை உள்ளே அனுமதித்து ஆன் செய்தார்.ஏராள சத்தத்துடனும்,வெளிச்சத்துடனும் மிஷின் இயங்கத் தொடங்கியது.படபடப்புடன் காத்திருந்தார் ஆத்மா!

இந்த முறை மற்றோரு மிஷினின் வழியாக அருள் வெற்றிகரமாக வெளிவந்தான்.

ஆத்மா சந்தோஷத்தில் திக்குமுக்காடிய போது வெளிவந்த அருள்சுற்றும் முற்றும்தேடி இரும்பு சுத்தியை எடுத்தான்.சுயமாக நடக்க முடியாதவன் நடப்பதால் துணுக்குற்ற ஆத்மா "ஏய் என்ன செய்கிறாய்?" என்று கேட்டகேள்விக்கு "என்பெயர் மதி "என்று திக்காமல் திணறாமல்பதில் வந்தது.

அதுதான் புரபஸர் கேட்ட கடைசி வார்த்தைகள். அவனது கையிலிருந்த சுத்தி ஒருமுறை உயர்ந்து தாழ்ந்தது.கையில் சுத்தியோடு அவன் வெளியேறுவதை அவரது கண்கள் கடைசியாகப் பார்த்தது.

"தயாரிப்பில் கோளாறு! "அவரது உதடுகள் முணுமுணுத்தது.

Comments

  1. நல்ல சிறுகதை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.

    ReplyDelete
  2. அட நல்ல சை ஃபை கதை! வித்தியாசமான ஒன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி கஸ்தூரி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக