கீழடி -தமிழர் தொல் நாகரீகம்_2

மரபு வழி நடை பயணம் இரண்டு -பகுதி இரண்டு 

கீழடியின் தொன்மைக் குறித்து  மிகநீண்ட கட்டுரைத் தொடரை திரு.வெங்கடேசன் அவர்கள் ஆனந்த விகடனில் எழுதியது நினைவில் இருக்கலாம். 


அகழ்வாய்வில் எடுக்கப்பட்டத் தங்க வில்லையில் ஒரு தமிழ்ப் பெண்ணின் பெயர் இருந்தததைக் குறித்த ஒரு அத்தியாயம் இன்னும் நினைவில் இருக்கிறது.  

ஆனால் அங்கே நேரே போகும் வரை ஒரு குடியிருப்பு பகுதியின் மிச்சம் மட்டும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் புரிதலிலும் மட்டுமே போனேன். கூடவே பதிவர் நபி பால் நடராசன் வர கீழடியை அடைந்தவுடன் குழுவினர் போகும் திசையில் போகாமல் எனக்கென ஒரு திட்டமிடலுடன் ஒவ்வொரு அகழ்வாக பார்க்க ஆரம்பித்தேன். 

பொதுவாக தொன்மையான இடங்களில் அதிக நேரம் தனிமையில் செலவழிக்க விரும்பும் எனது மனநிலையும் ஒருகாரணம். சுற்றுலா வந்தவர்களுக்கு வெறும் நினைவிடமாகத் தெரியும் இடங்கள் கூட என்னை இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பா என்று சொல்லும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ரொம்ப மெதுவாகத்தான் நகர்வேன். 

நான் குறிவைத்து பார்த்த அகழ்வுகளில் சிறு வாய்க்கால்கள் இருந்தன. அவை முதல் குழியில் ஆரம்பித்து அடுத்த குழியில் நீண்டு அதற்கும் அடுத்த குழியிலும் தொடர்ந்து தென்பட்டன. பெரிதாக ஏதும் இல்லை. இருப்பினும் முகப்பில் இருக்கும் குழிகளில் சில மணித்துளிகள் அதிகமாகச் செலவிட்டேன். 


அதற்குள் நபி பால் நடராஜன் வந்து இங்கே என்ன செய்றீங்க நீங்க இங்க வாங்க என்று படபடப்புடன் அழைக்க அவனது படபடப்பை ரசித்தபடியே அவனைத் தொடர்ந்தேன். 

வேறு குழிகள் இருந்தாலும் அவன் இதெல்லாம் பார்க்காதீங்க நீங்க பார்க்க வேண்டியது இதுதான் என்று என்னை ஒரு மாபெரும் அகழ்வுக் குழிக்கு அழைத்தான். 

என்ன சார் இது என்று குழப்பமும் தவிப்புமாக கேட்டான். 

அங்கே குழுவினர் பெருத்த விவாதத்தில் இருந்தார்கள். எனது வேகத்துக்கு தொடர்பில்லாது விரைவில் அழைத்தால் நான் அவர்கள் பேசுவதைக் கவனிக்க மட்டுமே செய்தேன். 

அந்தக் அகழ்வுக் குழியில் இருந்த அமைப்பை குறித்த விவாதம் அனல் பறந்தது. குறிப்பாக மணிகண்டன், தமிழ் நாகரீகம் என்று சொன்னாலே இரண்டாயிரத்து முன்னூறு என்று சொல்லிவிடுகிறார்கள். எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்று கொதித்துக்கொண்டிருந்தார்.

நான் மெல்ல அகழ்வுக் குழியினைப் பார்த்தேன். சிறிய தொட்டிகள் பல இருந்தன. அவற்றுள் சிறிய தூம்புகள். தூம்புகள் வாய்க்கால்களாக நீண்டன. சற்று மேலே ஒரு உலை இருந்தது. அதற்கும் மேலே ஒரு அடுப்பு. அடுப்பு பல காலம் எரிந்திருக்கவேண்டும். அதன் அருகே இருந்த சுவற்றின் கருமையை நடராசன் சுட்டிக் காட்டி  சொன்னான். 

ஆக அது குடியிருப்பு அல்ல. ஒரு பெரும் வேதியியல் தொழிற்சாலை ஒட்டுக் கொட்டைகைக்கு கீழே செயல்பட்டு வந்திருக்கிறது! 

எவ்வளவு முக்கியமான இடத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வு மின்சாரமாய்த் தாக்கியது. 

ஏதோ ஒரு திரவம் கொதிக்கவைக்கப் பட்டு பல்வேறு வாய்க்கால்களில் பாய்ச்சப்பட்டிருந்திருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது. 

தூம்பு வாய்க்கால்கள் தனிக் கதை சொல்கின்றன. மேல்மட்டத்தில் ஒரு மூடிய வாய்க்கால் வடமேற்கே திரும்பினால் அதற்கு அடியில் இன்னொரு வாய்க்கால் வடகிழக்கில் திரும்புகிறது. 


சாயப் பட்டறையா, இல்லை வேறு வேதியல் செயல்பாடுகள் நடந்தனவா என்பதையெல்லாம் விவாதித்த வண்ணம் இருந்தனர் குழுவினர். 

