காலிக்குடங்கள் என்ன சொல்கின்றன?


கொடும் தண்ணீர்ப் பஞ்சம்.

கோரம்.அடுத்த ஆண்டு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

மக்கள் கோபத்துடன் சாலைகளை காலிக்குடங்களுடன் மறியலில்.

நியாயமான கோபம்.

தவறு முழுக்க அரசாங்கத்திடம் மட்டுமே இல்லை.

தம் குடிகளை அது நீர் நிலைகளைப் பாதுகாக்க பயிற்றுவிக்க வில்லை.

பொதுப்பணித் துறையைப் பொறுத்தவரை ஆறு என்றால் மணல் அள்ளவும்,  குளம் என்றால் தூர் வார டெண்டர்விட, ஏரி என்றால் ரியல் எஸ்டேட்கார்களுக்கோ, பன்னாட்டு நிறுவனங்களுக்கோ பட்டா போட்டுத்தரவேண்டிய நிலம்.


தண்ணீர் என்பது மக்களைப் பொறுத்தவரை குழாயைத் திருகினால் வரும் பொருள்.

கடந்த தலைமுறை வரை வீட்டிற்கு ஒருவர் ஏரி மராமரத்துக்கு சென்றது எப்படி இந்த தலைமுறைக்கு  தெரியாமல் போனது?

எங்கள் ஊரில் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் வரை ஏரி மராமத்துக்கு வீட்டிற்கு ஒருவர் சென்று வரத்து வாரிகளை தூர்வாருவார்கள்.

போற்பனைக்கோட்டைப் பகுதியில் இருந்து நீர் நான்கு ஐந்து கிலோ மீட்டர்கள் கடந்து எங்கள் ஊரான பாப்பாவயலை வந்தடையும்.

இதற்கு பிறகு உபரி நீர் வெள்ளாற்றில்  சென்று கலக்கும்.

இந்த பழக்கம் இருந்தவரை முப்போகம் விளைந்தது. ஆனால் இன்று எல்லாம் தரிசு.

விவசாய நிலங்களை விலைக்கு விற்க எல்லோரும் தயார்.

பொற்பனைக்கோட்டை வாரியின் குறுக்கே இன்று ஒரு சாலை. அதுதான் சாக்கு என்ற இந்த முப்பது வருடங்களில் வாரிகள் வீட்டுத் தோட்டங்களாக மாறிவிட்டன.

இப்படி நீர் ஆதாரங்களை மக்கள் அழிக்க என்ன காரணம்?

சுயநலம் மட்டுமே.

தண்ணீயா அது குழாயில் வரும், நீ அடைச்சுக்கோ வாரியை என்று கிராமத்தில் வெகு எளிதாக வாரிகளை கபளீகரம் செய்கிறார்கள்.

ரியல்எஸ்டேட்காரர்கள் ஏரிகளை பிளாட் போட்டு விற்றுவிடுகிறார்கள்.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்தான் இதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்தனர்.

எந்த ஏரியைப் பட்டா போட வேண்டுமோ அந்த பகுதி ஊராட்சி மன்றத் தலைவரை கவனித்தால் போதும்.

உங்கள் ஊரில் இப்படி திடுமென ஏரிகளில் எழும் கட்டிடங்களின் பின்னணி இதுதான்.

சிறிய ஊர் என்றால் ஊராட்சி மன்றத் தலைவர், சென்னை போன்ற பெருநகரங்கள் என்றால் அமைச்சரோ, முதல்வரோ தேவைப்படலாம். மக்கள் பணியைச் செய்ய எத்துனை எத்துனை வழிகளப்பா.

அப்போதெல்லாம் கள்ளமௌனம் காத்துவிட்டு, இப்போது காலிக் குடங்களோடு சாலைக்கு வருவது நியாயமா?

நேரடியாக வயிற்றில் அடிக்காதவரை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா?

நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏரிகள், வாரிகள், குளங்கள் பாதுகாப்பை பள்ளிப் பாடத்திட்டத்தில் ஒரு செயல்திட்டமாக அறிமுகம் செய்ய வேண்டும்.

ஏரிகளையும், வரத்து வாரிகளையும் பாதுகாக்கப்பட்ட அரசின் சொத்தாக அறிவித்து அவற்றை ஆக்கிரமிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டரீதியாக, ஊடக ரீதியாக மற்றும் அவர்களின் மதரீதியிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் உடனடி மாற்றங்கள் சாத்தியம்.

இப்படி நம் தலைமுறைகளை வளர்த்தெடுத்தால்தான் இனி வரும் காலத்தில் நிலத்தடி நீர் நம்மைக் காக்கும்.


மழை நீர் சேமிப்பைச் செய்யாத கிராமங்களுக்கு மின்கட்டண மானியத்தை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு செயல்பட்டாலே போதும்.

பள்ளி, கல்லூரி மாணவர் கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு களப்பணியை தக்க முன்னேற்பாடுகளுடன் முன்னெடுத்தால் நலம் விளையும். (என்ன பிரச்னை என்றால் கமிசன் கிடைக்காது, களப்பணியில் உள்ள மாணவர்களுக்கு உணவு தந்ததாக வேண்டுமானால் கணக்கு எழுதலாம்)

நம் கண் முன்னே பள்ளிக்கரனை சதுப்பு நிலம் காணமல் போய்க்கொண்டிருகிறது. நாம் எந்த ஆணியைப் பிடுங்கினோம்?

கோபத்துடன் சாலைக்கு வருவோர் தங்கள் ஊர் வாரிகளைச் செப்பன் செய்ய அரசைப் பணித்தால் அடுத்த ஆண்டு உயிர் பிழைக்கலாம்.

இது மிரட்டல் அல்ல, காலம் நமக்கு வைத்திருக்கும் கெடு.
Comments

 1. ///காலிக்குடங்கள் என்ன சொல்கின்றன///


  நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும் என்று சொல்லுகின்றன

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மைத்துனரே

   Delete
 2. ரியல் எஸ்டேட்காரன் பிளாட் போட்டாலும் ,ஃபிளாட் கட்டினாலும் வாங்குவதும் நாம்தானே :)

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு. அரசை விடுங்கள். மக்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டது நல்ல விஷயம்! நேற்று கூட காவிரி ஓர சாலையில் பயணிக்கையில் காவிரியின் ஒரு சொட்டு நீர் இல்லை! நடந்து வரும்போது பார்த்த ஒரு காட்சி பதைபதைக்க வைத்தது - போர்வெல் மூலம் பைப் போட்டு அவர் வீட்டுக்கு முன்னே தண்ணீரை சாலையில் தெளித்துக் கொண்டிருக்கிறார் - எப்படியும் பல லிட்டர் தண்ணீர் வீண்! கேட்டால் சூட்டுக்கு இப்படி சாலையில் தண்ணீர் விட்டால் ஜில்லென்று இருக்கும் என்று பதில் வரும்.... எத்தனை தண்ணீர் விரயம். இதைப் பற்றி எவருமே கவலைப் படுவதில்லை...... அடுத்தவர்களை குறை சொல்வதே பழக்கமாகிவிட்டது.... இருக்கும் மரங்களை வெட்டியாச்சு, நீர் வரும் பாதைகளை அடைத்தாச்சு, விளை நிலங்களை ப்ளாட் போட்டு வித்தாச்சு.... தண்ணீருக்கான சண்டை தான் இனி.....

  ReplyDelete
  Replies
  1. விழிப்புணர்வு கல்வியில் பாடத்திட்டத்தில் வர வேண்டும்

   Delete
 4. இப் பதிவு அறிவுரை மட்டுமல்ல நல்ல அறவுரையும் ஆகும் ! செயல் படின் நன்று!

  ReplyDelete
  Replies
  1. செயல்படுவோம் அய்யா

   Delete
 5. காலி குடங்கள் ..நமக்கு உணர்த்துவது நியூட்டனின் மூன்றாம் விதி :(
  நீரின் அருமை உணராபொறுப்பற்ற தன்மை .விழிப்புணர்வை மக்கள் மனதில் விதைக்காவிடில் மனித சமூகமும் அழிவை நோக்கி செல்லும் :(

  ReplyDelete
  Replies
  1. பள்ளிக்கல்வித்துறை நினைத்தால் மாற்றங்கள் சாத்தியம் ...
   நினைக்கனுமே

   Delete
 6. காலி குடங்கள் சொல்வது என்ன//

  மனுஷன் நாம் செய்யும் தவறுகளை....அரசின் மெத்தனத்தை, அரசிய லின் கோர முகத்தை, தண்ணி சபிள்ளை யர்கள், காண்டராக்டர்கள் ஆதாயம் பார்க்க..சூழல் உருவாக்கப்பட்டதே அதை....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆகா எல்லோருக்குள்ளும் தகிக்கிறது கோபம்..

   Delete
 7. காலிக்குடங்கள் என்ன சொல்கின்றன?
  குடங்களைச் சுமக்கும்
  உள்ளங்களின் எண்ணங்களை
  எடை போடச் சொல்கின்றன!

  ReplyDelete

Post a Comment

வருக வருக