இனி படம்.
-------
வாழ்வு புனைவை விட நம்பகத்தன்மையற்றது என்பதை உணரவைக்கும் படம்.
செவன்த் டே அட்வென்ட்டிஸ்ட் எதற்கு இராணுவத்தில் சேர வேண்டும்? அதுவும் மெடிக்காக சேர்ந்துவிட்டு துப்பாக்கியை கையில் எடுக்க மாட்டேன் என்று கோர்ட் மார்ஷலுக்கு உட்பட வேண்டும்?
இப்படி துப்பாக்கி எடுக்காமல் போர்களத்துக்கு போகிறவன் வீரனா ? படம் பார்த்து வெளிவருபவர்கள் சொல்வது மாவீரன் சார் இவன்!
இது ஒரு உண்மைச் சம்பவம்.
படத்தின் நாயகன் டெஸ்மாண்ட் டாஸ் கடந்த இரண்டாயிரத்து ஆறில்தான் இறந்திருக்கிறார்!
இது நிகழக் கூடிய கதையா ?
இப்படி ஒரு கிறுக்கன் இருப்பானா ?
பைபிள் இப்படி ஒரு அழுத்தமான நம்பிக்கையை விதைக்க முடியுமா?
என்கிற அத்துணைக் கேள்விக்கும் நம்பவே முடியாத பதில்களைத் தரும் உண்மைச் சம்பவம் இந்தப் படம்.
தனி முத்திரை பதிக்கும் மெல் கிப்சனின் இயக்கத்தில் வந்திருக்கும் படம். இம்முறை மேக்கப்பிற்காக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் ஒன்று. ஹீரோவுக்காகவும் கூட.
போரில் தனது நண்பர்களை இழந்து அந்த கசப்பான உணர்வுகளோடு மனச்சிதைவில் வாழும் முதலாம் உலகப் போர் சிப்பாயின் மகன் டெஸ்மாண்ட்.
முதல் காட்சியிலேயே தனது சகோதரனை ஒரு செங்கலால் அடித்து திரிசங்கு சொர்கத்துக்கு அனுப்புகிறான் டெஸ்மாண்ட். அவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில் பக்கத்துக்கு அறைக்கு வெறித்த பார்வையுடன் செல்கிறான்.
அரைச் சுவரில் தினசரி பிரார்த்தனை படங்களோடு இருக்க அதை வெறிக்கிறான். பக்கத்தில் இன்னொரு படத்தில் தொ ஷால்ட் நாட் கில் என்று காயின் ஆபேல் படம்.
வெறித்துப் பார்த்துக்கொண்டே நிற்கிறான். தன்னை அடிக்க பெல்டை உருவிக் கொண்டுவரும் அப்பனையோ, அவனை மன்றாடி அனுப்பும் அம்மாவையோ கவனிக்காமல் நிலை குத்தி இறந்த ஆபேலின் படத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறான் டெஸ்மாண்ட்.
காலம் உருண்டோட தச்சு வேலையை செய்கிறான். தேவாலயம் ஒன்றின் உயர்ந்த சாளரக் கண்ணாடி வழியே வீதியில் நடக்கும் ஒரு விபத்தைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கி ஓடுகிறான்.
காருக்கு அடியில் சிக்கிய ஒருவனை மீட்டு அவன் உடைந்த காலில் தனது பெல்டைக் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான்.
அங்கே எதார்த்தமாய் ஒரு நர்சை பார்க்கிறான். இரத்ததானப் பிரிவில் இருக்கும் அவளை மறந்துகூட சிஸ்டர் என்று அழைக்காமல் மேம் என்றே பேசுகிறான். வழி என்றால் அப்படி ஒரு வழி. அவளுக்காகவே ரத்ததானம் செய்துவிட்டு மறுநாள் வீட்டில் அம்மாவிடம் சத்தமாக சொல்கிறான். அம்மா நான் நர்ஸ் டோரதியாய் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்!
அம்மா ரொம்ப கூலா அதெல்லாம் சரி அவளுக்கு அது தெரியுமா ? என்கிறாள்!
இல்லம்மா இப்போ போய்தான் கேட்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடுகிறான்!
இந்த ஷாட்டில் இருந்து கிட்டத்தட்ட காதல் வழியும் எபிசோடுகள்தான். செம ரோமான்ட்டிக்காண ஷாட்ஸ். அந்த கெமிஸ்ட்ரியை அப்படியே ஆடியன்ஸ்ஸுக்கும் கடத்தியதில் மெல் கிப்சன் முத்திரை பதித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகச் சிறந்த காதல் படத்தைத்தானே பார்த்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்க வைத்த காட்சிகள். காதல் வழியும் வசனங்கள்வேறு.
ஒரு மொக்கை வசனம் ஒன்றை சொல்லிவிட்டு ராத்திரி முழுக்க பராக்டீஸ் எடுத்தேன் நல்லால்லையா என்று கேட்கும் பொழுது அவள் சொல்கிறாள் நான் அப்படிச் சொல்லலையே என்கிற இறுதி வசனங்கள் கிளாஸ்.
திடீரென ஒருநாள் மிலிட்டரி யூனிபார்மில் வந்து டைனிங்கில் அமரும் அண்ணனை அப்பா வார்த்தையால் வறுத்தெடுக்கிறார்.
நல்ல ஹார்ஸ்டெயில், நல்ல யூனிபார்ம் அல்லாப் பொண்ணுங்களும் உன்னையே பார்ப்பாங்களே!
நானும் உன்னை மாதிரித்தான் இருந்தேன். பொண்ணுங்க கூட்டம் கூட்டமா என்னைய நோக்கி வந்தாங்க!
ஆனால் நான் ஒரு முட்டாள். கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போய் அப்பா அவனை ஏன் மூஞ்சிலே முழிக்காதே போ என்று விரட்டி விடுகிறார்.
மறுநாள் இராணுவ மயானத்தில் இருக்கும் அவரை சந்திக்கிறான் டெஸ்மாண்ட்.
இந்த காட்சியில் டெஸ்மாண்ட்டின் அப்பா பேசும் வசனங்கள் செழுமையான இலக்கியத்தரம் வாய்ந்தவை.
இங்கே பார், என் நண்பர்கள் மண்ணோடு மண்ணா, புழு அவங்கள தின்னுட்டு இருக்கு. யுத்தமெல்லாம் தேவையேஇல்லாதது என்று பேசும் அவரிடம் சொல்கிறான்.
அப்பா நானும் ராணுவத்தில் சேர்ந்துட்டேன்!
பயிற்சிக்கு சென்றால் களப் பயிற்சிகள் அனைத்திலும் முன்னணியில் இருக்கும் டெஸ்மாண்ட் இரண்டு சீரியசான பிரச்சனைகளைக் கிளப்புகிறான். ஒன்று செவன்த் டே அட்வண்டிஸ்ட் என்பதால் சனிக்கிழமை பயிற்சியை தவிர்க்கிறான். இதற்காகவே இவனை பிட்டத்தில் சுடலாம் என்கிற நிலையில் துப்பாக்கி பயிற்சி எனக்கு வேணாம் என்று கூற இருக்கும் அனைவரும் காண்டாகிறார்கள்.
அனைவர்க்கும் முகாமை விட்டு வெளியேற பாஸ் கிடைக்க டெஸ்மாண்ட்டுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. அன்று திருமணம் என்று
காதலி டோரதி தேவலாயத்தில் காத்திருக்க டெஸ்மாண்ட் சிறையில் அடைக்கப்படுகிறான். அறையின் கதவை ஆக்ரோசமாய் குத்தி தனது மனஅழுததை குறைத்துக்கொள்கிறான். சார்ஜென்ட் உள்ளே வந்து துப்பாக்கி தொடாமல் இராணுவத்தில் இருக்க முடியாது என்று சொல்லி விட்டு டோரதியை உள்ளே அனுப்புகிறான். டோரதி அவனை ஒருமுறை மன்னிப்பு கேட்டு விட்டு இராணுவத்தை விட்டு வெளியேறு என்று சொல்கிறாள்.
