வில்வன்னி நாகரீகத்திற்கு ஒரு கால யந்திரப்பயணம்ஞாயிற்றுக் கிழமைகள் ஓய்வுக்கும், புத்தாக்கத்திற்கும் அவசியமானவை.

இலக்கிய சந்திப்புக்கள், விதைக்கலாம், புதுகை தொல்லியல் ஆய்வுக்களம் என பல்வேறு நிகழ்வுகள்  புத்தாக்கத்திற்காக  நான் பங்குபெறும் நிகழ்வுகள். 

சில ஞாயிறுகள் எந்த நிகழ்வும் இருக்காது. 

ஆனால், 24/09/2017 தலைகீழ்! ஆம், எப்போதும் ஒரே இடத்தில் நிகழும் விதைக்கலாம் இரண்டு இடங்களில், வீதி இலக்கியகள சந்திப்பு, இயற்கை நலவாழ்வுச் சங்கம் நிகழ்த்தும் இரண்டாயிரம் பனைவிதைகளை நடும் நிகழ்வு அதைத் தொடர்ந்த நிலாச்சோறு உணவகச் சந்திப்பு.

குறிப்பாக இயற்கை நலவாழ்வுச் சங்கத்தின் நிகழ்வுக்கு பள்ளி மாணவர்கள் ஐம்பது பேரை அழைத்துச்செல்ல வேண்டிய நிலை. 

திட்டங்கள் இப்படி இருந்தபொழுது தொல்லியல் ஆய்வுக்கள நிறுவனர் இளவல் மணிகண்டன் ஆறுமுகம் அழைத்தார். 

அண்ணே ஞாயிற்று கிழமை வில்வன்னி நாகரிகச் சுவடுகள் இருக்கும் அம்பலத்திடல் போகணும் ரெடியாயிரு என்றார். 

ஆகா, வேறு எந்த நிகழ்வும் சாத்தியமாகாதே!?

வில்வன்னி நாகரிகச் சுவடுகளை இன்றும் தன்னிடம் வைத்திருக்கும் அம்பலத்திடல் புதுகையில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது கி.மி தள்ளி இருக்கிறது. 

பயணம் ஒருமணிநேரத்திற்கும் அதிகம். 

ஆக ஏற்கனவே திட்டமிட்ட எந்தப் பணியையும் செய்ய முடியாது என்பது புரிந்தது. 

மணிகண்டன்  வெகு அவசியமாக இருந்தால் ஒழிய என்னை அழைக்கமாட்டார். 

எல்லா திட்டங்களும் பணால். வருகிறேன் மணி என்று சொல்லிவிட்டு மற்றவர்களுக்கு பேசினேன். 

மணிகண்டன் என்ற பெயர் இருந்தாலே அன்புக்கு கட்டளைகள் பின்இணைப்பாக இருக்கும் போல. 

இயற்கை நலவாழ்வுச் சங்க நிறுவனர்களில் ஒருவரான இயற்கை வாழ்வியல் மணிகண்டன் (இன்னொரு மணி) நீங்க எங்கே வேண்டுமானாலும் போங்க மதியம் ஒருமணிக்கு நிலாச்சோறு வந்துடுங்க என்றார். 

கரண்டுக் கம்பில உட்கார்ந்த காக்காய் கதைமாறி ஆயிப்போச்சு.

ஞாயிறு காலை ஏழு.ஐம்பதுக்கு அலைபேசி அழைப்பு. 

உணவு ரெடியா ? நான் வந்துட்டு இருக்கேன். கல்வெட்டு ராஜேந்திரன் ஐயா பேருந்து நிலையத்தில் இருக்கிறார் என்றார் மணி.

தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர்களில் ஒருவரான புதுகை செல்வாவிடம் மதிய உணவுப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

நீங்க முன்னாலே போங்க நான் பின்னால் வருகிறேன் என்றார். 

மணி தன்னுடைய ரெனால்ட் லாட்ஜியில் வந்துவிட, பெரியவர் கல்வெட்டு ராஜேந்திரன் அவர்களுடன் பயணம் துவங்கியது. 

மேட்டுப்பட்டி அருகே இந்தியன் எக்ஸ்பிரஸ் மா.மு.கண்ணன் அவர்கள் இணைந்துகொள்ள பயணம் துவங்கியது. 

அவர் தற்போது தயாரித்து வரும் ஆவணப் படம் குறித்து பேசினார். 

பயணம் முழுதும் தொல்லியல் தகவல்கள், பத்திரிக்கையாளர் அனுபவங்களாக செய்திகளை  பகிர்ந்துகொண்டு சென்றோம். 

நாங்கள் ராமசாமிபுரம் செல்வதற்கு முன்னரே, புதிய தலைமுறை செய்தியாளர் முத்துப்பழம்பதி, ஒளிப்பதிவாளர் சபாவுடன் இடத்திற்கு சென்றுவிட்டார்! 

மிகக் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட வண்டி லாட்ஜி. இருந்தும் மணிகண்டன் மிக லாவகமாக அதை வண்டிப்பாதை மேடுகளில் ஏற்றி, இறக்கி செலுத்த  ஒருவழியாக அம்பலத்திடலை அடைந்தோம். 

எங்களுக்கு முன்னரே மருத்துவர்.பாலா, நக்கீரன் பகத்சிங், ஆசிரியர்கள்  சந்திரசேகரன், இளையராஜா, தி.மு.க கழகத்தில் இருக்கும் திருப்பதி போன்றார் காத்திருந்தார்கள். 

ஓராண்டுக்கு முன்னர் இங்கே வந்திருந்து ஒரு நாள்முழுதும் செலவிட்டிருந்தேன் இதே குழுவுடன்.  

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு நான் அதே குழுவை அந்த தொன்மை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சந்தித்தேன். 

மகிழ்ச்சி. 

காமிரா சுறுசுறுப்பாக இயங்க தோழர்கள் ஒவ்வொருவராக அந்த திடலின் வரலாற்றைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். 

நூற்றி எழுபத்தி இரண்டு ஏக்கர்களில் விரிந்து பரந்திருக்கும் திடல். தடுக்கி விழுந்தால் தாழிகளில்தான் விழவேண்டும். 

வில்வன்னி ஆற்றின் கரையில் இருந்த ஒரு ஆற்றங்கரை நாகரீகம். 

சங்க காலத்திற்கு முன்னரே செழித்திருந்த நாகரீகம். பானைக்குறியீடுகள், ரௌலட் பானைஓடுகள் என இப்பரப்பெங்கும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் காணக்கிடைக்கின்றன. 

தற்போது அரசியல் அதிகாரமிக்க ஒரு சாரார் இதன் ஒருபகுதியை ஆக்கிரமித்திருந்தாலும் எஞ்சிய பகுதிகளில் வெளிவருகிற விஷயங்கள் இங்கும் ஒரு கீழடி இருக்கும் சாத்தியத்தை சொல்கின்றன. 

புதியதலைமுறை வெகு அக்கறையாக இந்த விஷயத்தை பதிவு செய்திருக்கிறது நாளை அல்லது புதன் 26/09/2017 அன்று ஒளிபரப்பாகலாம். 

பார்க்கலாம்.

ஒரு வெகு முக்கியமான பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு மணிகண்டனுக்கு நன்றிகள். 

நிகழ்வுகள் முடிந்து வாகனங்களை நோக்கித் திரும்பிய பொழுது புதுகை செல்வா உணவுப் பொட்டலங்களுடனும், தண்ணீர் புட்டிகளுடனும்வந்தார். ஒரே கரவொலி.


அங்கேயே அமர்ந்து உணவுண்டோம். செல்வா முன்னால் புறப்பட மழை பின்னே! 


மழை மண்ணைச் சேறாக்குகிற அளவு பொழிந்துவிட்டால் லாட்ஜி ஒரு இரண்டுநாளைக்கு எங்களுக்கு லாட்ஜ் ஆகிவிடும் ஆபத்து இருந்ததால் மணியை அவசரப்படுத்தி வண்டியை எடுக்கச் சொன்னேன். 


வரும் வழியில் பெரியவர் கல்வெட்டு ராஜேந்திரன் அவர்கள் அவரது நீண்ட நாள் ஆய்வுகளை பகிர்ந்துகொண்டார்.

கிராமங்களின் பசுமையான தோப்புகளுக்கிடையே குளிரூட்டப்பட்ட ஒரு மகிழ்வுந்தில் இப்படிப்பட்ட அரியதரவுகளை, வாழ்நாள் முழுதும் தேடிச்சேர்த்த தரவுகளை ஒரு பேராளுமை என்னுடன் பகிர்ந்துகொண்டது நிறைவான அனுபவம். 

அய்யா, புதுசா சாம்ஸங் வாங்கியிருக்கேன், ட்ரைபாட் போட்டு மைக்க உங்க சட்டைல பொறுத்திவிடுகிறேன், நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள் என்றேன் சிரித்தார். 

இந்த அனுபவத்திற்காவே மணிக்கு ஒரு பொற்கிழி தரலாம் என்று நினைத்தேன். சரியாக ஒரு நிமிடம் கழித்து அண்ணே உனக்கு இந்த தகவல்கள் கிடைக்காது, பாரு நான் எப்படி ஏற்பாடுபண்ணியிருக்கேன்னு, ஒழுங்கா ஐநூறு ரூபாய் கொடுத்திடு என்றார். 

அடப்பாவி, நான் பொற்கிழி ரேஞ்சுக்கு நினைச்சிருக்கேன் நீ பொசுக்குன்னு ஐநூறு ரூபாய் கேட்கிறீயே என்றேன். மகிழ்ச்சி சிரிப்பலை ஒன்று பரவ தொடர்ந்தது பயணம். 

ஆலங்குடியை நெருங்கிய பொழுது தேனீர் அருந்தலாமா என்று தோழர் ஒருவர் கேட்க,  சரியான இடம்தான் தமிழகத்தின் ஆகச்சிறந்த தேநீர் கடைகளில் ஒன்று இங்கே இருக்கிறது. நான் அழைத்துச் செல்கிறேன் என்றேன். 

சந்தேகத்துடன்தான் வந்தார்கள். தேநீர் அருந்தி முடித்ததும் அய்யா சொன்னார், நீங்க சொன்ன பொழுது நான் நம்பலை, ஆனால் உண்மைதான் என்றார். 

ஜீவன் தேநீரகம், ஆலங்குடி. 

அங்கிருந்து ஒரு கிளைப்பயணம் துவங்கியது. அது அடுத்த பதிவில்.

அன்பன் 
மது.


Comments

  1. மகிழ்ச்சி.. வீதி இல்லை என்றால் நானும் வந்து இருப்பேன்

    ReplyDelete
  2. புதியதோர் ஆற்றங்கரை நாகரீகம் பற்றிய தகவல்கள் அருமை வியப்பும் அடையச் செய்கிறது....அடுத்த பகுதி அறிய ஆவலுடன் அப்பகுதிக்குச் செல்கிறோம்

    ReplyDelete

Post a Comment

வருக வருக