எனக்கு தெளிவாகப் புரிந்தது வேறொன்று. 

இவ்வளவு தொழில் நுட்பத்தையும் இரண்டாயிரத்து ஐநூறு என்று அவர்கள் பெரிய மனதோடு சொன்னாலும் இந்த தொழிற் கூடம் அந்தக் கருத்தை எள்ளி நகையாடுகிறது. 

ஆம் இவ்வளவு சிக்கலான வடிவமைப்பை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளில் தமிழன் அடைந்தான் என்றால், அது அதற்கு முன்னால் அந்தத் தொழில் நுட்பம்  எப்படி உருவாக்கி வளர்ந்திருக்க வேண்டும்! 

கேவலமாக பார்த்தாலும் ஐநூறு ஆண்டுகள் ஆய்வும் அனுபவமும் வழி வழியாக இருந்தால்தான் கீழடியில் தற்போது இருக்கும் அமைப்பை நிறுவுவது சாத்தியம். 

இந்த கருத்து இந்த நாகரீகத்தை இன்னும் ஒரு ஐநூறு ஆண்டுகள் பழமையானதாக நிறுவக் கூடிய சாத்தியத்தை தருகிறது. ஆக மூவாயிரம் ஆண்டுகள் பழமை என்பதை போகிற போக்கில் உணர முடியும். 

ஆனால் உணர்வாளர்கள் இது இன்னுமே பழமையானது என்று கருதுகிறார்கள். 

உணர்வுகள் உண்மையாக இருந்தால் நலம்தானே. 

அறிவியல் பூர்வமாக கீழடியின் தொன்மையை நிறுவ வேண்டியது நமது கடமை. 

ஆய்வு நடக்கும் பகுதியில் இருக்கும் பொருட்களைத் தான் நாம் தொடக் கூடாது. ஆனால் இந்த தென்னம் தோப்பு முழுதுமே பானை ஓடுகள் கிடக்கின்றன. கார்பன் டேடிங் ரொம்ப சுலபம். 

மணிகண்டன் ஒரு முறை கார்பன் டேட்டிங் செய்ய ஐம்பதாயிரம் ஆகும் என்று சொல்கிறார்.  எனவே தொல் பொருள் துறை வலிந்து வலிந்து இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் என்று அறிவித்தாலும் உணர்வாளர்கள் யார் வேண்டுமானாலும் உண்மையான கால அளவை கண்டறிய ஆயிரம் அறிவியல் சாத்தியங்கள் இருகின்றன. 

பாதி சிதைந்த நிலையில் இருக்கும் அந்த உலையையும் அதன் பல்வேறு குழாய்களையும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். 

பெரிய அந்த அகழ்வுக் குழிக்கு அடுத்து வெகு தெளிவாகத் தெரிந்தது ஒரு வாலைவடிகட்டுதல் அமைப்பும் அதன் போக்குக் குழாயும்.

ஒரு நாள் முழுதும் அகழ்ந்தாலும்  பத்து சென்டி மீட்டர்கள் மட்டுமே அகழ முடிகிற குழிகள், மிகுந்த  சிரத்தை எடுத்து அகழப்பட்டவை அக்குழிகள்.

ஆனால்

அனைத்தையும் ...

மூடப் போகிறார்கள். 

 ஆம், மூடித்தானே ஆக வேண்டும்.

ஏன் ?

தொடர்வோம் 

Comments

 1. மூடினாலும் கீழடியின் தொன்மையை இனி மூடி மறைக்க முடியாது :)

  ReplyDelete
 2. தகவல் களஞ்சியம் தொடர்கிறேன் தோழரே...
  த.ம.

  ReplyDelete
 3. அருமையான ஆய்வுத் தகவல்

  ReplyDelete
 4. சிறப்பான தகவல்கள். அகழ்ந்து தெரிந்து கொண்ட விஷயங்களையும் மண்ணோடு மண்ணாக மூடி விடுவார்கள் போலும்.... தொடர்கிறேன்.

  ReplyDelete
 5. எனது ஆய்வுப்பயணத்தின்போது பல நிகழ்வுகளைக் கண்டுள்ளேன். வரலாற்றுக்கு நாம் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை வேதனையோடு உணர்ந்துள்ளேன். அவற்றிலிருந்து இவ்விடம் வித்தியாசப்படுத்தப்பட்டு, காப்பாற்றப்படுகிறதா என்று பார்ப்போம்.

  ReplyDelete
 6. தகவல்கள் ஆச்சர்யம் அளிக்கின்றன....
  மூடப்போகிறார்களா... ஏன் அறிய ஆவல்...

  ReplyDelete
 7. சிறப்பான வியப்பானத் தகவல்கள். மூடப் போகின்றார்களா ஏன்? இதென்னக் கூத்து? இத்தனை அகழ்ந்து எடுத்து பின்னர் ஏன் மூடுகின்றார்கள்? காப்பாற்றப்பட வேண்டாமோ?!!! ஏதேனும் காரணம் உள்ளதோ?

  ReplyDelete

Post a Comment

வருக வருக