உண்மையான டெஸ்மாண்ட் டாஸ் |
அப்படிச் சொன்னால் எனது நம்பிக்கைக்கு எதிராக நானே செயல்படுவது, அப்படி ஒரு மனிதனாக உன் முகத்தில் எப்படி விழிப்பேன் என்று ஆகாத தத்துவம் பேசும் அவனை எந்த நிலையிலும் உன்மீது இருக்கும் காதல் மாறாது என்று சொல்லி கட்டிக்கொள்கிறாள் டோரதி.
மறுநாள் கோர்ட் மார்ஷல்(இராணுவத்தினருக்கான தனிக் கோர்ட்).
மன்னிப்பு கேட்டால் வீட்டிற்கு போய்விடலாம்.
உள்ளே நுழைந்த அந்தக் கணத்தில் தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று சொல்ல ஜூரி டரியலாகிறார்.
கீழ்படியாமை குற்றம் நிருபணமாகி தண்டனை வழங்கப் பெரும் அந்த கணத்தில் கதவைத் தகர்த்துக் கொண்டு வருகிறார் டெஸ்மாண்ட்டின் அப்பா.
பிரிகேடியர் ஜெனரல் ஒருவரின் பரிந்துரைக் கடிதத்துடன்.
அமெரிக்கக் குடிமைச்சாசனத்தின்படி டெஸ்மாண்ட் குற்றமற்றவன் என்றும் அவன் தப்பாக்கி எடுக்காமலே போர்களத்துக்கு ஒரு மருத்துவ மீட்பனாக போகலாம் என்று சொல்லும் அந்த கடிதத்தையே தீர்ப்பாக வாசிக்கிறார் ஜூரி.
தலையில் ஒரு பெரிய சிகப்பு கூட்டல் குறி போட்ட இரும்புத் தொப்பி, கையில் ஒரு பெரிய கூட்டல் குறிபோட்ட பட்டையுடன் ஜப்பானின் ஹாக்ஸா ரிட்ஜ் என்று அழைக்கப் பட்ட மலை முகடு ஒன்றிற்கு செல்கிறான் டெஸ்மாண்ட்.
வரவேற்பே அமர்க்களம். லாரி லாரியாக சிப்பாய்களின் பிணக் குவியல் சென்று கொண்டே இருக்க இவர்கள் படையணி முன்னேறுகிறது.
ஒரு அரைக் கிலோமீட்டர் உயரத்திற்கு கயிறுஏணி ஒன்று இருக்க அதனைப் பற்றி ஏற ஆரம்பிகிறது படையணி.
சும்மா சவட்டி அடிக்கிறார்கள் ஜப்பானியர்கள். ஒரு வழியாக அங்கே இருந்த இரண்டு பங்கர்களை தகர்த்து நிலை கொள்கிறது படையணி.
அன்று இரவு தான் ஏன் துப்பாக்கி பிடிக்கவில்லை என்று சொல்கிறான் டெஸ்மாண்ட். அவன் அம்மா அவனிடம் சத்தியம் வாங்கியிருகிறாள் என்கிறான்!
எந்த ஆயுதமும் இல்லாமல் டெஸ்மாண்ட் களத்தில் காட்டிய தீரத்தை பார்த்த அவனது நண்பன் முதல் முறையாக டெஸ்மாண்ட் கோழை இல்லை என்பதை உணர்கிறான்.
மறுநாள் விடிய காட்சிகள் அப்படியே தலைகீழாக மாறுகிறது. ஜப்பானியப் படைகள் ஈசலாக வெளிவந்து தாக்க நிலைகுலைத்து போன அமரிக்கப் படை அடித்துப்பிடித்து பின்வாங்க டெஸ்மாண்ட் மலை முகட்டிலேயே இருக்கத் தீர்மானிக்கிறான்.
அன்று இரவு அந்தப் பரப்பில் கிடந்த காயமுற்ற அனைவரையும் கையிற்றைக் கட்டி கீழே அனுப்புகிறான். இரவு முழுதும்! ஒற்றை ஆளாக. ஆயுதங்கள் ஏதும் இன்றி!
மறுநாள் பகலிலும் தொடர்கிறான். கண்டறிந்த அனைவரையும் ஜப்பானியர் உட்பட கீழே அனுப்பிக்கொண்டே இருக்கிறான்.
பிரார்த்தனை செய்தவாறே ஒவ்வொருவராக கயிற்றின் வழியே அனுப்ப கயிறுகள் அவன் கையை ரணமாக்கி இரத்தம் வழிகிறது.
பார்க்கிற நமக்கோ இது என்ன கார்டூன் நெட்வொர்க்கா இல்லை மார்வல் காமிக்ஸா என்கிற சந்தேகம் வருகிறது.
கடைசியாக சார்ஜெண்டை மீட்கிற பொழுது ஜப்பானியர்கள் துரத்த, ஒரு கயிற்றைக் கட்டிக்கொண்டு இன்னொருவனை தூக்கிக் கொண்டு குதித்துவிடுகிறான். துரத்தும் ஜப்பானியர்களை கீழே இருந்து சுடுகிறார்கள் அமெரிக்கர்கள்.
உடலில் சிறு சிறு காயங்களோடு வந்திருக்கும் அவனை அற்புதம் ஒன்றை நிகழ்த்தும் தேவனின் தூதன் என பார்க்கிறார்கள் அவனது தோழர்கள்.
மறுநாள் சனிக்கிழமையாக இருந்தாலும், ஒரு மன்னிப்பு பிரார்த்தனைக்கு பிறகு தனது படையணியோடு கிளம்புகிறான் டெஸ்மாண்ட். மீண்டும் எந்தத் துப்பாக்கியும் இல்லாமலே.
ஜபானியன் ஒருவன் எறிந்த கையெறிகுண்டை வெறும் கையாலே தடுத்து வீசி, காலால் இன்னொரு குண்டை உதைக்கிற பொழுது அது வெடிக்க பறந்து விழுகிறான். ஒரு ஸ்ட்ரச்சரில் இவனை நகர்த்தும் பொழுது மீண்டும் மீண்டும் கேட்கிறான் எனது பைபிள் பைபிள்.
சிதறி விழுந்த பைபிளை தேடி எடுத்துத் தர கீழே இறங்குகிறது ஸ்ட்ரச்சர்.
தனது காதல் மனைவியுடன் வாழ்ந்து கடந்த இரண்டாயிரத்து மூன்றில் இறந்துபோன டெஸ்மாண்ட் டாஸ் நினைத்துக் கூட பார்க்க முடியாத சூப்பர் ஹீரோ.
எழுபத்தி ஐந்து பேர்களை, மரணித்துவிட்டதாகக் கருதி படையணி கைவிட்ட பலரை ஒற்றை ஆளாக மீட்டு கீழே அனுப்பிய டெஸ்மாண்ட் மெடல் ஆப் ஹானர் விருதினைப் பெற்றார் எனபது குறிப்பிடத்தக்கது. போரை மறுக்கிற ஒரு மனிதருக்கு வீரத்திற்கான கௌரவ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாசிப்பு, பொறுமை ரசனை உள்ளோருக்கு அருமையான படம்.
தொடரி ரசிகர்கள் தவிர்க்கவும்.
அன்பன்
மது.
அற்புதமான இரசனை ஐயா தங்களுக்கு. நிச்சயம் பார்த்துவிட வேண்டும் எனும் பேராவலை நிகழ்த்திவிட்டீர்கள் ஐயா.மிக்க நன்றிகள்.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeletehttp://www.ypvnpubs.com/
அருமையான படம்! பார்த்துவிட்டேன். மிக மிக அருமையான படம். என்ன ஒரு செய்தி சொல்லுகிறது இல்லையா....
ReplyDeleteதுளசி
ஒரு படைப்பாளியின் ரசனை மதிப்பு மிக்கதே! விரைவில் பார்ப்பேன்.
ReplyDelete