சென்னை மாமழை புதுகைக்கு ஈந்த குளம்

புதுகை நகர்மன்றத் தலைவர் திரு.ராஜசேகரன்
காலை விதைக் கலாம் நிகழ்விற்கு வழக்கத்தைவிடத் தாமதமாகத்தான் போனேன். யு.கே.டெக் கார்த்திக்  அவர்களின் வீட்டின் முன்னர்  இருக்கும் குளத்தின்  கரையில் மரம்  நடுதல் நிகழ்வு. 


கொஞ்சம்  கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து கொண்டிருந்த குளம் அது. 
கையறு நிலையில் பார்த்துக்கொண்டே   கடந்த நெருடல்  நாட்கள் நினைவில் நிகழ்விற்கு  சென்ற எனக்கு குளத்தின் கரைகள் எடுத்துக் கட்டப்பட்டு வேலியிடப்பட்டு  இருந்த்தது  வியப்பையும் மகிழ்வையும்  ஒருங்கே விளைவித்தது. 

வாய்விட்டே  சொன்னேன் "அப்பாடா  ஒரு வழியாக குளத்தை மீட்டாச்சு!" 

நிகழ்வில் இருந்த புதுகை சாதிக்  அவர்கள் இங்கே பாருங்க மீட்டவர் இவர்தான் என்று சுட்டிக் காட்ட நண்பர்கள்  நடுவே புதுகையின் நகரத் தந்தை திரு.ராஜசேகரன் பி.ஈ. (சிவில்). 

வாங்க சார் என்றார், நான்  வணக்கம் சொல்லி நன்றி சொன்னேன். 

நிகழ்வுக்கு பின்னர் நீண்ட நாட்கள் மனதில் இருந்த ஒரு எண்ணத்தை அவரிடம் சொன்னேன். 

"நீங்க ஒரு  சிவில் எஞ்சினிர் என்பது நீங்கள் செய்த ஒவ்வொரு விசயத்திலும் தெரிகிறது, (புதுகையின் பேருந்து நிலையத்தில் எழும்பும் அம்மா மருந்தகம், வாரிகளில், சாக்கடைகளில் இறங்கி தூர்வாரும் எந்திரங்கள், கலசப்பட்டினம் அருகே எழும்பும் பிரமாண்டமான குட்பை குப்பை திட்ட அரங்குகள் என பல விசயங்களைப் நான் ஏற்கனவே பார்த்து உணர்ந்திருந்ததால் இப்படி சொன்னேன், சும்மா செம்படி அல்ல!)

அவரும் சில விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். 

குறிப்பாக நிகழ்வு நடந்த குளத்தின் மீட்பு!

புதுகை தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில்   சேசைய சாஸ்திரிகள், பாரிஸுக்கு ஒரு குழுவை அனுப்பி அதன் நகர் வடிவமைப்பைப் பார்த்து வடிமைத்த நகரம் புதுகை.  ஒரு பெரும் சரிவில் வனத்தின் நீர் வடிந்தோடும் வழியில் முப்பத்தி ஆறு குளங்கள்.  இவற்றை சுற்றி எழுப்பப்பட்ட நகரம் புதுகை!

இன்றைய நிகழ்வு ஒரு குளக்கரையில்தான் ..

புதுகை கீழ இரண்டாம் வீதியின் இருக்கும் குளம் அது, தொடர்ந்து தூர்க்கப் பட்டு வந்தது. கேட்பார் இல்லை. குளத்தின் இறுதி மூச்சை கண்ணால் பார்க்க வேண்டிய சபிக்கபட்ட நாள் வெகு சமீபத்தில். 

மிக முக்கியமான காரணம் வரத்து வாரி இல்லை. 


குளத்தின் அமைப்பை வைத்துப் பார்த்த திரு. ராஜசேகரன் அந்த குளத்தின் வடமேற்கே ஒரு நீர்வரத்து வாரி இருப்பதை உணர்ந்திருக்கிறார். ஆனால் அதன் மீது ஒரு வீடு இருக்கிறது. 

வீட்டின் உரிமையாளர்கள் மூவரும் பெண் வாரிசுகள். சென்னைவாசிகள். புதுகைக்கு அழைத்துப் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. நகர்மன்றத்தில் சேர்மன் அலுவலகத்தில் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். 

மூன்று தலைமுறையாக இதே வீட்டில்தான் இருக்கிறோம், பட்டா இருக்கிறது எனச் சொல்லியிருக்கின்றனர்.

கடைசி அஸ்திரமாய் நீங்க சென்னையில்தானே இருக்கீங்க இப்போ வந்த மாமழைக்குச் சென்னை என்ன பாடுபட்டது, பார்த்துட்டுதானே இருந்தீங்க என்ற நகரத்தந்தையின் கேள்வி அவர்களை நெகிழ வைத்துவிட்டது. வீட்டை விட்டுக் கொடுத்துவிட்டார்கள் அந்த மாதரசிகள். 

வீட்டைப் பிரித்து அகழ்ந்தால் மிகச்சரியாக நடுவீட்டில் இருந்திருக்கிறது வாரி!

சரி செய்து நீர்வரத்தை உறுதி செய்தாகிவிட்டது, இனி இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். 

அவர் சொன்ன இன்னொரு விசயம்தான் ரொம்பவே  வருத்தியது. 

அது அந்த வாரியின் கட்டுமானத் தரம். 

இன்னும் ஒரு இருநூறு ஆண்டுகளுக்கும் அது அப்படியே இருக்கும், எந்த பாதிப்பும் இல்லாமல் என்றார். 

ஆமா அந்தக்காலத்தில் மன்னரிடம் ஒப்பந்தக்காரர்கள் வேலையைக் காட்டினால் உடலில் தலை இருக்குமா என்ன?

நாகரீகம் மிக்க சனநாயக குடிகள் சேதப்படுத்தவில்லை என்றால் இருநூறு என்ன இன்னுமே அதிக ஆண்டுகள் சேசைய சாஸ்திரிகளின் வாரிகள் இருக்கும்தானே?

போகிற போக்கில் இன்னொரு செய்தியையும் சொன்னார் ராஜசேகரன். 

பல்லவன் குல வடிமதகுச் சந்து முழுதும் சனநாயக குடிகளின் தங்க நகைக் கடைகளும், வட்டிக் கடைகளும் ஆக்ரமிக்க பல்லவன்குளத்தின் நீர் வெளியேறும் வழி அடைபட்டுவிட்டது. 

சரி இந்த ஆண்டு கனரக நீரேற்றிகள்மூலம் சமாளிப்போம் என்று நீரை வெளித்தள்ளிவிட்டு பிரச்னை தீர்க்க என்ன வழி என்று யோசித்திருக்கிறார். 

வருடம் தோறும் நீரேற்றிகள் பயன்படுத்த முடியாதே!

வழக்கமான தெற்கு வடிகாலுக்கு மாற்றாக கிழக்கு நோக்கி ஒரு வடிகால் அமைப்பதுதான் சிறந்தது என்று முடிவெடுத்திருக்கிறார். 

ஆறுமாத ஆய்விற்கும் திட்டமிடலுக்குப் பின்னும் திருப்தி வராமல் ஒரு இடத்தை சோதனை முறையில் சிறிது அகழ்ந்து பார்த்து முடிவு செய்யலாம் என்று அகழ்வுக்கு பணித்திருக்கிறார். 

மிகச் சரியாக எட்டு அடியில் இன்னொரு வடிகால் குழுவைப் பார்த்து சிரித்திருக்கிறது. 

ஆறுமாதம் ஒரு பொறியாளரான நகரத் தந்தை மண்டையை உடைத்துக் கொண்டு திட்டமிட்டதை அன்றே தீர்க்க தரிசனமாகச் செய்திருக்கிறார் சேசைய சாஸ்த்திரிகள்!

இந்த வடிகால் மீதும் சனநாயகக் குடிகளின் கடைகள் இருக்கின்றன. தீபாவளி முடிந்தவுடன் செய்யுங்கள் என கோரிக்கை வைக்க செவி மடுத்திருக்கிறார். 


நகரத் தந்தை திரு.ராஜசேகரனின் முழுப் பின்புலமும் நான் அறிந்ததே. அவரது தந்தையார் புலவர் ராசேந்திரன் மிக மரியாதையானவர்.  ராஜா பர்னிச்சர் என்கிற பொன்விழா நிறுவனத்தை நடத்தி வருபவர் அவர்.   ராஜசேகரன் நான் இருந்த புதுகை ஜே.சி.ஐ. சென்ட்ரலின்  உறுப்பினரும் கூட.  இந்நிலையில் இவரது  திடீர் அரசியல் அவதாரம் பலருக்கும் வியப்பு. 

ஆனால் ஒருமுறை புதுகையை சுற்றிப் பார்த்தார்கள் என்றால் வியப்படைந்தவர்களும், வினா எழுப்பியவர்களும் மிகத் தகுதியானவருக்குத்தான் பதவி கிடைத்திருக்கிறது எனபதை முழுமனதுடன் ஒப்புக்கொள்வார்கள். 

குளங்கள் மீட்பிற்கும், புதிய பூங்காக்களுக்கும் அடுத்த தலைமுறையின் கட்டிட அடையாளமாக இருக்கும் அரசுக் கட்டிடங்களை நகராட்சியில் அமைப்பதற்காவது இவர் இன்னொரு சுற்று நகரத் தந்தையாகத் தொடர வேண்டும் என்பதே மக்களின்  எண்ணமாக  இருக்கிறது. 

நிகழ்வின் விடைபெறுதலில் விதைக்கலாம் உறுப்பினர்கள் கன்றுகளை தர முடியுமா என்று வினவிய பொழுது தருகிறேன் என்று வாக்களித்திருக்கிறார். 

தொடர்ந்து குளத்தின் கரையில் மீதம் இருக்கும் இடங்களிலும் கன்றுகளை நட கோரியிருக்கிறார். 

நன்றிகள் ..

அன்பன் 
மது 

Comments

 1. ஒன்றை தெரிவிக்க றந்து விட்டீர்கள் சகோ. விதைக்KALAM புதுகை நக்ரில் எங்கு வேண்டுமானாலும் மரம் வைக்க அனுமதி தந்தார். அத்துடன் நில்லாமல் நீங்கள் யாராவது பொறுப்பு ஏற்று கொண்டால் நீங்கள் வைக்கும் கன்று களுக்கு தண்ணீர் ஊற்ற சிறிய தண்ணீர் வண்டி வாங்கி தருகிறேன் என்றும் சொன்னார்.வைக்

  கும்செடிகளுக்கு

  ReplyDelete
 2. குளத்தை மீட்டு...
  மரம் நட்டு...
  வாழ்த்துக்கள்... தொடரட்டும்....

  ReplyDelete
 3. நல்லதொரு பணியில் ஈடுபடும் தங்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. நல்லதொரு மிகவும் சிற்ப்பான பணி....தொடரட்டும் நல்ல ஆக்கப்பூர்வமான பணிகள்!! வாழ்த்துகள்!

  ReplyDelete

Post a Comment

வருக வருக