ரஜினி ப்ளு சிப்பா ரெட் சிப்பா

சிவாஜிக்கு இருந்தது ரசிகர்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்தது பக்தர்கள். ரஜினிக்கு இருப்பவர்கள் வெறியர்கள் என்று ஒரு ஸ்டேட்மென்ட் உண்டு.ரஜினி என்கிற பலூனில் காற்றை இறக்கிவிட்டதாக மார்தட்டினாலும் அவர் ஒன்றும் பலூன் கிடையாது என்பதே நிதர்சனம்.

அவருக்கு என்று ஒரு ராஜாங்கம் உண்டு.

ஒவ்வொரு முறை ஒரு படம் வெளிவருகிறபொழுதும் ஏதாவது செய்து ஹைப்  ஏற்றி தன் படங்களை ஹிட் அடிக்கும் வித்தையைக் கற்றுத்தேர்ந்தவர் என்பதை ஊடகங்கள் கழுவிக் கழுவி ஊற்றிவிட்டன.

இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது ரசிகர்களை இன்று சந்தித்திருக்கிறார் ரஜினி.

உடனே நான் எழுப்பிய கேள்வி என்ன படம் இப்போ  வருகிறது என்பதுதான்.

2.0
படம் லைக்கா தயரிப்பு என்பதால் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நான் தியேட்டரில் பார்க்கப்போவது இல்லை.

இந்த நிலையில்  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அனலைக் கிளப்பியிருக்கிறார் ரஜினி.

என்ன சொன்னார் என்பதை பாலிமர் நேரலையில் பார்த்துக் கொண்டேதான் இருந்தேன்.

எஸ்.பி. முத்துராமனுடன் மேடைக்கு வந்த ரஜினி முத்துராமன் அவர்களின் உரைக்குப் பின்னர் பேசத் துவங்கினார்.

ஹைலைட் என்ன?

எஸ்.பி.எம். குறித்து பேசி, அவரது அறிவுரைகள் குறித்துப் பேசினார்.

இடையில் பல காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு நிகழவில்லை என்றார்.

ஊடகங்கள் படங்களை ஓட்டுவதற்காக ரஜனி ஸ்டன்ட் அடிகிறார், எதிலும் உறுதியாக நிற்க மாட்டார் என்று பரப்பி வருவதாக குறிப்பிட்டு படம் நல்லா இல்லை என்றால் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் படம் ஓடாது என்று குறிப்பிட்டார்.

ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல (!!!?) தமிழக மக்களும் முட்டாள்கள் அல்ல படம் நல்லா இல்லை என்றால் பார்க்க மாட்டார்கள். ஏமாற மாட்டார்கள் என்றார்.

ஆனால் மக்கள் ஒரு விசயத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள்... (விசில் சத்தம்)

அந்த விசயத்தை இப்போது நான் சொல்ல  மாட்டேன்(விசில் சத்தம்...நமக்கு மைன்ட் வாய்ஸ் மறுபடியும் முதல்ல இருந்தா?)

கடந்த காலத்தில் ஒரு கூட்டணிக்கு ஆதரவு கொடுத்ததாகவும் அது வென்றதாகவும் குறிப்பிட்டு, ஆனால் அதன் மூலம் ஏற்பட்ட அரசியல் தொடர்புகளால் ரசிகர்களில் சிலர் (சிலர் என்பதை மீண்டும் குறிப்பிட்டார்) பெரும் பணம் செய்துவிட்டதாக குறிப்பிட்டார்

தனக்கு வரும் ரசிகர் கடிதங்களில் பல்வேறு ஆதங்கங்கள் இருப்பதாகவும், எப்போ எம்.சி ஆகுறது, எப்போ எம்.எல்.ஏ ஆகுறது எப்போ எம்.பி ஆகுறது, எப்போ ரெண்டு கோடிரூபாய்க்கு வீடு வாங்குவது என்று வருந்தி எழுதியிருப்பதாக  குறிப்பிட்டார்.

தப்பில்ல, எம்.சி.ஆகலாம், எம்.எல்.ஏ ஆகலாம் எம்.பி ஆகலாம் தப்பில்ல ஆனா அதைவச்சு பணம் பண்ணனும்னு ஆசைப்படுறது என்று சொல்லி நிறுத்த  அரங்கில் மீண்டும் விசில் சத்தம்.

நூறு சதம் சரியாக இருப்பவர்கள் மட்டுமே தன் அருகில் இருப்பார்கள் என்றும் தவறுபவர்கள் இப்போதே விலகிக்கொள்ளுங்கள் என்றும் விசில் சத்தத்திற்கிடையே சொன்னார்.


கடவுள் கையில் தனது வாழ்வு இருப்பதாகவும் அவர் ஆணைப்படியே ஒரு நடிகராக தான் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் இனி அவர்க்கு ஏதும் பொறுப்புகள் வந்தால் நூறு சதம் அதைச் சரியாக செய்வேன் என்று பலத்த விசில் சத்தத்திற்கிடையே சொன்னார்.

அது ஆண்டவன் கையில்  இருக்கிறது என்றார்.

இறுதியில் மதுவின் தீமையால் ஏற்படும் ஆளுமைச் சீரழிவை பாமரர்க்கும் புரிகிற  மாதிரி சொன்னார்.

உண்மையில் இந்த போர்சன் மட்டுமே தனியாக வீடியோ வைரல் ஆனால் நல்ல விளைவுகள் ஏற்படும்.

தொடர்ந்து அவர் மாடிக்கு  ஏறிப் போவதுவரை, அவரது கால்கள் வரை காட்டினார்கள் பாலிமர்  டி.வியினர்.

இப்போது  எனது புரிதல்கள் மற்றும் கேள்விகள்

புரிதல் ஒன்று

2.0 ப்ரோமோசன் மீட், வழக்கம் போலவே.

ரஜனியின் முடிவின் உறுதித்தன்மை படம் வெளியான இரண்டு வாரங்களில் தெரிந்துவிடும்.

இதைத்தான் கடந்தகால நிகழ்வுகள் சொல்கின்றன.

புரிதல் இரண்டு

டயர் பரிசோதனையாளர்களின் அரசாங்கம் மக்களிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது.

மன்னார்குடியின்  விஷப்பற்கள் தற்காலிகமாக அகற்றப் பட்டிருகின்றன. அவை விரைவில் மீண்டும் முளைத்துவிடும் என்பது வேறுகதை.

இந்த நிலையில்  தமிழக அரசியலில் ஒரு மாபெரும் வெற்றிடம் இருக்கிறது.

ரஜினிக்கு காலம் வழங்கியிருக்கும் இரண்டாவது சாய்ஸ் இது.

இன்னொரு சாய்ஸ் இல்லாமலே போகலாம். எனவே வழக்கம் போல வசூல் நிலவரத்தைப் பார்த்துவிட்டு வீட்டில் நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டால் அவரை அந்த மஹாஅவதாரே   வந்தாலும் காப்பாற்ற முடியாது.

அடுத்த படம் வேறு வரும் இருபத்தி எட்டில் துவங்க இருக்கிறது. அந்தப் பட ப்ரோமொஷணுக்கும் இப்படி ஒரு ஸ்டன்ட் அடிக்க முடியாதே.

புரிதல் மூன்று

பி.ஜே.பியின் பல்வேறு பொம்மலாட்ட பொம்மைகளில் கூடுதலாக ஒரு பொம்மை ரஜினி.

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு ஆன்மீக முலாம் பூசப்பட்டு வெகு  எளிதாக காவிகளுடன் சங்கமிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இது வெகு ஆபத்தானது. பெரியாரின் அடையாளங்கள் முற்றாக ஒழிக்கப்படுவதின் துவக்கமாக இது இருக்கும்.

இனி இங்கேயும் மாட்டுக் கறி பிரியாணி விற்பவர்கள் கொல்லப்படுவார்கள்.

மிகப் பெரிய பின்னோக்கிய சறுக்கலாக தமிழக அரசியல்  களத்திற்கு அது இருக்கும்.

கூடுதலாக இன்று காலை ஒ.பி.எஸ் அறிக்கையை நாம் பார்த்தாகவேண்டும்.

நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், ஊடகங்கள்தான் தவறான தகவல்களைப் பரப்புகின்றன என்கிறார்.

ஆக ரஜினியின் ஒரு சின்ன மூவ் டயர் பரிசோதகர்களின் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

புரிதல் நான்கு

ரஜினி பி.ஜே.பி ஆதரவுடன் தனிக் கட்சி துவங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவரது வார்த்தைகளைப் பார்த்தல் வேறு மாதிரி சொல்கின்றன.

"பொறுப்பு வழங்கப்படும்"

எந்த  பொறுப்பு அது யாரால் வழங்கப்படும் என்பதற்கான பதில்கள் எனக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.

ஏன்?

ரஜினியின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி

நூறுசதம் தூய்மையாக  இருப்பவர்கள் மட்டுமே உங்களுடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறீரே ...

காவி வெறி நூறு சதம் தூய்மையானதா?

குஜராத் படுகொலைகள், பாபர் மசூதி இடிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

உங்கள் ஆண்டவர் என்ன சொல்கிறார்?

இந்த சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கு வெகு எளிமையான பதில்களே  போதும்.

பார்ப்போம் பெரியார் என்கிற தனிமனித ஆளுமை தந்த வெளிச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் என்போன்ற பலரை ரஜினி என்கிற தனிமனித ஆளுமை பெரும் இருளுக்குள் தள்ளிவிடாமல் இருந்தால் சரி.

ரஜனி ப்ளு சிப்பையே தேர்ந்தெடுப்பார் என்று நம்புவோம்.

பொறுத்திருப்போம்

அன்பன்
மது 

Comments

 1. சரியாக அலசியுள்ளீர்கள் தோழரே...

  "டயர் பரிசோதகர்கள்" உங்களின் குறும்பை ரசித்தேன்
  த.ம

  ReplyDelete
 2. லகலகலகலகலகலகலகல்லக்கல்லக்கல

  ReplyDelete
  Replies
  1. ஆம்,
   வருகைக்கு நன்றி

   Delete
 3. நல்ல சுவாரசியமான அலசல் தலீவா

  ReplyDelete
 4. அந்த ரஜினியே வந்தாலும் தமிழ் நாட்டில் காவி கால் பதிக்க முடியாது ,கவலையை விடுங்க தோழரே :)

  ReplyDelete

Post a Comment

வருக வருக