காலம் சென்ற முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் தொடரும் என்று வாக்களித்திருந்தார்.
அவரது அரசியல் வாரிசுகள் யாரும் பொறுப்போடு இருந்திருந்தால் இன்றய வேலை நிறுத்தப் போராட்டம் அவசியமாக இருந்திருக்காது.
அது சரி பங்களிப்பு ஓய்வூதியம் என்பது என்ன ?
ஒரு அரசு ஊழியரின் ஊதியத்தில் இருந்து பத்து சதவிகிதப் பணத்தை எடுத்து அவர் கணக்கில் வைப்பார்கள். இருநூறு ரூபாயை ஊழியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தால் அரசும் இருநூறு ரூபாய்களை அவரின் கணக்கில் சேர்க்கும்.
ஹை நல்லா இருக்கே என்கிறீர்களா, கொஞ்சம் பொறுங்கள்.
பல லட்சம் அரசு ஊழியர்களின் கணக்கில் இருக்கும் பணத்தின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.
அதாவது, பணம் கணக்கில் இருக்கிறதே ஒழிய இருப்பில் இல்லை.
கிட்டத்தட்ட இருபதாயிரம் கோடிகள் மாயம் என்று ஒரு தகவல் சுற்றுகிறது.
அரசு ஊழியர்கள் ஓய்வுக்கு பிறகு நீண்ட நாட்கள் உயிரோடு இருப்பதால் அவர்களுக்கு ஓய்வுஊதியம் கொடுப்பது நிதிச்சுமை என்று திருவாய் மலர்ந்தருளிய கதர்வேட்டி பொருளாதார சித்தர், இந்த பெரும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று சட்டமியற்றினார். (எவன் பணத்தை எடுத்து எவனுக்கு கொடுப்பது என்கிற கேள்விகள் எழக்கூடாது, ஏன் என்றால் அரசு ஊழியர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள், இல்லையா ?)
ஆக கோடிக்கணக்கான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இளிச்சவாய் அரசு ஊழியர்கள் பலியானார்கள்.
சரி தொலையுது ஓய்வு பெற்ற பிறகு மொத்தமாக தருகிறோம் என்கிற வாக்குறுதியாவது நிறைவேறியதா?
இரண்டாண்டுகளுக்கு முன்னர் நோயுற்று இறந்த தோழர் ஒருவருக்கு இதுவரை சல்லிப் பைசா கூட வரவில்லை.
இத்துணைக்கும் வீட்டில் மனக் கசப்போடு சொத்துக்களை மறுத்துவிட்டு நீண்ட தூரம் நகர்ந்து புதுகைக்கு வந்தவர் அவர். ஒரே மகன்.இன்று அந்தக் குடும்பம் படும் சிரமம் சொல்லி மாளாது.
இன்னும் சில ஓய்வு பெற்ற, ஊழியர்கள் நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுகிறார்கள்.
நாட்டிலேயே முதன் முதலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் ஜெயலலிதா, அவரே கடந்த தேர்தலில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுவேன் என்று வாக்கு கொடுத்திருந்தார்.
அவர் வாரிசுகள் என்று சொல்லும் இன்றய ஆட்சியாளர்கள் சிறு துரும்பைக் கூட நகர்த்தாது மாநிலத்திற்கு பெரும் பணி இழப்பை செய்திருக்கிறார்கள்.
இன்றய ஒருநாள் போராட்டம் வெறும் கவன ஈர்ப்பு போராட்டம்தான்.
இது சரிவர கையாளப்படவில்லை எனில் போராட்டங்கள் தொடரும்...
பொறுப்பு அரசின் கையில்தான் இருக்கிறது.
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக