ருக்குமணி வண்டி வருது -முனைவர் மு பிரபு
தினசரிகளைப் படிப்பது காலை நேரங்களில் அத்தியாவசிய ஒன்றாக இருந்தது ஒரு காலத்தில். எப்பொழுதுமே சார்புச் செய்திகள் வந்த வண்ணமேதான் இருக்கின்றன. கட்சிப் பத்திரிகைகள் எவ்வளவோ தேவலாம் என்று நான் சொல்வதுண்டு. செய்தி என்று அவைகளில் ஒன்றுமில்லை. எல்லலாமே அவரவர்கள் தரப்புச் செய்திகள்தான். கட்சிக்காரர்களோ அல்லது அந்தந்த இயக்கத்து நபர்களோதான் இந்தப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்கின்றனர். ஆனால், செய்திப் பத்திரிகைகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வருபவைதான் ஆபத்தானவை. அடிப்படை நேர்மையில்லாதவை. முகநூல் - வாட்ஸ்அப் வந்த பிறகு, பல எழுத்தாளர்களின் - அறிவுஜீவிகளின் கருத்துகள் கொஞ்சமும் எடிட் செய்யப்படாமல் படிக்கக் கிடைக்கின்றன. நான் சொல்லுகின்ற செய்திப் பத்திரிகைகளைவிட முகநூல் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். சல்லியடிக்கும் மனிதர்களை - விஷயங்களை எளிதாக அடையாளம் கண்டு புறந்தள்ள முடிகிறது. ஒரு expert-ன் கைகளில், அதாவது தொழில்முறை எடிட்டரின் கைகளில், ஒரு பைசாவிற்கும் உதவாத செய்தியும் கூட முக்கியமான செய்தியாகத் தெரிய வாய்ப்புண்டு. அண்மைக்காலங்களில் செய்தித்தாள்களை பத்து நிமிடங்களுக்குள் படித்துவிட முடிகிறது. சொல்லப்போனால், அவைகளில் வரும் விளம்பரங்கள் நிறைய செய்திகளைத் தாங்கியும் நாணயமாகவும் உள்ளன என்றுதான் அடிக்கடி நினைக்கிறேன்.

இன்றைய (10-7-2017) தமிழ் தி ஹிந்து நாளிதழில் "குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் வாகனங்கள்" என்ற தலைப்பில், என்னுடைய மதிப்பை முழுவதுமாகப் பெற்றிருக்கும் திருமதி வே வசந்திதேவி அவர்களின் கட்டுரை வெளிவந்திருக்கிறது. மிகச் சிலரின் எழுத்துக்களை சந்திக்க நேரும்போது அவற்றைத் தவற விடுவதேயில்லை. வசந்திதேவி அவர்கள் அப்படியானவர். இப்படியும் இருக்கலாம் - அப்படியும் இருக்கலாம் என்ற எண்ணெய் பூசிய வழுக்குமர வேலையெல்லாம் இவரிடம் இல்லை. மண்டைக்குள் ஆணி இறங்கும். அதுவும் ஜெட் வேகத்தில். மாற்றுக் கருத்து கொண்டவர்கள் இவரைப் படிக்காமல் இருப்பதுதான் அவர்களின் மனநலத்திற்கு நல்லது.

குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்களின் மனநிலை; இந்த மனநிலையை காசாக்கும் தனியார் கல்வித் தந்தைகள்; இவர்களின் தூதுவர்களான மஞ்சள் நிற வாகனங்கள்; இவைகளைப் பார்த்ததும் அல்லது ஹார்ன் ஒலி கேட்டதும் நடுங்கும் குழந்தைகள் - இவற்றிற்குப் பின்னால் உள்ள அரசின் மெத்தனம் - இந்த நிலையில் என்ன செய்தால் நல்லது என்றவாறு கட்டுரை வடிவம் பெறுகிறது. கல்வியின் தரத்தைப் பற்றிப் பேசுகையில் ASER-ஐச் சுட்டி (Annual Survey of Education Report) வசந்திதேவி சொல்கிறார்: "கிராமப்புற குழந்தைகளின் கற்றல் திறன்களில் அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை. இருவரும் மிகத் தாழ்ந்த நிலையில்தான் உள்ளனர்."

இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கல்வித் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தேன். தங்களுக்கு மேல்நிலை வகுப்புகளுக்கான ஒரு ஆங்கில ஆசிரியர் வேண்டுமென்றும், எங்கிருந்தாவது பிடித்துக் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். கடந்த கல்வி ஆண்டில் பக்கத்து பள்ளிகளோடு ஒப்பிடும்போது தங்களின் பள்ளி மேல்நிலைப் பொதுத் தேர்வில் சற்றுப் பின்தங்கிவிட்டதாக வருத்தப்பட்ட அவர், அதற்குக் காரணம் NEET பயிற்சிக்காக மெட்ராசிலிருந்து ஒரு நிறுவனத்தைப் பள்ளிக்குள் விட்டதுதான் என்றார். எனது புருவங்கள் உயர்வதைப் பார்த்ததும் மேலும் சொன்னார்: "ராத்திரி பதினோரு மணி வரைக்கும் பசங்களைப் பெண்டு எடுப்போம். ஒவ்வொரு கேள்வியையும் நூத்துக்கணக்கான தடவைகள் எழுதி வாங்குவோம். இந்த NEETகாரங்க வந்து எதையோ சொல்லிக் குடுக்கிறோம்னு பேர் பண்ணி, அதுவும் நாசமாச்சி, இதுவும் நாசமாச்சி."

கவிஞர் வெண்ணிலாவின் இரண்டு பெண் குழந்தைகளின் மீதும் மீடியா வெளிச்சம் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்ததும் அதிகம் விழுந்தது. வெண்ணிலா இதற்கு காரணமாக இருக்கலாம். தவறில்லை. இந்தக் குழந்தைகளின் ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அரசுப் பள்ளிகள் அளவில் அதிகம் என்றெல்லாம் கதைக்கப்பட்டது. இதில் திரைக்குப் பின்னால் சில விஷயங்கள் இருக்கின்றன. அந்தக் குழந்தைகள் படித்த அரசுப் பள்ளியின் இந்த ஆண்டு மேல்நிலைப் பொதுத் தேர்வில் சராசரி மதிப்பெண்கள் என்ன? ஒருவேளை அந்தப் பள்ளியின் சராசரி மதிப்பெண்கள் மற்ற அரசுப் பள்ளிகளைப் போலத்தான் என்றால், வெண்ணிலாவின் குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களுக்கு அந்தப் பள்ளி எப்படிக் காரணமாக இருந்திருக்க முடியும்? திருமதி வெண்ணிலா அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் என்பதும், குழந்தைகளின் மதிப்பெண்களுக்காக அவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்ட சிரத்தைதான் முக்கிய காரணம் என்று சொன்னால் அது தவறா? அந்தக் குழந்தைகள் ட்யூஷன் போனார்களா? ட்யூஷன் என்ற பெயரில் இல்லாமல் தனிப்பட்ட பயிற்சி எதுவும் அவர்களுக்கு வழங்கப்பட்டதா? எப்படி வளைத்துப் பேசினாலும் கடைசியில் ஒரே இடத்திற்குத்தான் வர வேண்டும். தனியார் பள்ளிகளை ஒழித்துக்கட்டும் வரை அரசுப் பள்ளிகளின் தரம் உயராது. சமூக நீதி சாத்தியப்படாது. Peer group influence-ன் பயன்கள் எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்காது.

கார் வாங்கிய புதிது. 2011ம் ஆண்டு. ராசிபுரத்திலிருந்து திருச்செங்கோடு வந்து கொண்டிருக்கிறேன். எதிரில் வரும் வாகனங்கள் எனக்கான எமன்களாகத் தோன்றும். காலை எட்டரை மணி அளவு. ஒவ்வொன்றாக எதிர்ப்படத் துவங்கிய அந்த மஞ்சள் பேருந்துகள் முடிவேயில்லாமல் ஆயிரக்கணக்கில் (நூற்றுக்கணக்கில் அல்ல) ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் போல வந்துகொண்டேயிருந்தன. காரை ஓரங்கட்டி நிறுத்தினேன். ஒன்பதே கால் வரை நிற்கவேயில்லை. இவைகள் எங்கேயிருந்து வருகின்றன? இத்தனைப் பேருந்துகளுக்கான மாணவர்களை எங்கிருந்து கூட்டி வருகிறார்கள்? உண்மையிலேயே பயமாக இருந்தது. கல்வி என்பது எவ்வளவு பெரிய வியாபாரமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை நினைக்க ஆயாசமாக வந்தது.

இதிலிருக்கும் எளிமையான அரசியலைப் புரிந்து கொள்ளாமல், வெறும் சீர்திருத்த கோஷங்களை உரக்கப் பேசுவதால், அப்படிப் பேசுபவர்களின் நம்பகத்தன்மை குறைகிறது. எவ்வளவு சீர்திருத்தங்கள் வந்தாலும் மேலேடுத்துச் செல்பவர்கள் அவைகளில் தமக்கான வாய்ப்பைப் பார்க்கும் சில ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள்தான். எனக்குத் தெரிந்து, எந்தச் சீர்திருத்தத்தின் முழுப்பயனும் குழந்தைகளுக்குப் போய்ச் சேரவேயில்லை.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக நடத்தப்படும் பயிற்சிகள் பெரிய நம்பிக்கை எதனையும் தராதவை. ஆசிரியர்களின் தரம் என்பது மாணவர்களின் தரத்தால் மட்டும் 'கல்வி கற்கும் சூழல்' ஒன்றில் தீர்மானிக்கப்படுகிறது. கோச்சிங் சென்டர்களில் வேண்டுமானால் இது மாறுபடலாம். பாடம் சார்ந்து கேள்விகள் கேட்கும் மாணவர்கள்தான் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துகிறார்கள். அமைப்போ அல்லது பயிற்சிகளோ இல்லை. வசந்தேதேவி சொல்கிறார்: "நடுத்தர வர்க்கம் நாடும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டு, அவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தால், அரசுப் பள்ளிகளின் தரம் பிரம்மாண்ட உயர்வு காணும். அரசுப் பள்ளிகள் இன்று புறக்கணிக்கப்படுவதின் காரணம் அவை ஏழைக்கும் ஏழைகளுக்கானது மட்டுமே என்பதுதான்." எவ்வளவு பெரிய உண்மை!

இது அரசுக்குத் தெரியாதா? தெரிந்தால், ஏன் நிலைமையை மாற்ற எந்த அரசுமே முன் வரவில்லை? வாக்கு அரசியல் இதற்கு எப்படி காரணமாக முடியும்? மத்திய வர்க்கம் பெரும்பாலும் ஓட்டுப்போட சாவடிகளுக்கு வருவதே இல்லையே? பெருவாரியாக சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தினர்தானே? அப்படியிருந்தும் அவர்களுக்கு எதிரான கல்வி சார்ந்த நிலைப்பாட்டை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுக்கின்றன? ஜனநாயகத்தில் பெரும்பான்மையின் பங்குதான் என்ன? வெறும் இலவசங்களால் "ஏழைக்கும் ஏழையானவர்கள்" திருப்தி செய்யப்பட்டு, மருத்துவம் ஐஐடி போன்றவைகள் அரசு செலவிலேயே மத்திய வர்க்கத்து குழந்தைகள் படித்து அமெரிக்கா போவதை அரசுகள் உறுதி செய்கின்றனவா?

திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது. இதில் ஒன்றும் பிரச்சினையில்லை. அவர்களுக்கு அதுதான் தெரியும். அதைத்தான் செய்கிறார்கள். செய்யட்டும். ஆனால், சட்டம் போட்டு தடுக்கின்ற கூட்டம் ஏன் தன்னுடைய வேலையைச் செய்யவில்லை?

எனக்குத் தெரிந்த பதில்: அவரவர்களுக்கான எலும்புத் துண்டுகள் வீசப்பட்டு, சமுதாயத்தின் எந்தத் தரப்புமே எந்த அநீதியைப் பற்றியும் கேள்வி ஏதும் கேட்காதவாறு அமைப்பு நுண்ணியமாகப் பின்னப்பட்டிருக்கிறது.

வலிமையுள்ளவனே எஞ்சுவான்.

Comments

 1. செம கஸ்தூரி!! செம பாயின்ட்ஸ்! தயவாய் மன்னியுங்கள் நான் இதைச் சொல்வதற்கு. கவிஞர் வெண்ணிலா அவர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர்ந்து மதிப்பெண்கள் எடுத்ததை மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டி அதைப் பலரும் கொண்டாடினார்கள்.அ துவும் இப்போது வாட்சப் வந்ததால் உலகம் முழுவதும் சுற்றியது. ஆனால் என்னால் அதை அவ்வாறு பார்க்க முடியவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகளை வழி மொழிவதுடன், கவிஞர் வெண்ணிலாவின் குடும்பம் சூழல் அக்குழந்தைகளுக்குச் சாதகமாக அமைந்ததால்...படித்த குடும்பம்...என்பதால்..

  இதே ஒரு கடைநிலை குடும்பத்திலிருந்து, கல்வியறிவு அற்ற ஒரு குடும்பத்து மாணவனோ, மாணவியோ என்றால் அதுதான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று அதற்குக் காரணம் பள்ளி என்று சொல்லிவிடலாம். மற்றும் அக்குழந்தையின் தனி ஆர்வம், உழைப்பு, சாதிக்க வேண்டும் என்ற வெறி...கற்றலில் உள்ள ஆர்வம்...என்று சொல்லலாம்...

  வசந்தா தேவி அவர்கள் சொல்லியிருப்பது,//நடுத்தர வர்க்கம் நாடும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டு, அவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தால், அரசுப் பள்ளிகளின் தரம் பிரம்மாண்ட உயர்வு காணும். அரசுப் பள்ளிகள் இன்று புறக்கணிக்கப்படுவதின் காரணம் அவை ஏழைக்கும் ஏழைகளுக்கானது மட்டுமே என்பதுதான்."// உண்மை உண்மை!! உண்மை!

  //Peer group influence-ன் பயன்கள் எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்காது.// யெஸ் உங்களின் இந்தக் கருத்தையும் வழிமொழிகிறேன். இதுவும் உண்மை!!! தனியார் ஒழிந்து எல்லோருக்கும் ஒரே கல்வி, தரமான கல்வி என்று அரசு முனைந்து மாற்றங்கள் ஏற்படுத்தி முடிஉ எடுக்காத வரையும் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. எப்படி பொருளாதார ரீதியாஅ மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கிறதோ அப்படியே கல்வியிலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அரசு நினைத்தால் மட்டுமே இந்த தனியார், பினாமிப் பள்ளிகள் எல்லாம் ஒழிந்தால் மட்டுமே நல்லது நடக்கும்...அனைவருக்கும் ஒரே தரமான கல்வி எனும் நிலை வர வேண்டும்..அதே போன்று ஆசிரியர்களும் மாணவர்களை வாந்தி எடுக்க வைக்காமல் கொஞ்சம் சிந்திக்கும் திறனையும் வளர்க்க வேண்டும்...கடினமான விஷயம்..ஏனென்றால் அடிப்படையிலிருந்தே மாற்றம் தொடங்க வேண்டும்...

  இது பள்ளிகளுக்கு மட்டுமில்லை கல்லூரிகளுக்கும் சேர்த்துத்தான்....இன்னும் நிறையவே இதைப் பற்றிப் பேசலாம்....

  கீதா

  ReplyDelete
 2. கல்வித் தந்தைகள் இதை செய்ய விடுவார்களா ?அவர்கள் எல்லோரும் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களாசசே :)

  ReplyDelete
 3. திட்டம் போட்டு திருடுகிற கூட்டம்
  திருடிக்கொண்டே இருக்கிறது.
  இதில் ஒன்றும் பிரச்சினையில்லை.
  அவர்களுக்கு அதுதான் தெரியும்.
  அதைத்தான் செய்கிறார்கள். செய்யட்டும்.
  ஆனால்,
  சட்டம் போட்டு தடுக்கின்ற கூட்டம்
  ஏன் தன்னுடைய வேலையைச் செய்யவில்லை?

  இது தான் உண்மையான சிக்கல்!

  ReplyDelete

Post a Comment

வருக வருக