பேரா.தட்சிணாமூர்த்திக்கு தொல்காப்பியர் விருது



இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், 2015-ஆம் ஆண்டுக்கான குடியரசுத்தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருதினை, மே மாதம் 9 ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரு. பிரணாப்முகர்ஜி, அறிஞர் அ. தட்சிணாமூர்த்திக்கு வழங்கிச் சிறப்பு செய்தார்.



தட்சிணாமூர்த்தி அய்யாசாமி, 1938 – ஆம் ஆண்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாக்கோட்டை என்னும் ஊரில் மிக எளிமையான ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், மகா வித்துவான், ச. தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட பெருமக்களிடம் தமிழ் பயின்று 1961-இல் இளங்கலைப்பட்டம் (ஆனர்சு) பெற்றார். சென்னைப்பல்கலைக்கழகத்தில் “ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை” என்னும் பொருள் பற்றி ஆய்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (1977-78), “சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்” என்னும் பொருள் பற்றி ஆய்ந்து முனைவர் பட்டமும் (1988) பெற்றார்இவர் தன் குடும்பத்தின் முதல் பட்டதாரியும் தன் ஊரின் முதல் முதுகலைப்பட்டதாரியும் ஆவார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லமைகொண்ட அரிய தமிழறிஞர்களில் ஒருவரான தட்சிணாமூர்த்தி சங்க இலக்கியங்களின் ஆராய்ச்சியிலும், சங்க இலக்கிய மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆழங்கால் பட்டவர். 1987 முதல் மொழிபெயர்ப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு,கடந்த 2012 – ஆம் ஆண்டுக்குள், முதல் முறையாகப் 19 செவ்வியல் இலங்கியங்களை முழுமையாகச் சிறப்புற ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அவற்றுள் பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் (Ancient Tamil Classic Pattupattu In English – The Ten Tamil Idylls, Thamizh Academy, SRM University, Kattankulattur, 2012), எட்டுத்தொகையுள் அடங்கிய அகநானூறு(Akananuru – The Akam Four Hundred, 3 Volumes, Bharathidasan University, Thiruchirapalli, 1999) , நற்றிணை(The Narrinai Four Hundred, International Institute of Tamil Studies, Chennai, 2001), குறுந்தொகை (Kuruntokai – An Anthology of Classical Tamil Poetry, Vetrichelvi Publishers, Thanjavur, 2007) ஆகிய மூன்று நூல்களும், பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பில் அடங்கிய கார்நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு அகநூல்களும் (Patinenkilkkanakku – Works on Akam theme (Includes Six Books, Bharathidasan University, Thiruchirapalli, 2010) அடங்கும்.

அகநானூற்றை முதன்முதலில் முழுமையாக ஆங்கிலப்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய ஆறு பதினெண்கீழ்க்ணக்கு நூல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்த பெருமையும் இவருக்கு உண்டு. நற்றிணையின் மூலத்துக்கு நெருக்கமான முதல் மொழிபெயர்ப்பு இவருடையதே. இவரது பத்துப்பாட்டு மற்றும் குறுந்தொகையின் மொழிபெயர்ப்புகள் நீண்ட இடைவெளிக்குப் பின்தோன்றிய இரண்டாம் முழு மொழிபெயர்ப்புகளாகும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத் தொகுதிக்குப் பதிப்பாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

தமிழ் மூலத்திற்கு ஊறு செய்யாமல் பிழையின்றி, இனிய, எளிய ஆங்கிலத்தில் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளமை இவரது தனிச் சிறப்பு என செம்மொழித் மத்தியத் தமிழாய்வு நிறுவனம் தனது விருதுச்சான்றிதழில் குறித்துள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு வெளியீடுகளில் இவருடைய மொழிபெயர்ப்புக்கள் கணிசமான அளவில் இடம்பெற்றுள்ளன.

1973-ஆம் ஆண்டு, தனது 35 ஆவது வயதில் இவர் எழுதிய, ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும் (ஐந்திணைப் பதிப்பகம், பதிப்பு:12, 2017)’ எனும் வரலாற்று நூல், தமிழரின் நாகரிகம் மற்றும் பண்பாடு தொடர்பான பல்வேறு கூறுகள் சங்ககாலம் தொட்டு காலப்போக்கில் வளர்ந்த வரலாற்றைத் தொடர்ச்சியாக விளக்குகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மாணவர்களுக்கும், அரசுப்பணி, இந்திய ஆட்சிப்பணி (IAS), காவல்துறைப்பணி (IPS) ஆகியவற்றுக்குரிய தேர்வு எழுதுபவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் ்பயன்பட்டு வருகிறது. "சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்(2001, மறுபதிப்பு: NCBH பதிப்பகம், 2016)" என்னும் ஆய்வு நூல் சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய பல்வேறு உறவு நிலைகளை நடைமுறை சார்ந்தும் குறிக்கோள் நிலையிலும் விரிவாக விளக்குகிறது. இவர் சங்க இலக்கியங்களான ஐங்குறுநூறு (NCBH பதிப்பகம், 2004) மற்றும் பரிபாடலின் ஒரு பகுதிக்கு பழைய உரையைத் தழுவி எளிய புதிய உரையும் வகுத்துள்ளார். தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு, மொழிபெயர்ப்பு ஆகியவை தொடர்பான ஏறத்தாழ நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

செவ்வியல் இலக்கியங்கள் அல்லாது இடைக்கால இலக்கியங்களாகிய பெருமாள் திருமொழி, நீதி வெண்பா, அபிராமி அந்தாதி ஆகியவற்றையும், தற்கால இலக்கியங்களான பாரதிதாசனின் ஏழு கவிதை நூல்களையும் , பாரதியாரின் பாரதி அறுபத்தாறையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அ.ச.ஞானசம்பந்தனின் ‘கம்பன் புதிய பார்வை(Kamban – A New Perspective, Sahitya Akademi, 2013)’ எனும் நூலையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்துள்ளார் .

திருவாரூர் வடபாதி மங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கி, மன்னம்பந்தல் அன்பநாதபுரம் வகையறா அறத்துறைக்கல்லூரியில் பயிற்றுநராகப் பணியாற்றிப் பின்னர், பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரியில் இருபத்துநான்கு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இறுதியாக மதுரைத்தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி 1996-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வுக்குப்பின் தஞ்சையில் வசித்துவருகிறார். என்பது வயதில் இன்றும் அழைக்கும் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழமைப்புகளிலும் முடிந்தவரை தவறாமல் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் பாடங்கள் எடுத்தும் வருகிறார்; மொழிபெயர்ப்புப் பயிற்சிப்பட்டறைகளை நடத்தியும் பங்களித்தும் வருகிறார்.

தொடர்ந்து இலக்கியப் பணிகளை ஆற்றிவரும் இவர் புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, திருக்குறள், நாலடியார், திரிகடுகம், நான்மணிக்கடிகை, முத்தொள்ளாயிரம், இன்னாநாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, நீதி சாத்திரம், வாக்குண்டாம் நல்வழி, திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துப் பதிப்புக்கு ஆயத்த நிலையில் வைத்துள்ளார்.

தமிழக அரசின் பாரதிதாசன் விருது, பாரதிதாசன் நூலாசிரியர் சான்றிதழ் விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது, SRM தமிழ்ப்பேராயம் ஜி. யு. போப். மொழிபெயர்ப்பு விருது, கல்கத்தா தமிழ்ச்சங்கம்: சாதனைத் தமிழர் விருது உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட சிறப்பான விருதுகளை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இடைவெளியின்றி இவர் ஆற்றிவரும் தமிழாய்வுப் பணியையும், செவ்வியல் தமிழிலக்கியத்தின் பெருமையைத் தம் மொழிபெயர்ப்புகளின் வாயிலாக உலகறியச் செய்துவரும் அரும்பணியையும் பாராட்டி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் விருதினை இவருக்கு அளித்துப் பெருமை செய்கிறது.

இணையதளம்:
https://adakshinamurthy.wordpress.com/

முகநூல்: https://www.facebook.com/ProfessorA.Dakshinamurthy/

Comments

  1. இரு முறை இவரோடு பேசும் வாய்ப்பினைப் பெற்றுள்ளேன்
    வாழ்த்துவோம் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் அய்யா
      நன்றி

      Delete
  2. வாழ்த்துகள். அவரது தமிழ்ப் பணி மேலும் சிறக்கட்டும். இன்னும் பல பெருமைகள் அவரை வந்தடையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  3. வாழ்த்துகள்! அவரது தமிழ்ப்பணி மேலும் சிறந்திடவும், பல சிகரங்களைத் தொட்டிடவும் வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக