இனி பி.எட் படிக்கலாமா?சமூகத்தில் இன்றுவரை தனி மதிப்பை பெற்றுள்ள சேவைப் பணிகளில் முதன்மையானது ஆசிரியப்பணி. பட்டயம், பட்டம் என்று இரு வகை தேர்வுகள் இருந்தாலும் தற்போது பி.எட் பயில்வோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது.ஏகப்பட்ட கனவுகளுடன் காத்திருக்கும் பி.எட் பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு கிடைக்குமா? இதுதான் இப்போதைய கேள்வி.

சில புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் இந்தக்கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

இன்றைய தேதிக்கு சில தரவுகளின் அடிப்படையில் பதினேழு மாணவர்கட்கு ஒரு ஆசிரியர் வீதம் இருப்பதாக சொல்கிறார்கள். ஆக நான்காயிரத்திற்கும் அதிகமாக பட்டதாரி ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாகவே பணியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் புதிய ஆசிரியப் பணியிடங்களை உருவாக்குவது இயலாத காரியம். ஒருகாலத்தில் அரசுப் பள்ளிகள் மரத்தடியில் நடந்தன என்பது உண்மைதான்.

ஆனால் இன்றைய சூழலில் நல்ல கட்டமைப்பு, பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இருந்தும் மாணவர் சேர்க்கைவிகிதம் அபாயகரமான அளவில் குறைவதே இதற்கு காரணம். மக்கட்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பக்கட்டுப்பாடுதிட்டம் செயல்படுத்தப்பட்ட பொழுது சேர்கை விகிதங்கள் முதல் அதிர்வைச் சந்தித்தன. அடுத்த அதிர்வு தனியார் பள்ளிகள் மூலம் வந்தது. இப்படி சேர்கை விகிதம் சிதற அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிய ஆரம்பித்தது.

 தனியார் பள்ளிகளில் வழங்கப்படும்  கவர்சிகரமான கராத்தே, இசை வகுப்பு, இந்தி வகுப்பு, அயல் மொழி வகுப்பு, போன்ற பல கல்விசார் செயல்பாடுகளில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுப்  பள்ளிகளில் மட்டும் கராத்தே பயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆசிரியர் மனப்பாங்கு

அரசுப் பள்ளி ஆசிரியர்களில் நல்ல மனப்பாங்குள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் இன்றுவரை மாணவர் சேர்க்கை விகிதம் கூடிவருவது முக்கியமான செய்தியைச் சொல்கிறது.

மாற்றம் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர் மனப்பாங்கில் விளைந்தால் அரசுப் பள்ளிகள் முத்திரை பதிக்க ஆரம்பிக்கும்.

அதிரடி மாற்றங்களை செயல்படுத்தவேண்டிய  நேரம் வந்து சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல ஆசிரியர்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதிருப்பது வருத்தமே.

என்ன செய்யலாம்?

முன்னாள் மாணவர் சங்கத்தை உருவாக்கி அவர்கள் மூலம் புரவலர்களை இனம் காண்பதும், நிதியை நம்பிக்கை உரிய வகையில் செயல்படும் ஒரு முன்னாள் மாணவர் மூலம் செலவிடுவதும் நல்லது.

காலை சிறப்பு வகுப்பு, அதற்கான மேற்பார்வையாளர், காலை உணவு என்று துவங்கினால் கல்விச் செயல்பாடுகள் மேம்படும். மேலும் இசை வகுப்புகள், விளையாட்டில் சாதனைகள், ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி, மாவட்ட அளவிலான விநாடிவினாப் போட்டிகள் என்கிற பல பயிற்சிகளை நாம் மாணவர்கட்கு தருவது அவசியம்.

இந்த புள்ளியில் சிந்தித்து செயல்படும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளின் வாழ்நாளை இன்னும் ஒரு தசாப்தம் நீடிப்பார்கள்.
இதற்கு ஜி.ஒ இருக்கா?
வேலையப்பாருங்கப்பா  என்கிற சக ஆசிரியர்களுக்கு நிலைமையின் தீவிரத்தைச் சொல்லிச்  சேவைச்செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் கடமை சங்கங்களுக்கு இருக்கிறது.


இல்லை எனில் ?

பதில் கசப்பானதுதான், ஆனால் அதுதான் உண்மை.

இன்று பணியில் இருக்கும் ஆசிரியர்கள்தான் கடைசித் தலைமுறை அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.

இந்த நிலையில் பி.எட். பயில்வதொ, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு காத்திருப்பதோ பொருளற்றது.

அப்போ பி.எட் படித்தவர்கள் என்ன செய்யலாம்?

1.முதுகலைப் பட்டத்தின் பின்னர் டி.ஆர்.பி எழுதி முதுகலை ஆசிரியர் பணிக்குச் செல்லலாம்.
2. நெட், தேர்வை எழுதி கல்லூரி விரிவுரையாளர் பணிக்குச் செல்லலாம்.
3. சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்சியை எடுத்துக் கொண்டு நிறுவனப் படுத்திக்கொண்டு சேவையைத் தொடரலாம்.

ஆக பி.எட் பட்டதாரிகள் இனி பட்டதாரி ஆசிரியப் பணியிடத்திற்கு மட்டுமே தயாராகத் தேவை  இல்லை.

விரியத்திறந்திருக்கும் வேறு வாசல்களை கண்டறிய வேண்டிய அவசியம் அவர்கட்கு இருக்கிறது.

வணக்கம்
அன்பன்
மது 

Comments

  1. அலசல் பலருக்கும் பலன் தரும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக