மகிமாவின் மஷ்ரூம் கட்டும் புதிய கல்விக் கொள்கைகளும்


யுகம் யுகமாக மனுவினால் சாதி முத்திரை குத்தப்பட்டு, தமது பரம்பரைத் தொழில்களில் அமிழ்ந்து வெளியேற முடியாத சமூகத்தின் அடுத்த தலைமுறைகள் தங்கள் குலத்தொழிலில் இருந்து வெளியேறுவதுதான் மீட்சியின் முதல்படி.யோவ் இன்னாயா இப்படிப் பேசுற அப்போ யாரு அவுக வேலையெல்லாம் பாக்குறது?

எவ்வளவு அக்கறையான கேள்விஅன்பரே.

இவ்வளவு பதற்றம் ஏன் ? சமூகத்தின் மீது இப்படி ஒரு பிணைப்புகலந்த அக்கறை அருமை தோழர். இனி நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஆம், மானுடம் மீள முதல் படி குலத்தொழில்களில் இருந்து விடுதலையே.

அதெப்படி முடியும் என்று யாரும் பதறினால், எங்கள் மாவட்டத்தின் மாபெரும் ஆளுமை ஒருத்தி சொன்னதை மீண்டும் நினைவில் மலர்த்துவது நன்று...

"இவ்வளவு நாள் அவர்கள் பார்த்தார்கள், இனி நீங்களும் உங்கள் குழந்தைகளும் பாருங்கள்" என்று சட்ட மேலவையில் காத்திரமாய்த்  தனது குரலைப்  பதிவு செய்து தேவதாசி முறையை ஒழித்துக் கட்டிய முத்து லட்சுமியின் கர்ஜனையை மறந்துவிட முடியுமா?


 ஒவ்வொரு முறை முடித்திருத்தகம் செல்லும் பொழுதும் திருத்துனர்களிடம்  மறக்காமல் கேட்பது அவர்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைத்தான்.

பொதுவாக எல்லா கடையில் இருப்பவர்களும் சொல்லும் பதில் ஒன்றுதான்.

நான் தான் சார் கத்திரி பிடிப்பதில் கடைசி. என் பிள்ளைகள் இந்த தொழிலுக்கு வர விரும்பவில்லை.

ஒவ்வொருமுறை இந்த பதிலைக் கேட்கும்பொழுதும் மனசுக்கு றெக்கை முளைக்கும்.

அவர்களிடம் பேசும் தருணத்தில் மறக்காமல் பகிரும் செய்திகளில் ஒன்று சோ.ராமசாமி அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஹார் ஸ்டைலிஸ்ட் என்பதையும், அவரது கட்டணம் பல ஆயிரங்களில் இருப்பதையும் பகிர்வேன்.

அப்படியா என வியப்பில் விரியும் விழிகள்.

ஒரு படி நெல்லுக்கு, கிராமத்தின் மரத்தடி ஒன்றில் நடந்த தொழில் சிகைதிருத்துதல். இன்று அது பல லட்சங்கள் புரளும் கார்பொரேட் தொழில்!

மிக முக்கியமாக பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலில் இருந்தவர்கள் விலக ஆரம்பித்திருப்பதும், அல்ட்ரா மாடர்ன் யுவன்களும், யுவதிகளும் கத்தியைக் கையில் எடுத்திருப்பதும் காலசக்கரத்தின்  ஒரு முழு சுற்று.

பலதலைமுறைகளாக ஒரு சமூகத்தைப் பிணைத்திருந்த  துருப்பிடித்த சங்கிலி ஒன்று தகர்ந்து விழுவதைப் பார்ப்பது உண்மையில் மகிழ்வூட்டுகிறது.

இன்று இளையவள் மகிக்கு  மஷ்ரூம் கட், செய்யுங்கள் என்று அம்மணி ஆணையிடவே புதுகையில் புதிதாக திறந்திருக்கும் ஓரஞ் சிகை அலங்கார நிறுவனம் சென்றிருந்தேன்.

ஏற்கனவே புதுகையில் நாச்சுரல்ஸ், கிரீன் ட்ரண்ட்ஸ் என ஹை பை சலூன்கள் இருந்தாலும் புதிதாக துவக்கப்பட்ட கடையைப் பார்ப்போம் என்று தோன்றியதால் ஓரஞ் சென்றேன்.

அறுபது லட்ச ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டிருக்கும் நிறுவனம். ஹிந்திப் பாடல்கள் ஸ்பீக்கர்களில் கசிய அதீத சுத்தமான சூழலில் தனது பணியை ஆரம்பித்தார் பணியாளர்.

நான் மேலாளரிடம் பேச ஆரம்பித்தேன். பேச்சின் ஊடே ஓரஞ் நிறுவனத்தில் பணியில் இருப்பவர்களும் தலைமுறை தலைமுறையாக சிகைத் திருத்தம் செய்பவர்கள்தான் எனப்தையும் அறிந்தேன். ஒரு சின்ன ஏமாற்றம்.

சிகை திருத்தம் ஒரு பல்கலைக் கழக பட்டயமாக அறிவிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டால் நல்லது.

எவ்வளவு ஓலங்களை இந்த அறிவிப்பு எழுப்பும் என்று நினைத்துப் பார்த்தாலே திகைப்பு.

இன்று சென்னையில் இரண்டு நிறுவனங்கள் சிகை அலங்கார பயிற்சிகளைத் தருகின்றன. ஒன்று வி.எல்.சி.சி. இன்னொன்று பினா பஞ்சாபி.

இப்படி குலத்தொழில் என்று முத்திரை குத்தப்பட்ட தொழில்களை விருப்பமுடைய மற்ற சமூகத்தினர் கற்க, பயிற்சி பெற அரசியல்பூர்வமான பரப்புரையும், விழிப்புணர்வும், செயல்பாடும் தேவை.


சமூகம் இப்படி ஒரு ஆரோக்கியமான புள்ளியை நோக்கி  நகர்ந்தால் விட்டுவிடுவார்களா சனாதன சதுர்வேதிகள்?

புதிய கல்விக் கொள்கைகைய கடும் இறுமாப்புடன் அறிவித்திருக்கிறார்கள்.

அதாவது குழந்தைகள் தங்கள் பெற்றோரின் தொழிலுக்கு உதவியாக இருக்கவேண்டுமாம். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது நியாயமான முடிவாகத்தான் தெரியும். நடைமுறையில்?

அருள் ஒரு முனிசிபல் தொழிலாளி, அவரது மகன் அஜீத் பள்ளி நேரம் போக மீதிநேரத்தில் அவருக்கு உதவியாக இருக்கிறான். மிகச் சரியாக பள்ளி நேரத்தில் அவனை அனுப்பும் மனநிலை அவனது தந்தைக்கு இருக்குமா?
அதுவும் சாரயம் விற்பதை தனது அதிமுக்கிய மக்கள் சேவையாக வைத்திருக்கும் ஒரு மாநிலத்தில்?

ஆக, அஜீத் அடுத்த தலைமுறை சுகாதாரப் பணியாளராக மாறிவிடுவான்.

மீண்டும் தழைத்து செழிக்கும் வருணாஸ்ரமம்.

இதற்கு ஒரு அரசு, அதற்கு ஒரு பிரதமர், இதை நெறிப்படுத்த ஒரு மதம்.

மிகுந்த  கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் உங்களுக்கு இயல்பாகப்படுகிறது.

இவை குறித்த அலட்சியம் நமது மரபுப் பண்புகளில் ஊறிப்போய்விட்டது.

மாற்றம் சாமான்யமானது அல்ல.

இன்று நாம் வந்தடைந்திருக்கும் இடம் அதி முக்கியமானது. நமது மூத்த தலைமுறைகளின் முறிக்கப்பட்ட முதுகெலும்புகளின் மீதுதான் நாம் நிற்கிறோம்.

சாதியம் பேசும் நரகல் மனிதர்களும், மனுவின் இரத்த வெறிபிடித்த பெரும் படையும் இன்று கற்றல் வாய்ப்புகளையும், சமத்துவத்தையும், சகிப்புத்தன்மையையும் உன்மத்தமேறிய கண்களால் வெறித்துப் பார்க்கின்றனர்.

இரட்டைமலை சீனிவாசனும், அயோத்திதாசனும், பெரியாரும் அம்பேத்காரும் தங்கள் ஆன்மாவை கொடுத்து திறந்த வாய்ப்பின் பெருங்கதவை மனுவின் நாய்ப் புத்திரர்கள் அறைந்து சாத்துகிறார்கள்.

ஒன்று திரள, செயல்பட ஒரு குடைதான் இன்றைய தேவை.

சோகம் என்னவென்றால் யாருக்கான வாய்ப்புகள் மறுக்கப் படுகிறதோ, யாருக்காக நாம் குரல் எழுப்புகிறோமோ அவர்களில் ஒரு பெரும் திரள், சாதி எனும் போதையிலூறி, மதம் எனும் சாக்கடையில் வீழ்ந்து, தம்மை வீழ்த்துகிறவர்களின் காலடிகளையே மீட்பர்களின் பொற்பாதங்களாக கருதி  நக்கிக் கொண்டிருப்பதைத்தான் பொறுக்க முடியவில்லை.

Comments

  1. ஆதங்கம் சொன்ன பதிவு. நிறைய மாற்றங்கள் வேண்டும் தோழர். ஆனாலும் மாற்றத்தினை விரும்பாதவர்கள் இங்கே நிறைய உண்டு.....

    ReplyDelete
  2. #தம்மை வீழ்த்துகிறவர்களின் காலடிகளையே#
    காலடிகளை நக்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்றால் சிந்தனையை மழுங்கடிக்க வேண்டும் ,அதுக்குத் தானே டாஸ்மாக் ,சினிமா ,டிவி சீரியல்கள் ,இலவசங்கள் எல்லாமே :)

    ReplyDelete

Post a Comment

வருக வருக