கவண்- ராஜ சுந்தர்ராஜன்


இன்னதென்று தெரியும்தான் எனக்கும். நாட்டுப்புறத்தான். கவணில் கல்வைத்து எறிந்திருக்கிறேன். எறிந்திருக்கிறாய் சரி, குருவி ஒன்றாவது குறிபட்டு விழுந்திருக்கிறதா? இல்லை. பின்னே? குறிவைத்து வீசுவேன், அவ்வளவுதான். அது சென்று தைத்ததில்லை. பொருட்காட்சித் துப்பாக்கியால் பலூன் சுட்டிருப்பீர்கள் அல்லவா? அது போலதான். ஒரு விளையாட்டு. பொழுதுபோக்கு.
கவண் (sling) என்பது ‘தாவீது X கோலியாத்து’ கதையில் வருமே அதே கருவிதான். இயக்குநர் கே.வி.ஆனந்த் அதைத்தான் உள்ளுறுத்துகிறார் என்றால், அந்த இரண்டரை மாத்திரை வார்த்தையில் மொத்தக் கதையும் உணர்த்தப் படுவதால் அவர்க்குப் பாராட்டுகள்! கோலியாத்து, கார்ப்பொரேட் ’ஜென் டி.வி.’; தாவீது, திலக் (விஜய் சேதுபதி).திரைப்பட தொலைக்காட்சிக் கல்லூரி ஒன்றில் கற்றுத்தேறி வெளிப்படும் திலக், ’ஜென் டி.வி.’யில் வேலைக்குச் சேர்கிறான். அந்த நிறுவனத்தின் முறைநெறி ஒவ்வாமல் முரண்படுவதால் வெளித்தள்ளப்படுகிறான். அப்படியாப்பட்ட அரக்க நிறுவனத்தை எதிர்த்து எப்படி வெல்கிறான்? இதுதான் கதை.
எனக்கு சசிகலாவை முகாமுகமாகத் தெரியாது. மோதீயையும். ஆனால் ஓரளவுக்குத் தெரியும். தெரியுமா? ஆமாம், ஊடகங்கள் உருவாக்கித்தந்த ’சசி’, ’மோதீ’ அவர்கள். மதுபான விலையை ஏற்றினால், ஜக்கியோடு கைகோர்த்தால் என சொந்த மதிப்பீடுகளும் குறுக்கிடும். ஆனால் ’பிரேக்கிங் ந்யூஸ்’ கலாச்சாரத்தால் பெறப்பட்டதே மிச்சம்.
கலை/அறம் வணிகமாகிற வகையே அதுதான். (படத்தில் அது நாட்டுப்புற ஆட்டக்குழு ‘எலிமினேட்’ ஆகிற நிகழ்வில் நிறுவப்படுகிறது.) ஆக, நமக்குத் தெரிந்த சசி, மோதீ, சாராம்சத்தில், ஒரு வணிக உருவாக்கம்.
இதே இயக்குநரின் “கோ” படத்திலும் கவனித்தேன். இதிலும் வருகிறது. மாவோயிஸ்ட்டுகள் சார்ந்தொரு சாய்வு. நான் கவணெறிந்து களித்த சிறுவயதின் தரத்திலான பொழுதுபோக்கு விளையாட்டுதான் அது என்றாலும், அதற்கான தேவை இன்று இருக்கிறது.

அந்தக்காலத்தில், எஸ்.பி. முத்துராமன் ரஜினிகாந்த்தை வைத்து நக்ஸலைட்டுகளுக்கு எதிரான ஒரு படம் எடுத்தார். (அது ஊத்திக்கொண்டது). ’ஆன்ட்டி-சோசியல்’ இல்லை அவர்கள், ‘ஆன்ட்டி-எஸ்டாபிளிஷ்மென்ட்’. ஆனால் அவர்கள் சமூக விரோதிகளாகக் கட்டமைக்கப்பட்டு இருக்கிறார்கள். இருந்தும் நிலங்களை நீர்நிலைகளைப் பேணுகிற போராட்டத்தில் அவர்களே முன்னுக்கு நிற்கிறார்கள் இன்றும்.

இதெல்லாம் படத்தின் பாடுபொருள் பற்றியவை. போக, படத்தின் ஈர்ப்புத் தன்மை எப்படி இருக்கிறது?

’மெரினா புரட்சி’யிற் போலவே, இசையில், ‘ஜல்லிக்கட்டு’ தமிழா சொதப்பி யிருக்கிறார். ஒன்றுக்கு மூன்று (நான்கு?) கதாசிரியர்கள், ஆனால் கதை இப்படித்தான் போகப்போகிறது என்று வில்லனை டி.ராஜேந்தர் சந்திக்கிற காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது.
”பீடாவை வாயில அதக்கிக்கிட்டு பேசுறா மாதிரியே பேசுறான்யா அவன்” என்று விஜய் சேதுபதியின் டயலாக் டெலிவரி பற்றி விமர்சிக்கிற வசனத்தை மிகவும் ரசித்தேன்.

அப்படியாப்பட்ட விஜய் சேதுபதியால்தான் படம் தேறுகிறது.
வீட்டுக்குள் உட்கார்ந்து விஜய் டி.வி. பார்க்கிறாற்போல்தான் முற்பாதி இருந்தது. நாட்டுப்புறத்தானான நமக்கு காடுகரை என்று அலைய வேண்டாமா? அப்படி அலைகிற பிற்பாதி நன்று. சென்னை அம்பிகளைக் கேட்டால் முற்பாதி நன்று என்பார்கள். அப்படி, 50:50.

Comments

 1. நல்லதொரு விமர்சனம். உங்கள் தயவில் கவண் என்ற படம் பற்றி தெரிந்து கொண்டேன்! நம்ம சினிமா Knowledge அவ்வளவு உயர்தரம்! :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே
   வருகைக்கு நன்றி
   இது ராஜ சுந்தர்ராஜன் அவர்களின் பதிவு

   உங்கள் யூ எஸ் பி உங்கள் போட்டோகிராபி மற்றும் ட்ராவல் அந்த உயர்தரத்திற்கு நானும் வரவே விரும்புகிறேன்

   Delete
 2. பார்க்க வேண்டாம் என்பதுபோல் இருக்கிறதே....
  (மைண்ட் வாய்ஸ்-ஆமா மற்றதெல்லாம் பார்த்திட்டியாக்கும
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. மைன்ட் வாஸ் அருமை தோழர்

   Delete
 3. விமர்சனத்தின்மூலமாக திரைப்படத்தைப் பற்றிய சரியான மதிப்பீடு தெரிந்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றியை எழுத்தாளர் ராஜ சுந்தர்ராஜன் அவர்களிடம் சேர்ப்பிக்கிறேன்

   Delete
 4. ஓ! ஸோ பார்க்க....லாஆஅம் அவ்வளவுதான் இல்லையா...

  ReplyDelete
 5. இந்த கவண் கல் ,பலருடைய நெஞ்சை தைத்த மாதிரி தெரியவில்லையே :)

  ReplyDelete

Post a Comment

வருக வருக