லார்கோ விஞ்ச்
இரண்டாயிரத்து பதினொன்றில் வந்த திரைப்படம். பழைய சார்ல்ஸ் டிக்கென்ஸ் நாவல்களைப் போல ஒரு அனாதைச் சிறுவனின் தூரத்து உறவு ஒருவர் உலகப் பெரும் கோடிஸ்வரர். வாரிசு இல்லை என்கிற தருணத்தில் அவரது வாரிசாக லார்கோவை தேர்ந்தெடுக்கிறார்.பெல்ஜியத்தில் காமிக்ஸ் வடிவில் வந்தது. ஹாலிவுட் எப்படி காமிக்ஸ் உலகை திரைக்கு கொணர்கிறதோ அதே போல பாரிஸ் இயக்குனர் ஜெரோம் சால் இந்தப் படத்தில் காமிக்ஸ் ஹீரோ ஒருவரை திரைக்கு மீண்டும். கொணர்ந்திருக்கிறார்.


படம் காமிக்ஸ் போலெல்லாம் இல்லை. பொறி பறக்கும் திரைக்கதை.

பங்கு வர்த்தகத்தை அடிநாதமாக கொண்டது, ஒரு பெருநிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் லார்கோ பர்மாவில் கொஞ்ச காலம் தங்கியிருக்கிறான், அங்கே ஒரு பெண்ணுடன் காதல் திடீரென ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறான். அந்தப் பகுதியில் ஒரு பெரும் ராணுவ நடவடிக்கை ஏவப்பட்டு பல அப்பாவி பர்மியர்கள் கொல்லப்படுகிறார்கள்.
இந்த படுகொலையைச் செய்த ராணுவ கர்னல் மின்னுக்கு லார்கோவின் ரகசிய கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளுக்கான ஐநா பிரிவின் தலைவி பிராசேன் லார்கோவை குற்றவாளி என்று அறிவிக்கிறார். லார்கோவின் இனப் படுகொலையை நேரில் பார்த்த சாட்சி ஒன்று இருக்கிறது என்று ஒரு தகவல். அந்த சாட்சி யார் என்பதைப் பார்ப்பதற்காக லார்கோவே நேராக கோர்டுக்கு வருகிறான்.

அவன் முன்னாள் காதலி மௌலானி!

லார்கோ இராணுவத்துடன் இணைந்து மக்களைக் கொன்றதை நேரில் பார்த்தேன் என்று சொல்கிறாள், தொடர்ந்த தள்ளுமுள்ளில் அவளைத் தாக்குகிறான் லார்கோ.

இதனால் சிறைக்கு செல்கிறான், ஆனால் அவன்மீது இருக்கும் குற்றச் சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட விடுதலையாகிறான்.

வெளியில்வந்தவுடன் முதல் வேலையாக முன்னாள் காதலியைத் தேடிச் செல்கிறான். தொடர்கிறது ஒரு அதிரடி திருப்பங்கள் நிறைந்த சாகசப் பயணம்.

படத்தின் கூல் பாக்டர்கள் என்றால் நான் சொல்வது முழுக்க முழுக்க பிரஞ்ச் முகங்கள், அப்புறம் கொஞ்சம் பர்மிய முகங்கள். அதிலும் வில்லன் ஜங் முகத்தைப் பார்த்தல் யாரும் இவன் இவ்வளவு பெரிய வில்லனா என்று கேட்கக்கூடிய அளவிற்கு இருக்கும் சுருக்கங்கள் விழுந்த, எலும்புகள் துருத்திய முகவெட்டு, வயோதிகம்வேறு.

எண்பதுகளில் பிரபலமாக இருந்த நட்பு, காதல், சாகசம் போன்ற விசயங்களை மீண்டும் பார்க்கிற அனுபவம் கிடைக்கிறது.


ஸ்டன்ட்

பாரசூட் இல்லாமல் விமானத்தில் இருந்து விழும் தன் நண்பனைக் காப்பாற்ற குதிக்கும் விஞ்ச் அதைத் தொடர்ந்து நடக்கும் சண்டை. ஆம் கீழே விழும் அந்த விரைவான நொடிகளில் அப்படி ஒரு ஆக்ரோசமான சண்டை, அதுவும் அந்தரத்தில்!

காமிரா, லொகேஷன் என ரசிக்கவேண்டிய பல விசயங்கள் இருக்கின்றன. கூடவே ஷரன் ஸ்டோன் வேறு, அம்மணிதான் ஐநாவின் துப்பறிவாளர். வழக்கம் போல ஒரு மேசையில் ஏறி அமர்ந்துகொண்டு கால்மீது கால் போட்டுக்கொண்டுதான் பேசுகிறார்.

நல்ல ஆக்சன் மூவி எனவே ஒருமுறை பார்க்கலாம்.


படம் போகிற போக்கில் ஒரு விசயத்தை சொல்லும், பர்மாவில் இருக்கும் ஒரு கிராமத்தை எங்கோ இருக்கும் ஒரு பெருநிறுவனம் ஏன் அழிக்க வேண்டும்?

அந்த கிராமத்தில் நிக்கல் இருந்ததுதான் காரணம்.

நெடுவாசலில் மீத்தேன் எடுக்க நம்மவர்கள் இன்னும் இராணுவத்தை அனுப்பவில்லை என்பதுதான் ஆறுதல். காவல்துறை மகாலெட்சுமிகளே போதும் என்ற பொழுதும் சினிமாவில்பார்க்கும் விபரீதமான விசயங்களை நமது அரசியல்வாதிகளே நம் நாட்டில் அரங்கேற்றும் கொடுமையை பார்க்கவேண்டிய சாபம் நமக்கு இருக்கிறது.

துரோகி என்றழைத்தாலும் பேசுவோம், எதிர்க்குரல் எழுப்புவோம், நம்மைக் காக்க லார்கோ விஞ்ச்கள் தேவையில்லை.

ஒன்றிணைந்த எதிர்ப்புக் குரலே போதும்.

நம்புவோம்

தொடர்வோம்
நலமே விளையும்

அன்பன்
மது

Comments

  1. திரைப்பட விமர்சனத்தில நெடுவாசலில் மீத்தேன் எடுக்க நம்மவர்கள் இன்னும் இராணுவத்தை அனுப்பவில்லை என்பதுதான் ஆறுதல் என்ற சமூக சிந்தனையான, உண்மையான ஆறுதலைப் பகிர்ந்தமைககு நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக